Thiruvirutham

திருவிருத்தம்

Thiruvirutham
Thiruvirutham, the first of the four Prabandhams composed by Nammazhvar and embodying the essence of the Vedas, is regarded as the essence of the Rigveda with its 100 verses. āzhvār's devotion reaches a state of intense love, and he expresses his experiences through the persona of 'Parankusa Nayaki,' thus the name Thiruvirutham. These verses, while + Read more
நம்மாழ்வார் அருளிய வேத சாரமான நான்கு பிரபந்தங்களில் முதலாவதான திருவிருத்தம் ரிக்வேத ஸாரமாக 100 பாசுரங்கள் கொண்டது. ஆழ்வாருடைய பக்தியானது பிரேம நிலையை அடைய தான் 'பராங்குச நாயகி' பாவத்தில் தமது விருத்தத்தை கூறுவதால் திருவிருத்தம் என பெயர் பெற்றது. இப்பாசுரங்கள் வெளிப்படையாக காட்டும் + Read more
Group: 3rd 1000
Verses: 2478 to 2577
Glorification: Krishna Avatar (க்ருஷ்ணாவதாரம்)
Eq scripture: Rig Veda
āzhvār: Namm Āzhvār
  • தனியன் / Taniyan
  • TVT 1
    2478 ## பொய்ந் நின்ற ஞானமும் * பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் *
    இந் நின்ற நீர்மை * இனி யாம் உறாமை **
    உயிர் அளிப்பான் எந் நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் * இமையோர் தலைவா! *
    மெய்ந் நின்று கேட்டருளாய் * அடியேன் செய்யும் விண்ணப்பமே1
  • TVT 2
    2479 செழு நீர்த் தடத்துக் * கயல் மிளிர்ந்தால் ஒப்ப * சேயரிக் கண்
    அழு நீர் துளும்ப அலமருகின்றன ** வாழியரோ!
    முழு நீர் முகில் வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம் *
    தொழுநீர் இணை அடிக்கே * அன்பு சூட்டிய சூழ் குழற்கே2
  • TVT 3
    2480 குழல் கோவலர் மடப் பாவையும் * மண்மகளும் * திருவும்
    நிழல்போல்வனர் கண்டு * நிற்கும்கொல் மீளும்கொல் ** தண் அம் துழாய்
    அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழக் கடவும் *
    தழல் போல் சினத்த * அப் புள்ளின் பின் போன தனி நெஞ்சமே?3
  • TVT 4
    2481 தனி நெஞ்சம் முன் அவர் * புள்ளே கவர்ந்தது * தண் அம் துழாய்க்கு
    இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாம் இலம் ** நீ நடுவே
    முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப் *
    பனி நஞ்ச மாருதமே * எம்மது ஆவி பனிப்பு இயல்வே?4
  • TVT 5
    2482 பனிப்பு இயல்வாக * உடைய தண் வாடை * இக் காலம் இவ் ஊர்ப்
    பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி விசும் ** அம் தண்ணம் துழாய்ப்
    பனிப் புயல் சோரும் தடங் கண்ணி மாமைத் திறத்துக்கொலாம் *
    பனிப் புயல் வண்ணன் * செங்கோல் ஒருநான்று தடாவியதே5
  • TVT 6
    2483 தடாவிய அம்பும் * முரிந்த சிலைகளும் போகவிட்டு *
    கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் ** அசுரர் மங்கக்
    கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல் *
    நடாவிய கூற்றம் கண்டீர் * உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே6
  • TVT 7
    2484 ஞாலம் பனிப்பச் செறுத்து * நல் நீர் இட்டு கால் சிதைந்து *
    நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது ** திருமால்
    கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு * தண் பூங்
    காலம் கொலோ? அறியேன் * வினையாட்டியேன் காண்கின்றவே7
  • TVT 8
    2485 காண்கின்றனகளும் * கேட்கின்றனகளும் காணில் * இந் நாள்
    பாண் குன்ற நாடர் பயில்கின்றன ** இது எல்லாம் அறிந்தோம்
    மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் *
    சேண் குன்றம் சென்று * பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே8
  • TVT 9
    2486 திண் பூஞ் சுடர் நுதி * நேமி அம் செல்வர் * விண் நாடு அனைய
    வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம்? ** இவையோ
    கண் பூங் கமலம் கருஞ் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி *
    வண் பூங் குவளை * மட மான் விழிக்கின்ற மா இதழே9
  • TVT 10
    2487 மாயோன் * வட திருவேங்கட நாட * வல்லிக்கொடிகாள்
    நோயோ உரைக்கிலும் * கேட்கின்றிலீர் உறையீர் ** நுமது
    வாயோ? அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
    ஆயோ? * அடும் தொண்டையோ? * அறையோ இது அறிவு அரிதே10
  • TVT 11
    2488 அரியன யாம் இன்று காண்கின்றன * கண்ணன் விண் அனையாய்
    பெரியன காதம் * பொருட்கோ பிரிவு என ** ஞாலம் எய்தற்கு
    உரியன ஒண் முத்தும் பைம் பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கைப் *
    பெரியன கெண்டைக் குலம் * இவையோ வந்து பேர்கின்றவே11
  • TVT 12
    2489 பேர்கின்றது மணி மாமை * பிறங்கி அள்ளல் பயலை *
    ஊர்கின்றது கங்குல் ஊழிகளே ** இது எல்லாம் இனவே
    ஈர்கின்ற சக்கரத்து எம் பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
    சார்கின்ற நல் நெஞ்சினார் * தந்து போன தனி வளமே12
  • TVT 13
    2490 தனி வளர் செங்கோல் நடாவு * தழல் வாய் அரசு அவியப்
    பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து ** பார் முழுதும்
    துனி வளர் காதல் துழாயைத் துழாவு தண் வாடை தடிந்து
    இனி வளை காப்பவர் ஆர்? * எனை ஊழிகள் ஈர்வனவே13
  • TVT 14
    2491 ஈர்வன வேலும் அம் சேலும் * உயிர்மேல் மிளிர்ந்து இவையோ *
    பேர்வனவோ அல்ல * தெய்வ நல் வேள் கணைப் ** பேர் ஒளியே
    சோர்வன நீலச் சுடர் விடு மேனி அம்மான் * விசும்பு ஊர்
    தேர்வன * தெய்வம் அன்னீர கண்ணோ இச் செழுங் கயலே?14
  • TVT 15
    2492 கயலோ நும கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர் *
    அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை? ** கடல் கவர்ந்த
    புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
    பயலோ இலீர் * கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே15
  • TVT 16
    2493 பலபல ஊழிகள் ஆயிடும் * அன்றி ஓர் நாழிகையைப் *
    பலபல கூறிட்ட கூறு ஆயிடும் * கண்ணன் விண் அனையாய்! **
    பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் *
    பலபல சூழல் உடைத்து * அம்ம வாழி இப் பாய் இருளே16
  • TVT 17
    2494 இருள் விரிந்தால் அன்ன * மா நீர்த் திரைகொண்டு வாழியரோ! *
    இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் ** அரவு அணைமேல்
    இருள் விரி நீலக் கரு நாயிறு சுடர் கால்வது போல் *
    இருள் விரி சோதிப் * பெருமான் உறையும் எறி கடலே17
  • TVT 18
    2495 கடல் கொண்டு எழுந்தது வானம் * அவ் வானத்தை அன்றிச் சென்று *
    கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது * கண்ணன் மண்ணும் விண்ணும் **
    கடல் கொண்டு எழுந்த அக் காலம் கொலோ? புயல் காலம்கொலோ? *
    கடல் கொண்ட கண்ணீர் * அருவிசெய்யாநிற்கும் காரிகையே 18
  • TVT 19
    2496 காரிகையார் நிறை காப்பவர் யார் என்று * கார் கொண்டு இன்னே
    மாரி கை ஏறி * அறையிடும் காலத்தும் ** வாழியரோ
    சாரிகைப் புள்ளர் அம் தண்ணம் துழாய் இறை கூய் அருளார் *
    சேரி கை ஏறும் * பழியாய் விளைந்தது என் சில்மொழிக்கே 19
  • TVT 20
    2497 சில்மொழி நோயோ * கழி பெருந் தெய்வம் * இந் நோய் இனது என்று
    இல் மொழி கேட்கும் * இளந் தெய்வம் அன்று இது ** வேல நில் நீ
    என் மொழி கேள்மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் *
    சொல் மொழி மாலை * அம் தண்ணம் துழாய்கொண்டு சூட்டுமினே20
  • TVT 21
    2498 சூட்டு நல் மாலைகள் * தூயன ஏந்தி * விண்ணோர்கள் நல் நீர்
    ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ** ஓர் மாயையினால்
    ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து இமில் ஏற்று வன் கூன் *
    கோட்டிடை ஆடினை கூத்து * அடல் ஆயர் தம் கொம்பினுக்கே21
  • TVT 22
    2499 கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் * வேட்டை கொண்டாட்டு
    அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் ** புள் ஊரும் கள்வர்
    தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன
    வம்பு ஆர் வினாச் சொல்லவோ * எம்மை வைத்தது இவ் வான் புனத்தே?22
  • TVT 23
    2500 புனமோ? புனத்து அயலே வழிபோகும் அரு வினையேன் *
    மனமோ? மகளிர் நும் காவல் சொல்லீர் ** புண்டரீகத்து அம் கேழ்
    வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் * தெய்வத்து
    இனம் ஓர் அனையீர்களாய் * இவையோ நும் இயல்வுகளே?23
  • TVT 24
    2501 இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் * ஒரோ குடங்கைக்
    கயல் பாய்வன * பெரு நீர்க் கண்கள் தம்மொடும் ** குன்றம் ஒன்றால்
    புயல்வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்க் *
    கொயல்வாய் மலர்மேல் * மனத்தொடு என்னாம்கொல் எம் கோல் வளைக்கே?24
  • TVT 25
    2502 எம் கோல் வளை முதலா * கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் *
    செங்கோல் வளைவு விளைவிக்குமால் ** திறல் சேர் அமரர்
    தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் *
    நம் கோன் உகக்கும் துழாய் * என் செய்யாது இனி நானிலத்தே?25
  • TVT 26
    2503 ## நானிலம் வாய்க் கொண்டு * நல் நீர் அற மென்று கோது கொண்ட *
    வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை ** கடந்த பொன்னே
    கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகாஉது * அம் பூந்
    தேன் இளஞ் சோலை அப்பாலது * எப்பாலைக்கும் சேமத்ததே26
  • TVT 27
    2504 சேமம் செங்கோன் அருளே * செறுவாரும் நட்பு ஆகுவர் என்று
    ஏமம் பெற வையம் * சொல்லும் மெய்யே ** பண்டு எல்லாம் அறை கூய்
    யாமங்கள் தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண்ணம் துழாய்த் *
    தாமம் புனைய * அவ் வாடை ஈதோ வந்து தண்ணென்றதே27
  • TVT 28
    2505 தண் அம் துழாய் * வளை கொள்வது யாம் இழப்போம் * நடுவே
    வண்ணம் துழாவி * ஓர் வாடை உலாவும் ** வள் வாய் அலகால்
    புள் நந்து உழாமே பொரு நீர்த் திருவரங்கா * அருளாய் *
    எண்ணம் துழாவுமிடத்து * உளவோ பண்டும் இன்னன்னவே?28
  • TVT 29
    2506 இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று *
    அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் ** நீலம் உண்ட
    மின் அன்ன மேனிப் பெருமான் உலகில் பெண் தூது செல்லா *
    அன்னன்ன நீர்மைகொலோ? * குடிச் சீர்மை இல் அன்னங்களே29
  • TVT 30
    2507 அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் *
    முன்னம் செல்வீர்கள் * மறவேல்மினோ ** கண்ணன் வைகுந்தனோடு
    என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி * அவரிடை நீர்
    இன்னம் செல்லீரோ? * இதுவோ தகவு? என்று இசைமின்களே30
  • TVT 31
    2508 இசைமின்கள் தூது என்று * இசைத்தால் இசையிலம் * என் தலைமேல்
    அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் ** அம் பொன் மா மணிகள்
    திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் * சிமய
    மிசை * மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே?31
  • TVT 32
    2509 மேகங்களோ உரையீர் * திருமால் திருமேனி ஒக்கும் *
    யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர்? ** உயிர் அளிப்பான்
    மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து * நும் தம்
    ஆகங்கள் நோவ * வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே?32
  • TVT 33
    2510 அருள் ஆர் திருச் சக்கரத்தால் * அகல் விசும்பும் நிலனும் *
    இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ** ஈங்கு ஓர் பெண்பால்
    பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ? *
    தெருளோம் அரவணையீர் * இவள் மாமை சிதைக்கின்றதே33
  • TVT 34
    2511 சிதைக்கின்றது ஆழி * என்று ஆழியைச் சீறி * தன் சீறடியால்
    உதைக்கின்ற நாயகம் * தன்னொடு மாலே ** உனதுதண் தார்
    ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்ப்
    பதைக்கின்ற மாதின்திறத்து * அறியேன் செயற்பாலதுவே34
  • TVT 35
    2512 பால் வாய்ப் பிறைப் பிள்ளை * ஒக்கலைக் கொண்டு * பகல் இழந்த
    மேல்பால் திசைப்பெண் புலம்புறு மாலை ** உலகு அளந்த
    மால்பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் *
    சோல்வான் புகுந்து * இது ஓர் பனி வாடை துழாகின்றதே35
  • TVT 36
    2513 துழா நெடும் சூழ் இருள் என்று * தன் தண் தார் அது பெயரா
    எழா நெடு ஊழி * எழுந்த இக் காலத்தும் ** ஈங்கு இவளோ
    வழா நெடுந் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ * இலங்கைக்
    குழா நெடு மாடம் * இடித்த பிரானார் கொடுமைகளே36
  • TVT 37
    2514 கொடுங் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய *
    கடுங் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து ** அரு வினையேன்
    நெடுங் காலமும் கண்ணன் நீள் மலர்ப் பாதம் பரவிப் பெற்ற *
    தொடுங்கால் ஒசியும் இடை * இளமான் சென்ற சூழ் கடமே37
  • TVT 38
    2515 கடம் ஆயினகள் கழித்து * தன் கால் வன்மையால் பல நாள் *
    தடம் ஆயின புக்கு * நீர் நிலைநின்ற தவம் இதுகொல் **
    குடம் ஆடி இம் மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து *
    நடமாடிய பெருமான் * உரு ஒத்தன நீலங்களே?38
  • TVT 39
    2516 நீலத் தட வரைமேல் * புண்டரீக நெடுந் தடங்கள்
    போல * பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் ** பொங்கு முந்நீர்
    ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் *
    கோலம் கரிய பிரான் * எம் பிரான் கண்ணின் கோலங்களே39
  • TVT 40
    2517 கோலப் பகல் களிறு ஒன்று கல் புய்ய * குழாம் விரிந்த
    நீலக் கங்குல் களிறு எல்லாம் நிறைந்தன ** நேரிழையீர்
    ஞாலப் பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே *
    ஏலப் புனைந்து என்னைமார் * எம்மை நோக்குவது என்றுகொலோ?40
  • TVT 41
    2518 என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் * இவ்வாறு வெம்மை
    ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ** ஓங்கு அசுரர்
    பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள் *
    மன்றில் நிறை பழி தூற்றி * நின்று என்னை வன் காற்று அடுமே41
  • TVT 42
    2519 வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த *
    மென் கால் கமலத் தடம்போல் பொலிந்தன ** மண்ணும் விண்ணும்
    என் காற்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த *
    தன் கால் பணிந்த என்பால் * எம் பிரான தடங் கண்களே42
  • TVT 43
    2520 கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே *
    வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று ** மதி விகற்பால்
    விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் *
    எண்ணும் இடத்ததுவோ * எம்பிரானது எழில் நிறமே?43
  • TVT 44
    2521 நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று *
    அறம் முயல் ஞானச் சமயிகள் பேசிலும் ** அங்கு அங்கு எல்லாம்
    உற உயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் *
    பெற முயன்றார் இல்லையால் * எம்பிரான பெருமையையே44
  • TVT 45
    2522 பெருங் கேழலார் தம் * பெருங் கண் மலர்ப் புண்டரீகம் * நம் மேல்
    ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ** ஒருவர் நம் போல்
    வருங் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு *
    மருங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே45
  • TVT 46
    2523 மட நெஞ்சம் என்றும் தமது என்றும் * ஓர் கருமம் கருதி
    விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் ** அப்பொன்பெயரோன்
    தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக்கீழ் விட * போய்த்
    திட நெஞ்சம் ஆய் * எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே46
  • TVT 47
    2524 திரிகின்றது வட மாருதம் * திங்கள் வெம் தீ முகந்து *
    சொரிகின்றது அதுவும் அது * கண்ணன் விண்ணூர் தொழவே
    சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை *
    விரிகின்றது முழு மெய்யும் * என் ஆம் கொல் என் மெல்லியற்கே?47
  • TVT 48
    2525 மெல்லியல் ஆக்கைக் கிருமி * குருவில் மிளிர்தந்து ஆங்கே *
    செல்லிய செல்கைத்து உலகை என் காணும் ** என்னாலும் தன்னைச்
    சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன் *
    பல்லியின் சொல்லும் சொல்லா * கொள்வதோ உண்டு பண்டுபண்டே48
  • TVT 49
    2526 பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் * இப் பாய் இருள் போல்
    கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் ** காள வண்ண
    வண்டு உண் துழாய்ப் பெருமான் மதுசூதனன் தாமோதரன் *
    உண்டும் உமிழ்ந்தும் கடாய * மண் நேர் அன்ன ஒள் நுதலே49
  • TVT 50
    2527 ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர் *
    நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று ** தேன் நவின்ற
    விண் முதல் நாயகன் நீள் முடி வெண் முத்த வாசிகைத்தாய் *
    மண் முதல் சேர்வுற்று * அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே50
  • TVT 51
    2528 மலை கொண்டு மத்தா அரவால் * சுழற்றிய மாயப் பிரான் *
    அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் ** பரதர்
    விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரித் துழாய் துணையாத் *
    துலை கொண்டு தாயம் கிளர்ந்து * கொள்வான் ஒத்து அழைக்கின்றதே51
  • TVT 52
    2529 அழைக்கும் கருங் கடல் * வெண் திரைக் கைக்கொண்டு போய் * அலர்வாய்
    மழைக்கண் மடந்தை அரவு அணை ஏற ** மண் மாதர் விண்வாய்
    அழைத்துப் புலம்பி முலைமலைமேல் நின்றும் ஆறுகளாய் *
    மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே52
  • TVT 53
    2530 வார் ஆயின முலையாள் இவள் * வானோர் தலைமகன் ஆம் *
    சீர் ஆயின தெய்வ நல் நோய் இது ** தெய்வத் தண் அம் துழாய்த்
    தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் * கீழ்
    வேர் ஆயினும் * நின்ற மண் ஆயினும் கொண்டு வீசுமினே53
  • TVT 54
    2531 வீசும் சிறகால் பறத்தீர் * விண் நாடு நுங்கட்கு எளிது *
    பேசும் படி அன்ன பேசியும் போவது ** நெய் தொடு உண்டு
    ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் *
    மாசு இல் மலர் அடிக்கீழ் * எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே54
  • TVT 55
    2532 வண்டுகளோ வம்மின் * நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ *
    உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் * ஏனம் ஒன்றாய் **
    மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் *
    விண்டு கள் வாரும் * மலர் உளவோ நும் வியலிடத்தே 55
  • TVT 56
    2533 வியலிடம் உண்ட பிரானார் * விடுத்த திருவருளால் *
    உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ** ஓர் தண் தென்றல் வந்து
    அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன் *
    புயலுடை நீர்மையினால் * தடவிற்று என் புலன் கலனே56
  • TVT 57
    2534 புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை * வல்லி ஒன்றால்
    விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன ** கண்ணன் கையால்
    மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் *
    கலக்குண்ட நான்று கண்டார் * எம்மை யாரும் கழறலரே57
  • TVT 58
    2535 கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று * ஒரு கழல் போய்
    நிழல் தர * எல்லா விசும்பும் நிறைந்தது ** நீண்ட அண்டத்து
    உழறு அலர் ஞானச் சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா *
    அழறு அலர் தாமரைக் கண்ணன் * என்னோ இங்கு அளக்கின்றதே?58
  • TVT 59
    2536 அளப்பு அரும் தன்மைய ஊழி அம் கங்குல் * அம் தண்ணம் துழாய்க்கு
    உளப் பெருங் காதலின் நீளிய ஆய் உள ** ஓங்கு முந்நீர்
    வளப் பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல் வினையேன் *
    தளப் பெரு நீள் முறுவல் * செய்ய வாய தட முலையே59
  • TVT 60
    2537 ## முலையோ முழு முற்றும் போந்தில * மொய் பூங் குழல் குறிய
    கலையோ அரை இல்லை நாவோ குழறும் ** கடல் மண் எல்லாம்
    விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
    மலையோ * திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே?60
  • TVT 61
    2538 வாசகம் செய்வது நம்பரமே * தொல்லை வானவர் தம்
    நாயகன் * நாயகர் எல்லாம் தொழும் அவன் ** ஞாலம் முற்றும்
    வேய் அகம் ஆயினும் சோராவகை * இரண்டே அடியால்
    தாயவன் * ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே?61
  • TVT 62
    2539 இறையோ இரக்கினும் * ஈங்கு ஓர் பெண்பால் * எனவும் இரங்காது
    அறையோ என * நின்று அதிரும் கருங்கடல் ** ஈங்கு இவள் தன்
    நிறையோ இனி உன் திரு அருளால் அன்றி * காப்பு அரிதால்
    முறையோ * அரவு அணைமேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே?62
  • TVT 63
    2540 வண்ணம் சிவந்துள * வான் நாடு அமரும் குளிர் விழிய *
    தண் மென் கமலத் தடம் போல் பொலிந்தன ** தாம் இவையோ
    கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல் செய்தேற்கு *
    எண்ணம் புகுந்து * அடியேனொடு இக் காலம் இருக்கின்றதே 63
  • TVT 64
    2541 இருக்கு ஆர் மொழியால் * நெறி இழுக்காமை * உலகு அளந்த
    திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் ** யாமும் அவா
    ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் *
    கருக்காய் கடிப்பவர் போல் * திருநாமச் சொல் கற்றனமே64
  • TVT 65
    2542 கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று * ஒரோ கருமம்
    உற்றுப் பயின்று செவியொடு உசாவி ** உலகம் எல்லாம்
    முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் *
    உற்றும் உறாதும் * மிளிர்ந்த கண் ஆய் எம்மை உண்கின்றவே65
  • TVT 66
    2543 உண்ணாது உறங்காது * உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் *
    எண் ஆய் மிளிரும் இயல்வின ஆம் ** எரி நீர் வளி வான்
    மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் *
    கண் ஆய் அருவினையேன் * உயிர் ஆயின காவிகளே66
  • TVT 67
    2544 காவியும் நீலமும் * வேலும் கயலும் பலபல வென்று *
    ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு ** அசுரரைச் செற்ற
    மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் * சேர்
    தூவி அம் பேடை அன்னாள் * கண்கள் ஆய துணைமலரே67
  • TVT 68
    2545 மலர்ந்தே ஒழிந்தில * மாலையும் மாலைப் பொன் வாசிகையும் *
    தோய் தழைப் பந்தர் தண்டு உற நாற்றி ** பொரு கடல் சூழ்
    நிலந்தாவிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாய் *
    கலந்தார் வரவு எதிர் கொண்டு * வன் கொன்றைகள் கார்த்தனவே68
  • TVT 69
    2546 கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து * வெல்வான்
    போர் ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை ** புவனி எல்லாம்
    நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே? *
    வார் ஏற்று இளமுலையாய் * வருந்தேல் உன் வளைத்திறமே69
  • TVT 70
    2547 வளைவாய்த் திருச் சக்கரத்து * எங்கள் வானவனார் முடிமேல் *
    தளைவாய் நறுங் கண்ணித் * தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை **
    விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க * எம்மை
    உளைவான் புகுந்து * இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே70
  • TVT 71
    2548 ஊழிகள் ஆய் * உலகு ஏழும் உண்டான் என்றிலம் * பழம் கண்டு
    ஆழி களாம் பழம் வண்ணம் என்றேற்கு ** அஃதே கொண்டு அன்னை
    நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் *
    தோழிகளோ உரையீர் * எம்மை அம்மனை சூழ்கின்றவே71
  • TVT 72
    2549 சூழ்கின்ற கங்குல் * சுருங்கா இருளின் கருந் திணிம்பை *
    போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க ** துழாய் மலர்க்கே
    தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று *
    வாழ்கின்ற ஆறு இதுவோ * வந்து தோன்றிற்று வாலியதே?72
  • TVT 73
    2550 வால் வெண் நிலவு * உலகு ஆரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும் *
    பால்விண் சுரவி * சுர முதிர் மாலை ** பரிதி வட்டம்
    போலும் சுடர் அடல் ஆழிப் பிரான் பொழில் ஏழ் அளிக்கும் *
    சால்பின் தகைமைகொலாம் * தமியாட்டி தளர்ந்ததுவே?73
  • TVT 74
    2551 தளர்ந்தும் முறிந்தும் * வரு திரைப் பாயல் * திரு நெடுங் கண்
    வளர்ந்தும் அறிவுற்றும் * வையம் விழுங்கியும் ** மால் வரையைக்
    கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் *
    அளைந்து உண் சிறு பசுந் தென்றல் * அந்தோ வந்து உலாகின்றதே 74
  • TVT 75
    2552 உலாகின்ற கெண்டை ஒளி அம்பு * எம் ஆவியை ஊடுருவக்
    குலாகின்ற வெஞ்சிலை வாள் முகத்தீர் ** குனி சங்கு இடறிப்
    புலாகின்ற வேலைப் புணரி அம் பள்ளி அம்மான் * அடியார்
    நிலாகின்ற வைகுந்தமோ * வையமோ நும் நிலையிடமே?75
  • TVT 76
    2553 இடம் போய் விரிந்து இவ் வுலகு அளந்தான் * எழில் ஆர் தண் துழாய் *
    வடம் போது இனையும் மட நெஞ்சமே ** நங்கள் வெள் வளைக்கே
    விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் *
    தடம் போது ஒடுங்க * மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே?76
  • TVT 77
    2554 திங்கள் அம் பிள்ளை புலம்ப * தன் செங்கோல் அரசு பட்ட *
    செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை ** தென்பால் இலங்கை
    வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா *
    நங்களை மாமை கொள்வான் * வந்து தோன்றி நலிகின்றதே77
  • TVT 78
    2555 நலியும் நரகனை வீட்டிற்றும் * வாணன் திண் தோல் துணித்த *
    வலியும் பெருமையும் * யாம் சொல்லும் நீர்த்து அல்ல ** மை வரை போல்
    பொலியும் உருவின் பிரானார் புனை பூந் துழாய் மலர்க்கே *
    மெலியும் மட நெஞ்சினார் * தந்து போயின வேதனையே78
  • TVT 79
    2556 வேதனை வெண் புரி நூலனை * விண்ணோர் பரவ நின்ற
    நாதனை * ஞாலம் விழுங்கும் அநாதனை ** ஞாலம் தத்தும்
    பாதனைப் பாற்கடல் பாம்பு அணைமேல் பள்ளிகொண்டருளும் *
    சீதனையே தொழுவார் * விண்ணுளாரிலும் சீரியரே79
  • TVT 80
    2557 சீர் அரசு ஆண்டு * தன் செங்கோல் சில நாள் * செலீஇக் கழிந்த
    பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு ** பார் அளந்த
    பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த *
    ஓர் அரசே அருளாய் * இருளாய் வந்து உறுகின்றதே80
  • TVT 81
    2558 உறுகின்ற கன்மங்கள் * மேலன ஓர்ப்பிலராய் * இவளைப்
    பெறுகின்ற தாயர் * மெய்ந் நொந்து பெறார்கொல்? ** துழாய் குழல்வாய்த்
    துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர் *
    இறுகின்றதால் இவள் ஆகம் * மெல் ஆவி எரி கொள்ளவே81
  • TVT 82
    2559 எரி கொள் செந் நாயிறு * இரண்டு உடனே உதய மலைவாய் *
    விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் ** மீண்டு அவற்றுள்
    எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போல எம் போலியர்க்கும் *
    விரிவ சொல்லீர் இதுவோ * வையம் முற்றும் விளரியதே?82
  • TVT 83
    2560 விளரிக் குரல் அன்றில் * மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை *
    முளரிக் குரம்பை இதுஇதுவாக ** முகில் வண்ணன் பேர்
    கிளரிக் கிளரிப் பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் *
    தளரின் கொலோ அறியேன் * உய்யல் ஆவது இத் தையலுக்கே?83
  • TVT 84
    2561 தையல் நல்லார்கள் குழாங்கள் * குழிய குழுவினுள்ளும் *
    ஐய நல்லார்கள் * குழிய விழவினும் ** அங்கு அங்கு எல்லாம்
    கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான் *
    மைய வண்ணா மணியே * முத்தமே என் தன் மாணிக்கமே84
  • TVT 85
    2562 மாணிக்கம் கொண்டு * குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி *
    ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை ** உலகு அளந்த
    மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா *
    ஆணிப்பொன்னே * அடியேன் அடி ஆவி அடைக்கலமே85
  • TVT 86
    2563 அடைக் கலத்து ஓங்கு * கமலத்து அலர் அயன் சென்னி என்னும் *
    முடைக் கலத்து ஊண் * முன் அரனுக்கு நீக்கியை ** ஆழி சங்கம்
    படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் *
    புடைக்கலந்தானை * எம்மானை என் சொல்லிப் புலம்புவனே?86
  • TVT 87
    2564 புலம்பும் கன குரல் * போழ் வாய அன்றிலும் பூங் கழி பாய்ந்து *
    அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ** ஆங்கு அவை நின்
    வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக * வையம்
    சிலம்பும்படி செய்வதே * திருமால் இத் திருவினையே87
  • TVT 88
    2565 திருமால் உரு ஒக்கும் மேரு * அம் மேருவில் செஞ்சுடரோன் *
    திருமால் திருக்கைத் திருச் சக்கரம் ஒக்கும் ** அன்ன கண்டும்
    திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் *
    திருமால் தலைக்கொண்ட நங்கட்கு * எங்கே வரும் தீவினையே?88
  • TVT 89
    2566 தீவினைக்கு அரு நஞ்சை * நல் வினைக்கு இன் அமுதத்தினை *
    பூவினை மேவிய * தேவி மணாளனை ** புன்மை எள்காது
    ஆவினை மேய்க்கும் வல் ஆயனை * அன்று உலகு ஈர் அடியால்
    தாவின ஏற்றை எம்மானை * எஞ்ஞான்று தலைப்பெய்வனே?89
  • TVT 90
    2567 தலைப்பெய்து யான் உன் * திருவடி சூடும் தகைமையினால் *
    நிலைப்பு எய்த ஆக்கைக்கு * நோற்ற இம் மாயமும் ** மாயம் செவ்வே
    நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம் *
    தொலைப் பெய்த நேமி எந்தாய் * தொல்லை ஊழி சுருங்கலதே90
  • TVT 91
    2568 சுருங்கு உறி வெண்ணெய் * தொடு உண்ட கள்வனை * வையம் முற்றும்
    ஒருங்குற உண்ட * பெரு வயிற்றாளனை ** மாவலிமாட்டு
    இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற *
    பெருங் கிறியானை அல்லால் * அடியேன் நெஞ்சம் பேணலதே91
  • TVT 92
    2569 பேண் நலம் இல்லா அரக்கர் * முந்நீர பெரும் பதிவாய் *
    நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று ** நின்னை விண்ணோர்
    தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று *
    காணலும் ஆம்கொல் என்றே? * வைகல் மாலையும் காலையுமே92
  • TVT 93
    2570 காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த * கங்குல் குறும்பர் *
    மாலை வெய்யோன் பட * வையகம் பாவுவர் ** அன்ன கண்டும்
    காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து *
    மாலை நல் நாவில் கொள்ளார் * நினையார் அவன் மைப் படியே93
  • TVT 94
    2571 மைப் படி மேனியும் * செந்தாமரைக் கண்ணும் வைதிகரே *
    மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் **
    எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும் *
    அப்படி யானும் சொன்னேன் * அடியேன் மற்று யாது என்பனே.?94
  • TVT 95
    2572 ## யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு * அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் *
    மூது ஆவியில் தடுமாறும் * உயிர் முன்னமே ** அதனால்
    யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும் *
    மாதாவினை பிதுவை * திருமாலை வணங்குவனே95
  • TVT 96
    2573 வணங்கும் துறைகள் * பல பல ஆக்கி * மதி விகற்பால்
    பிணங்கும் சமயம் * பல பல ஆக்கி ** அவை அவைதோறு
    அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் *
    இணங்கு நின்னோரை இல்லாய் * நின்கண் வேட்கை எழுவிப்பனே96
  • TVT 97
    2574 எழுவதும் மீண்டே * படுவதும் பட்டு * எனை ஊழிகள் போய்க்
    கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் ** இமையோர்கள் குழாம்
    தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு *
    கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் * உண்டோ கண்கள் துஞ்சுதலே?97
  • TVT 98
    2575 துஞ்சா முனிவரும் * அல்லாதவரும் தொடர நின்ற *
    எஞ்சாப் பிறவி இடர் கடிவான் ** இமையோர் தமக்கும்
    தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே *
    நெஞ்சால் நினைப்பு அரிதால் * வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே98
  • TVT 99
    2576 ## ஈனச் சொல் ஆயினும் ஆக * எறி திரை வையம் முற்றும் *
    ஏனத்து உருவாய் இடந்த பிரான் * இருங் கற்பகம் சேர் **
    வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் * மற்று எல்லா எவர்க்கும் *
    ஞானப் பிரானை அல்லால் இல்லை * நான் கண்ட நல்லதுவே99
  • TVT 100
    2577 ## நல்லார் * நவில் குருகூர் நகரான் * திருமால் திருப் பேர்
    வல்லார் * அடிக் கண்ணி சூடிய ** மாறன் விண்ணப்பம் செய்த
    சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் *
    பொல்லா அருவினை * மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே100