Thirumālai

திருமாலை

Thirumālai
For a long time in the world, Thondaradippodi Alvar, who toiled in worldly pleasures, was blessed by Periya Perumal, who revealed the glory of His divine name. The compassionate Lord, who has immense mercy towards the souls that suffer by being born repeatedly, showed that chanting His divine name is an easy way for those who are unable to follow the + Read more
நெடுங்காலம் உலக வாழ்வில் உழன்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரை பெரிய பெருமாள் தம் திருநாமத்தின் வைபவத்தைக் காட்டி அருளினார். மாறிமாறி பல பிறப்பு பிறந்து அல்லல்படும் ஜீவாத்மாக்களிடம் அளவற்ற கருணை கொண்ட பகவான், அவர்கள் கர்ம, ஜ்ஞான, பக்தி யோகங்களை கடைப்பிடிக்க திறமையற்றவர்களாயும், சரணாகதி செய்வதற்கு + Read more
Group: 1st 1000
Verses: 872 to 916
Glorification: Sri Ranganāthar (திருவரங்கன்)
  • தனியன் / Taniyan
  • TM 1
    872 ## காவலில் புலனை வைத்துக் * கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து *
    நாவலிட்டு உழிதருகின்றோம் * நமன் தமர் தலைகள் மீதே **
    மூவுலகு உண்டு உமிழ்ந்த * முதல்வ நின் நாமம் கற்ற *
    ஆவலிப் புடைமை கண்டாய் * அரங்க மா நகருளானே (1)
  • TM 2
    873 ## பச்சை மா மலை போல் மேனி * பவளவாய் கமலச் செங்கண் *
    அச்சுதா அமரர் ஏறே * ஆயர் தம் கொழுந்தே என்னும் **
    இச் சுவை தவிர யான் போய் * இந்திர லோகம் ஆளும் *
    அச் சுவை பெறினும் வேண்டேன் * அரங்க மா நகருளானே (2)
  • TM 3
    874 வேத நூல் பிராயம் நூறு * மனிசர் தாம் புகுவரேலும் *
    பாதியும் உறங்கிப் போகும் * நின்ற பதினையாண்டு **
    பேதை பாலகன் அது ஆகும் * பிணி பசி மூப்புத் துன்பம் *
    ஆதலால் பிறவி வேண்டேன் * அரங்க மா நகருளானே (3)
  • TM 4
    875 மொய்த்த வல்வினையுள் நின்று * மூன்று எழுத்து உடைய பேரால் *
    கத்திரபந்தும் அன்றே * பராங்கதி கண்டு கொண்டான் **
    இத்தனை அடியர் ஆனார்க்கு * இரங்கும் நம் அரங்கன் ஆய *
    பித்தனைப் பெற்றும் அந்தோ * பிறவியுள் பிணங்குமாறே (4)
  • TM 5
    876 பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் * பெரியது ஓர் இடும்பை பூண்டு *
    உண்டு இராக் கிடக்கும் போது * உடலுக்கே கரைந்து நைந்து **
    தண் துழாய் மாலை மார்பன் * தமர்களாய்ப் பாடி ஆடி *
    தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் * தொழும்பர்சோறு உகக்குமாறே (5)
  • TM 6
    877 மறம் சுவர் மதில் எடுத்து * மறுமைக்கே வெறுமை பூண்டு *
    புறம் சுவர் ஓட்டை மாடம் * புரளும் போது அறிய மாட்டீர் **
    அறம் சுவர் ஆகி நின்ற * அரங்கனார்க்கு ஆட் செய்யாதே *
    புறஞ் சுவர் கோலஞ் செய்து * புள் கௌவக் கிடக்கின்றீரே (6)
  • TM 7
    878 புலை அறம் ஆகி நின்ற * புத்தொடு சமணம் எல்லாம் *
    கலை அறக் கற்ற மாந்தர் * காண்பரோ? கேட்பரோ தாம்? **
    தலை அறுப்பு உண்டும் சாவேன் * சத்தியம் காண்மின் ஐயா *
    சிலையினால் இலங்கை செற்ற * தேவனே தேவன் ஆவான் (7)
  • TM 8
    879 வெறுப்பொடு சமணர் முண்டர் * விதி இல் சாக்கியர்கள் * நின்பால்
    பொறுப்பு அரியனகள் பேசில் * போவதே நோயது ஆகி **
    குறிப்பு எனக்கு அடையும் ஆகில் * கூடுமேல் தலையை * ஆங்கே
    அறுப்பதே கருமம் கண்டாய் * அரங்க மா நகருளானே (8)
  • TM 9
    880 மற்றும் ஓர் தெய்வம் உண்டே? * மதி இலா மானிடங்காள் *
    உற்றபோது அன்றி நீங்கள் * ஒருவன் என்று உணர மாட்டீர் **
    அற்றம் மேல் ஒன்று அறியீர் * அவன் அல்லால் தெய்வம் இல்லை *
    கற்றினம் மேய்த்த எந்தை * கழலிணை பணிமின் நீரே (9)
  • TM 10
    881 நாட்டினான் தெய்வம் எங்கும் * நல்லது ஓர் அருள் தன்னாலே *
    காட்டினான் திருவரங்கம் * உய்பவர்க்கு உய்யும் வண்ணம் **
    கேட்டிரே நம்பிமீர்காள் * கெருட வாகனனும் நிற்க *
    சேட்டை தன் மடியகத்துச் * செல்வம் பார்த்து இருக்கின்றீரே (10)
  • TM 11
    882 ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் * அடைத்து உலகங்கள் உய்ய *
    செருவிலே அரக்கர்கோனைச் * செற்ற நம் சேவகனார் **
    மருவிய பெரிய கோயில் * மதில் திருவரங்கம் என்னா *
    கருவிலே திரு இலாதீர் * காலத்தைக் கழிக்கின்றீரே (11)
  • TM 12
    883 நமனும் முற்கலனும் பேச * நரகில் நின்றார்கள் கேட்க *
    நரகமே சுவர்க்கம் ஆகும் * நாமங்கள் உடைய நம்பி **
    அவனது ஊர் அரங்கம் என்னாது * அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் *
    கவலையுள் படுகின்றார் என்று * அதனுக்கே கவல்கின்றேனே (12)
  • TM 13
    884 எறியும் நீர் வெறிகொள் வேலை * மாநிலத்து உயிர்கள் எல்லாம் *
    வெறிகொள் பூந்துளவ மாலை * விண்ணவர்கோனை ஏத்த **
    அறிவு இலா மனிசர் எல்லாம் * அரங்கம் என்று அழைப்பராகில் *
    பொறியில் வாழ் நரகம் எல்லாம் * புல் எழுந்து ஒழியும் அன்றே (13)
  • TM 14
    885 ## வண்டினம் முரலும் சோலை * மயிலினம் ஆலும் சோலை *
    கொண்டல் மீது அணவும் சோலை * குயிலினம் கூவும் சோலை **
    அண்டர்கோன் அமரும் சோலை * அணி திருவரங்கம் என்னா *
    மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை விலக்கி * நாய்க்கு இடுமின் நீரே (14)
  • TM 15
    886 மெய்யர்க்கே மெய்யன் ஆகும் * விதி இலா என்னைப் போலப் *
    பொய்யர்க்கே பொய்யன் ஆகும் * புட்கொடி உடைய கோமான் **
    உய்யப்போம் உணர்வினார்கட்கு * ஒருவன் என்று உணர்ந்த பின்னை *
    ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் * அழகன் ஊர் அரங்கம் அன்றே (15)
  • TM 16
    887 சூதனாய்க் கள்வனாகித் * தூர்த்தரோடு இசைந்த காலம் *
    மாதரார் கயற்கண் என்னும் * வலையுள் பட்டு அழுந்துவேனை **
    போதரே என்று சொல்லிப் * புந்தியுள் புகுந்து * தன்பால்
    ஆதரம் பெருக வைத்த * அழகன் ஊர் அரங்கம் அன்றே (16)
  • TM 17
    888 விரும்பி நின்று ஏத்த மாட்டேன் * விதி இலேன் மதி ஒன்று இல்லை *
    இரும்புபோல் வலிய நெஞ்சம் * இறை இறை உருகும் வண்ணம் **
    சுரும்பு அமர் சோலை சூழ்ந்த * அரங்க மா கோயில் கொண்ட *
    கரும்பினைக் கண்டு கொண்டு * என் கண்ணினை களிக்குமாறே (17)
  • TM 18
    889 இனி திரைத் திவலை மோத * எறியும் தண் பரவை மீதே *
    தனி கிடந்து அரசு செய்யும் * தாமரைக்கண்ணன் எம்மான் **
    கனி இருந்தனைய செவ்வாய்க் * கண்ணனைக் கண்ட கண்கள் *
    பனி அரும்பு உதிருமாலோ * என் செய்கேன் பாவியேனே? (18)
  • TM 19
    890 ## குடதிசை முடியை வைத்துக் * குணதிசை பாதம் நீட்டி *
    வடதிசை பின்பு காட்டித் * தென்திசை இலங்கை நோக்கி **
    கடல் நிறக் கடவுள் எந்தை * அரவணைத் துயிலுமா கண்டு *
    உடல் எனக்கு உருகுமாலோ * என் செய்கேன் உலகத்தீரே? (19)
  • TM 20
    891 பாயு நீர் அரங்கம் தன்னுள் * பாம்பு அணைப் பள்ளிகொண்ட *
    மாயனார் திரு நன் மார்வும் * மரதக உருவும் தோளும் **
    தூய தாமரைக் கண்களும் * துவர் இதழ்ப் பவள வாயும் *
    ஆய சீர் முடியும் தேசும் * அடியரோர்க்கு அகலல் ஆமே? (20)
  • TM 21
    892 பணிவினால் மனமது ஒன்றிப் * பவள வாய் அரங்கனார்க்குத் *
    துணிவினால் வாழ மாட்டாத் * தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் **
    அணியின் ஆர் செம்பொன் ஆய * அருவரை அனைய கோயில் *
    மணி அனார் கிடந்தவாற்றை * மனத்தினால் நினைக்கல் ஆமே? (21)
  • TM 22
    893 பேசிற்றே பேசல் அல்லால் * பெருமை ஒன்று உணரல் ஆகாது *
    ஆசற்றார் தங்கட்கு அல்லால் * அறியல் ஆவானும் அல்லன் **
    மாசற்றார் மனத்துளானை * வணங்கி நாம் இருப்பது அல்லால் *
    பேசத்தான் ஆவது உண்டோ? * பேதை நெஞ்சே நீ சொல்லாய் (22)
  • TM 23
    894 கங்கையில் புனிதம் ஆய * காவிரி நடுவுபாட்டு *
    பொங்குநீர் பரந்து பாயும் * பூம்பொழில் அரங்கந் தன்னுள் **
    எங்கள் மால் இறைவன் ஈசன் * கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் *
    எங்ஙனம் மறந்து வாழ்கேன்? * ஏழையேன் ஏழையேனே (23)
  • TM 24
    895 வெள்ள நீர் பரந்து பாயும் * விரி பொழில் அரங்கந் தன்னுள் *
    கள்வனார் கிடந்தவாறும் * கமல நன் முகமும் கண்டும் **
    உள்ளமே வலியை போலும் * ஒருவன் என்று உணர மாட்டாய் *
    கள்ளமே காதல் செய்து * உன் கள்ளத்தே கழிக்கின்றாயே (24)
  • TM 25
    896 குளித்து மூன்று அனலை ஓம்பும் * குறிகொள் அந்தணமை தன்னை *
    ஒளித்திட்டேன் என்கண் இல்லை * நின்கணும் பத்தன் அல்லேன் **
    களிப்பது என் கொண்டு? நம்பீ * கடல்வண்ணா கதறுகின்றேன் *
    அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் * அரங்க மா நகருளானே (25)
  • TM 26
    897 போதெல்லாம் போது கொண்டு * உன் பொன்னடி புனைய மாட்டேன் *
    தீதிலா மொழிகள் கொண்டு * உன் திருக்குணம் செப்ப மாட்டேன் **
    காதலால் நெஞ்சம் அன்பு * கலந்திலேன் அது தன்னாலே *
    ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே * என் செய்வான் தோன்றினேனே? (26)
  • TM 27
    898 குரங்குகள் மலையை நூக்கக் * குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி *
    தரங்க நீர் அடைக்கல் உற்ற * சலம் இலா அணிலும் போலேன் **
    மரங்கள் போல் வலிய நெஞ்ச * வஞ்சனேன் நெஞ்சு தன்னால் *
    அரங்கனார்க்கு ஆட் செய்யாதே * அளியத்தேன் அயர்க்கின்றேனே (27)
  • TM 28
    899 உம்பரால் அறியல் ஆகா * ஒளியுளார் ஆனைக்கு ஆகி *
    செம் புலால் உண்டு வாழும் * முதலைமேல் சீறி வந்தார் **
    நம் பரம் ஆயது உண்டே? * நாய்களோம் சிறுமை ஓரா *
    எம்பிராற்கு ஆட் செய்யாதே * என் செய்வான் தோன்றினேனே (28)
  • TM 29
    900 ஊர் இலேன் காணி இல்லை * உறவு மற்று ஒருவர் இல்லை *
    பாரில் நின் பாத மூலம் * பற்றிலேன் பரம மூர்த்தி **
    காரொளி வண்ணனே * கண்ணனே கதறுகின்றேன் *
    ஆர் உளர் ? களைகண் அம்மா * அரங்க மா நகருளானே (29)
  • TM 30
    901 மனத்தில் ஓர் தூய்மை இல்லை * வாயில் ஓர் இன்சொல் இல்லை *
    சினத்தினால் செற்றம் நோக்கித் * தீவிளி விளிவன் வாளா **
    புனத்துழாய் மாலையானே * பொன்னி சூழ் திருவரங்கா *
    எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? * என்னை ஆளுடைய கோவே (30)
  • TM 31
    902 தவத்துளார் தம்மில் அல்லேன் * தனம் படைத்தாரில் அல்லேன் *
    உவர்த்த நீர் போல * என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் **
    துவர்த்த செவ்வாயினார்க்கே * துவக்கு அறத் துரிசன் ஆனேன் *
    அவத்தமே பிறவி தந்தாய் * அரங்க மா நகருளானே (31)
  • TM 32
    903 ஆர்த்து வண்டு அலம்பும் சோலை * அணி திரு அரங்கந் தன்னுள் *
    கார்த் திரள் அனைய மேனிக் * கண்ணனே உன்னைக் காணும் **
    மார்க்கம் ஒன்று அறியமாட்டா * மனிசரில் துரிசனாய *
    மூர்க்கனேன் வந்து நின்றேன் * மூர்க்கனேன் மூர்க்கனேனே (32)
  • TM 33
    904 மெய் எல்லாம் போக விட்டு * விரிகுழலாரில் பட்டு *
    பொய் எல்லாம் பொதிந்து கொண்ட * போழ்க்கனேன் வந்து நின்றேன் **
    ஐயனே அரங்கனே * உன் அருள் என்னும் ஆசை தன்னால் *
    பொய்யனேன் வந்து நின்றேன் * பொய்யனேன் பொய்யனேனே (33)
  • TM 34
    905 உள்ளத்தே உறையும் மாலை * உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா *
    கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் * தொண்டுக்கே கோலம் பூண்டு **
    உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் * உடன் இருந்து அறிதி என்று *
    வெள்கிப்போய் என்னுள்ளே நான் * விலவு அறச் சிரித்திட்டேனே (34)
  • TM 35
    906 தாவி அன்று உலகம் எல்லாம் * தலைவிளாக்கொண்ட எந்தாய் *
    சேவியேன் உன்னை அல்லால் * சிக்கெனச் செங்கண் மாலே **
    ஆவியே அமுதே * என்தன் ஆருயிர் அனைய எந்தாய் *
    பாவியேன் உன்னை அல்லால் * பாவியேன் பாவியேனே (35)
  • TM 36
    907 மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் * மைந்தனே மதுர ஆறே *
    உழைக் கன்றே போல நோக்கம் * உடையவர் வலையுள் பட்டு **
    உழைக்கின்றேற்கு என்னை நோக்காது * ஒழிவதே உன்னை யன்றே *
    அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி * அரங்கமா நகருளானே (36)
  • TM 37
    908 தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் * திருவரங்கத்துள் ஓங்கும் *
    ஒளியுளார் தாமே யன்றே * தந்தையும் தாயும் ஆவார் **
    எளியது ஓர் அருளும் அன்றே * என் திறத்து எம்பிரானார் *
    அளியன் நம் பையல் என்னார் * அம்மவோ கொடியவாறே (37)
  • TM 38
    909 ## மேம் பொருள் போக விட்டு * மெய்ம்மையை மிக உணர்ந்து *
    ஆம் பரிசு அறிந்துகொண்டு * ஐம்புலன் அகத்து அடக்கி **
    காம்பு அறத் தலை சிரைத்து * உன் கடைத்தலை இருந்து வாழும் *
    சோம்பரை உகத்தி போலும் * சூழ் புனல் அரங்கத்தானே (38)
  • TM 39
    910 அடிமையில் குடிமை இல்லா * அயல் சதுப்பேதிமாரி்ல் *
    குடிமையில் கடைமை பட்ட * குக்கரில் பிறப்பரேலும் **
    முடியினில் துளபம் வைத்தாய் * மொய் கழற்கு அன்பு செய்யும் *
    அடியரை உகத்தி போலும் * அரங்க மா நகருளானே 39
  • TM 40
    911 திருமறுமார்வ நின்னைச் * சிந்தையுள் திகழ வைத்து *
    மருவிய மனத்தர் ஆகில் * மா நிலத்து உயிர்கள் எல்லாம் **
    வெருவு அறக்கொன்று சுட்டிட்டு * ஈட்டிய வினையரேலும் *
    அருவினைப் பயன துய்யார் * அரங்க மா நகருளானே (40)
  • TM 41
    912 வானுளார் அறியல் ஆகா * வானவா என்பர் ஆகில் *
    தேனுலாம் துளப மாலைச் * சென்னியாய் என்பர் ஆகில் **
    ஊனம் ஆயினகள் செய்யும் * ஊனகாரகர்களேலும் *
    போனகம் செய்த சேடம் * தருவரேல் புனிதம் அன்றே (41)
  • TM 42
    913 பழுது இலா ஒழுகல் ஆற்றுப் * பல சதுப்பேதிமார்கள் *
    இழிகுலத்தவர்களேலும் * எம் அடியார்கள் ஆகில் **
    தொழுமின் நீர் கொடுமின் கொள்மின் * என்று நின்னோடும் ஒக்க *
    வழிபட அருளினாய் போல் * மதில் திருவரங்கத்தானே (42)
  • TM 43
    914 அமர ஓர் அங்கம் ஆறும் * வேதம் ஓர் நான்கும் ஓதி *
    தமர்களில் தலைவராய * சாதி அந்தணர்களேலும் **
    நுமர்களைப் பழிப்பர் ஆகில் * நொடிப்பது ஓர் அளவில் * ஆங்கே
    அவர்கள்தாம் புலையர் போலும் * அரங்க மா நகருளானே (43)
  • TM 44
    915 ## பெண் உலாம் சடையினானும் * பிரமனும் உன்னைக் காண்பான் *
    எண் இலா ஊழி ஊழி * தவம் செய்தார் வெள்கி நிற்ப **
    விண் உளார் வியப்ப வந்து * ஆனைக்கு அன்று அருளை ஈந்த
    கண்ணறா * உன்னை என்னோ? * களைகணாக் கருதுமாறே (44)
  • TM 45
    916 ## வள எழும் தவள மாட * மதுரை மா நகரந் தன்னுள் *
    கவள மால் யானை கொன்ற * கண்ணனை அரங்க மாலை **
    துளவத் தொண்டு ஆய தொல் சீர்த் * தொண்டரடிப் பொடி சொல் *
    இளைய புன் கவிதையேலும் * எம்பிராற்கு இனியவாறே (45)