3rd Thiruvandāthi

மூன்றாம் திருவந்தாதி

3rd Thiruvandāthi
The third Thiruvanthathi, composed by Peyazhvar, the third among the Mudhalazhvars, consists of one hundred verses. Poigaiyar highlighted that the Supreme Brahman has a form, and Boothathar showed that this form is Narayana. Peyazhvar, having experienced the Lord with them, attains supreme devotion by the Lord's grace. Witnessing the Lord with His divine + Read more
முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி நூறு பாசுரங்களை உடைய பிரபந்தம். பொய்கையார் பரப்ரம்மம் உருவுடன் கூடியவர் என்றும், பூதத்தார் அது நாராயணன் என்றும் காட்டித்தர அவர்களுடன் கூடியிருந்து அனுபவித்த பேயார் பகவானின் அருளால் பரமபக்தி தலையெடுத்து, பகவான் திருவுடன் + Read more
Group: 3rd 1000
Verses: 2282 to 2381
Glorification: Para / Omnipresent State (பரத்வம்)
āzhvār: Pey Āzhvār
  • தனியன் / Taniyan
  • MUT 1
    2282 ## திருக்கண்டேன் * பொன் மேனி கண்டேன் * திகழும்
    அருக்கன் அணி நிறமும் கண்டேன் ** செருக் கிளரும்
    பொன் ஆழி கண்டேன் * புரி சங்கம் கைக் கண்டேன் *
    என் ஆழி வண்ணன் பால் இன்று 1
  • MUT 2
    2283 இன்றே கழல் கண்டேன் * ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் *
    பொன் தோய் வரை மார்பில் பூந் துழாய் ** அன்று
    திருக் கண்டு கொண்ட * திருமாலே * உன்னை
    மருக்கண்டு கொண்ட என் மனம் 2
  • MUT 3
    2284 மனத்து உள்ளான் * மாகடல் நீர் உள்ளான் * மலராள்
    தனத்து உள்ளான் * தண் துழாய் மார்பன் ** சினத்துச்
    செருநர் உகச் செற்று உகந்த * தேங்கு ஓத வண்ணன் *
    வரு நரகம் தீர்க்கும் மருந்து 3
  • MUT 4
    2285 மருந்தும் பொருளும் * அமுதமும் தானே *
    திருந்திய செங் கண் மால் ஆங்கே ** பொருந்தியும்
    நின்று உலகம் உண்டு உமிழ்ந்தும் * நீர் ஏற்றும் மூவடியால்
    அன்று உலகம் தாயோன் அடி 4
  • MUT 5
    2286 அடி வண்ணம் தாமரை * அன்று உலகம் தாயோன் *
    படி வண்ணம் பார்க் கடல் நீர் வண்ணம் ** முடி வண்ணம்
    ஓர் ஆழி வெய்யோன் * ஒளியும் அஃது அன்றே *
    ஆர் ஆழி கொண்டாற்கு அழகு 5
  • MUT 6
    2287 அழகு அன்றே ஆழியாற்கு * ஆழி நீர் வண்ணம் *
    அழகு அன்றே அண்டம் கடத்தல் ** அழகு அன்றே
    அங்கை நீர் ஏற்றாற்கு * அலர் மேலோன் கால் கழுவ *
    கங்கை நீர் கான்ற கழல் 6
  • MUT 7
    2288 கழல் தொழுதும் வா நெஞ்சே! * கார்க் கடல் நீர் வேலை *
    பொழில் அளந்த புள் ஊர்திச் செல்வன் ** எழில் அளந்து அங்கு
    எண்ணற்கு அரியானை * எப் பொருட்கும் சேயானை *
    நண்ணற்கு அரியானை நாம் 7
  • MUT 8
    2289 நாமம் பல சொல்லி * நாராயணா என்று *
    நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே! வா ** மருவி
    மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த * வண்டு அறையும் தண் துழாய் *
    கண்ணனையே காண்க நம் கண் 8
  • MUT 9
    2290 கண்ணும் கமலம் * கமலமே கைத்தலமும் *
    மண் அளந்த பாதமும் மற்று அவையே ** எண்ணில்
    கரு மா முகில் வண்ணன் * கார்க் கடல் நீர் வண்ணன் *
    திரு மா மணி வண்ணன் தேசு 9
  • MUT 10
    2291 தேசும் திறலும் * திருவும் உருவமும் *
    மாசு இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் **
    வலம் புரிந்த வான் சங்கம் * கொண்டான் பேர் ஓத *
    நலம் புரிந்து சென்று அடையும் நன்கு 10
  • MUT 11
    2292 நன்கு ஓதும் * நால் வேதத்து உள்ளான் * நறவு இரியும்
    பொங்கு ஓதருவிப் புனல் வண்ணன் ** சங்கு ஓதப்
    பாற்கடலான் * பாம்பு அணையின் மேலான் * பயின்று உரைப்பார்
    நூல் கடலான் நுண் அறிவினான் 11
  • MUT 12
    2293 அறிவு என்னும் தாள் கொளுவி * ஐம்புலனும் தம்மில் *
    செறிவு என்னும் திண் கதவம் செம்மி ** மறை என்றும்
    நன்கு ஓதி * நன்கு உணர்வார் காண்பரே * நாள் தோறும்
    பைங்கோத வண்ணன் படி 12
  • MUT 13
    2294 படி வட்டத் தாமரை * பண்டு உலகம் நீர் ஏற்று *
    அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் **
    ஆகாயம் ஊடறுத்து * அண்டம் போய் நீண்டதே *
    மா காயமாய் நின்ற மாற்கு 13
  • MUT 14
    2295 மால்பால் மனம் சுழிப்ப * மங்கையர் தோள் கைவிட்டு *
    நூற்பால் மனம் வைக்க நொய்விது ஆம் ** நாற்பால
    வேதத்தான் வேங்கடத்தான் * விண்ணோர் முடி தோயும் *
    பாதத்தான் பாதம் பணிந்து 14
  • MUT 15
    2296 பணிந்து உயர்ந்த பௌவப் * படு திரைகள் மோத *
    பணிந்த பண மணிகளாலே அணிந்து ** அங்கு
    அனந்தன் அணைக் * கிடக்கும் அம்மான் * அடியேன்
    மனம் தன் அணைக் கிடக்கும் வந்து 15
  • MUT 16
    2297 ## வந்து உதைத்த வெண் திரைகள் * செம் பவள வெண் முத்தம் *
    அந்தி விளக்கும் அணி விளக்காம் ** எந்தை
    ஒரு அல்லித் தாமரையாள் * ஒன்றிய சீர் மார்வன் *
    திருவல்லிக்கேணியான் சென்று 16
  • MUT 17
    2298 சென்ற நாள் செல்லாத * செங்கண் மால் எங்கள் மால் *
    என்ற நாள் எந் நாளும் நாள் ஆகும் ** என்றும்
    இறவாத எந்தை * இணை அடிக்கே ஆளாய் *
    மறவாது வாழ்த்துக என் வாய் 17
  • MUT 18
    2299 வாய் மொழிந்து வாமனனாய் * மாவலிபால் * மூவடி மண்
    நீ அளந்து கொண்ட நெடுமாலே ** தாவிய நின்
    எஞ்சா இணை அடிக்கே * ஏழ் பிறப்பும் ஆளாகி *
    அஞ்சாது இருக்க அருள் 18
  • MUT 19
    2300 அருளாது ஒழியுமே ? * ஆல் இலைமேல் * அன்று
    தெருளாத * பிள்ளையாய்ச் சேர்ந்தான் ** இருளாத
    சிந்தையராய் சேவடிக்கே * செம் மலர் தூய் கைதொழுது *
    முந்தையராய் நிற்பார்க்கு முன் 19
  • MUT 20
    2301 முன் உலகம் * உண்டு உமிழ்தாய்க்கு * அவ்வுலகம் ஈரடியால் *
    பின் அளந்து கோடல் பெரிதொன்றே ? ** என்னே!
    திருமாலே ! * செங்கண் நெடியானே ! * எங்கள்
    பெருமானே ! நீ யிதனைப் பேசு. 20
  • MUT 21
    2302 பேசுவார் * எவ்வளவு பேசுவர் * அவ்வளவே
    வாச மலர்த் துழாய் மாலையான் ** தேசு உடைய
    சக்கரத்தான் * சங்கினான் சார்ங்கத்தான் * பொங்கு அரவ
    வக்கரனைக் கொன்றான் வடிவு 21
  • MUT 22
    2303 வடிவு ஆர் முடி கோட்டி * வானவர்கள் * நாளும்
    கடி ஆர் மலர் தூவி காணும் படியானை **
    செம்மையால் உள் உருகிச் * செவ்வனே நெஞ்சமே! *
    மெய்ம்மையே காண விரும்பு 22
  • MUT 23
    2304 விரும்பி விண் மண் அளந்த * அஞ் சிறைய வண்டு ஆர் *
    சுரும்பு தொளையில் சென்று ஊத ** அரும்பும்
    புனந் துழாய் மாலையான் * பொன் அம் கழற்கே *
    மனம் துழாய் மாலாய் வரும் 23
  • MUT 24
    2305 வருங்கால் இரு நிலனும் * மால் விசும்பும் காற்றும் *
    நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் ** பொருந்தும்
    சுடர் ஆழி * ஒன்று உடையான் சூழ் கழலே * நாளும்
    தொடர் ஆழி நெஞ்சே! தொழுது 24
  • MUT 25
    2306 தொழுதால் பழுது உண்டே? * தூ நீர் உலகம் *
    முழுது உண்டு மொய் குழலாள் ஆய்ச்சி ** விழுது உண்ட
    வாயானை * மால் விடை ஏழ் செற்றானை * வானவர்க்கும்
    சேயானை நெஞ்சே சிறந்து? 25
  • MUT 26
    2307 சிறந்த என் சிந்தையும் * செங்கண் அரவும் *
    நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் ** உறைந்ததுவும்
    வேங்கடமும் வெஃகாவும் * வேளுக்கைப் பாடியுமே *
    தாம் கடவார் தண் துழாயார் 26
  • MUT 27
    2308 ஆரே துயர் உழந்தார் * துன்பு உற்றார் ஆண்டையார்? *
    காரே மலிந்த கருங் கடலை ** நேரே
    கடைந்தானை * காரணனை நீர் அணைமேல் * பள்ளி
    அடைந்தானை நாளும் அடைந்து 27
  • MUT 28
    2309 அடைந்தது அரவு அணை மேல் * ஐவர்க்கு ஆய் * அன்று
    மிடைந்தது * பாரத வெம் போர் ** உடைந்ததுவும்
    ஆய்ச்சிபால் மத்துக்கே * அம்மனே! வாள் எயிற்றுப் *
    பேய்ச்சி பால் உண்ட பிரான் 28
  • MUT 29
    2310 பேய்ச்சி பால் உண்ட * பெருமானைப் பேர்ந்து எடுத்து *
    ஆய்ச்சி முலை கொடுத்தாள் அஞ்சாதே ** வாய்த்த
    இருள் ஆர் திருமேனி * இன் பவளச் செவ்வாய் *
    தெருளா மொழியானைச் சேர்ந்து 29
  • MUT 30
    2311 சேர்ந்த திருமால் * கடல் குடந்தை வேங்கடம் *
    நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும் ** வாய்ந்த
    மறை பாடகம் அனந்தன் * வண் துழாய்க் கண்ணி *
    இறை பாடி ஆய இவை 30
  • MUT 31
    2312 இவை அவன் கோயில் * இரணியனது ஆகம் *
    அவை செய்து அரி உருவம் ஆனான் ** செவி தெரியா
    நாகத்தான் * நால் வேதத்து உள்ளான் * நறவு ஏற்றான்
    பாகத்தான் பாற்கடல் உளான் 31
  • MUT 32
    2313 பாற்கடலும் வேங்கடமும் * பாம்பும் பனி விசும்பும் *
    நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் ** பாற்பட்டு
    இருந்தார் மனமும் * இடமாகக் கொண்டான் *
    குருந்து ஒசித்த கோபாலகன் 32
  • MUT 33
    2314 பாலகனாய் * ஆல் இலைமேல் பைய * உலகு எல்லாம்
    மேல் ஒருநாள் * உண்டவனே! மெய்ம்மையே ** மாலவனே!
    மந்தரத்தால் * மா நீர்க் கடல் கடைந்து * வான் அமுதம்
    அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று 33
  • MUT 34
    2315 அன்று இவ் உலகம் * அளந்த அசைவே கொல்? *
    நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் ** அன்று
    கிடந்தானைக் * கேடு இல் சீரானை * முன் கஞ்சைக்
    கடந்தானை நெஞ்சமே! காண் 34
  • MUT 35
    2316 காண் காண் என * விரும்பும் கண்கள் * கதிர் இலகு
    பூண் தார் * அகலத்தான் பொன் மேனி ** பாண்கண்
    தொழில் பாடி * வண்டு அறையும் தொங்கலான் * செம்பொன்
    கழல் பாடி யாம் தொழுதும் கை 35
  • MUT 36
    2317 கைய கனல் ஆழி * கார்க் கடல் வாய் வெண் சங்கம் *
    வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் ** செய்ய
    படை பரவை பாழி * பனி நீர் உலகம் *
    அடி அளந்த மாயன் அவர்க்கு 36
  • MUT 37
    2318 அவற்கு அடிமைப் பட்டேன் * அகத்தான் புறத்தான் *
    உவர்க்கும் கருங் கடல் நீர் உள்ளான் ** துவர்க்கும்
    பவள வாய்ப் பூமகளும் * பல் மணிப் பூண் ஆரம் *
    திகழும் திருமார்பன் தான் 37
  • MUT 38
    2319 தானே தனக்கு உவமன் * தன் உருவே எவ் உருவும் *
    தானே தவ உருவும் தாரகையும் ** தானே
    எரி சுடரும் மால் வரையும் * எண் திசையும் * அண்டத்து
    இரு சுடரும் ஆய இறை 38
  • MUT 39
    2320 இறை ஆய் நிலன் ஆகி * எண் திசையும் தான் ஆய் *
    மறை ஆய் மறைப் பொருள் ஆய் வான் ஆய் ** பிறை வாய்ந்த
    வெள்ளத்து அருவி ** விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான் *
    உள்ளத்தின் உள்ளே உளன் 39
  • MUT 40
    2321 உளன் கண்டாய் நல் நெஞ்சே! * உத்தமன் என்றும்
    உளன் கண்டாய் * உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் **
    விண் ஒடுங்கக் கோடு உயரும் * வீங்கு அருவி வேங்கடத்தான் *
    மண் ஒடுங்க தான் அளந்த மன் 40
  • MUT 41
    2322 மன்னு மணி முடி நீண்டு * அண்டம் போய் எண் திசையும் *
    துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே ** மின்னை
    உடையாகக் கொண்டு * அன்று உலகு அளந்தான் * குன்றம்
    குடையாக ஆ காத்த கோ 41
  • MUT 42
    2323 கோவலனாய் * ஆ நிரைகள் மேய்த்து குழல் ஊதி *
    மா வலனாய்க் கீண்ட மணி வண்ணன் ** மேவி
    அரி உருவம் ஆகி * இரணியனது ஆகம் *
    தெரி உகிரால் கீண்டான் சினம் 42
  • MUT 43
    2324 சின மா மத களிற்றின் * திண் மருப்பைச் சாய்த்து *
    புனம் மேய பூமி அதனை ** தனமாகப்
    பேர் அகலத்துள் ஒடுக்கும் * பேர் ஆர மார்வனார் *
    ஓர் அகலத்து உள்ளது உலகு 43
  • MUT 44
    2325 உலகமும் * ஊழியும் ஆழியும் * ஒண் கேழ்
    அலர் கதிரும் * செந்தீயும் ஆவான் ** பல கதிர்கள்
    பாரித்த * பைம் பொன் முடியான் அடி இணைக்கே *
    பூரித்து என் நெஞ்சே! புரி 44
  • MUT 45
    2326 புரிந்து மத வேழம் * மாப் பிடியோடு ஊடி *
    திரிந்து சினத்தால் பொருது ** விரிந்த சீர்
    வெண் கோட்டு * முத்து உதிர்க்கும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
    மண் கோட்டுக் கொண்டான் மலை 45
  • MUT 46
    2327 மலை முகடு மேல் வைத்து * வாசுகியைச் சுற்றி *
    தலை முகடு தான் ஒரு கை பற்றி ** அலை முகட்டு
    அண்டம் போய் நீர் தெறிப்ப * அன்று கடல் கடைந்தான் *
    பிண்டமாய் நின்ற பிரான் 46
  • MUT 47
    2328 நின்ற பெருமானே! நீர் ஏற்று * உலகு எல்லாம்
    சென்ற பெருமானே! * செங்கண்ணா! ** அன்று
    துரக வாய் கீண்ட * துழாய் முடியாய்! * நங்கள்
    நரக வாய் கீண்டாயும் நீ 47
  • MUT 48
    2329 நீ அன்றே நீர் ஏற்று * உலகம் அடி அளந்தாய்? *
    நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய்? ** நீ அன்றே
    மா வாய் உரம் பிளந்து * மா மருதின் ஊடு போய் *
    தேவாசுரம் பொருதாய் செற்று? 48
  • MUT 49
    2330 செற்றதுவும் * சேரா இரணியனை * சென்று ஏற்றுப்
    பெற்றதுவும் * மா நிலம் பின்னைக்கு ஆய் ** முற்றல்
    முரி ஏற்றின் * முன் நின்று மொய்ம் பொழித்தாய் ! * மூரிச்
    சுரி ஏறு சங்கினாய்! சூழ்ந்து 49
  • MUT 50
    2331 சூழ்ந்த துழாய் அலங்கல் * சோதி மணி முடி மால் *
    தாழ்ந்த அருவித் தட வரைவாய் ** ஆழ்ந்த
    மணி நீர்ச் சுனை வளர்ந்த * மா முதலை கொன்றான் *
    அணி நீல வண்ணத்தவன் 50
  • MUT 51
    2332 அவனே அரு வரையால் * ஆ நிரைகள் காத்தான் *
    அவனே அணி மருதம் சாய்த்தான் ** அவனே
    கலங்காப் பெரு நகரம் * காட்டுவான் கண்டீர் *
    இலங்காபுரம் எரித்தான் எய்து 51
  • MUT 52
    2333 எய்தான் மராமரம் * ஏழும் இராமனாய் *
    எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய் ** எய்ததுவும்
    தென் இலங்கைக் கோன் வீழ * சென்று குறள் உரு ஆய் *
    முன் நிலம் கைக்கொண்டான் முயன்று 52
  • MUT 53
    2334 முயன்று தொழு நெஞ்சே! * மூரி நீர் வேலை *
    இயன்ற மரத்து ஆல் இலையின் மேலால் ** பயின்று அங்கு ஓர்
    மண் நலம் கொள் வெள்ளத்து * மாயக் குழவியாய் *
    தண் அலங்கல் மாலையான் தாள் 53
  • MUT 54
    2335 தாளால் சகடம் * உதைத்து பகடு உந்தி *
    கீளா மருது இடை போய் கேழல் ஆய் ** மீளாது
    மண் அகலம் கீண்டு * அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு *
    பெண் அகலம் காதல் பெரிது 54
  • MUT 55
    2336 பெரிய வரை மார்பில் * பேர் ஆரம் பூண்டு *
    கரிய முகிலிடை மின் போல ** தெரியுங்கால்
    பாண் ஒடுங்க * வண்டு அறையும் பங்கயமே * மற்று அவன் தன்
    நீள் நெடுங் கண் காட்டும் நிறம் 55
  • MUT 56
    2337 நிறம் வெளிது செய்து * பசிது கரிது என்று *
    இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் ** நிறைவு உடைய
    நா மங்கை தானும் * நலம் புகழ் வல்லளே *
    பூ மங்கை கேள்வன்பொலிவு 56
  • MUT 57
    2338 பொலிந்து இருண்ட கார் வானில் * மின்னே போல் தோன்றி *
    மலிந்து திரு இருந்த மார்வன் ** பொலிந்து
    கருடன்மேல் கொண்ட * கரியான் கழலே *
    தெருள் தன்மேல் கண்டாய் தெளி 57
  • MUT 58
    2339 தெளிந்த சிலாதலத்தின் * மேல் இருந்த மந்தி *
    அளிந்த கடுவனையே நோக்கி ** விளங்கிய
    வெண் மதியம் * தா என்னும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
    மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு 58
  • MUT 59
    2340 வாழும் வகை அறிந்தேன் * மை போல் நெடு வரைவாய் *
    தாழும் அருவி போல் தார் கிடப்ப ** சூழும்
    திரு மா மணி வண்ணன் * செங்கண் மால் * எங்கள்
    பெருமான் அடி சேரப் பெற்று 59
  • MUT 60
    2341 பெற்றம் பிணை மருதம் * பேய் முலை மாச் சகடம் *
    முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து ** கற்றுக்
    குணிலை * விளங் கனிக்குக் கொண்டு எறிந்தான் * வெற்றிப்
    பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு 60
  • MUT 61
    2342 ## பண்டு எல்லாம் வேங்கடம் * பாற்கடல் வைகுந்தம் *
    கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் ** வண்டு
    வளம் கிளரும் நீள் சோலை * வண் பூங் கடிகை *
    இளங் குமரன் தன் விண்ணகர் 61
  • MUT 62
    2343 விண்ணகரம் வெஃகா * விரி திரை நீர் வேங்கடம் *
    மண் நகரம் மா மாட வேளுக்கை ** மண்ணகத்த
    தென் குடந்தை * தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி *
    தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
  • MUT 63
    2344 தாழ் சடையும் நீள் முடியும் * ஒண் மழுவும் சக்கரமும் *
    சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் ** சூழும்
    திரண்டு அருவி பாயும் * திருமலைமேல் எந்தைக்கு *
    இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து 63
  • MUT 64
    2345 இசைந்த அரவமும் * வெற்பும் கடலும் *
    பசைந்து அங்கு அமுது படுப்ப ** அசைந்து
    கடைந்த வருத்தமோ? * கச்சி வெஃகாவில் *
    கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு? 64
  • MUT 65
    2346 அங்கற்கு இடர் இன்றி * அந்திப் பொழுதத்து *
    மங்க இரணியனது ஆகத்தை ** பொங்கி
    அரி உருவமாய்ப் பிளந்த * அம்மான் அவனே *
    கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து 65
  • MUT 66
    2347 காய்ந்து இருளை மாற்றிக் * கதிர் இலகு மா மணிகள் *
    ஏய்ந்த பணக் கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப ** வாய்ந்த
    மது கைடவரும் * வயிறு உருகி மாண்டார் *
    அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு 66
  • MUT 67
    2348 ஆங்கு மலரும் * குவியுமால் உந்திவாய் *
    ஓங்கு கமலத்தின் ஒண் போது ** ஆம் கைத்
    திகிரி சுடர் என்றும் * வெண் சங்கம் * வானில்
    பகரும் மதி என்றும் பார்த்து 67
  • MUT 68
    2349 பார்த்த கடுவன் * சுனை நீர் நிழல் கண்டு *
    பேர்த்து ஓர் கடுவன் எனப் பேர்ந்து ** கார்த்த
    களங் கனிக்குக் * கை நீட்டும் வேங்கடமே * மேல் நாள்
    விளங் கனிக்குக் கன்று எறிந்தான் வெற்பு 68
  • MUT 69
    2350 வெற்பு என்று * வேங்கடம் பாடும் * வியன் துழாய்
    கற்பு என்று சூடும் * கருங் குழல்மேல் ** மல் பொன்ற
    நீண்ட தோள் மால் கிடந்த * நீள் கடல் நீர் ஆடுவான் *
    பூண்ட நாள் எல்லாம் புகும் 69
  • MUT 70
    2351 புகு மதத்தால் * வாய் பூசிக் கீழ் தாழ்ந்து * அருவி
    உகு மதத்தால் * கால் கழுவிக் கையால் ** மிகு மதத் தேன்
    விண்ட மலர் கொண்டு * விறல் வேங்கடவனையே *
    கண்டு வணங்கும் களிறு 70
  • MUT 71
    2352 களிறு முகில் குத்தக் * கை எடுத்து ஓடி *
    ஒளிறு மருப்பு ஒசி கை யாளி ** பிளிறி
    விழ * கொன்று நின்று அதிரும் * வேங்கடமே * மேல் நாள்
    குழக் கன்று கொண்டு எறிந்தான் குன்று 71
  • MUT 72
    2353 குன்று ஒன்றின் ஆய * குற மகளிர் கோல் வளைக் கை *
    சென்று விளையாடும் தீம் கழை போய் ** வென்று
    விளங்கு மதி கோள் விடுக்கும் * வேங்கடமே * மேலை
    இளங் குமரர் கோமான் இடம் 72
  • MUT 73
    2354 இடம் வலம் ஏழ் பூண்ட * இரவித் தேர் ஓட்டி *
    வட முக வேங்கடத்து மன்னும் ** குடம் நயந்த
    கூத்தனாய் நின்றான் * குரை கழலே கூறுவதே *
    நாத்தன்னால் உள்ள நலம் 73
  • MUT 74
    2355 நலமே வலிது கொல்? * நஞ்சு ஊட்டு வன் பேய் *
    நிலமே புரண்டு போய் வீழ ** சலமே தான்
    வெம் கொங்கை உண்டானை * மீட்டு ஆய்ச்சி ஊட்டுவான் *
    தன் கொங்கை வாய் வைத்தாள் சார்ந்து 74
  • MUT 75
    2356 சார்ந்து அகடு தேய்ப்பத் * தடாவிய கோட்டு உச்சிவாய் *
    ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை ** சேர்ந்து
    சின வேங்கை பார்க்கும் * திருமலையே * ஆயன்
    புன வேங்கை நாறும் பொருப்பு 75
  • MUT 76
    2357 பொருப்பிடையே நின்றும் * புனல் குளித்தும் * ஐந்து
    நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா ** விருப்பு உடைய
    வெஃகாவே சேர்ந்தானை * மெய்ம் மலர் தூய்க் கை தொழுதால் *
    அஃகாவே தீவினைகள் ஆய்ந்து. 76
  • MUT 77
    2358 ஆய்ந்த அரு மறையோன் * நான்முகத்தோன் நன் குறங்கில் *
    வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ** ஏய்ந்த
    முடிப் போது * மூன்று ஏழ் என்று எண்ணினான் * ஆர்ந்த
    அடிப் போது நங்கட்கு அரண் 77
  • MUT 78
    2359 அரண் ஆம் நமக்கு என்றும் * ஆழி வலவன் *
    முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் ** சரண் ஆமேல்
    ஏது கதி? ஏது நிலை? * ஏது பிறப்பு? என்னாதே *
    ஓது கதி மாயனையே ஓர்த்து 78
  • MUT 79
    2360 ஓர்த்த மனத்தராய் * ஐந்து அடக்கி ஆராய்ந்து *
    பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் ** கார்த்த
    விரை ஆர் நறும் துழாய் * வீங்கு ஓத மேனி *
    நிரை ஆர மார்வனையே நின்று 79
  • MUT 80
    2361 நின்று எதிராய * நிரை மணித் தேர் வாணன் தோள் *
    ஒன்றிய ஈர் ஐஞ்ஞூறு உடன் துணிய ** வென்று இலங்கும்
    ஆர் படு வான் * நேமி அரவு அணையான் * சேவடிக்கே
    நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு 80
  • MUT 81
    2362 நெஞ்சால் * நினைப்பு அரியனேலும் * நிலைப்பெற்று என்
    நெஞ்சமே பேசாய் * நினைக்குங்கால் ** நெஞ்சத்துப்
    பேராது நிற்கும் * பெருமானை என் கொலோ *
    ஓராது நிற்பது உணர்வு. 81
  • MUT 82
    2363 உணரில் உணர்வு அரியன் * உள்ளம் புகுந்து *
    புணரிலும் காண்பு அரியன் உண்மை ** இணர் அணையக்
    கொங்கு அணைந்து வண்டு அறையும் * தண் துழாய்க் கோமானை *
    எங்கு அணைந்து காண்டும் இனி? 82
  • MUT 83
    2364 இனி அவன் மாயன் * என உரைப்பரேலும் *
    இனி அவன் காண்பு அரியனேலும் ** இனியவன்
    கள்ளத்தால் மண் கொண்டு * விண் கடந்த பைங் கழலான் *
    உள்ளத்தின் உள்ளே உளன் 83
  • MUT 84
    2365 உளனாய * நான்மறையின் உட்பொருளை * உள்ளத்து
    உளனாகத் * தேர்ந்து உணர்வரேலும் ** உளனாய
    வண் தாமரை நெடுங் கண் * மாயவனை யாவரே? *
    கண்டார் உகப்பர் கவி 84
  • MUT 85
    2366 கவியினார் கை புனைந்து * கண் ஆர் கழல் போய் *
    செவியின் ஆர் கேள்வியராய்ச் சேர்ந்தார் ** புவியினார்
    போற்றி உரைக்கப் * பொலியுமே * பின்னைக்கு ஆய்
    ஏற்று உயிரை அட்டான் எழில்? 85
  • MUT 86
    2367 எழில் கொண்ட * மின்னுக் கொடி எடுத்து * வேகத்
    தொழில்கொண்டு * தான் முழங்கித் தோன்றும் ** எழில்கொண்ட
    நீர் மேகம் அன்ன * நெடு மால் நிறம் போல *
    கார் வானம் காட்டும் கலந்து 86
  • MUT 87
    2368 கலந்து மணி இமைக்கும் கண்ணா! * நின் மேனி
    மலர்ந்து * மரதகமே காட்டும் ** நலம் திகழும்
    கொந்தின்வாய் வண்டு அறையும் * தண் துழாய்க் கோமானை *
    அந்தி வான் காட்டும் அது 87
  • MUT 88
    2369 அது நன்று இது தீது என்று * ஐயப்படாதே *
    மது நின்ற தண் துழாய் மார்வன் ** பொது நின்ற *
    பொன் அம் கழலே தொழுமின் * முழு வினைகள்
    முன்னம் கழலும் முடிந்து 88
  • MUT 89
    2370 முடிந்த பொழுதில் குற வாணர் * ஏனம்
    படிந்து உழு சால் * பைந் தினைகள் வித்த ** தடிந்து எழுந்த
    வேய்ங் கழை போய் * விண் திறக்கும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
    தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு 89
  • MUT 90
    2371 சிலம்பும் செறி கழலும் * சென்று இசைப்ப * விண் ஆறு
    அலம்பிய சேவடி போய் ** அண்டம் புலம்பிய தோள்
    எண் திசையும் சூழ * இடம் போதாது என் கொலோ? *
    வண் துழாய் மால் அளந்த மண். 90
  • MUT 91
    2372 மண் உண்டும் * பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் *
    வெண்ணெய் விழுங்க வெகுண்டு ** ஆய்ச்சி கண்ணிக்
    கயிற்றினால் கட்ட * தான் கட்டுண்டிருந்தான் *
    வயிற்றினோடு ஆற்றா மகன் 91
  • MUT 92
    2373 மகன் ஒருவர்க்கு அல்லாத * மா மேனி மாயன் *
    மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை **
    சிறைசெய்த வாணன் தோள் * செற்றான் கழலே *
    நிறைசெய்து என் நெஞ்சே! நினை 92
  • MUT 93
    2374 நினைத்து உலகில் ஆர் தெளிவார்? * நீண்ட திருமால் *
    அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல்மேல் ** கனைத்து உலவு
    வெள்ளத்து ஓர் பிள்ளையாய் * மெள்ளத் துயின்றானை *
    உள்ளத்தே வை நெஞ்சமே! உய்த்து 93
  • MUT 94
    2375 உய்த்து உணர்வு என்னும் * ஒளி கொள் விளக்கு ஏற்றி *
    வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் ** மெத்தெனவே
    நின்றான் இருந்தான் * கிடந்தான் என் நெஞ்சத்து *
    பொன்றாமை மாயன் புகுந்து 94
  • MUT 95
    2376 புகுந்து இலங்கும் * அந்திப் பொழுதத்து * அரியாய்
    இகழ்ந்த * இரணியனது ஆகம் ** சுகிர்ந்து எங்கும்
    சிந்தப் பிளந்த * திருமால் திருவடியே *
    வந்தித்து என் நெஞ்சமே ! வாழ்த்து (95)
  • MUT 96
    2377 வாழ்த்திய வாயராய் * வானோர் மணி மகுடம் *
    தாழ்த்தி வணங்கத் தழும்பாமே ** கேழ்த்த
    அடித் தாமரை * மலர்மேல் மங்கை மணாளன் *
    அடித் தாமரை ஆம் அலர் 96
  • MUT 97
    2378 அலர் எடுத்த உந்தியான் * ஆங்கு எழில் ஆய *
    மலர் எடுத்த மா மேனி மாயன் ** அலர் எடுத்த
    வண்ணத்தான் * மா மலரான் வார் சடையான் * என்று இவர்கட்கு
    எண்ணத்தான் ஆமோ ? இமை. 97
  • MUT 98
    2379 இமம் சூழ் மலையும் * இரு விசும்பும் காற்றும் *
    அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் ** நமன் சூழ்
    நரகத்து * நம்மை நணுகாமல் காப்பான் *
    துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு 98
  • MUT 99
    2380 ## தொட்ட படை எட்டும் * தோலாத வென்றியான் *
    அட்டபுயகரத்தான் அஞ்ஞான்று ** குட்டத்துக்
    கோள் முதலை துஞ்ச * குறித்து எறிந்த சக்கரத்தான் *
    தாள் முதலே நங்கட்குச் சார்வு 99
  • MUT 100
    2381 ## சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் * தண் துழாய்த்
    தார் வாழ் * வரை மார்பன் தான் முயங்கும் ** கார் ஆர்ந்த
    வான் அமரும் மின் இமைக்கும் * வண் தாமரை நெடுங் கண் *
    தேன் அமரும் பூமேல் திரு 100