Thiruchanda Virutham

திருச்சந்த விருத்தம்

Thiruchanda Virutham
Tirumaļisaiāzhvār was so versatile in his attainments as a yogi, a seasoned thinker, and a philosopher with a scientific mind, that he embraced several religions in quest of peace and bliss, in vain. The several religions offered him no succor and when he was a staunch Saivaite, he was redeemed by Lord Vishnu to Vaishnavism. The āzhvār articulates his + Read more
திருமழிசை ஆழ்வார் பல சமயங்களில் புகுந்து, ஆராய்ந்து சைவ சமயத்திலிருக்கையில் திருத்தி பணிக்கொள்ளப்பட்டு வைணவத்தை தழுவியவர். ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள் என்ற உணர்ந்ததன் பிறகே 'தான்' பிறந்ததாகவே கருதுகிறார். அளவிற்குட்படாத கருணை கொண்ட பகவான், தன் ஸ்வரூப, ரூப, குண விசேஷங்களையும், தன் + Read more
Group: 1st 1000
Verses: 752 to 871
Glorification: Antaryāmi / Immanent State (அந்தர்யாமி)
  • தனியன் / Taniyan
  • TCV 1
    752 ## பூ நிலாய ஐந்துமாய்ப் * புனற்கண் நின்ற நான்குமாய் *
    தீ நிலாய மூன்றுமாய்ச் * சிறந்த கால் இரண்டுமாய் **
    மீ நிலாயது ஒன்றும் ஆகி * வேறு வேறு தன்மையாய் *
    நீ நிலாய வண்ணம் நின்னை * யார் நினைக்க வல்லரே? (1)
  • TCV 2
    753 ஆறும் ஆறும் ஆறுமாய் * ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் *
    ஏறு சீர் இரண்டும் மூன்றும் * ஏழும் ஆறும் எட்டுமாய் **
    வேறு வேறு ஞானம் ஆகி * மெய்யினோடு பொய்யுமாய் *
    ஊறோடு ஓசையாய ஐந்தும் * ஆய ஆய மாயனே (2)
  • TCV 3
    754 ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி * அல்லவற்று உளாயுமாய் *
    ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி * நின்ற ஆதி தேவனே **
    ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி * அந்தரத்து அணைந்து நின்று *
    ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை * யாவர் காண வல்லரே? (3)
  • TCV 4
    755 மூன்று முப்பது ஆறினோடு * ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் *
    மூன்று மூர்த்தி ஆகி மூன்று * மூன்று மூன்று மூன்றுமாய் **
    தோன்று சோதி மூன்றுமாய் * துளக்கம் இல் விளக்கமாய் *
    ஏன்று என் ஆவியுள் புகுந்தது * என் கொலோ? எம் ஈசனே (4)
  • TCV 5
    756 நின்று இயங்கும் ஒன்று அலா * உருக்கள் தோறும் ஆவியாய் *
    ஒன்றி உள் கலந்து நின்ற * நின்ன தன்மை இன்னது என்று **
    என்றும் யார்க்கும் எண் இறந்த * ஆதியாய் நின் உந்திவாய் *
    அன்று நான்முகன் பயந்த * ஆதிதேவன் அல்லையே? (5)
  • TCV 6
    757 நாகம் ஏந்து மேரு வெற்பை * நாகம் ஏந்து மண்ணினை *
    நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் * ஏந்து வார்புனல் **
    மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் * வாயு ஐந்து அமைந்து காத்து *
    ஏகம் ஏந்தி நின்ற நீர்மை * நின்கணே இயன்றதே (6)
  • TCV 7
    758 ஒன்று இரண்டு மூர்த்தியாய் * உறக்கமோடு உணர்ச்சியாய் *
    ஒன்று இரண்டு காலம் ஆகி * வேலை ஞாலம் ஆயினாய் **
    ஒன்று இரண்டு தீயும் ஆகி * ஆயன் ஆய மாயனே *
    ஒன்று இரண்டு கண்ணினானும் * உன்னை ஏத்த வல்லனே? (7)
  • TCV 8
    759 ஆதி ஆன வானவர்க்கும் * அண்டம் ஆய அப்புறத்து
    ஆதி ஆன வானவர்க்கும் * ஆதி ஆன ஆதி நீ **
    ஆதி ஆன வான வாணர் * அந்த காலம் நீ உரைத்தி
    ஆதி ஆன காலம் நின்னை * யாவர் காண வல்லரே (8)
  • TCV 9
    760 தாது உலாவு கொன்றை மாலை * துன்னு செஞ்சடைச் சிவன் *
    நீதியால் வணங்கு பாத * நின்மலா நிலாய சீர் **
    வேத வாணர் கீத வேள்வி * நீதியான கேள்வியார் *
    நீதியால் வணங்குகின்ற * நீர்மை நின்கண் நின்றதே (9)
  • TCV 10
    761 தன்னுளே திரைத்து எழும் * தரங்க வெண் தடங்கடல் *
    தன்னுளே திரைத்து எழுந்து * அடங்குகின்ற தன்மை போல் **
    நின்னுளே பிறந்து இறந்து * நிற்பவும் திரிபவும் *
    நின்னுளே அடங்குகின்ற * நீர்மை நின்கண் நின்றதே (10)
  • TCV 11
    762 சொல்லினால் தொடர்ச்சி நீ * சொலப்படும் பொருளும் நீ *
    சொல்லினால் சொலப்படாது * தோன்றுகின்ற சோதி நீ **
    சொல்லினால் படைக்க * நீ படைக்க வந்து தோன்றினார் *
    சொல்லினால் சுருங்க * நின் குணங்கள் சொல்ல வல்லரே? (11)
  • TCV 12
    763 உலகு தன்னை நீ படைத்தி * உள் ஒடுக்கி வைத்தி மீண்டு *
    உலகு தன்னுளே பிறத்தி * ஓரிடத்தை அல்லையால் **
    உலகு நின்னொடு ஒன்றி நிற்க * வேறு நிற்றி ஆதலால் *
    உலகில் நின்னை உள்ள சூழல் * யாவர் உள்ள வல்லரே? (12)
  • TCV 13
    764 இன்னை என்று சொல்லல் ஆவது * இல்லை யாதும் இட்டிடை *
    பின்னை கேள்வன் என்பர் * உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் **
    பின்னை ஆய கோலமோடு * பேரும் ஊரும் ஆதியும் *
    நின்னை யார் நினைக்க வல்லர் * நீர்மையால் நினைக்கிலே? (13)
  • TCV 14
    765 தூய்மை யோகம் ஆயினாய் * துழாய் அலங்கல் மாலையாய் *
    ஆமை ஆகி ஆழ்கடல் துயின்ற * ஆதிதேவ ** நின்
    நாமதேயம் இன்னது என்ன * வல்லம் அல்ல ஆகிலும் *
    சாம வேத கீதனாய * சக்ரபாணி அல்லையே? (14)
  • TCV 15
    766 அங்கம் ஆறும் வேதம் நான்கும் * ஆகி நின்று அவற்றுளே *
    தங்குகின்ற தன்மையாய் * தடங்கடல் பணத்தலை **
    செங்கண் நாகணைக் கிடந்த * செல்வம் மல்கு சீரினாய் *
    சங்க வண்ணம் அன்ன மேனி * சார்ங்கபாணி அல்லையே? (15)
  • TCV 16
    767 தலைக் கணம் துகள் குழம்பு * சாதி சோதி தோற்றமாய் *
    நிலைக் கணங்கள் காண வந்து * நிற்றியேலும் நீடு இரும் **
    கலைக் கணங்கள் சொற் பொருள் * கருத்தினால் நினைக்கொணா *
    மலைக் கணங்கள் போல் உணர்த்தும் * மாட்சி நின்தன் மாட்சியே (16)
  • TCV 17
    768 ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி * நாலு மூர்த்தி நன்மை சேர் *
    போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி * எண் இல் மூர்த்தியாய் **
    நாக மூர்த்தி சயனமாய் * நலங் கடல் கிடந்து மேல் *
    ஆக மூர்த்தி ஆய வண்ணம் * என் கொல்? ஆதிதேவனே (17)
  • TCV 18
    769 விடத்த வாய் ஒர் ஆயிரம் * இராயிரம் கண் வெந்தழல் *
    விடுத்து வீழ்வு இலாத போகம் * மிக்க சோதி தொக்க சீர் **
    தொடுத்து மேல் விதானமாய * பௌவ நீர் அராவணை *
    படுத்த பாயல் பள்ளி கொள்வது * என்கொல் வேலை வண்ணனே (18)
  • TCV 19
    770 புள்ளது ஆகி வேதம் நான்கும் * ஓதினாய் அது அன்றியும் *
    புள்ளின் வாய் பிளந்து * புட் கொடிப் பிடித்த பின்னரும் **
    புள்ளை ஊர்தி ஆதலால் * அது என்கொல் மின் கொள் நேமியாய் *
    புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் * காதலித்ததே? (19)
  • TCV 20
    771 கூசம் ஒன்றும் இன்றி * மாசுணம் படுத்து வேலை நீர் *
    பேச நின்ற தேவர் வந்து * பாட முன் கிடந்ததும் **
    பாசம் நின்ற நீரில் வாழும் * ஆமையான கேசவா *
    ஏச அன்று நீ கிடந்தவாறு * கூறு தேறவே (20)
  • TCV 21
    772 அரங்கனே! தரங்க நீர் * கலங்க அன்று குன்று சூழ் *
    மரங்கள் தேய மாநிலம் குலுங்க * மாசுணம் சுலாய் **
    நெருங்க நீ கடைந்த போது * நின்ற சூரர் என் செய்தார்? *
    குரங்கை ஆள் உகந்த எந்தை! * கூறு தேற வேறு இதே (21)
  • TCV 22
    773 பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் * பாலனாகி ஞாலம் ஏழ் *
    உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற * ஆதிதேவனே **
    வண்டு கிண்டு தண் துழாய் * அலங்கலாய் கலந்த சீர் *
    புண்டரீகப் பாவை சேரும் மார்ப * பூமிநாதனே (22)
  • TCV 23
    774 வால் நிறத்து ஒர் சீயமாய் * வளைந்த வாள் எயிற்றவன் *
    ஊன் நிறத்து உகிர்த்தலம் * அழுத்தினாய் உலாய சீர் **
    நால் நிறத்த வேத நாவர் * நல்ல யோகினால் வணங்கு *
    பால் நிறக் கடல் கிடந்த * பற்பநாபன் அல்லையே? (23)
  • TCV 24
    775 கங்கை நீர் பயந்த பாத * பங்கயத்து எம் அண்ணலே *
    அங்கை ஆழி சங்கு தண்டு * வில்லும் வாளும் ஏந்தினாய் **
    சிங்கமாய தேவதேவ * தேன் உலாவு மென் மலர் *
    மங்கை மன்னி வாழும் மார்ப * ஆழி மேனி மாயனே (24)
  • TCV 25
    776 வரத்தினில் சிரத்தை மிக்க * வாள் எயிற்று மற்றவன் *
    உரத்தினில் கரத்தை வைத்து * உகிர்த்தலத்தை ஊன்றினாய் **
    இரத்தி நீ இது என்ன பொய்? * இரந்த மண் வயிற்றுளே
    கரத்தி * உன் கருத்தை யாவர் காண வல்லர்? * கண்ணனே (25)
  • TCV 26
    777 ஆணினோடு பெண்ணும் ஆகி * அல்லவோடு நல்லவாய் *
    ஊணொடு ஓசை ஊறும் ஆகி * ஒன்று அலாத மாயையாய் **
    பூணி பேணும் ஆயன் ஆகி * பொய்யினோடு மெய்யுமாய் *
    காணி பேணும் மாணியாய்க் * கரந்து சென்ற கள்வனே (26)
  • TCV 27
    778 விண் கடந்த சோதியாய் * விளங்கு ஞான மூர்த்தியாய் *
    பண் கடந்த தேசம் மேவு * பாவநாச நாதனே **
    எண் கடந்த யோகினோடு * இரந்து சென்று மாணியாய் *
    மண் கடந்த வண்ணம் நின்னை * யார் மதிக்க வல்லரே? (27)
  • TCV 28
    779 படைத்த பார் இடந்து அளந்து * அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் *
    படைத்து அடைத்து அதில் கிடந்து * முன் கடைந்த பெற்றியோய் **
    மிடைத்த மாலி மாலிமான் * விலங்கு காலன் ஊர் புக *
    படைக்கலம் விடுத்த * பல் படைத் தடக்கை மாயனே (28) *
  • TCV 29
    780 பரத்திலும் பரத்தை ஆதி * பௌவ நீர் அணைக் கிடந்து *
    உரத்திலும் ஒருத்தி தன்னை * வைத்து உகந்து அது அன்றியும் **
    நரத்திலும் பிறத்தி * நாத ஞான மூர்த்தி ஆயினாய் *
    ஒருத்தரும் நினாது தன்மை * இன்னது என்ன வல்லரே? (29)
  • TCV 30
    781 வானகமும் மண்ணகம்மும் * வெற்பும் ஏழ் கடல்களும் *
    போனகம் செய்து ஆலிலைத் துயின்ற * புண்டரீகனே **
    தேன் அகஞ்செய் தண் நறும் * மலர்த் துழாய் நன் மாலையாய் *
    கூன் அகம் புகத் தெறித்த * கொற்ற வில்லி அல்லையே? (30)
  • TCV 31
    782 காலநேமி காலனே * கணக்கு இலாத கீர்த்தியாய் *
    ஞாலம் ஏழும் உண்டு * பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே **
    வேலை வேவ வில் வளைத்த * வெல் சினத்த வீர * நின்
    பாலர் ஆய பத்தர் சித்தம் * முத்தி செய்யும் மூர்த்தியே (31)
  • TCV 32
    783 குரக்கினப் படை கொடு * குரை கடலின் மீது போய்
    அரக்கர் அங்கு அரங்க * வெஞ்சரம் துரந்த ஆதி நீ **
    இரக்க மண் கொடுத்தவற்கு * இரக்கம் ஒன்றும் இன்றியே *
    பரக்க வைத்து அளந்து கொண்ட * பற்பபாதன் அல்லையே? (32)
  • TCV 33
    784 மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ * வெஞ்சரம் துரந்து *
    பின்னவற்கு அருள் புரிந்து * அரசு அளித்த பெற்றியோய் **
    நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை * பின்னை கேள்வ மன்னு சீர் *
    பொன் நிறத்த வண்ணன் ஆய * புண்டரீகன் அல்லையே? (33)
  • TCV 34
    785 ஆதி ஆதி ஆதி நீ * ஒர் அண்டம் ஆதி ஆதலால் *
    சோதியாத சோதி நீ * அது உண்மையில் விளங்கினாய் **
    வேதம் ஆகி வேள்வி ஆகி * விண்ணினோடு மண்ணுமாய் *
    ஆதி ஆகி ஆயன் ஆய * மாயம் என்ன மாயமே? (34)
  • TCV 35
    786 அம்பு உலாவு மீனும் ஆகி * ஆமை ஆகி ஆழியார் *
    தம்பிரானும் ஆகி மிக்கது * அன்பு மிக்கு அது அன்றியும் **
    கொம்பு அராவு நுண்மருங்குல் * ஆயர் மாதர் பிள்ளையாய் *
    எம்பிரானும் ஆய வண்ணம் * என்கொலோ? எம் ஈசனே (35)
  • TCV 36
    787 ஆடகத்த பூண் முலை * யசோதை ஆய்ச்சி பிள்ளையாய் *
    சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி * கள்ள தாய பேய்மகள் **
    வீட வைத்த வெய்ய கொங்கை * ஐய பால் அமுது செய்து *
    ஆடகக் கை மாதர் வாய் * அமுதம் உண்டது என் கொலோ? (36)
  • TCV 37
    788 காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து * எதிர்ந்த பூங் குருந்தம்
    சாய்த்து * மா பிளந்த கைத் தலத்த * கண்ணன் என்பரால் **
    ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு * வெண்ணெய் உண்டு * பின்
    பேய்ச்சி பாலை உண்டு பண்டு * ஓர் ஏனம் ஆய வாமனா (37)
  • TCV 38
    789 கடம் கலந்த வன் கரி * மருப்பு ஒசித்து ஒர் பொய்கை வாய் *
    விடம் கலந்த பாம்பின் மேல் * நடம் பயின்ற நாதனே **
    குடம் கலந்த கூத்தன் ஆய * கொண்டல் வண்ண தண்துழாய் *
    வடம் கலந்த மாலை மார்ப * காலநேமி காலனே (38)
  • TCV 39
    790 வெற்பு எடுத்து வேலை நீர் * கலக்கினாய் அது அன்றியும் *
    வெற்பு எடுத்து வேலை நீர் * வரம்பு கட்டி வேலை சூழ் **
    வெற்பு எடுத்த இஞ்சி சூழ் * இலங்கை கட்டழித்த நீ *
    வெற்பு எடுத்து மாரி காத்த * மேகவண்ணன் அல்லையே? (39)
  • TCV 40
    791 ஆனை காத்து ஒர் ஆனை கொன்று * அது அன்றி ஆயர் பிள்ளையாய் *
    ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி * அன்று குன்றம் ஒன்றினால் **
    ஆனை காத்து மை அரிக் கண் * மாதரார் திறத்து முன் *
    ஆனை அன்று சென்று அடர்த்த * மாயம் என்ன மாயமே (40)
  • TCV 41
    792 ஆயன் ஆகி ஆயர் மங்கை * வேய தோள் விரும்பினாய் *
    ஆய நின்னை யாவர் வல்லர் * அம்பரத்தொடு இம்பராய்? **
    மாய மாய மாயை கொல் * அது அன்றி நீ வகுத்தலும் *
    மாய மாயம் ஆக்கினாய் * உன் மாயம் முற்றும் மாயமே (41)
  • TCV 42
    793 வேறு இசைந்த செக்கர் மேனி * நீறு அணிந்த புன்சடை *
    கீறு திங்கள் வைத்தவன் * கை வைத்த வன்கபால் மிசை **
    ஊறு செங் குருதியால் * நிறைத்த காரணந்தனை *
    ஏறு சென்று அடர்த்த ஈச * பேசு கூசம் இன்றியே (42)
  • TCV 43
    794 வெஞ்சினத்த வேழ வெண் * மருப்பு ஒசித்து உருத்த மா *
    கஞ்சனைக் கடிந்து * மண் அளந்து கொண்ட காலனே **
    வஞ்சனத்து வந்த பேய்ச்சி * ஆவி பாலுள் வாங்கினாய் *
    அஞ்சனத்த வண்ணன் ஆய * ஆதிதேவன் அல்லையே? (43)
  • TCV 44
    795 பாலின் நீர்மை செம்பொன் நீர்மை * பாசியின் பசும் புறம் *
    போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து * வண்டு விண்டு உலாம் **
    நீல நீர்மை என்று இவை * நிறைந்த காலம் நான்குமாய் *
    மாலின் நீர்மை வையகம் * மறைத்தது என்ன நீர்மையே? (44)
  • TCV 45
    796 மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் * மண்ணுளே மயங்கி நின்று *
    எண்ணும் எண் அகப்படாய் கொல் * என்ன மாயை நின் தமர் **
    கண்ணுளாய் கொல் சேயை கொல் * அனந்தன் மேல் கிடந்த எம் *
    புண்ணியா * புனந்துழாய் அலங்கல் அம் புனிதனே (45)
  • TCV 46
    797 தோடு பெற்ற தண் துழாய் * அலங்கல் ஆடு சென்னியாய் *
    கோடு பற்றி ஆழி ஏந்தி * அஞ்சிறைப் புள் ஊர்தியால் **
    நாடு பெற்ற நன்மை * நண்ணம் இல்லையேனும் நாயினேன் *
    வீடு பெற்று இறப்பொடும் * பிறப்பு அறுக்குமோ சொலே (46)
  • TCV 47
    798 காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண * விண்ணின் நாதனே *
    நீர் இடத்து அராவணைக் * கிடத்தி என்பர் அன்றியும் **
    ஓர் இடத்தை அல்லை எல்லை * இல்லை என்பர் ஆதலால் *
    சேர்வு இடத்தை நாயினேன் * தெரிந்து இறைஞ்சுமா சொலே (47)
  • TCV 48
    799 குன்றில் நின்று வான் இருந்து * நீள் கடல் கிடந்து * மண்
    ஒன்று சென்று அது ஒன்றை உண்டு * அது ஒன்று இடந்து பன்றியாய் **
    நன்று சென்ற நாள் அவற்றுள் * நல் உயிர் படைத்து அவர்க்கு *
    அன்று தேவு அமைத்து அளித்த * ஆதிதேவன் அல்லையே? (48)
  • TCV 49
    800 கொண்டை கொண்ட கோதை மீது * தேன் உலாவு கூனி கூன் *
    உண்டை கொண்டு அரங்க ஓட்டி * உள் மகிழ்ந்த நாதன் ஊர் **
    நண்டை உண்டு நாரை பேர * வாளை பாய நீலமே *
    அண்டை கொண்டு கெண்டை மேயும் * அந் தண் நீர் அரங்கமே (49)
  • TCV 50
    801 வெண் திரைக் கருங் கடல் * சிவந்து வேவ முன் ஒர் நாள் *
    திண் திறல் சிலைக்கை வாளி * விட்ட வீரர் சேரும் ஊர் **
    எண் திசைக் கணங்களும் * இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் *
    வண்டு இரைத்த சோலை வேலி * மன்னு சீர் அரங்கமே (50)
  • TCV 51
    802 சரங்களைத் துரந்து * வில் வளைத்து இலங்கை மன்னவன் *
    சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த * செல்வர் மன்னு பொன் இடம் **
    பரந்து பொன் நிரந்து நுந்தி * வந்து அலைக்கும் வார் புனல் *
    அரங்கம் என்பர் நான் முகத்து * அயன் பணிந்த கோயிலே (51)
  • TCV 52
    803 பொற்றை உற்ற முற்றல் யானை * போர் எதிர்ந்து வந்ததை *
    பற்றி உற்று மற்று அதன் * மருப்பு ஒசித்த பாகன் ஊர் **
    சிற்றெயிற்று முற்றல் மூங்கில் * மூன்று தண்டர் ஒன்றினர் *
    அற்ற பற்றர் சுற்றி வாழும் * அந்தண் நீர் அரங்கமே (52)
  • TCV 53
    804 மோடியோடு இலச்சையாய * சாபம் எய்தி முக்கணான் *
    கூடு சேனை மக்களோடு * கொண்டு மண்டி வெஞ்சமத்து
    ஓட ** வாணன் ஆயிரம் * கரங் கழித்த ஆதி மால் *
    பீடு கோயில் கூடு நீர் * அரங்கம் என்ற பேரதே (53)
  • TCV 54
    805 இலைத் தலைச் சரம் துரந்து * இலங்கை கட்டழித்தவன் *
    மலைத் தலைப் பிறந்து இழிந்து * வந்து நுந்து சந்தனம் **
    குலைத்து அலைத்து இறுத்து எறிந்த * குங்குமக் குழம்பினோடு *
    அலைத்து ஒழுகு காவிரி * அரங்கம் மேய அண்ணலே (54)
  • TCV 55
    806 மன்னு மா மலர்க் கிழத்தி * வைய மங்கை மைந்தனாய் *
    பின்னும் ஆயர் பின்னை தோள் * மணம் புணர்ந்து அது அன்றியும் **
    உன்ன பாதம் என்ன சிந்தை * மன்ன வைத்து நல்கினாய் *
    பொன்னி சூழ் அரங்கம் மேய * புண்டரீகன் அல்லையே? (55)
  • TCV 56
    807 இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து * பைந்தலை நிலத்து உக *
    கலங்க அன்று சென்று கொன்று * வென்றி கொண்ட வீரனே **
    விலங்கு நூலர் வேத நாவர் * நீதியான கேள்வியார் *
    வலங் கொளக் குடந்தையுள் * கிடந்த மாலும் அல்லையே? (56)
  • TCV 57
    808 சங்கு தங்கு முன் கை நங்கை * கொங்கை தங்கல் உற்றவன் *
    அங்கம் மங்க அன்று சென்று * அடர்த்து எறிந்த ஆழியான் **
    கொங்கு தங்கு வார் குழல் * மடந்தைமார் குடைந்த நீர் *
    பொங்கு தண் குடந்தையுள் * கிடந்த புண்டரீகனே (57)
  • TCV 58
    809 மரம் கெட நடந்து அடர்த்து * மத்த யானை மத்தகத்து *
    உரம் கெடப் புடைத்து * ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா **
    துரங்கம் வாய் பிளந்து * மண் அளந்த பாத * வேதியர்
    வரம் கொளக் குடந்தையுள் * கிடந்த மாலும் அல்லையே? (58)
  • TCV 59
    810 சாலி வேலி தண் வயல் * தடங்கிடங்கு பூம்பொழில் *
    கோல மாடம் நீடு * தண் குடந்தை மேய கோவலா **
    காலநேமி வக்கரன் * கரன் முரன் சிரம் அவை *
    காலனோடு கூட * வில் குனித்த வில் கை வீரனே (59)
  • TCV 60
    811 ## செழுங் கொழும் பெரும் பனி பொழிந்திட * உயர்ந்த வேய்
    விழுந்து உலர்ந்து எழுந்து * விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று **
    எழுந்திருந்து தேன் பொருந்து * பூம்பொழில் தழைக் கொழும் *
    செழுந் தடங் குடந்தையுள் * கிடந்த மாலும் அல்லையே? (60)
  • TCV 61
    812 ## நடந்த கால்கள் நொந்தவோ? * நடுங்க ஞாலம் ஏனமாய் *
    இடந்த மெய் குலுங்கவோ? * விலங்கு மால் வரைச் சுரம் **
    கடந்த கால் பரந்த * காவிரிக் கரைக் குடந்தையுள் *
    கிடந்தவாறு எழுந்திருந்து பேசு * வாழி கேசனே (61)
  • TCV 62
    813 ## கரண்டம் ஆடு பொய்கையுள் * கரும் பனைப் பெரும் பழம் *
    புரண்டு வீழ வாளை பாய் * குறுங்குடி நெடுந்தகாய் **
    திரண்ட தோள் இரணியன் * சினங் கொள் ஆகம் ஒன்றையும் *
    இரண்டு கூறு செய்து உகந்த * சிங்கம் என்பது உன்னையே (62)
  • TCV 63
    814 நன்று இருந்து யோக நீதி * நண்ணுவார்கள் சிந்தையுள் *
    சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே **
    குன்று இருந்த மாடம் நீடு * பாடகத்தும் ஊரகத்தும் *
    நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது * என்ன நீர்மையே? (63)
  • TCV 64
    815 நின்றது எந்தை ஊரகத்து * இருந்தது எந்தை பாடகத்து *
    அன்று வெஃகணைக் கிடந்தது * என் இலாத முன்னெலாம் **
    அன்று நான் பிறந்திலேன் * பிறந்த பின் மறந்திலேன் *
    நின்றதும் இருந்ததும் * கிடந்ததும் என் நெஞ்சுளே (64)
  • TCV 65
    816 நிற்பதும் ஒர் வெற்பகத்து * இருப்பும் விண் கிடப்பதும் *
    நற்பெருந் திரைக் கடலுள் * நான் இலாத முன்னெலாம் **
    அற்புதன் அனந்த சயனன் * ஆதிபூதன் மாதவன் *
    நிற்பதும் இருப்பதும் * கிடப்பதும் என் நெஞ்சுளே (65)
  • TCV 66
    817 இன்று சாதல் நின்று சாதல் * அன்றி யாரும் வையகத்து *
    ஒன்றி நின்று வாழ்தல் இன்மை * கண்டும் நீசர் என்கொலோ **
    அன்று பார் அளந்த பாத * போதை ஒன்றி வானின் மேல் *
    சென்று சென்று தேவராய் * இருக்கிலாத வண்ணமே? (66)
  • TCV 67
    818 சண்ட மண்டலத்தின் ஊடு * சென்று வீடு பெற்று மேல் *
    கண்டு வீடு இலாத காதல் * இன்பம் நாளும் எய்துவீர் **
    புண்டரீக பாத புண்ய கீர்த்தி * நும் செவி மடுத்து *
    உண்டு நும் உறுவினைத் * துயருள் நீங்கி உய்ம்மினோ (67)
  • TCV 68
    819 முத்திறத்து வாணியத்து * இரண்டில் ஒன்றும் நீசர்கள் *
    மத்தராய் மயங்குகின்றது * இட்டு அதில் இறந்து போந்து **
    எத்திறத்தும் உய்வது ஓர் * உபாயம் இல்லை உய்குறில் *
    தொத்து இறுத்த தண் துழாய் * நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ (68)
  • TCV 69
    820 காணிலும் உருப் பொலார் * செவிக்கு இனாத கீர்த்தியார் *
    பேணிலும் வரந்தர * மிடுக்கு இலாத தேவரை **
    ஆணம் என்று அடைந்து வாழும் * ஆதர்காள் எம் ஆதிபால் *
    பேணி நும் பிறப்பு எனும் * பிணக்கு அறுக்க கிற்றிரே (69)
  • TCV 70
    821 குந்தமோடு சூலம் வேல்கள் * தோமரங்கள் தண்டு வாள் *
    பந்தமான தேவர்கள் * பரந்து வானகம் உற **
    வந்த வாணன் ஈரைஞ்ஞூறு * தோள்களைத் துணித்த நாள்
    அந்த அந்த ஆகுலம் * அமரரே அறிவரே (70)
  • TCV 71
    822 வண்டு உலாவு கோதை மாதர் * காரணத்தினால் வெகுண்டு *
    இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு * தோள்களைத் துணித்த நாள் **
    முண்டன் நீறன் மக்கள் வெப்பு * மோடி அங்கி ஓடிடக்
    கண்டு * நாணி வாணனுக்கு இரங்கினான் * எம் மாயனே (71)
  • TCV 72
    823 போதில் மங்கை பூதலக் கிழத்தி * தேவி அன்றியும் *
    போது தங்கு நான்முகன் மகன் * அவன் மகன் சொலில் **
    மாது தங்கு கூறன் * ஏறது ஊர்தி என்று வேத நூல் *
    ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை * மற்று உரைக்கிலே (72)
  • TCV 73
    824 மரம் பொதச் சரம் துரந்து * வாலி வீழ முன் ஒர் நாள் *
    உரம் பொதச் சரம் துரந்த * உம்பர் ஆளி எம்பிரான் **
    வரம் குறிப்பில் வைத்தவர்க்கு * அலாது வானம் ஆளிலும் *
    நிரம்பு நீடு போகம் * எத்திறத்தும் யார்க்கும் இல்லையே (73)
  • TCV 74
    825 அறிந்து அறிந்து வாமனன் * அடியிணை வணங்கினால் *
    செறிந்து எழுந்த ஞானமோடு * செல்வமும் சிறந்திடும் **
    மறிந்து எழுந்த தெண் திரையுள் * மன்னு மாலை வாழ்த்தினால் *
    பறிந்து எழுந்து தீவினைகள் * பற்று அறுதல் பான்மையே (74)
  • TCV 75
    826 ஒன்றி நின்று நற்றவம் செய்து * ஊழி ஊழிதோறு எலாம் *
    நின்று நின்று அவன் குணங்கள் * உள்ளி உள்ளம் தூயராய் **
    சென்று சென்று தேவதேவர் * உம்பர் உம்பர் உம்பராய் *
    அன்றி எங்கள் செங்கண் மாலை * யாவர் காண வல்லரே? (75)
  • TCV 76
    827 புன் புல வழி அடைத்து * அரக்கு இலச்சினை செய்து *
    நன் புல வழி திறந்து * ஞான நற்சுடர் கொளீஇ **
    என்பு இல் எள்கி நெஞ்சு உருகி * உள் கனிந்து எழுந்தது ஓர்
    அன்பில் அன்றி ஆழியானை * யாவர் காண வல்லரே? (76)
  • TCV 77
    828 எட்டும் எட்டும் எட்டுமாய் * ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் *
    எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி * நின்ற ஆதிதேவனை **
    எட்டின் ஆய பேதமோடு * இறைஞ்சி நின்று அவன் பெயர் *
    எட்டு எழுத்தும் ஓதுவார்கள் * வல்லர் வானம் ஆளவே (77)
  • TCV 78
    829 சோர்வு இலாத காதலால் * தொடக்கு அறா மனத்தராய் *
    நீர் அராவணைக் கிடந்த * நின்மலன் நலங் கழல் **
    ஆர்வமோடு இறைஞ்சி நின்று * அவன் பேர் எட்டு எழுத்துமே *
    வாரம் ஆக ஓதுவார்கள் * வல்லர் வானம் ஆளவே (78)
  • TCV 79
    830 பத்தினோடு பத்துமாய் * ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய் *
    பத்து நால் திசைக்கண் நின்ற * நாடு பெற்ற நன்மையாய் **
    பத்தின் ஆய தோற்றமோடு * ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால் *
    பத்தராம் அவர்க்கு அலாது * முத்தி முற்றல் ஆகுமே? (79)
  • TCV 80
    831 வாசி ஆகி நேசம் இன்றி * வந்து எதிர்ந்த தேனுகன் *
    நாசம் ஆகி நாள் உலப்ப * நன்மை சேர் பனங்கனிக்கு **
    வீசி மேல் நிமிர்ந்த தோளின் * இல்லை ஆக்கினாய் கழற்கு *
    ஆசை ஆம் அவர்க்கு அலால் * அமரர் ஆகல் ஆகுமே? (80)
  • TCV 81
    832 ## கடைந்த பாற்கடல் கிடந்து * காலநேமியைக் கடிந்து *
    உடைந்த வாலி தன் தனக்கு * உதவ வந்து இராமனாய் **
    மிடைந்த ஏழ் மரங்களும் * அடங்க எய்து வேங்கடம் *
    அடைந்த மால பாதமே * அடைந்து நாளும் உய்ம்மினோ (81)
  • TCV 82
    833 எத்திறத்தும் ஒத்து நின்று * உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் *
    முத்திறத்து மூரி நீர் * அராவணைத் துயின்ற ** நின்
    பத்து உறுத்த சிந்தையோடு * நின்று பாசம் விட்டவர்க்கு *
    எத்திறத்தும் இன்பம் * இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே (82)
  • TCV 83
    834 மட்டு உலாவு தண் துழாய் * அலங்கலாய் புலன் கழல் *
    விட்டு வீழ்வு இலாத போகம் * விண்ணில் நண்ணி ஏறினும் **
    எட்டினோடு இரண்டு எனும் * கயிற்றினால் மனந்தனைக்
    கட்டி * வீடு இலாது வைத்த காதல் * இன்பம் ஆகுமே (83)
  • TCV 84
    835 பின் பிறக்க வைத்தனன் கொல்? * அன்றி நின்று தன் கழற்கு *
    அன்பு உறைக்க வைத்த நாள் * அறிந்தனன் கொல் ஆழியான்? **
    தன் திறத்து ஒர் அன்பிலா * அறிவு இலாத நாயினேன் *
    என் திறத்தில் என்கொல் * எம்பிரான் குறிப்பில் வைத்ததே? (84)
  • TCV 85
    836 நச்சு அராவணைக் கிடந்த * நாத பாத போதினில் *
    வைத்த சிந்தை வாங்குவித்து * நீங்குவிக்க நீ இனம் **
    மெய்த்தன் வல்லை ஆதலால் * அறிந்தனன் நின் மாயமே *
    உய்த்து நின் மயக்கினில் * மயக்கல் என்னை மாயனே (85)
  • TCV 86
    837 சாடு சாடு பாதனே * சலம் கலந்த பொய்கைவாய் *
    ஆடு அராவின் வன்பிடர் * நடம் பயின்ற நாதனே **
    கோடு நீடு கைய செய்ய * பாதம் நாளும் உள்ளினால் *
    வீடனாக மெய் செயாத * வண்ணம் என்கொல்? கண்ணனே (86)
  • TCV 87
    838 நெற்றி பெற்ற கண்ணன் * விண்ணின் நாதனோடு போதின்மேல் *
    நற்றவத்து நாதனோடு * மற்றும் உள்ள வானவர் **
    கற்ற பெற்றியால் வணங்கு * பாத நாத வேத * நின்
    பற்று அலால் ஒர் பற்று * மற்றது உற்றிலேன் உரைக்கிலே (87)
  • TCV 88
    839 வெள்ளை வேலை வெற்பு நாட்டி * வெள் எயிற்று அராவு அளாய் *
    அள்ளலாக் கடைந்த அன்று * அருவரைக்கு ஓர் ஆமையாய் **
    உள்ள நோய்கள் தீர் மருந்து * வானவர்க்கு அளித்த * எம்
    வள்ளலாரை அன்றி * மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே? (88)
  • TCV 89
    840 பார் மிகுத்த பாரம் முன் * ஒழிச்சுவான் அருச்சுனன் *
    தேர் மிகுத்து மாயம் ஆக்கி * நின்று கொன்று வென்றிசேர் **
    மாரதர்க்கு வான் கொடுத்து * வையம் ஐவர் பாலதாம் *
    சீர் மிகுத்த நின் அலால் ஒர் * தெய்வம் நான் மதிப்பனே? (89)
  • TCV 90
    841 குலங்களாய ஈரிரண்டில் * ஒன்றிலும் பிறந்திலேன் *
    நலங்களாய நற்கலைகள் * நாலிலும் நவின்றிலேன் **
    புலன்கள் ஐந்தும் வென்றிலேன் * பொறியிலேன் புனித * நின்
    இலங்கு பாதம் அன்றி * மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே (90)
  • TCV 91
    842 பண் உலாவு மென் மொழிப் * படைத் தடங்கணாள் பொருட்டு *
    எண் இலா அரக்கரை * நெருப்பினால் நெருக்கினாய் **
    கண் அலால் ஒர் கண் இலேன் * கலந்த சுற்றம் மற்று இலேன் *
    எண் இலாத மாய நின்னை * என்னுள் நீக்கல் என்றுமே (91)
  • TCV 92
    843 ## விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து * வென்றி வேற்கண் மாதரார் *
    கடிக் கலந்த தோள் புணர்ந்த * காலி ஆய வேலை நீர் **
    படைத்து அடைத்து அதில் கிடந்து * முன் கடைந்த நின்தனக்கு *
    அடைக்கலம் புகுந்த என்னை * அஞ்சல் என்ன வேண்டுமே (92)
  • TCV 93
    844 சுரும்பு அரங்கு தண் துழாய் * துதைந்து அலர்ந்த பாதமே *
    விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு * இரங்கு அரங்கவாணனே **
    கரும்பு இருந்த கட்டியே * கடல் கிடந்த கண்ணனே *
    இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த * வில் இராமனே (93)
  • TCV 94
    845 ஊனில் மேய ஆவி நீ * உறக்கமோடு உணர்ச்சி நீ *
    ஆனில் மேய ஐந்தும் நீ * அவற்றுள் நின்ற தூய்மை நீ **
    வானினோடு மண்ணும் நீ * வளங் கடல் பயனும் நீ *
    யானும் நீ அது அன்றி * எம்பிரானும் நீ இராமனே (94)
  • TCV 95
    846 அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி * ஆசையாம் அவை *
    தொடக்கு அறுத்து வந்து * நின் தொழிற்கண் நின்ற என்னை நீ **
    விடக் கருதி மெய்செயாது * மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும் *
    கடல் கிடந்த நின் அலால் * ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே (95)
  • TCV 96
    847 வரம்பு இலாத மாய மாய * வையம் ஏழும் மெய்ம்மையே *
    வரம்பு இல் ஊழி ஏத்திலும் * வரம்பு இலாத கீர்த்தியாய் **
    வரம்பு இலாத பல் பிறப்பு * அறுத்து வந்து நின்கழல் *
    பொந்துமா திருந்த நீ * வரம் செய் புண்டரீகனே (96)
  • TCV 97
    848 வெய்ய ஆழி சங்கு தண்டு * வில்லும் வாளும் ஏந்து சீர்க்
    கைய * செய்ய போதில் மாது * சேரும் மார்ப நாதனே **
    ஐயில் ஆய ஆக்கை நோய் * அறுத்து வந்து நின் அடைந்து *
    உய்வது ஓர் உபாயம் நீ * எனக்கு நல்க வேண்டுமே (97)
  • TCV 98
    849 மறம் துறந்து வஞ்சம் மாற்றி * ஐம்புலன்கள் ஆசையும்
    துறந்து * நின்கண் ஆசையே * தொடர்ந்து நின்ற நாயினேன் **
    பிறந்து இறந்து பேர் இடர்ச் * சுழிக்கணின்று நீங்குமா *
    மறந்திடாது மற்று எனக்கு * மாய நல்க வேண்டுமே (98)
  • TCV 99
    850 காட்டி நான் செய் வல்வினை * பயன்தனால் மனந்தனை *
    நாட்டி வைத்து நல்ல அல்ல * செய்ய எண்ணினார் என **
    கேட்டது அன்றி என்னது ஆவி * பின்னை கேள்வ நின்னொடும் *
    பூட்டி வைத்த என்னை * நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே (99)
  • TCV 100
    851 பிறப்பினோடு பேர் இடர்ச் * சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது *
    இறப்ப வைத்த ஞான நீசரைக் * கரைக்கொடு ஏற்றுமா **
    பெறற்கு அரிய நின்ன பாத * பத்தி ஆன பாசனம் *
    பெறற்கு அரிய மாயனே * எனக்கு நல்க வேண்டுமே (100)
  • TCV 101
    852 இரந்து உரைப்பது உண்டு வாழி * ஏம நீர் நிறத்து அமா *
    வரம் தரும் திருக்குறிப்பில் * வைத்தது ஆகில் மன்னு சீர் **
    பரந்த சிந்தை ஒன்றிநின்று * நின்ன பாத பங்கயம் *
    நிரந்தரம் நினைப்பதாக * நீ நினைக்க வேண்டுமே (101)
  • TCV 102
    853 விள்வு இலாத காதலால் * விளங்கு பாத போதில் வைத்து *
    உள்ளுவேனது ஊன நோய் * ஒழிக்குமா தெழிக்கு நீர் **
    பள்ளி மாய பன்றி ஆய * வென்றி வீர குன்றினால் *
    துள்ளுநீர் வரம்பு செய்த * தோன்றல் ஒன்று சொல்லிடே (102)
  • TCV 103
    854 திருக் கலந்து சேரும் மார்ப * தேவதேவ தேவனே *
    இருக் கலந்த வேத நீதி * ஆகி நின்ற நின்மலா **
    கருக் கலந்த காளமேக * மேனி ஆய நின் பெயர் *
    உருக் கலந்து ஒழிவிலாது * உரைக்குமாறு உரைசெயே (103)
  • TCV 104
    855 கடுங் கவந்தன் வக்கரன் * கரன் முரன் சிரம் அவை *
    இடந்து கூறு செய்த * பல் படைத் தடக்கை மாயனே **
    கிடந்து இருந்து நின்று இயங்கு * போதும் நின்ன பொற்கழல் *
    தொடர்ந்து வீள்வு இலாதது ஒர் * தொடர்ச்சி நல்க வேண்டுமே (104)
  • TCV 105
    856 மண்ணை உண்டு உமிழ்ந்து பின் * இரந்து கொண்டு அளந்து மண் *
    கண்ணுள் அல்லது இல்லை என்று * வென்ற காலம் ஆயினாய் **
    பண்ணை வென்ற இன்சொல் மங்கை * கொங்கை தங்கு பங்கயக்
    கண்ண * நின்ன வண்ணம் அல்லது இல்லை * எண்ணும் வண்ணமே (105)
  • TCV 106
    857 கறுத்து எதிர்ந்த காலநேமி * காலனோடு கூட * அன்று
    அறுத்த ஆழி சங்கு தண்டு * வில்லும் வாளும் ஏந்தினாய் **
    தொறுக் கலந்த ஊனம் அஃது * ஒழிக்க அன்று குன்றம் முன் *
    பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் * நேசம் இல்லை நெஞ்சமே (106)
  • TCV 107
    858 காய் சினத்த காசி மன்னன் * வக்கரன் பவுண்டிரன் *
    மாசினத்த மாலி மான் * சுமாலி கேசி தேனுகன் **
    நாசம் உற்று வீழ * நாள் கவர்ந்த நின் கழற்கு அலால் *
    நேச பாசம் எத் திறத்தும் * வைத்திடேன் எம் ஈசனே (107)
  • TCV 108
    859 கேடு இல் சீர் வரத்தினாய்க் * கெடும் வரத்து அயன் அரன் *
    நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் * நாடு நண்ணினும் **
    வீடது ஆன போகம் எய்தி * வீற்றிருந்த போதிலும் *
    கூடும் ஆசை அல்லது ஒன்று * கொள்வனோ குறிப்பிலே? (108)
  • TCV 109
    860 சுருக்குவாரை இன்றியே * சுருங்கினாய் சுருங்கியும் *
    பெருக்குவாரை இன்றியே * பெருக்க மெய்து பெற்றியோய் **
    செருக்குவார்கள் தீக்குணங்கள் * தீர்த்த தேவதேவன் என்று *
    இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த * யானும் ஏத்தினேன் (109)
  • TCV 110
    861 தூயனாயும் அன்றியும் * சுரும்பு உலாவு தண் துழாய் *
    மாய நின்னை நாயினேன் * வணங்கி வாழ்த்தும் ஈதெலாம் **
    நீயும் நின் குறிப்பினில் * பொறுத்து நல்கு வேலை நீர் *
    பாயலோடு பத்தர் சித்தம் * மேய வேலை வண்ணனே (110)
  • TCV 111
    862 வைது நின்னை வல்லவா * பழித்தவர்க்கும் மாறில் போர் *
    செய்து நின்ன செற்றத் தீயில் * வெந்தவர்க்கும் வந்து உன்னை **
    எய்தல் ஆகும் என்பர் * ஆதலால் எம் மாய நாயினேன் *
    செய்த குற்றம் நற்றமாகவே கொள் * ஞால நாதனே (111)
  • TCV 112
    863 வாள்கள் ஆகி நாள்கள் செல்ல * நோய்மை குன்றி மூப்பு எய்தி *
    மாளு நாள் அது ஆதலால் * வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே **
    ஆளது ஆகும் நன்மை என்று * நன்குணர்ந்து அது அன்றியும் *
    மீள்வு இலாத போகம் * நல்க வேண்டும் மால பாதமே (112)
  • TCV 113
    864 சலம் கலந்த செஞ்சடைக் * கறுத்த கண்டன் வெண்தலை *
    புலன் கலங்க உண்ட பாதகத்தன் * வன் துயர் கெட **
    அலங்கல் மார்வில் வாச நீர் * கொடுத்தவன் அடுத்த சீர் *
    நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் * எண்ணு வாழி நெஞ்சமே (113)
  • TCV 114
    865 ஈனமாய எட்டும் நீக்கி * ஏதம் இன்றி மீதுபோய்
    வானம் ஆள வல்லையேல் * வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே **
    ஞானம் ஆகி ஞாயிறு ஆகி * ஞால முற்றும் ஓர் எயிற்று *
    ஏனமாய் இடந்த மூர்த்தி * எந்தை பாதம் எண்ணியே (114)
  • TCV 115
    866 ## அத்தன் ஆகி அன்னை ஆகி * ஆளும் எம் பிரானுமாய் *
    ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து * நம்மை ஆட்கொள்வான் **
    முத்தனார் முகுந்தனார் * புகுந்து நம்முள் மேவினர் *
    எத்தினால் இடர்க்கடல் கிடத்தி * ஏழை நெஞ்சமே! (115)
  • TCV 116
    867 மாறு செய்த வாள் அரக்கன் * நாள் உலப்ப அன்று இலங்கை *
    நீறு செய்து சென்று கொன்று * வென்றி கொண்ட வீரனார் **
    வேறு செய்து தம்முள் என்னை * வைத்திடாமையால் * நமன்
    கூறுசெய்து கொண்டு இறந்த * குற்றம் எண்ண வல்லனே? (116)
  • TCV 117
    868 அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு * ஆய மூப்பு இவை *
    வைத்த சிந்தை வைத்த ஆக்கை * மாற்றி வானில் ஏற்றுவான் **
    அச்சுதன் அனந்த கீர்த்தி * ஆதி அந்தம் இல்லவன் *
    நச்சு நாகனைக் கிடந்த * நாதன் வேத கீதனே (117)
  • TCV 118
    869 சொல்லினும் தொழிற்கணும் * தொடக்கு அறாத அன்பினும் *
    அல்லும் நன் பகலினோடும் * ஆன மாலை காலையும் **
    வல்லி நாள் மலர்க் கிழத்தி * நாத பாத போதினை *
    புல்லி உள்ளம் விள்வு இலாது * பூண்டு மீண்டது இல்லையே (118)
  • TCV 119
    870 ## பொன்னி சூழ் அரங்கம் மேய * பூவை வண்ண மாய கேள் *
    என்னது ஆவி என்னும் * வல்வினையினுட் கொழுந்து எழுந்து **
    உன்ன பாதம் என்ன நின்ற * ஒண்சுடர்க் கொழுமலர் *
    மன்ன வந்து பூண்டு * வாட்டம் இன்றி எங்கும் நின்றதே (119)
  • TCV 120
    871 ## இயக்கு அறாத பல் பிறப்பில் * என்னை மாற்றி இன்று வந்து *
    உயக்கொள் மேக வண்ணன் நண்ணி * என்னிலாய தன்னுளே **
    மயக்கினான் தன் மன்னு சோதி * ஆதலால் என் ஆவி தான்
    இயக்கு எலாம் அறுத்து * அறாத இன்ப வீடு பெற்றதே (120)