Your browser does not support the audio element.
audio
2382 நான்முகனை நாராயணன்படைத்தான் * நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத்தான்படைத்தான் * - யான்முகமாய்
அந்தாதிமேலிட்டு அறிவித்தேனாழ்பொருளை *
சிந்தாமல்கொண்மிநீர்தேர்ந்து. (2)
2383 தேருங்கால்தேவன் ஒருவனேயென்றுரைப்பர் *
ஆருமறியாரவன்பெருமை * ஓரும்
பொருள்முடிவுமித்தனையே எத்தவம்செய்தார்க்கும்
அருள்முடிவதாழியான்பால்.
2384 பாலிற்கிடந்ததுவும் பண்டரங்கம்மேயதுவும் *
ஆலில்துயின்றதுவுமாரறிவார்? * - ஞாலத்
தொருபொருளை வானவர்தம்மெய்ப்பொருளை * அப்பில்
அருபொருளை யானறிந்தவாறு.
2385 ஆறுசடைக்கரந்தான் அண்டர்கோன்தன்னோடும் *
கூறுடையனென்பதுவும் கொள்கைத்தே * - வேறொருவ
ரில்லாமைநின்றானை எம்மானை * எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன்தொகுத்து.
2386 தொகுத்தவரத்தனாய்த் தோலாதான்மார்வம் *
வகிர்த்தவளையுகிர்த்தோள்மாலே! * - உகத்தில்
ஒருநான்றுநீயுயர்த்தி உள் வாங்கிநீயே *
அருநான்குமானாயறி.
2387 அறியார்சமணர் அயர்த்தார்பவுத்தர் *
சிறியார்சிவப்பட்டார்செப்பில் * -வெறியாய
மாயவனைமாலவனை மாதவனையேத்தாதார்
ஈனவரேயாதலாலின்று.
2388 இன்றாக நாளையேயாக * இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென்பாலதே * - நன்றாக
நானுன்னை அன்றி இலேன்கண்டாய் * நாரணனே!
நீயென்னையன்றியிலை.
2389 இலைதுணைமற்றென்னெஞ்சே ஈசனைவென்ற *
சிலைகொண்டசெங்கண்மால்சேரா * - குலைகொண்ட
ஈரைந்தலையான் இலங்கையையீடழித்த *
கூரம்பனல்லால்குறை.
2390 குறைகொண்டுநான்முகன் குண்டிகைநீர்பெய்து *
மறைகொண்டமந்திரத்தால் வாழ்த்தி * - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேலேறக் கழுவினான் *
அண்டத்தான்சேவடியையாங்கு.
2391 ஆங்காரவாரமதுகேட்டு * அழலுமிழும்
பூங்காரரவணையான் பொன்மேனி * - யாங்காண
வல்லமேயல்லமே? மாமலரான்வார்சடையான் *
வல்லரேயல்லரே? வாழ்த்து.
2392 வாழ்த்துகவாய் காண்ககண்கேட்கசெவி * மகுடம்
தாழ்த்திவணங்குமின்கள் தண்மலரால் * - சூழ்த்த
துழாய்மன்னும்நீள்முடி என்தொல்லைமால்தன்னை *
வழாவண்கைகூப்பிமதித்து.
2393 மதித்தாய்போய்நான்கின் மதியார்போய்வீழ *
மதித்தாய், மதிகோள்விடுத்தாய்! * - மதித்தாய்
மடுக்கிடந்த மாமுதலைகோள்விடுப்பான் * ஆழி
விடற்கிரண்டும்போயிரண்டின்வீடு.
2394 வீடாக்கும் பெற்றியறியாது * மெய்வருத்திக்
கூடாக்கி நின்றுண்டுகொண்டுழல்வீர்! * - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான்வேதமுதற்பொருள்தான் * விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாராயணன்.
2395 நாராயணண் என்னையாளி * நரகத்துச்
சேராமல்காக்கும் திருமால்தன் * பேரான
பேசப்பெறாத பிணச்சமயர்பேசக்கேட்டு *
ஆசைப்பட்டாழ்வார்பலர்.
2396 பலதேவரேத்தப் படிகடந்தான்பாதம் *
மலரேறவிட்டிறைஞ்சிவாழ்த்த - வலராகில் *
மார்க்கண்டன்கண்டவகையே வருங்கண்டீர் *
நீர்க்கண்டன்கண்டநிலை.
2397 நிலைமன்னுமென்னெஞ்சம் அந்நான்று * தேவர்
தலைமன்னர்தாமே மாற்றாக * - பலமன்னர்
போர்மாள வெங்கதிரோன்மாயப், பொழில்மறைய *
தேராழியால்மறைத்தாரால்.
2398 ஆலநிழற்கீழ் அறநெறியை * நால்வர்க்கு
மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன் * - ஞால
மளந்தானை ஆழிக்கிடந்தானை * ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்குமாறு.
2399 மாறாயதானவனை வள்ளுகிரால் * மார்விரண்டு
கூறாகக் கீறியகோளரியை * - வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே * மற்றவரைச்
சார்த்தியிருப்பார்தவம்.
2400 தவஞ்செய்து நான்முகனால்பெற்றவரத்தை *
அவஞ்செய்த ஆழியாயன்றே * உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனையாவாய்நீ * வைகுந்தம்
ஈப்பாயுமெவ்வுயிர்க்கும்நீ.
2401 நீயேயுலகெல்லாம் நின்னருளேநிற்பனவும் *
நீயே தவத்தேவதேவனும் * - நீயே
எரிசுடரும்மால்வரையும் எண்திசையும் * அண்டத்
திருசுடருமாயவிவை.
2402 இவையா! பிலவாய் திறந்தெரிகான்ற *
இவையா! எரிவட்டக் கண்கள் * - இவையா!
எரிபொங்கிக்காட்டும் இமையோர்பெருமான் *
அரிபொங்கிக்காட்டுமழகு.
2403 அழகியான்தானே அரியுருவன்தானே *
பழகியான்தாளேபணிமின் * - குழவியாய்த்
தானேழுலகுக்கும் தன்மைக்குந்தன்மையனே *
மீனாயுயிரளிக்கும்வித்து.
2404 வித்துமிடவேண்டுங்கொல்லோ? * விடைஅடர்த்த
பத்தியுழவன்பழம்புனத்து * - மொய்த்தெழுந்த
கார்மேகமன்ன கருமால்திருமேனி *
நீர்வானங்காட்டும் நிகழ்ந்து.
2405 நிகழ்ந்தாய் பால்பொன்பசுப்புக்கார்வண்ணம்நான்கும் *
இகழ்ந்தாயிருவரையும்வீய * - புகழ்ந்தாய்
சினப்போர்ச்சுவேதனைச் சேனாபதியாய் *
மனப்போர்முடிக்கும்வகை.
2406 வகையால்மதியாது மண்கொண்டாய் * மற்றும்
வகையால் வருவதொன்றுண்டே! * வகையால்
வயிரம்குழைத்துண்ணும் மாவலிதானென்னும் *
வயிரவழக்கொழித்தாய்மற்று.
2407 மற்றுத்தொழுவார் ஒருவரையும்யானின்மை *
கற்றைச்சடையான்கரிக்கண்டாய் * எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா * யானுன்னைக்
கண்டுகொள்கிற்குமாறு.
2408 மால்தான்புகுந்த மட நெஞ்சம் * மற்றதுவும்
பேறாகக்கொள்வனோ? பேதைகாள்! * நீறாடி
தான்காணமாட்டாத தாரகலச்சேவடியை *
யான்காணவல்லேற்கிது.
2409 இதுவிலங்கையீடழியக் கட்டியசேது *
இதுவிலங்குவாலியை வீழ்த்ததுவும் * - இதுவிலங்கை
தானொடுங்கவில்நுடங்கத் தண்தாரிராவணனை *
ஊனொடுங்கவெய்தானுகப்பு.
2410 உகப்புருவன்தானே ஒளியுருவன்தானே *
மகப்புருவன்தானேமதிக்கில் * - மிகப்புருவம்
ஒன்றுக்கொன்று ஓசனையான்வீழ * ஒருகணையால்
அன்றிக்கொண்டெய்தானவன்.
2411 அவனென்னையாளி அரங்கத்து * அரங்கில்
அவனென்னையெய்தாமல்காப்பான் * அவனென்ன
துள்ளத்து நின்றானிருந்தான்கிடக்குமே *
வெள்ளத்தரவணையின்மேல்.
2412 மேல்நான்முகன் அரனையிட்டவிடுசாபம் *
தான்நாரணனொழித்தான் தாரகையுள் * வானோர்
பெருமானை ஏத்தாதபேய்காள்! * பிறக்கும்
கருமாயம்பேசின்கதை.
2413 கதைப்பொருள்தான் கண்ணன்திருவயிற்றினுள்ள *
உதைப்பளவு போதுபோக்கின்றி * - வதைப்பொருள்தான்
வாய்ந்தகுணத்துப் படாததுஅடைமினோ *
ஆய்ந்தகுணத்தானடி.
2414 அடிச்சகடஞ்சாடி அரவாட்டி * யானை
பிடித்தொசித்துப் பேய்முலைநஞ்சுண்டு * - வடிப்பவள
வாய்ப்பின்னைதோளிக்கா வல்லேற்றெருத்திறுத்து *
கோப்பின்னுமானான்குறிப்பு.
2415 குறிப்பெனக்குக் கோட்டியூர்மேயானையேத்த *
குறிப்பெனக்கு நன்மைபயக்க * - வெறுப்பனோ?
வேங்கடத்துமேயானை மெய்வினைநோயெய்தாமல் *
தான்கடத்தும்தன்மையான்தாள்.
2416 தாளால் உலகம் அளந்தவசைவேகொல்? *
வாளாகிடந்தருளும் வாய்திறவான் * - நீளோதம்
வந்தலைக்கும்மாமயிலை மாவல்லிக்கேணியான் *
ஐந்தலைவாய்நாகத்தணை. (2)
2417 நாகத்தணைக்குடந்தை வெஃகாதிருவெவ்வுள் *
நாகத்தணையரங்கம் பேரன்பில் * - நாகத்
தணைப்பாற்கடல்கிடக்கும் ஆதிநெடுமால் *
அணைப்பார்கருத்தனாவான்.
2418 வானுலவுதீவளி மாகடல்மாபொருப்பு *
தானுலவுவெங்கதிரும் தண்மதியும் * - மேனிலவு
கொண்டல்பெயரும் திசையெட்டும்சூழ்ச்சியும் *
அண்டந்திருமாலகைப்பு.
2419 அகைப்பில்மனிசரை ஆறுசமயம்
புகைத்தான் * பொருகடல்நீர்வண்ணன் * - உகைக்குமேல்
எத்தேவர்வாலாட்டும் எவ்வாறுசெய்கையும் *
அப்போதொழியுமழைப்பு.
2420 அழைப்பன் திருவேங்கடத்தானைக்காண *
இழைப்பன் திருக்கூடல்கூட * - மழைப்பே
ரருவி மணி வரன்றிவந்திழிய * யானை
வெருவியரவொடுங்கும்வெற்பு.
2421 வெற்பென்று வேங்கடம்பாடினேன் * வீடாக்கி
நிற்கின்றேன் நின்றுநினைக்கின்றேன் * கற்கின்ற
நூல்வலையில்பட்டிருந்த நூலாட்டிகேள்வனார் *
கால்வலையில்பட்டிருந்தேன்காண்.
2422 காணலுறுகின்றேன் கல்லருவிமுத்துதிர *
ஓணவிழவிலொலியதிர * பேணி
வருவேங்கடவா! என்னுள்ளம்புகுந்தாய் *
திருவேங்கடமதனைச்சென்று.
2423 சென்றுவணங்குமினோ சேணுயர்வேங்கடத்தை *
நின்றுவினைகெடுக்கும் நீர்மையால் * -என்றும்
கடிக்கமலநான்முகனும் கண்மூன்றத்தானும் *
அடிக்கமலமிட்டேத்துமங்கு.
2424 மங்குல்தோய்சென்னி வடவேங்கடத்தானை *
கங்குல்புகுந்தார்கள் காப்பணிவான் * - திங்கள்
சடையேறவைத்தானும் தாமரைமேலானும் *
குடையேறத்தாம்குவித்துக்கொண்டு.
2425 கொண்டுகுடங்கால்மேல் வைத்தகுழவியாய் *
தண்டவரக்கன்தலைதாளால் - பண்டெண்ணி *
போம்குமரன் நிற்கும் பொழில்வேங்கடமலைக்கே *
போம்குமரருள்ளீர்! புரிந்து.
2426 புரிந்துமலரிட்டுப் புண்டரீகப்பாதம் *
பரிந்துபடுகாடுநிற்ப * - தெரிந்தெங்கும்
தானோங்கிநிற்கின்றான் தண்ணருவிவேங்கடமே *
வானோர்க்கும்மண்ணோர்க்கும்வைப்பு.
2427 வைப்பன்மணிவிளக்கா மாமதியை * மாலுக்கென்று
எப்பொழுதும் கைநீட்டும்யானையை * - எப்பாடும்
வேடுவளைக்கக் குறவர்வில்லெடுக்கும்வேங்கடமே *
நாடுவளைத் தாடுதுமேல்நன்று.
2428 நன்மணிவண்ணனூர் ஆளியும்கோளரியும் *
பொன்மணியும்முத்தமும் பூமரமும் * - பன்மணிநீ
ரோடுபொருதுருளும் கானமும்வானரமும் *
வேடுமுடைவேங்கடம்.
2429 வேங்கடமே விண்ணோர்தொழுவதுவும் * மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய்தீர்ப்பதுவும் * - வேங்கடமே
தானவரைவீழத் தன்னாழிப்படைதொட்டு *
வானவரைக்காப்பான்மலை.
2430 மலையாமைமேல்வைத்து வாசுகியைச்சுற்றி *
தலையாமைதானொருகைபற்றி * - அலையாமல்
பீறக்கடைந்த பெருமான்திருநாமம் *
கூறுவதேயாவர்க்கும்கூற்று.
2431 கூற்றமும்சாரா கொடுவினையும்சாரா * தீ
மாற்றமும்சாராவகையறிந்தேன் * - ஆற்றங்
கரைக்கிடக்கும்கண்ணன் கடல்கிடக்கும் * மாயன்
உரைக்கிடக்குமுள்ளத்தெனக்கு.
2432 எனக்காவார் ஆரொருவரே? * எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் * புனக்காயா
வண்ணனே! உன்னைப்பிறரறியார் * என்மதிக்கு
விண்ணெல்லாமுண்டோவிலை?
2433 விலைக்காட்படுவர் விசாதியேற்றுண்பர் *
தலைக்காட்பலிதிரிவர்தக்கோர் * - முலைக்கால்
விடமுண்டவேந்தனையே வேறாவேத்தாதார் *
கடமுண்டார்கல்லாதவர்.
2434 கல்லாதவர்இலங்கை கட்டழித்த * காகுத்தன்
அல்லால் ஒருதெய்வம்யானிலேன் * - பொல்லாத
தேவரைத் தேவரல்லாரை * திருவில்லாத்
தேவரைத் தேறேல்மின்தேவு.
2435 தேவராய்நிற்கும் அத்தேவும் * அத்தேவரில்
மூவராய்நிற்கும் முதுபுணர்ப்பும் * - யாவராய்
நிற்கின்றதெல்லாம் நெடுமாலென்றோராதார் *
கற்கின்றதெல்லாம்கடை.
2436 கடைநின்றமரர் கழல்தொழுது * நாளும்
இடைநின்றவின்பத்தராவர் * - புடைநின்ற
நிரோதமேனி நெடுமாலே! * நின்னடியை
யாரோதவல்லாரவர்?
2437 அவரிவரென்றில்லை அனங்கவேள்தாதைக்கு *
எவருமெதிரில்லைகண்டீர் * - உவரிக்
கடல்நஞ்சமுண்டான் கடனென்று * வாணற்கு
உடன்நின்றுதோற்றானொருங்கு.
2438 ஒருங்கிருந்தநல்வினையும் தீவினையுமாவான் *
பெருங்குருந்தம்சாய்த்தவனேபேசில் * - மருங்கிருந்த
வானவர்தாம்தானவர்தாம் தாரகைதான் * என்னெஞ்ச
மானவர்தாம் அல்லாததென்?
2439 என்னெஞ்சமேயான் இருள்நீக்கிஎம்பிரான் *
மன்னஞ்சமுன்னொருநாள் மண்ணளந்தான் * - என்னெஞ்ச
மேயானை இல்லாவிடையேற்றான் * வெவ்வினை தீர்த்து
ஆயானுக்காக்கினேனன்பு.
2440 அன்பாவாய் ஆரமுதமாவாய் * அடியேனுக்கு
இன்பாவாய் எல்லாமும்நீயாவாய் * - பொன்பாவை
கேள்வா! கிளரொளியென்கேசவனே! * கேடின்றி
ஆள்வாய்க்குஅடியேன்நானாள்.
2441 ஆட்பார்த்துழிதருவாய் கண்டுகொளென்றும் * நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை * கேட்பார்க்கு
அரும்பொருளாய் நின்ற அரங்கனே! * உன்னை
விரும்புவதே விள்ளேன்மனம்.
2442 மனக்கேதம்சாரா மதுசூதன்தன்னை *
தனக்கேதான் தஞ்சமாக்கொள்ளில் * - எனக்கேதான்
இன்றொன்றிநின்றுஉலகையேழ் ஆணையோட்டினான் *
சென்றொன்றிநின்றதிரு.
2443 திருநின்றபக்கம் திறவிதென்றோரார் *
கருநின்றகல்லார்க்குஉரைப்பர் * - திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவுதண்துழாய் *
தார்தன்னைச் சூடித்தரித்து.
2444 தரித்திருந்தேனாகவே தாராகணப்போர் *
விரித்துரைத்தவெந்நாகத்துன்னை * - தெரித்தெழுதி
வாசித்தும்கேட்டும் வணங்கிவழிபட்டும் *
பூசித்தும்போக்கினேன்போது.
2445 போதான இட்டிறைஞ்சியேத்துமினோ * பொன்மகரக்
காதானை ஆதிப்பெருமானை * - நாதானை
நல்லானைநாரணனை நம்மேழ்பிறப்பறுக்கும்
சொல்லானை * சொல்லுவதேசூது.
2446 சூதாவது என்நெஞ்சத்தெண்ணினேன் * சொல்மாலை
மாதாய மாலவனைமாதவனை * - யாதானும்
வல்லவா சிந்தித்திருப்பேற்கு * வைகுந்தத்து
இல்லையோசொல்லீரிடம்?
2447 இடமாவது என்னெஞ்சமின்றெல்லாம் * பண்டு
படநாகணை நெடியமாற்கு * - திடமாக
வையேன் மதிசூடிதன்னோடு * அயனைநான்
வையேன் ஆட்செய்யேன்வலம்.
2448 வலமாக மாட்டாமைதானாக * வைகல்
குலமாக குற்றம்தானாக * - நலமாக
நாரணனைநாபதியை ஞானப்பெருமானை *
சீரணனையேத்துந்திறம்.
2449 திறம்பேன்மின்கண்டீர் திருவடிதன்நாமம் *
மறந்தும்புறந்தொழாமாந்தர் * - இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்களென்றான் * நமனும்தன்
தூதுவரைக்கூவிச்செவிக்கு.
2450 செவிக்கின்பமாவதுவும் செங்கண்மால்நாமம் *
புவிக்கும்புவியதுவேகண்டீர் * - கவிக்கு
நிறைபொருளாய்நின்றானை நேர்பட்டேன் * பார்க்கில்
மறைப்பொருளுமத்தனையே தான்.
2451 தானொருவனாகித் தரணியிடந்தெடுத்து *
ஏனொருவனாய் எயிற்றில்தாங்கியதும் * - யானொருவன்
இன்றாவறிகின்றேனல்லேன் * இருநிலத்தைச்
சென்றாங்கடிப்படுத்தசேய்.
2452 சேயனணியன் சிறியன்மிகப்பெரியன் *
ஆயன் துவரைக்கோனாய்நின்ற - மாயன் * அன்று
ஓதிய வாக்கதனைக்கல்லார் * உலகத்தில்
ஏதிலராம் மெய்ஞ்ஞானமில்.
2453 இல்லறமில்லேல் துறவறமில்லென்னும் *
சொல், அறமல்லனவும்சொல்லல்ல * - நல்லற
மாவனவும் நால்வேதமாத்தவமும் * நாரணனே
யாவது ஈதன்றென்பாரார்?
2454 ஆரேயறிவார்? அனைத்துலகுமுண்டுமிழ்ந்த *
பேராழியான்தன்பெருமையை * - கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான்காணான் * அவன்வைத்த
பண்டைத்தானத்தின்பதி.
2455 பதிப்பகைஞர்க்காற்றாது பாய்திரைநீர்ப்பாழி *
மதித்தடைந்த வாளரவந்தன்னை * - மதித்தவன்தன்
வல்லாகத்தேற்றிய மாமேனி மாயவனை *
அல்லாது ஒன்றேத்தாதென்நா.
2456 நாக்கொண்டு மானிடம்பாடேன் * நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான்சென்று * என்றும் - பூக்கொண்டு
வல்லவாறு ஏத்தமகிழாத * வைகுந்தச்
செல்வனார்சேவடிமேற்பாட்டு.
2457 பாட்டும்முறையும் படுகதையும்பல்பொருளும் *
ஈட்டியதீயும் இருவிசும்பும் * - கேட்ட
மனுவும் சுருதிமறைநான்கும் * மாயன்
தனமாயையில்பட்டதற்பு.
2458 தற்பென்னைத் தானறியானேலும் * தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்தகடல்வண்ணன் * - எற்கொண்ட
வெவ்வினையும்நீங்க விலங்காமனம்வைத்தான் *
எவ்வினையும்மாயுமால்கண்டு.
2459 கண்டுவணங்கினார்க்கு என்னாங்கொல்? * காமனுடல்
கொண்டதவத்தாற்கு உமையுணர்த்த * - வண்டலம்பும்
தாரலங்கல்நீள்முடியான்தன் பெயரேகேட்டிருந்து * அங்
காரலங்கலானமையாலாய்ந்து.
2460 ஆய்ந்துகொண்டு ஆதிப்பெருமானை * அன்பினால்
வாய்ந்தமனத்து இருத்தவல்லார்கள் * - ஏய்ந்ததம்
மெய், குந்தமாக விரும்புவரே * தாமும்தம்
வைகுந்தம்காண்பார்விரைந்து.
2461 விரைந்தடைமின்மேலொருநாள் வெள்ளம்பரக்க *
கரந்துலகம் காத்தளித்தகண்ணன் * - பரந்துலகம்
பாடின, ஆடினகேட்டு * படுநரகம்
வீடினவாசற்கதவு.
2462 கதவுமனமென்றும் காணலாமென்றும் *
குதையும்வினையாவிதீர்ந்தேன் * - விதையாக
நல்தமிழைவித்தி என்னுள்ளத்தைநீவிளைத்தாய் *
கற்றமொழியாகிக்கலந்து.
2463 கலந்தானென்னுள்ளத்துக் காமவேள்தாதை *
நலந்தானுமீதொப்பதுண்டே? * - அலர்ந்தலர்கள்
இட்டேத்தும் ஈசனும் நான்முகனும் * என்றிவர்கள்
விட்டேத்தமாட்டாதவேந்து.
2464 வேந்தராய்விண்ணவராய் விண்ணாகித்தண்ணளியாய் *
மாந்தராய்மாதாய் மற்றெல்லாமாய் * - சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன்தான்கொடுக்கும் *
பின்னால்தான் செய்யும்பிதிர்.
2465 பிதிரும்மனமிலேன் பிஞ்ஞகன்தன்னோடு
எதிர்வன் * அவனெனக்குநேரான் * - அதிரும்
கழற்காலமன்னனையே கண்ணனையே * நாளும்
தொழக்காதல்பூண்டேன்தொழில்.
2466 தொழிலெனெக்குத் தொல்லைமால்தன்னாமமேத்த *
பொழுதெனக்கு மற்றதுவேபோதும் * - கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன்வாலிமதனழித்த *
வில்லாளன் நெஞ்சத்துளன்.
2467 உளன்கண்டாய்நன்நெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் * உள்ளுவாருள்ளத்து - உளன்கண்டாய் *
தன்னொப்பான்தானாய் உளன்காண்தமியேற்கும் *
என்னொப்பார்க்கீசனிமை.
2468 இமையப்பெருமலைபோல் இந்திரனார்க்கிட்ட *
சமயவிருந்துண்டு ஆர்காப்பார்? * சமயங்கள்
கண்டானவைகாப்பான் கார்க்கண்டன்நான்முகனோடு *
உண்டானுலகோடுயிர்.
2469 உயிர்கொண்டுடலொழிய ஓடும்போதோடி *
அயர்வென்றதீர்ப்பான் பேர்பாடி * - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரேவாழ்வார் * சிறுசமயப்
பந்தனையார்வாழ்வேல்பழுது.
2470 பழுதாகாதொன்றறிந்தேன் பாற்கடலான்பாதம் *
வழுவாவகைநினைந்து வைகல் - தொழுவாரை *
கண்டிறைஞ்சிவாழ்வார் கலந்தவினைகெடுத்து *
விண்திறந்துவீற்றிருப்பார்மிக்கு.
2471 வீற்றிருந்து விண்ணாளவேண்டுவார் * வேங்கடத்தான்
பால்திருந்தவைத்தாரே பல்மலர்கள் * - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த்துஅன்பினராய் * மற்றவர்க்கே
தாழ்வாயிருப்பார்தமர்.
2472 தமராவார்யாவர்க்கும் தாமரைமேலார்க்கும் *
அமரர்க்கும் ஆடரவார்த்தாற்கும் - அமரர்கள்
தாள்தாமரை மலர்களிட்டிறைஞ்சி * மால்வண்ணன்
தாள்தாமரையடைவோமென்று.
2473 என்றும்மறந்தறியேன் என்னெஞ்சத்தேவைத்து *
நின்றுமிருந்தும் நெடுமாலை * - என்றும்
திருவிருந்தமார்பன் சிரீதரனுக்காளாய் *
கருவிருந்தநாள்முதலாக்காப்பு.
2474 காப்புமறந்தறியேன் கண்ணனேயென்றிருப்பன் *
ஆப்புஅங்கொழியவும் பல்லுயிர்க்கும் * - ஆக்கை
கொடுத்தளித்த கோனே! குணப்பரனே! * உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார்தாம்.
2475 மெய்தெளிந்தார்என்செய்யார்? வேறானார்நீறாக *
கைதெளிந்துகாட்டிக் களப்படுத்து * பைதெளிந்த
பாம்பினணையாய்! அருளாய்அடியேற்கு *
வேம்பும்கறியாகுமேன்று.
2476 ஏன்றேனடிமை இழிந்தேன்பிறப்பிடும்பை *
ஆன்றேனமரர்க்கமராமை * - ஆன்றேன்
கடன்நாடும்மண்ணாடும் கைவிட்டு * மேலை
இடநாடுகாணவினி. (2)
2477 இனியறிந்தேன் ஈசற்கும்நான்முகற்கும்தெய்வம் *
இனியறிந்தேன்எம்பெருமான்! உன்னை * - இனியறிந்தேன்
காரணன்நீகற்றவைநீ கற்பவைநீ * நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன்நான். (2)