Rāmānuja Nutrandāthi

இராமாநுச நூற்றந்தாதி

Rāmānuja Nutrandāthi
Celebrated as "Jagathacharyan" (Guru of the World), Sri Ramanuja is the master of the Ramanuja Nootrandadi, a poetic work. The name Ramanuja means "younger brother of Rama," referring to Lakshmana. We know that our Ramanuja's birth name is Ilayazhvar (younger āzhvār).

The greatness of this Nootrandadi lies in the fact that in each verse, Ramanuja's + Read more
ஜகதாசாரியன் (உலகின் குரு) என்று கொண்டாடப்படும் ஸ்ரீராமானுஜர், ராமானுஜ நூற்றந்தாதி என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். ராமானுஜன் என்பது ராமனுக்கு அனுஜன் (தம்பி) என்று பொருள்படும். ராமனுக்கு தம்பி யார்? இளையாழ்வார் (லட்சுமணன்). நம் ராமானுஜருடைய இயற்பெயர் இளையாழ்வார் என்பது நாம் அறிந்ததே.

இந்த + Read more
Group: 4th 1000
Verses: 3893 to 4000
Glorification: Sri Rāmānujar (இராமாநுசர்)
  • தனியன் / Taniyan
  • RNA 1
    3893 ## பூ மன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த
    பா மன்னு மாறன் * அடி பணிந்து உய்ந்தவன் ** பல் கலையோர்
    தாம் மன்ன வந்த இராமாநுசன் * சரணாரவிந்தம்
    நாம் மன்னி வாழ * நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (1)
  • RNA 2
    3894 ## கள் ஆர் பொழில் தென் அரங்கன் * கமலப் பதங்கள் நெஞ்சில்
    கொள்ளா * மனிசரை நீங்கி ** குறையல் பிரான் அடிக்கீழ்
    விள்ளாத அன்பன் இராமாநுசன் * மிக்க சீலம் அல்லால்
    உள்ளாது என் நெஞ்சு * ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே (2)
  • RNA 3
    3895 பேர் இயல் நெஞ்சே * அடி பணிந்தேன் உன்னை * பேய்ப் பிறவிப்
    பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி ** பொருவு அரும் சீர்
    ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் *
    சீரிய பேறு உடையார் * அடிக்கீழ் என்னைச் சேர்த்ததற்கே (3)
  • RNA 4
    3896 என்னைப் புவியில் ஒரு பொருள் ஆக்கி * மருள் சுரந்த
    முன்னைப் பழவினை வேர் அறுத்து ** ஊழி முதல்வனையே
    பன்னப் பணித்த இராமாநுசன் * பரன் பாதமும் என்
    சென்னித் தரிக்க வைத்தான் * எனக்கு ஏதும் சிதைவு இல்லையே (4)
  • RNA 5
    3897 எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று * இசையகில்லா
    மனக் குற்ற மாந்தர் * பழிக்கில் புகழ் ** அவன் மன்னிய சீர்
    தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா *
    இனக் குற்றம் காணகில்லார் * பத்தி ஏய்ந்த இயல் இது என்றே (5)
  • RNA 6
    3898 இயலும் பொருளும் இசையத் தொடுத்து * ஈன் கவிகள் அன்பால்
    மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை ** மதி இன்மையால்
    பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் *
    முயல்கின்றனன் * அவன் தன் பெருங் கீர்த்தி மொழிந்திடவே (6)
  • RNA 7
    3899 ## மொழியைக் கடக்கும் பெரும் புகழான் * வஞ்ச முக்குறும்பு ஆம்
    குழியைக் கடக்கும் * நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின் **
    பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி * அல்லா
    வழியைக் கடத்தல் * எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே (7)
  • RNA 8
    3900 வருத்தும் புற இருள் மாற்ற * எம் பொய்கைப் பிரான் மறையின்
    குருத்தின் பொருளையும் * செந்தமிழ் தன்னையும் கூட்டி ** ஒன்றத்
    திரித்து அன்று எரித்த திருவிளக்கைத் தன் திருவுளத்தே *
    இருத்தும் பரமன் * இராமாநுசன் எம் இறையவனே (8)
  • RNA 9
    3901 இறைவனைக் காணும் இதயத்து இருள் கெட * ஞானம் என்னும்
    நிறை விளக்கு ஏற்றிய * பூதத் திருவடி தாள்கள் ** நெஞ்சத்து
    உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் *
    மறையினைக் காத்து * இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே (9)
  • RNA 10
    3902 மன்னிய பேர் இருள் மாண்டபின் * கோவலுள் மா மலராள்
    தன்னொடும் ஆயனைக் * கண்டமை காட்டும் ** தமிழ்த் தலைவன்
    பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் *
    சென்னியில் சூடும் * திருவுடையார் என்றும் சீரியரே (10)
  • RNA 11
    3903 சீரிய நான்மறைச் செம்பொருள் * செந்தமிழால் அளித்த
    பார் இயலும் புகழப் * பாண்பெருமாள் ** சரண் ஆம் பதுமத்
    தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம் *
    கார் இய வண்மை * என்னால் சொல்லொணாது இக் கடல் இடத்தே (11)
  • RNA 12
    3904 இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் * இணை அடிப்போது
    அடங்கும் இதயத்து இராமாநுசன் ** அம் பொன் பாதம் என்றும்
    கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல் செய்யாத் *
    திடம் கொண்ட ஞானியர்க்கே * அடியேன் அன்பு செய்வதுவே (12)
  • RNA 13
    3905 செய்யும் பசுந் துளபத் தொழில் மாலையும் * செந்தமிழில்
    பெய்யும் மறைத் தமிழ் மாலையும் ** பேராத சீர் அரங்கத்து
    ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி * ஆதரியா
    மெய்யன் * இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே (13)
  • RNA 14
    3906 கதிக்குப் பதறி * வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
    கொதிக்கத் * தவம் செய்யும் கொள்கை அற்றேன் ** கொல்லி காவலன் சொல்
    பதிக்கும் கலைக் கவி பாடும் பெரியவர் பாதங்களே *
    துதிக்கும் பரமன் * இராமாநுசன் என்னைச் சோர்விலனே (14)
  • RNA 15
    3907 சோராத காதல் பெருஞ் சுழிப்பால் * தொல்லை மாலை ஒன்றும்
    பாராது அவனைப் * பல்லாண்டு என்று காப்பிடும் * பான்மையன் தாள்
    பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் *
    சாரா மனிசரைச் சேரேன் * எனக்கு என்ன தாழ்வு இனியே? (15)
  • RNA 16
    3908 ## தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து * தலம் முழுதும் கலியே
    ஆள்கின்ற நாள் வந்து * அளித்தவன் காண்மின் ** அரங்கர் மௌலி
    சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் *
    வாழ்கின்ற வள்ளல் * இராமாநுசன் என்னும் மா முனியே (16)
  • RNA 17
    3909 முனியார் துயரங்கள் முந்திலும் * இன்பங்கள் மொய்த்திடினும்
    கனியார் மனம் * கண்ணமங்கை நின்றானை ** கலை பரவும்
    தனி ஆனையைத் தண் தமிழ் செய்த நீலன் தனக்கு * உலகில்
    இனியானை * எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே (17)
  • RNA 18
    3910 எய்தற்கு அரிய மறைகளை * ஆயிரம் இன் தமிழால்
    செய்தற்கு உலகில் வரும் * சடகோபனை ** சிந்தையுள்ளே
    பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் *
    உய்தற்கு உதவும் * இராமாநுசன் எம் உறுதுணையே (18)
  • RNA 19
    3911 உறு பெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் * உயர் குருவும்
    வெறி தரு பூமகள் நாதனும் ** மாறன் விளங்கிய சீர்
    நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இந் நீள் நிலத்தோர் *
    அறிதர நின்ற * இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே (19)
  • RNA 20
    3912 ஆரப் பொழில் தென் குருகைப்பிரான் * அமுதத் திருவாய்
    ஈரத் தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு ** இனியவர் தம்
    சீரைப் பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை * நெஞ்சால்
    வாரிப் பருகும் * இராமாநுசன் என் தன் மா நிதியே (20)
  • RNA 21
    3913 நிதியைப் பொழியும் முகில் என்று * நீசர் தம் வாசல் பற்றித்
    துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் ** இனி தூய் நெறி சேர்
    எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம் *
    கதி பெற்றுடைய * இராமாநுசன் என்னைக் காத்தனனே (21)
  • RNA 22
    3914 கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும் முக்கண்
    மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு ** மூவுலகும்
    பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த *
    தீர்த்தனை ஏத்தும் * இராமாநுசன் என் தன் சேம வைப்பே (22)
  • RNA 23
    3915 வைப்பு ஆய வான் பொருள் என்று * நல் அன்பர் மனத்தகத்தே
    எப்போதும் வைக்கும் இராமாநுசனை ** இரு நிலத்தில்
    ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து *
    முப்போதும் வாழ்த்துவன் * என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே? (23)
  • RNA 24
    3916 மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்தொறும் மூத்து * அதனால்
    எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் ** இன்று கண்டு உயர்ந்தேன்
    பொய்த் தவம் போற்றும் புலைச் சமயங்கள் நிலத்து அவியக் *
    கைத்த மெய்ஞ்ஞானத்து * இராமாநுசன் என்னும் கார் தன்னையே (24)
  • RNA 25
    3917 கார் ஏய் கருணை இராமாநுச * இக் கடலிடத்தில்
    ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை? ** அல்லலுக்கு
    நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்தபின் * உன்
    சீரே உயிர்க்கு உயிராய் * அடியேற்கு இன்று தித்திக்குமே (25)
  • RNA 26
    3918 திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை * என் செய் வினை ஆம்
    மெய்க் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை ** மேவும் நல்லோர்
    எக் குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் *
    அக் குற்றம் அப் பிறப்பு * அவ் இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே (26)
  • RNA 27
    3919 கொள்ளக் குறைவு அற்று இலங்கி * கொழுந்து விட்டு ஓங்கிய உன்
    வள்ளல் தனத்தினால் * வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் **
    வெள்ளைச் சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று *
    தள்ளுற்று இரங்கும் * இராமாநுச என் தனி நெஞ்சமே (27)
  • RNA 28
    3920 நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் * நங்கள்
    பஞ்சித் திருவடிப் பின்னை தன் காதலன் ** பாதம் நண்ணா
    வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் *
    கொஞ்சிப் பரவகில்லாது * என்ன வாழ்வு இன்று கூடியதே (28)
  • RNA 29
    3921 கூட்டும் விதி என்று கூடுங்கொலோ * தென் குருகைப்பிரான்
    பாட்டு என்னும் * வேதப் பசுந்தமிழ் தன்னை ** தன் பத்தி என்னும்
    வீட்டின் கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் *
    ஈட்டங்கள் தன்னை * என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே? (29)
  • RNA 30
    3922 இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என்? * எண் இறந்த
    துன்பம் தரு நிரயம் பல சூழில் என்? ** தொல் உலகில்
    மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த *
    அன்பன் அனகன் * இராமாநுசன் என்னை ஆண்டனனே (30)
  • RNA 31
    3923 ## ஆண்டுகள் நாள் திங்கள் ஆய் * நிகழ் காலம் எல்லாம் மனமே
    ஈண்டு * பல் யோனிகள்தோறு உழல்வோம் ** இன்று ஓர் எண் இன்றியே
    காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணைக்கீழ்ப் *
    பூண்ட அன்பாளன் * இராமாநுசனைப் பொருந்தினமே (31)
  • RNA 32
    3924 பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல
    திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் ** செறு கலியால்
    வருந்திய ஞாலத்தை * வண்மையினால் வந்து எடுத்து அளித்த
    அருந் தவன் * எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே (32) *
  • RNA 33
    3925 அடை ஆர் கமலத்து அலர்மகள் கேள்வன் * கை ஆழி என்னும்
    படையோடு நாந்தகமும் படர் தண்டும் ** ஒண் சார்ங்க வில்லும்
    புடை ஆர் புரி சங்கமும் இந்தப் பூதலம் காப்பதற்கு * என்று
    இடையே * இராமாநுசமுனி ஆயின இந் நிலத்தே (33)
  • RNA 34
    3926 நிலத்தைச் செறுத்து உண்ணும் நீசக் கலியை * நினைப்பு அரிய
    பலத்தைச் செறுத்தும் பிறங்கியது இல்லை ** என் பெய் வினை தென்
    புலத்தில் பொறித்த அப் புத்தகச் சும்மை பொறுக்கிய பின் *
    நலத்தைப் பொறுத்தது * இராமாநுசன் தன் நயப் புகழே (34)
  • RNA 35
    3927 நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே * சில மானிடத்தைப்
    புயலே எனக் கவி போற்றி செய்யேன் ** பொன் அரங்கம் என்னில்
    மயலே பெருகும் இராமாநுசன் * மன்னு மா மலர்த்தாள்
    அயரேன் * அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே? (35)
  • RNA 36
    3928 அடல் கொண்ட நேமியன் ஆர் உயிர் நாதன் * அன்று ஆரணச் சொல்
    கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு ** அளிப்ப பின்னும் காசினியோர்
    இடரின்கண் வீழ்ந்திடத் தானும் அவ் ஒண்பொருள் கொண்டு * அவர் பின்
    படரும் குணன் * எம் இராமாநுசன் தன் படி இதுவே (36)
  • RNA 37
    3929 படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்திவெள்ளம் *
    குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் ** அன்பர்
    கடி கொண்ட மா மலர்த் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் *
    அடி கண்டு கொண்டு உகந்து * என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே (37)
  • RNA 38
    3930 ஆக்கி அடிமை நிலைப்பித்தனை * என்னை இன்று அவமே
    போக்கிப் புறத்திட்டது என் பொருளா முன்பு? ** புண்ணியர் தம்
    வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் *
    நோக்கில் தெரிவு அரிதால் * உரையாய் இந்த நுண் பொருளே (38)
  • RNA 39
    3931 பொருளும் புதல்வரும் பூமியும் * பூங்குழலாரும் என்றே
    மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே ** மற்று உளார் தரமோ
    இருள் கொண்ட வெம் துயர் மாற்றித் தன் ஈறு இல் பெரும் புகழே *
    தெருளும் தெருள் தந்து * இராமாநுசன் செய்யும் சேமங்களே? (39)
  • RNA 40
    3932 சேம நல் வீடும் பொருளும் தருமமும் * சீரிய நல்
    காமமும் என்று இவை நான்கு என்பர் ** நான்கினும் கண்ணனுக்கே
    ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் *
    வாமனன் சீலன் * இராமாநுசன் இந்த மண்மிசையே (40)
  • RNA 41
    3933 மண்மிசை யோனிகள்தோறும் * பிறந்து எங்கள் மாதவனே
    கண் உற நிற்கிலும் காணகில்லா ** உலகோர்கள் எல்லாம்
    அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப் பொழுதே *
    நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு * நாரணற்கு ஆயினரே (41)
  • RNA 42
    3934 ஆயிழையார் கொங்கை தங்கும் * அக் காதல் அளற்று அழுந்தி
    மாயும் என் ஆவியை * வந்து எடுத்தான் இன்று ** மா மலராள்
    நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் * அரங்கன் என்னும்
    தூயவன் * தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே (42)
  • RNA 43
    3935 சுரக்கும் திருவும் உணர்வும் * சொலப்புகில் வாய் அமுதம்
    பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் ** படியில் உள்ளீர்
    உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத் *
    துரக்கும் பெருமை * இராமாநுசன் என்று சொல்லுமினே (43)
  • RNA 44
    3936 சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் * சுருதிகள் நான்கும் எல்லை
    இல்லா * அறநெறி யாவும் தெரிந்தவன் ** எண் அரும் சீர்
    நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பிக் *
    கல்லார் அகல் இடத்தோர் * எது பேறு என்று காமிப்பரே (44)
  • RNA 45
    3937 பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி * அப் பேறு அளித்தற்கு
    ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி ** என்று இப் பொருளைத்
    தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால் *
    கூறும் பரம் அன்று * இராமாநுச மெய்ம்மை கூறிடிலே (45)
  • RNA 46
    3938 கூறும் சமயங்கள் ஆறும் குலைய * குவலயத்தே
    மாறன் பணித்த மறை உணர்ந்தோனை ** மதியிலியேன்
    தேறும்படி என் மனம் புகுந்தானைத் * திசை அனைத்தும்
    ஏறும் குணனை * இராமாநுசனை இறைஞ்சினமே (46)
  • RNA 47
    3939 இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று * இவ் உலகத்து
    அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் ** என் அருவினையின்
    திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தையுள்ளே
    நிறைந்து ஒப்பு அற இருந்தான் * எனக்கு ஆரும் நிகர் இல்லையே (47)
  • RNA 48
    3940 நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு * உன் அருளின்கண் அன்றிப்
    புகல் ஒன்றும் இல்லை * அருட்கும் அஃதே புகல் ** புன்மையிலோர்
    பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே *
    அகலும் பொருள் என் * பயன் இருவோமுக்கும் ஆன பின்னே? (48)
  • RNA 49
    3941 ஆனது செம்மை அறநெறி * பொய்ம்மை அறு சமயம்
    போனது பொன்றி * இறந்தது வெம் கலி ** பூங் கமலத்
    தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத் *
    தான் அதில் மன்னும் * இராமாநுசன் இத் தலத்து உதித்தே (49)
  • RNA 50
    3942 உதிப்பன உத்தமர் சிந்தையுள் * ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக்
    கொதித்திட * மாறி நடப்பன ** கொள்ளை வன் குற்றம் எல்லாம்
    பதித்த என் புன் கவிப் பா இனம் பூண்டன பாவு தொல் சீர் *
    எதித் தலை நாதன் * இராமாநுசன் தன் இணை அடியே (50)
  • RNA 51
    3943 அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் * அன்று பாரதப் போர்
    முடியப் * பரி நெடுந் தேர் விடும் கோனை ** முழுது உணர்ந்த
    அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து * இப்
    படியில் பிறந்தது * மற்று இல்லை காரணம் பார்த்திடிலே (51)
  • RNA 52
    3944 பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப * இப் பார் முழுதும்
    போர்த்தான் புகழ்கொண்டு * புன்மையினேனிடைத் தான் புகுந்து **
    தீர்த்தான் இரு வினை தீர்த்து * அரங்கன் செய்ய தாள் இணையோடு
    ஆர்த்தான் * இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே (52)
  • RNA 53
    3945 அற்புதன் செம்மை இராமாநுசன் * என்னை ஆள வந்த
    கற்பகம் கற்றவர் * காமுறு சீலன் ** கருது அரிய
    பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும் *
    நற்பொருள் தன்னை * இந் நானிலத்தே வந்து நாட்டினனே (53)
  • RNA 54
    3946 நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன * நாரணனைக்
    காட்டிய வேதம் களிப்புற்றது ** தென் குருகை வள்ளல்
    வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது * மண்ணுலகில்
    ஈட்டிய சீலத்து * இராமாநுசன் தன் இயல்வு கண்டே (54)
  • RNA 55
    3947 கண்டவர் சிந்தை கவரும் * கடி பொழில் தென் அரங்கன் *
    தொண்டர் குலாவும் இராமாநுசனை ** தொகை இறந்த
    பண் தரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும் *
    கொண்டலை மேவித்தொழும் * குடி ஆம் எங்கள் கோக்குடியே (55)
  • RNA 56
    3948 கோக் குல மன்னரை மூவெழு கால் * ஒரு கூர் மழுவால்
    போக்கிய தேவனைப் * போற்றும் புனிதன் ** புவனம் எங்கும்
    ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்தபின் * என்
    வாக்கு உரையாது * என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே (56)
  • RNA 57
    3949 மற்று ஒரு பேறு மதியாது * அரங்கன் மலர் அடிக்கு ஆள்
    உற்றவரே * தனக்கு உற்றவராக் கொள்ளும் உத்தமனை **
    நல் தவர் போற்றும் இராமாநுசனை * இந் நானிலத்தே
    பெற்றனன் * பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதைமையே (57)
  • RNA 58
    3950 பேதையர் வேதப் பொருள் இது என்று உன்னி * பிரமம் நன்று என்று
    ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று ** உயிர்கள் மெய்விட்டு
    ஆதிப் பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அவ் அல்லல் எல்லாம் *
    வாதில் வென்றான் * எம் இராமாநுசன் மெய்ம் மதிக்கடலே (58)
  • RNA 59
    3951 கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் * கலி இருளே
    மிடைதரு காலத்து இராமாநுசன் ** மிக்க நான்மறையின்
    சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் * உயிரை
    உடையவன் * நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே (59)
  • RNA 60
    3952 உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்தொறும் * திருவாய்மொழியின்
    மணம் தரும் * இன் இசை மன்னும் இடம்தொறும் ** மா மலராள்
    புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்கு நிற்கும்
    குணம் திகழ் கொண்டல் * இராமாநுசன் எம் குலக் கொழுந்தே (60)
  • RNA 61
    3953 கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் * நிரயத்து
    அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் ** அரு முனிவர்
    தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் * சுடர் மிக்கு
    எழுந்தது * அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே (61)
  • RNA 62
    3954 இருந்தேன் இரு வினைப் பாசம் கழற்றி * இன்று யான் இறையும்
    வருந்தேன் இனி எம் இராமாநுசன் ** மன்னு மா மலர்த் தாள்
    பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் *
    பெருந் தேவரைப்பரவும் * பெரியோர் தம் கழல் பிடித்தே (62)
  • RNA 63
    3955 பிடியைத் தொடரும் களிறு என்ன * யான் உன் பிறங்கிய சீர்
    அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் ** அறு சமயச்
    செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து * இப்
    படியைத் தொடரும் * இராமாநுச மிக்க பண்டிதனே. (63)
  • RNA 64
    3956 பண் தரு மாறன் பசுந் தமிழ் ** ஆனந்தம் பாய் மதமாய்
    விண்டிட எங்கள் இராமாநுசமுனி வேழம் ** மெய்ம்மை
    கொண்ட நல் வேதக் கொழுந் தண்டம் ஏந்திக் * குவலயத்தே
    மண்டி வந்து ஏன்றது * வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே (64)
  • RNA 65
    3957 வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு * என்றும் மறையவர் தம்
    தாழ்வு அற்றது * தவம் தாரணி பெற்றது ** தத்துவ நூல்
    கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு * அந்
    நாழ் அற்றது * நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே (65)
  • RNA 66
    3958 ஞானம் கனிந்த நலம் கொண்டு * நாள்தொறும் நைபவர்க்கு
    வானம் கொடுப்பது மாதவன் ** வல்வினையேன் மனத்தில்
    ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு * அத்
    தானம் கொடுப்பது * தன் தகவு என்னும் சரண் கொடுத்தே (66)
  • RNA 67
    3959 சரணம் அடைந்த தருமனுக்காப் * பண்டு நூற்றுவரை
    மரணம் அடைவித்த மாயவன் தன்னை ** வணங்க வைத்த
    கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் * உயிர்கட்கு
    அரண் அங்கு அமைத்திலனேல் * அரண் ஆர் மற்று இவ் ஆர் உயிர்க்கே? (67)
  • RNA 68
    3960 ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில்? * மாயன் அன்று ஐவர் தெய்வத்
    தேரினில் செப்பிய கீதையின் ** செம்மைப் பொருள் தெரியப்
    பாரினில் சொன்ன இராமாநுசனைப் பணியும் நல்லோர் *
    சீரினில் சென்று பணிந்தது * என் ஆவியும் சிந்தையுமே (68)
  • RNA 69
    3961 சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன் நாள்
    அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு ** அவை என் தனக்கு அன்று அருளால்
    தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் * தான் அது தந்து
    எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே (69)
  • RNA 70
    3962 என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து * எண் இல் பல் குணத்த
    உன்னையும் பார்க்கில் * அருள் செய்வதே நலம் ** அன்றி என்பால்
    பின்னையும் பார்க்கில் நலம் உளதே? உன் பெருங் கருணை *
    தன்னை என் பார்ப்பர் * இராமாநுச உன்னைச் சார்ந்தவரே? (70)
  • RNA 71
    3963 சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் * அன்பு தான் மிகவும்
    கூர்ந்தது * அத் தாமரைத் தாள்களுக்கு ** உன் தன் குணங்களுக்கே
    தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை * அதனால்
    பேர்ந்தது * வண்மை இராமாநுச எம் பெருந்தகையே (71)
  • RNA 72
    3964 கைத்தனன் தீய சமயக் கலகரை * காசினிக்கே
    உய்த்தனன் * தூய மறைநெறி தன்னை ** என்று உன்னி உள்ளம்
    நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
    வைத்தனன் என்னை * இராமாநுசன் மிக்க வண்மை செய்தே (72)
  • RNA 73
    3965 வண்மையினாலும் தன் மா தகவாலும் * மதி புரையும்
    தண்மையினாலும் இத் தாரணியோர்கட்கு ** தான் சரணாய்
    உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை * உன்னும்
    திண்மை அல்லால் எனக்கு இல்லை * மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே (73)
  • RNA 74
    3966 தேரார் மறையின் திறம் என்று * மாயவன் தீயவரைக்
    கூர் ஆழி கொண்டு குறைப்பது ** கொண்டல் அனைய வண்மை
    ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் * அவ் எழில் மறையில்
    சேராதவரைச் சிதைப்பது * அப்போது ஒரு சிந்தைசெய்தே (74)
  • RNA 75
    3967 செய்த்தலைச் சங்கம் செழு முத்தம் ஈனும் * திரு அரங்கர்
    கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி ** நம் கண்முகப்பே
    மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் * நின் புகழே
    மொய்த்து அலைக்கும் வந்து * இராமாநுச என்னை முற்றும் நின்றே (75)
  • RNA 76
    3968 ## நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் * நிறை வேங்கடப் பொன்
    குன்றமும் * வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும் **
    உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணைமலர்த் தாள் *
    என் தனக்கும் அது * இராமாநுச இவை ஈய்ந்து அருளே (76)
  • RNA 77
    3969 ஈய்ந்தனன் ஈயாத இன்னருள் * எண் இல் மறைக் குறும்பைப்
    பாய்ந்தனன் * அம் மறைப் பல் பொருளால் ** இப்படி அனைத்தும்
    ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை * வேர் பறியக்
    காய்ந்தனன் * வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே? (77)
  • RNA 78
    3970 கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி * கருது அரிய
    வருத்தத்தினால் மிக வஞ்சித்து ** நீ இந்த மண்ணகத்தே
    திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் * என் நெஞ்சில்
    பொருத்தப்படாது * எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே (78)
  • RNA 79
    3971 பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து * இந்தப் பூதலத்தே
    மெய்யைப் புரக்கும் இராமாநுசன் நிற்க ** வேறு நம்மை
    உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே *
    ஐயப்படா நிற்பர் * வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே (79)
  • RNA 80
    3972 நல்லார் பரவும் இராமாநுசன் * திருநாமம் நம்ப
    வல்லார் திறத்தை * மறவாதவர்கள் எவர் ** அவர்க்கே
    எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எத் தொழும்பும் *
    சொல்லால் மனத்தால் * கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே (80)
  • RNA 81
    3973 சோர்வு இன்றி உன் தன் துணை அடிக்கீழ் * தொண்டுபட்டவர்பால்
    சார்வு இன்றி நின்ற எனக்கு ** அரங்கன் செய்ய தாள் இணைகள்
    பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச * இனி உன்
    சீர் ஒன்றிய கருணைக்கு * இல்லை மாறு தெரிவுறிலே (81)
  • RNA 82
    3974 தெரிவு உற்ற ஞானம் செறியப் பெறாது * வெம் தீவினையால்
    உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ** ஒரு பொழுதில்
    பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ *
    தெரிவு உற்ற கீர்த்தி * இராமாநுசன் என்னும் சீர் முகிலே? 82
  • RNA 83
    3975 சீர் கொண்டு பேர் அறம் செய்து * நல் வீடு செறிதும் என்னும் *
    பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் ** உன் பத யுகம் ஆம்
    ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் * உன்னுடைய
    கார் கொண்ட வண்மை * இராமாநுச இது கண்டு கொள்ளே (83)
  • RNA 84
    3976 கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை * காண்டலுமே
    தொண்டுகொண்டேன் * அவன் தொண்டர் பொன் தாளில் ** என் தொல்லை வெம்நோய்
    விண்டுகொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை * வாய்மடுத்து இன்று
    உண்டுகொண்டேன் * இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே (84)
  • RNA 85
    3977 ஓதிய வேதத்தின் உட்பொருளாய் * அதன் உச்சி மிக்க
    சோதியை * நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் **
    பேதைமை தீர்த்த இராமாநுசனைத் தொழும் பெரியோர் *
    பாதம் அல்லால் என் தன் ஆர் உயிர்க்கு * யாதொன்றும் பற்று இல்லையே (85)
  • RNA 86
    3978 பற்றா மனிசரைப் பற்றி * அப் பற்று விடாதவரே
    உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ** ஒள்ளிய நூல்
    கற்றார் பரவும் இராமாநுசனைக் * கருதும் உள்ளம்
    பெற்றார் எவர் * அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே (86)
  • RNA 87
    3979 பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் * தன் குணங்கட்கு
    உரியசொல் என்றும் * உடையவன் என்று என்று ** உணர்வில் மிக்கோர்
    தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் * மறை தேர்ந்து உலகில்
    புரியும் நல் ஞானம் * பொருந்தாதவரை பொரும் கலியே (87)
  • RNA 88
    3980 கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் * கலைப் பெருமான்
    ஒலி மிக்க பாடலை உண்டு * தன் உள்ளம் தடித்து ** அதனால்
    வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் *
    புலி மிக்கது என்று * இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே (88)
  • RNA 89
    3981 போற்று அரும் சீலத்து இராமாநுச * நின் புகழ் தெரிந்து
    சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் ** உன் சீர் தனக்கு ஓர்
    ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் * என் மனம் ஏத்தி அன்றி
    ஆற்றகில்லாது * இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே (89)
  • RNA 90
    3982 நினையார் பிறவியை நீக்கும் பிரானை * இந் நீள் நிலத்தே
    எனை ஆள வந்த இராமாநுசனை ** இருங் கவிகள்
    புனையார் புனையும் பெரியவர் தாள்களில் * பூந்தொடையல்
    வனையார் * பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே (90)
  • RNA 91
    3983 மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் * அவப் பொருள் ஆம்
    இருள் சுரந்து எய்த்த * உலகு இருள் நீங்க ** தன் ஈண்டிய சீர்
    அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் * அரங்கன் என்னும்
    பொருள் சுரந்தான் * எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே (91)
  • RNA 92
    3984 புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் * அடி போற்றி செய்யும்
    நுண் அரும் கேள்வி * நுவன்றும் இலேன் ** செம்மை நூல் புலவர்க்கு
    எண் அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து * என்
    கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் * நின்ற இக் காரணம் கட்டுரையே (92)
  • RNA 93
    3985 கட்டப் பொருளை மறைப் பொருள் என்று * கயவர் சொல்லும்
    பெட்டைக் கெடுக்கும் பிரான் அல்லனே ** என் பெரு வினையைக்
    கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி *
    வெட்டிக் களைந்த * இராமாநுசன் என்னும் மெய்த்தவனே? (93)
  • RNA 94
    3986 தவம் தரும் செல்வம் தகவும் தரும் * சலியாப் பிறவிப்
    பவம் தரும் * தீவினை பாற்றித் தரும் ** பரந் தாமம் என்னும்
    திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர்கட்கு
    உவந்து அருந்தேன் * அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே (94)
  • RNA 95
    3987 உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து * அவர்க்கு உயவே
    பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி ** பல் உயிர்க்கும்
    விண்ணின்தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் *
    மண்ணின் தலத்து உதித்து * உய்மறை நாலும் வளர்த்தனனே (95)
  • RNA 96
    3988 வளரும் பிணிகொண்ட வல்வினையால் * மிக்க நல்வினையில்
    கிளரும் துணிவு கிடைத்தறியாது ** முடைத்தலை ஊன்
    தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு *
    உளர் எம் இறைவர் * இராமாநுசன் தன்னை உற்றவரே (96)
  • RNA 97
    3989 தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் * மன்னு தாமரைத் தாள்
    தன்னை உற்று ஆட்செய்ய * என்னை உற்றான் இன்று ** தன் தகவால்
    தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து *
    தன்னை உற்றாரை * இராமாநுசன் குணம் சாற்றிடுமே (97)
  • RNA 98
    3990 ## இடுமே இனிய சுவர்க்கத்தில்? * இன்னும் நரகில் இட்டுச்
    சுடுமே? அவற்றைத் * தொடர் தரு தொல்லை ** சுழல் பிறப்பில்
    நடுமே? இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே *
    விடுமே? சரணம் என்றால் * மனமே நையல் மேவுதற்கே (98)
  • RNA 99
    3991 தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் * தாழ்சடையோன்
    சொல் கற்ற சோம்பரும் * சூனியவாதரும் ** நான்மறையும்
    நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் * நீள் நிலத்தே
    பொன் கற்பகம் * எம் இராமாநுச முனி போந்த பின்னே (99)
  • RNA 100
    3992 போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு * உனது அடிப்போதில்
    ஒண் சீர் ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி ** நின்பால் அதுவே
    ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் *
    மாந்தகில்லாது * இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே (100)
  • RNA 101
    3993 மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு * மதி மயங்கித்
    துயக்கும் பிறவியில் * தோன்றிய என்னை ** துயர் அகற்றி
    உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி *
    நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் * நல்லவர் என்றும் நைந்தே (101)
  • RNA 102
    3994 நையும் மனம் உன் குணங்களை உன்னி * என் நா இருந்து எம்
    ஐயன் இராமாநுசன் * என்று அழைக்கும் ** அருவினையேன்
    கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ் *
    வையம் இதனில் * உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே? (102)
  • RNA 103
    3995 வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்று ஆய் * அன்று வாள் அவுணன்
    கிளர்ந்த * பொன் ஆகம் கிழித்தவன் ** கீர்த்திப் பயிர் எழுந்து
    விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என் தன் மெய்வினை நோய் *
    களைந்து நல் ஞானம் அளித்தனன் * கையில் கனி என்னவே (103)
  • RNA 104
    3996 கையில் கனி என்னக் * கண்ணனைக் காட்டித் தரிலும் * உன் தன்
    மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் ** நிரயத்
    தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ் அருள் நீ *
    செய்யில் தரிப்பன் * இராமாநுச என் செழுங் கொண்டலே (104)
  • RNA 105
    3997 ## செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் * திருவடிக்கீழ்
    விழுந்திருப்பார் நெஞ்சில் * மேவு நல் ஞானி ** நல் வேதியர்கள்
    தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர் *
    எழுந்து இரைத்து ஆடும் இடம் * அடியேனுக்கு இருப்பிடமே (105)
  • RNA 106
    3998 ## இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் * மாலிருஞ்சோலை என்னும்
    பொருப்பிடம் * மாயனுக்கு என்பர் நல்லோர் ** அவை தம்மொடும் வந்து
    இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து * இன்று அவன் வந்து
    இருப்பிடம் * என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே (106)
  • RNA 107
    3999 ## இன்பு உற்ற சீலத்து இராமாநுச * என்றும் எவ்விடத்தும்
    என்பு உற்ற நோய் * உடல்தோறும் பிறந்து இறந்து ** எண் அரிய
    துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு * உன் தொண்டர்கட்கே
    அன்பு உற்று இருக்கும்படி * என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே (107)
  • RNA 108
    4000 ## அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் * அணி ஆகம் மன்னும்
    பங்கய மா மலர்ப் * பாவையைப் போற்றுதும் ** பத்தி எல்லாம்
    தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே! நம் தலைமிசையே *
    பொங்கிய கீர்த்தி * இராமாநுசன் அடிப் பூ மன்னவே (108)