Your browser does not support the audio element.
audio
2282 திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன் * திகழும்
அருக்கனணிநிறமும் கண்டேன் * - செருக்கிளரும்
பொன்னாழிகண்டேன் புரிசங்கம்கைக்கண்டேன் *
என்னாழிவண்ணன்பாலின்று. (2)
2283 இன்றேகழல்கண்டேன் ஏழ்பிறப்பும்யானறுத்தேன் *
பொன்தோய்வரைமார்வில்பூந்துழாய் * - அன்று
திருக்கண்டுகொண்ட திருமாலே! * உன்னை
மருக்கண்டுகொண்டென்மனம்.
2284 மனத்துள்ளான் மாகடல்நீருள்ளான் * மலராள்
தனத்துள்ளான் தண்துழாய்மார்பன் * - சினத்துச்
செருநருகச்செற்றுகந்த தேங்கோதவண்ணன் *
வருநரகந்தீர்க்கும்மருந்து.
2285 மருந்தும்பொருளும் அமுதமும்தானே *
திருந்தியசெங்கண்மாலாங்கே * - பொருந்தியும்
நின்றுலகமுண்டுமிழ்ந்தும் நீரேற்றும்மூவடியால் *
அன்றுலகந்தாயோனடி.
2286 அடிவண்ணம்தாமரை அன்றுலகந்தாயோன் *
படிவண்ணம் பார்க்கடல்நீர்வண்ணம் * - முடிவண்ணம்
ஓராழிவெய்யோன் ஒளியுமஃதன்றே *
ஆராழிகொண்டாற்கழகு.
2287 அழகன்றேயாழியாற்கு ஆழிநீர்வண்ணம் *
அழகன்றேயண்டம்கடத்தல் * - அழகன்றே
அங்கைநீரேற்றாற் கலர்மேலோன்கால்கழுவ *
கங்கைநீர்கான்றகழல்.
2288 கழல்தொழுதும்வாநெஞ்சே! கார்கடல்நீர்வேலை *
பொழிலளந்தபுள்ளூர்திச்செல்வன் * - எழிலளந்தங்
கெண்ணற்கரியானை எப்பொருட்கும்சேயானை *
நண்ணற்கரியானைநாம்.
2289 நாமம்பலசொல்லி நாராயணாவென்று *
நாமங்கையால்தொழுதும்நன்னெஞ்சே! - வா * மருவி
மண்ணுலகமுண்டுமிழ்ந்த வண்டறையும்தண்துழாய் *
கண்ணனையேகாண்கநங்கண்.
2290 கண்ணும்கமலம் கமலமேகைத்தலமும் *
மண்ணளந்தபாதமும் மற்றவையே * எண்ணில்
கருமாமுகில்வண்ணன் கார்க்கடல்நீர்வண்ணன் *
திருமாமணிவண்ணன்தேசு.
2291 தேசும்திறலும் திருவுமுருவமும் *
மாசில்குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
வலம்புரிந்தவான்சங்கம் கொண்டான்பேரோத *
நலம்புரிந்துசென்றடையும்நன்கு.
2292 நன்கோதும் நால்வேதத்துள்ளான் * நறவிரியும்
பொங்கோதருவிப்புனல்வண்ணன் * - சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின்மேலான் * பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவினான்.
2293 அறிவென்னும்தாள்கொளுவி ஐம்புலனும்தம்மில் *
செறிவென்னும்திண்கதவஞ்செம்மி * - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார்காண்பரே * நாள்தோறும்
பைங்கோதவண்ணன்படி.
2294 படிவட்டத்தாமரை பண்டுலகம்நீரேற்று *
அடிவட்டத்தாலளப்ப நீண்ட - முடிவட்டம் *
ஆகாயமூடறுத்து அண்டம்போய்நீண்டதே *
மாகாயமாய்நின்றமாற்கு.
2295 மாற்பால்மனஞ்சுழிப்ப மங்கையர்தோள்கைவிட்டு *
நூற்பால்மனம்வைக்கநொய்விதாம் * -நாற்பால
வேதத்தான்வேங்கடத்தான் விண்ணோர்முடிதோயும் *
பாதத்தான்பாதம்பணிந்து.
2296 பணிந்துயர்ந்தபௌவப் படுதிரைகள்மோத *
பணிந்தபணமணிகளாலே - அணிந்து * அங்கு
அனந்தனணைக் கிடக்குமம்மான் * அடியேன்
மனந்தனணைக்கிடக்கும்வந்து.
2297 வந்துதைத்தவெண்திரைகள் செம்பவளவெண்முத்தம் *
அந்திவிளக்குமணிவிளக்காம் * - எந்தை
ஒருவல்லித்தாமரையாள் ஒன்றியசீர்மார்வன் *
திருவல்லிக்கேணியான்சென்று. (2)
2298 சென்றநாள்செல்லாத செங்கண்மாலெங்கள்மால் *
என்றநாளெந்நாளும்நாளாகும் * - என்றும்
இறவாதவெந்தை இணையடிக்கேயாளாய் *
மறவாதுவாழ்த்துகவென்வாய்.
2299 வாய்மொழிந்துவாமனனாய்மாவலிபால் * மூவடிமண்
நீயளந்துகொண்டநெடுமாலே? * - தாவியநின்
எஞ்சாவிணையடிக்கே ஏழ்பிறப்புமாளாகி *
அஞ்சாதிருக்கவருள்.
2300 அருளாதொழியுமே? ஆலிலைமேல் * அன்று
தெருளாதபிள்ளையாய்ச் சேர்ந்தான் * இருளாத
சிந்தையராய்ச்சேவடிக்கே செம்மலர்தூய்க்கைதொழுது *
முந்தையராய் நிற்பார்க்குமுன்.
2301 முன்னுலகம் உண்டுமிழ்ந்தாய்க்கு * அவ்வுலகமீரடியால்
பின்னளந்துகோடல்பெரிதொன்றே? - என்னே!
திருமாலே! செங்கணெடியானே! * எங்கள்
பெருமானே! நீயிதனைப்பேசு.
2302 பேசுவார் எவ்வளவுபேசுவர் * அவ்வளவே
வாசமலர்த்துழாய்மாலையான் * - தேசுடைய
சக்கரத்தான் சங்கினான்சார்ங்கத்தான் * பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு.
2303 வடிவார்முடிகோட்டி வானவர்கள் * நாளும்
கடியார்மலர் தூவிக்காணும் - படியானை *
செம்மையாலுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே! *
மெய்ம்மையேகாணவிரும்பு.
2304 விரும்பிவிண்மண்ணளந்த அஞ்சிறையவண்டார் *
சுரும்புதொளையில்சென்றூத * அரும்பும்
புனந்துழாய்மாலையான் பொன்னங்கழற்கே *
மனம்துழாய்மாலாய்வரும்.
2305 வருங்காலிருநிலனும் மால்விசும்பும்காற்றும் *
நெருங்குதீநீருருவுமானான் * - பொருந்தும்
சுடராழி யொன்றுடையான்சூழ்கழலே * நாளும்
தொடராழிநெஞ்சே! தொழுது.
2306 தொழுதால்பழுதுண்டே? தூநீருலகம் *
முழுதுண்டுமொய்குழலாளாய்ச்சி * - இழுதுண்ட
வாயானை மால்விடையேழ்செற்றானை * வானவர்க்கும்
சேயானை நெஞ்சே! சிறந்து.
2307 சிறந்தவென்சிந்தையும் செங்கணரவும் *
நிறைந்தசீர்நீள்கச்சியுள்ளும் * - உறைந்ததும்
வேங்கடமும்வெஃகாவும் வேளுக்கைப்பாடியுமே *
தாங்கடவார்தண்துழாயார்.
2308 ஆரேதுயருழந்தார்? துன்புற்றாராண்டையார் *
காரேமலிந்தகருங்கடலை * நேரே
கடைந்தானைக் காரணனை * நீரணைமேற்பள்ளி
அடைந்தானை நாளுமடைந்து.
2309 அடைந்ததரவணைமேல், ஐவர்க்காய் * அன்று
மிடைந்தது பாரதவெம்போர் * - உடைந்ததுவும்
ஆய்ச்சிபால்மத்துக்கே அம்மனே * வாளெயிற்றுப்
பேய்ச்சிபாலுண்டபிரான்.
2310 பேய்ச்சிபாலுண்ட பெருமானைப்பேர்ந்தெடுத்து *
ஆய்ச்சிமுலைகொடுத்தாளஞ்சாதே * வாய்த்த
இருளார்திருமேனி இன்பவளச்செவ்வாய் *
தெருளாமொழியானைச்சேர்ந்து.
2311 சேர்ந்ததிருமால் கடல்குடந்தைவேங்கடம்
நேர்ந்தவென்சிந்தை நிறை விசும்பும் * - வாய்ந்த
மறைபாடகமனந்தன் வண்டுழாய்க்கண்ணி *
இறைபாடியாயவிவை.
2312 இவையவன்கோயில் இரணியனதாகம் *
அவைசெய்தரியுருவமானான் * - செவிதெரியா
நாகத்தான் நால்வேதத்துள்ளான் * நறவேற்றான்
பாகத்தான்பாற்கடலுளான்.
2313 பாற்கடலும்வேங்கடமும் பாம்பும்பனிவிசும்பும் *
நூற்கடலும்நுண்ணூலதாமரைமேல் * - பாற்பட்
டிருந்தார்மனமும் இடமாகக்கொண்டான் *
குருந்தொசித்தகோபாலகன்.
2314 பாலகனாய் ஆலிலைமேல்பைய * உலகெல்லாம்
மேலொருநாளுண்டவனே! மெய்ம்மையே * - மாலவனே!
மந்தரத்தால் மாநீர்க்கடல்கடைந்து * வானமுதம்
அந்தரத்தார்க்கீந்தாய்நீயன்று.
2315 அன்றிவ்வுலகம் அளந்தவசைவேகொல்? *
நின்றிருந்துவேளுக்கைநீள்நகர்வாய் * - அன்று
கிடந்தானைக்கேடில்சீரானை * முன்கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே! காண்.
2316 காண்காணென விரும்பும்கண்கள் * கதிரிலகு
பூண்தாரகலத்தான் பொன்மேனி * - பாண்கண்
தொழில்பாடி வண்டறையும்தொங்கலான் * செம்பொன்
கழல்பாடியாம்தொழுதும்கை.
2317 கையகனலாழி கார்க்கடல்வாய்வெண்சங்கம் *
வெய்யகதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள் * செய்ய
படைபரவைபாழி பனிநீருலகம் *
அடியளந்த மாயரவற்கு.
2318 அவற்கடிமைப்பட்டேன் அகத்தான்புறத்தான் *
உவக்கும்கருங்கடல்நீருள்ளான் * துவர்க்கும்
பவளவாய்ப்பூமகளும் பன்மணிப்பூணாரம் *
திகழுந்திருமார்பன்தான்.
2319 தானேதனக்குவமன் தன்னுருவேயெவ்வுருவும் *
தானேதவவுருவும்தாரகையும் * - தானே
எரிசுடரும்மால்வரையும் எண்திசையும் * அண்டத்
திருசுடருமாயவிறை.
2320 இறையாய்நிலனாகி எண்திசையும்தானாய் *
மறையாய்மறைப்பொருளாய்வானாய் * - பிறைவாய்ந்த
வெள்ளத்தருவி விளங்கொலிநீர்வேங்கடத்தான் *
உள்ளத்தினுள்ளேயுளன்.
2321 உளன்கண்டாய்நல்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் * உள்ளுவாருள்ளத்து உளன்கண்டாய் *
விண்ணொங்கக்கோடுயரும் வீங்கருவிவேங்கடத்தான் *
மண்ணொடுங்கத்தானளந்தமன்.
2322 மன்னுமணிமுடிநீண்டு அண்டம்போயெண்திசையும் *
துன்னுபொழிலனைத்தும்சூழ்கழலே * - மின்னை
உடையாகக்கொண்டு அன்றுலகளந்தான் * குன்றம்
குடையாகஆகாத்தகோ.
2323 கோவலனாய் ஆநிரைகள்மேய்த்துக்குழலூதி *
மாவலனாய்க்கீண்ட மணிவண்ணன் * மேவி
அரியுருவமாகி இரணியனதாகம் *
தெரியுகிராற்கீண்டான்சினம்.
2324 சினமாமத களிற்றின் திண்மருப்பைச்சாய்த்து *
புனமேயபூமியதனை * - தனமாகப்
பேரகலத்துள்ளொடுக்கும் பேராரமார்வனார் *
ஓரகலத்துள்ளதுலகு.
2325 உலகமும் ஊழியுமாழியும் * ஒண்கேழ்
அலர்கதிருஞ்செந்தீயுமாவான் * பலகதிர்கள்
பாரித்த பைம்பொன்முடியானடியிணைக்கே *
பூரித்துஎன்நெஞ்சே! புரி.
2326 புரிந்துமதவேழம் மாப்பிடியோடூடி *
திரிந்துசினத்தால்பொருது * விரிந்தசீர்
வெண்கோட்டு முத்துதிர்க்கும்வேங்கடமே * மேலொருநாள்
மண்கோட்டுக்கொண்டான்மலை.
2327 மலைமுகடுமேல்வைத்து வாசுகியைச்சுற்றி *
தலைமுகடுதானொருகைபற்றி * அலைமுகட்டு
அண்டம்போய்நீர்தெறிப்ப அன்றுகடல்கடைந்தான் *
பிண்டமாய்நின்றபிரான்.
2328 நின்றபெருமானே! நீரேற்று * உலகெல்லாம்
சென்றபெருமானே? செங்கண்ணா! * - அன்று
துரகவாய்கீண்ட துழாய்முடியாய் * நாங்கள்
நரகவாய்கீண்டாயும் நீ.
2329 நீயன்றேநீரேற்று உலகமடியளந்தாய்? *
நீயன்றே நின்றுநிரைமேய்த்தாய் - நீயன்றே
மாவாயுரம்பிளந்து மாமருதினூடுபோய் *
தேவாசுரம்பொருதாய்செற்று?
2330 செற்றதுவும் சேராவிரணியனை * சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் * - முற்றல்
முரியேற்றின் முன்னின்றுமொய்ம்பொழித்தாய்! * மூரிச்
சுரியேறுசங்கினாய்! சூழ்ந்து.
2331 சூழ்ந்ததுழாயலங்கல் சோதிமணிமுடிமால் *
தாழ்ந்தவருவித்தடவரைவாய் * - ஆழ்ந்த
மணிநீர்ச்சுனைவளர்ந்த மாமுதலைகொன்றான் *
அணிநீலவண்ணத்தவன்.
2332 அவனே அருவரையால் ஆநிரைகள்காத்தான் *
அவனே அணிமருதஞ்சாய்த்தான் * - அவனே
கலங்காப்பெருநகரம் காட்டுவான்கண்டீர் *
இலங்காபுரமெரித்தானெய்து.
2333 எய்தான்மராமர மேழும்இராமனாய் *
எய்தானம்மான் மறியைஏந்திழைக்காய் * - எய்ததுவும்
தென்னிலங்கைக்கோன்வீழ, சென்றுகுறளுருவாய் *
முன்னிலங்கைக்கொண்டான்முயன்று.
2334 முயன்றுதொழுநெஞ்சே! மூரிநீர்வேலை *
இயன்றமரத்தாலிலையின்மேலால் * - பயின்றங்கோர்
மண்ணலங்கொள்வெள்ளத்து மாயக்குழவியாய் *
தண்ணலங்கல்மாலையான்தாள்.
2335 தாளால்சகடம் உதைத்துப்பகடுந்தி *
கீளாமருதிடைபோய்க்கேழலாய் * - மீளாது
மண்ணகலம்கீண்டு அங்கோர்மாதுகந்தமார்வற்கு *
பெண்ணகலங்காதல்பெரிது.
2336 பெரியவரைமார்வில் பேராரம்பூண்டு *
கரியமுகிலிடைமின்போல * - தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும்பங்கயமே * மற்றவன்றன்
நீணெடுங்கண்காட்டும் நிறம்.
2337 நிறம்வெளிதுசெய்து பசிதுகரிதென்று *
இறையுருவம்யாமறியோமெண்ணில் * - நிறைவுடைய
நாமங்கைதானும் நலம்புகழவல்லளே? *
பூமங்கைகேள்வன்பொலிவு.
2338 பொலிந்திருண்டகார்வானில் மின்னேபோல்தோன்றி *
மலிந்துதிருவிருந்தமார்வன் * - பொலிந்து
கருடன்மேற்கொண்ட கரியான்கழலே *
தெருடன்மேற்கண்டாய்தெளி.
2339 தெளிந்தசிலாதலத்தின் மேலிருந்தமந்தி *
அளிந்தகடுவனையேநோக்கி * - விளங்கிய
வெண்மதியம் தாவென்னும்வேங்கடமே * மேலொருநாள்
மண்மதியில்கொண்டுகந்தான்வாழ்வு.
2340 வாழும்வகையறிந்தேன் மைபோல்நெடுவரைவாய் *
தாழுமருவிபோல்தார்கிடப்ப * - சூழும்
திருமாமணிவண்ணன் செங்கண்மால் * எங்கள்
பெருமானடிசேரப்பெற்று.
2341 பெற்றம்பிணைமருதம் பேய்முலைமாச்சகடம் *
முற்றக்காத்தூடுபோயுண்டுதைத்து * - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக்கொண்டெறிந்தான் * வெற்றிப்
பணிலம்வாய்வைத்துகந்தான்பண்டு.
2342 பண்டெல்லாம்வேங்கடம் பாற்கடல்வைகுந்தம் *
கொண்டங்குறைவார்க்குக்கோயில்போல் * - வண்டு
வளங்கிளரும்நீள்சோலை வண்பூங்கடிகை *
இளங்குமரன்தன்விண்ணகர். (2)
2343 விண்ணகரம்வெஃகா விரிதிரைநீர்வேங்கடம் *
மண்ணகரம்மாமாடவேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார்திருவரங்கம்தென்கோட்டி *
தன்குடங்கைநீரேற்றான்தாழ்வு.
2344 தாழ்சடையும்நீள்முடியும் ஒள்மழுவும்சக்கரமும் *
சூழரவும்பொன்னாணும் தோன்றுமால் * சூழும்
திரண்டருவிபாயும் திருமலைமேலெந்தைக்கு *
இரண்டுருவுமொன்றாயிசைந்து.
2345 இசைந்தஅரவமும் வெற்பும்கடலும் *
பசைந்தங்கமுது படுப்ப * - அசைந்து
கடைந்தவருத்தமோ? கச்சிவெஃகாவில் *
கிடந்திருந்துநின்றதுவுமங்கு.
2346 அங்கற்கிடரின்றி அந்திப்பொழுதத்து *
மங்கவிரணியனதாகத்தை * பொங்கி
அரியுருவமாய்ப்பிளந்த அம்மானவனே *
கரியுருவங்கொம்பொசித்தான்காய்ந்து.
2347 காய்ந்திருளைமாற்றிக் கதிரிலகுமாமணிகள் *
ஏய்ந்தபணக்கதிர்மேல்வெவ்வுயிர்ப்ப * - வாய்ந்த
மதுகைடவரும் வயிறுருகிமாண்டார் *
அதுகேடவர்க்கிறுதியாங்கு.
2348 ஆங்குமலரும் குவியுமாலுந்திவாய் *
ஓங்கு கமலத்தினதொண்போது * - ஆங்கைத்
திகிரிசுடரென்றும் வெண்சங்கம் * வானில்
பகருமதியென்றும்பார்த்து.
2349 பார்த்தகடுவன் சுனைநீர்நிழல்கண்டு *
பேர்த்தோர் கடுவனெனப்பேர்ந்து * - கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும்வேங்கடமே * மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான்வெற்பு.
2350 வெற்பென்று வேங்கடம்பாடும் * வியன்துழாய்
கற்பென்றுசூடும் கருங்குழல்மேல் * மல்பொன்ற
நீண்டதோள்மால்கிடந்த நீள்கடல்நீராடுவான் *
பூண்டநாளெல்லாம்புகும்.
2351 புகுமதத்தால் வாய்பூசிக்கீழ்தாழ்ந்து * அருவி
உகுமதத்தால் கால்கழுவிக், கையால் * மிகுமதத்தேன்
விண்டமலர்கொண்டு விறல்வேங்கடவனையே *
கண்டுவணங்கும்களிறு.
2352 களிறுமுகில்குத்தக் கையெடுத்தோடி *
ஒளிறுமருப்பொசிகையாளி * - பிளிறி
விழ * கொன்றுநின்றதிரும் வேங்கடமே * மேல்நாள்
குழக்கன்றுகொண்டெறிந்தான் குன்று.
2353 குன்றொன்றினாய குறமகளிர்கோல்வளைக்கை *
சென்றுவிளையாடும்தீங்கழைபோய் * - வென்று
விளங்குமதிகோள்விடுக்கும் வேங்கடமே * மேலை
இளங்குமரர்கோமானிடம்.
2354 இடம்வலமேழ்பூண்ட இரவித்தேரோட்டி *
வடமுகவேங்கடத்துமன்னும் * - குடம்நயந்த
கூத்தனாய்நின்றான் குரைகழலேகூறுவதே *
நாத்தன்னாலுள்ளநலம்.
2355 நலமேவலிதுகொல்? நஞ்சூட்டுவன்பேய் *
நிலமேபுரண்டுபோய்வீழ * - சலமேதான்
வெங்கொங்கையுண்டானை மீட்டாய்ச்சியூட்டுவான் *
தன்கொங்கைவாய்வைத்தாள்சார்ந்து.
2356 சார்ந்தகடுதேய்ப்பத் தடாவியகோட்டுச்சிவாய் *
ஊர்ந்தியங்கும்வெண்மதியினொண்முயலை * - சேர்ந்து
சினவேங்கைபார்க்கும் திருமலையே * ஆயன்
புனவேங்கைநாறும்பொருப்பு.
2357 பொருப்பிடையேநின்றும் புனல்குளித்தும் * ஐந்து
நெருப்பிடையேநிற்கவும்நீர்வேண்டா * - விருப்புடைய
வெஃகாவேசேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க்கை தொழுதால் *
அஃகாவேதீவினைகளாய்ந்து.
2358 ஆய்ந்தவருமறையோன் நான்முகத்தோன்நன்குறங்கில் *
வாய்ந்தகுழவியாய்வாளரக்கன் * - ஏய்ந்த
முடிப்போது மூன்றேழென்றெண்ணினான் * ஆர்ந்த
அடிப்போதுநங்கட்குஅரண்.
2359 அரணாம்நமக்கென்றும் ஆழிவலவன் *
முரனாள்வலஞ் சுழிந்தமொய்ம்பன் * - சரணாமேல்
ஏதுகதி? ஏதுநிலை? ஏதுபிறப்பு என்னாதே *
ஓதுகதி மாயனையேயோர்த்து.
2360 ஓர்த்தமனத்தராய் ஐந்தடக்கியாராய்ந்து *
பேர்த்தால்பிறப்பேழும்பேர்க்கலாம் * - கார்த்த
விரையார்நறுந்துழாய் வீங்கோதமேனி *
நிரையாரமார்வனையேநின்று.
2361 நின்றெதிராய நிரைமணித்தேர்வாணன்தோள் *
ஒன்றியவீரைஞ்ஞூறுடன்துணிய * - வென்றிலங்கும்
ஆர்படுவான்நேமி யரவணையான் * சேவடிக்கே
நேர்படுவான்தான்முயலும்நெஞ்சு.
2362 நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைபெற்றுஎன்
நெஞ்சமே! பேசாய் நினைக்குங்கால் * நெஞ்சத்துப்
பேராதுநிற்கும் பெருமானை, என்கொலோ? *
ஓராதுநிற்பதுணர்வு.
2363 உணரிலுணர்வரியன் உள்ளம்புகுந்து *
புணரிலும்காண்பரியனுண்மை * - இணரணையக்
கொங்கணைந்துவண்டறையும் தண்துழாய்க்கோமானை *
எங்கணைந்துகாண்டும்இனி?
2364 இனியவன்மாயன் எனவுரைப்பரேலும் *
இனியவன்காண்பரியனேலும் * - இனியவன்
கள்ளத்தால்மண்கொண்டு விண்கடந்தபைங்கழலான் *
2365 உளனாய நான்மறையின்உட்பொருளை * உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வரேலும் * - உளனாய
வண்தாமரைநெடுங்கண் மாயவனை, யாவரே? *
கண்டாருகப்பர்கவி.
2366 கவியினார்கைபுனைந்து கண்ணார்கழல்போய் *
செவியினார்கேள்வியராய்ச்சேர்ந்தார் * - புவியினார்
போற்றியுரைக்கப் பொலியுமே? * - பின்னைக்காய்
ஏற்றுயிரையட்டானெழில்.
2367 எழில்கொண்டு மின்னுக்கொடியெடுத்து * வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித்தோன்றும் * - எழில்கொண்ட
நீர்மேகமன்ன நெடுமால்நிறம்போல *
கார்வானம்காட்டும்கலந்து.
2368 கலந்துமணியிமைக்கும் கண்ணா * நின்மேனி
மலர்ந்து மரதகமேகாட்டும் * - நலந்திகழும்
கொந்தின்வாய்வண்டறையும் தண்துழாய்க்கோமானை *
அந்திவான்காட்டுமது.
2369 அதுநன்றுஇதுதீதென்று ஐயப்படாதே *
மதுநின்றதண்துழாய்மார்வன் * - பொதுநின்ற
பொன்னங்கழலேதொழுமின் * முழுவினைகள்
முன்னம்கழலும்முடிந்து.
2370 முடிந்தபொழுதில் குறவாணர் * ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள்வித்த * - தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும்வேங்கடமே * மேலொருநாள்
தீங்குழல்வாய்வைத்தான்சிலம்பு.
2371 சிலம்பும்செறிகழலும்சென்றிசைப்ப * விண்ணாறு
அலம்பியசேவடிபோய் * அண்டம் - புலம்பியதோள்
எண்திசையும்சூழ இடம்போதாதென்கொலோ? *
வண்துழாய்மாலளந்தமண்.
2372 மண்ணுண்டும் பேய்ச்சிமுலையுண்டுமாற்றாதாய் *
வெண்ணெய்விழுங்கவெகுண்டு * ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால்கட்டத் தான்கட்டுண்டிருந்தான் *
வயிற்றினோடாற்றாமகன்.
2373 மகனொருவர்க்கல்லாத மாமேனிமாயன் *
மகனாமவன்மகன்றன்காதல் - மகனை *
சிறைசெய்தவாணன்தோள் செற்றான்கழலே *
நிறைசெய்துஎன்நெஞ்சே! நினை.
2374 நினைத்துலகிலார்தெளிவார்? நீண்டதிருமால் *
அனைத்துலகுமுள்ளொடுக்கியால்மேல் * - கனைத்துலவு
வெள்ளத்தோர்பிள்ளையாய் மெள்ளத்துயின்றானை *
உள்ளத்தேவைநெஞ்சே! உய்த்து.
2375 உய்த்துணர்வென்னும் ஒளிகொள்விளக்கேற்றி *
வைத்து அவனைநாடிவலைப்படுத்தேன் * - மெத்தெனவே
நின்றானிருந்தான் கிடந்தானென்னெஞ்சத்து *
பொன்றாமைமாயன்புகுந்து.
2376 புகுந்திலங்கும் அந்திப்பொழுதகத்து * அரியாய்
இகழ்ந்தவிரணியனதாகம் * சுகிர்ந்தெங்கும்
சிந்தப்பிளந்த திருமால்திருவடியே *
வந்தித்துஎன்நெஞ்சமே! வாழ்த்து.
2377 வாழ்த்தியவாயராய் வானோர்மணிமகுடம் *
தாழ்த்திவணங்கத்தழும்பாமே * - கேழ்த்த
அடித்தாமரைமலர்மேல்மங்கைமணாளன் *
அடித்தாமரையாமலர்.
2378 அலரெடுத்தவுந்தியான் ஆங்கெழிலாய *
மலரெடுத்தமாமேனிமாயன் * - அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான்வார்சடையான் * என்றிவர்கட்கு
எண்ணத்தானாமோ? இமை.
2379 இமஞ்சூழ்மலையும் இருவிசும்பும்காற்றும் *
அமஞ்சூழ்ந் தறவிளங்கித்தோன்றும் * - நமஞ்சூழ்
நரகத்து நம்மைநணுகாமல்காப்பான் *
துரகத்தைவாய்பிளந்தான்தொட்டு.
2380 தொட்டபடையெட்டும் தோலாதவென்றியான் *
அட்டபுயகரத்தானஞ்ஞான்று * - குட்டத்துக்
கோள்முதலைதுஞ்சக் குறித்தெறிந்தசக்கரத்தான் *
தாள்முதலேநங்கட்குச்சார்வு. (2)
2381 சார்வுநமக்கென்றும் சக்கரத்தான் * தண்துழாய்த்
தார்வாழ்வரைமார்பன்தான்முயங்கும் * - காரார்ந்த
வானமருமின்னிமைக்கும் வண்தாமரைநெடுங்கண் *
தேனமரும்பூமேல்திரு. (2)