1st Thiruvandāthi

முதல் திருவந்தாதி

1st Thiruvandāthi
This Prabandham, composed by Poigai āzhvār, the first of the three Mudal āzhvārs, consists of one hundred verses and belongs to the Andhadhi style. In the sanctum of Thirukkovilur Ayan's temple, pressed by the Lord, he had a divine vision of the Lord as Paramapadha Nathan, accompanied by Lakshmi. Beginning with the verse 'Vaiyam Thagaliya,' he envisioned + Read more
முதலாழ்வார்கள் மூவரில் முதல்வரான பொய்கையாழ்வாரால் பாடப்பட்ட இப்பிரபந்தம் நூறு பாசுரங்கள் கொண்ட அந்தாதி வகையைச் சேர்ந்தது. திருக்கோவிலூர் ஆயன் சன்னதி இடைகழியில் பகவானால் நெருக்குண்டு, தன் ஞான திருஷ்டியால் லக்ஷ்மி ஸமேதனான பகவான் பரமபத நாதனாக சேவை ஸாதிப்பதைக் கண்டு 'வையம் தகளியா' என்று + Read more
Group: 3rd 1000
Verses: 2082 to 2181
Glorification: Para / Omnipresence State (பரத்வம்)
āzhvār: Poyhai Āzhvār
  • தனியன் / Taniyan
  • MLT 1
    2082 ## வையம் தகளியா * வார் கடலே நெய் ஆக *
    வெய்ய கதிரோன் விளக்கு ஆக ** செய்ய
    சுடர் ஆழியான் அடிக்கே * சூட்டினேன் சொல் மாலை *
    இடர் ஆழி நீங்குகவே என்று 1
  • MLT 2
    2083 என்று கடல் கடைந்தது? * எவ் உலகம் நீர் ஏற்றது? *
    ஒன்றும் அதனை உணரேன் நான் ** அன்று அது
    அடைத்து உடைத்துக் * கண்படுத்த ஆழி * இது நீ
    படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் 2
  • MLT 3
    2084 பார் அளவும் ஓர் அடி வைத்து * ஓர் அடியும் பார் உடுத்த *
    நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே ** சூர் உருவின்
    பேய் அளவு கண்ட * பெருமான் அறிகிலேன் *
    நீ அளவு கண்ட நெறி 3
  • MLT 4
    2085 நெறி வாசல் தானேயாய் நின்றானை * ஐந்து
    பொறி வாசல் * போர்க் கதவம் சார்த்தி ** அறிவானாம்
    ஆல மர நீழல் * அறம் நால்வர்க்கு அன்று உரைத்த *
    ஆலம் அமர் கண்டத்து அரன் 4
  • MLT 5
    2086 அரன் நாரணன் நாமம் * ஆன்விடை புள் ஊர்தி *
    உரை நூல் மறை உறையும் கோயில் ** வரை நீர்
    கருமம் அழிப்பு அளிப்பு * கையது வேல் நேமி *
    உருவம் எரி கார் மேனி ஒன்று 5
  • MLT 6
    2087 ஒன்றும் மறந்தறியேன் * ஓத நீர் வண்ணனை நான் *
    இன்று மறப்பனோ ஏழைகாள்? ** அன்று
    கரு அரங்கத்துள் கிடந்து * கைதொழுதேன் கண்டேன் *
    திருவரங்கம் மேயான் திசை 6
  • MLT 7
    2088 திசையும் * திசை உறு தெய்வமும் * தெய்வத்து
    இசையும் * கருமங்கள் எல்லாம் ** அசைவு இல் சீர்க்
    கண்ணன் நெடு மால் * கடல் கடைந்த * கார் ஓத
    வண்ணன் படைத்த மயக்கு 7
  • MLT 8
    2089 மயங்க வலம்புரி வாய் வைத்து * வானத்து
    இயங்கும் * எறி கதிரோன் தன்னை ** முயங்கு அமருள்
    தேர் ஆழியால் மறைத்தது * என் நீ திருமாலே! *
    போர் ஆழிக் கையால் பொருது? 8
  • MLT 9
    2090 பொரு கோட்டு ஓர் ஏனமாய்ப் * புக்கு இடந்தாய்க்கு * அன்று உன்
    ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே ** விரி தோட்ட
    சேவடியை நீட்டித் * திசை நடுங்க விண் துளங்க *
    மா வடிவின் நீ அளந்த மண் 9
  • MLT 10
    2091 மண்ணும் மலையும் * மறி கடலும் மாருதமும் *
    விண்ணும் விழுங்கியது மெய் என்பர் ** எண்ணில்
    அலகு அளவு கண்ட * சீர் ஆழியாய்க்கு * அன்று இவ்
    உலகு அளவும் உண்டோ உன் வாய்? 10
  • MLT 11
    2092 வாய் அவனை அல்லது * வாழ்த்தாது * கை உலகம்
    தாயவனை அல்லது * தாம் தொழா ** பேய் முலை நஞ்சு
    ஊண் ஆக உண்டான் * உருவொடு பேர் அல்லால் *
    காணா கண் கேளா செவி 11
  • MLT 12
    2093 செவி வாய் கண் மூக்கு * உடல் என்று ஐம்புலனும் * செந்தீ
    புவி கால் * நீர் விண் பூதம் ஐந்தும் ** அவியாத
    ஞானமும் வேள்வியும் * நல்லறமும் என்பரே *
    ஏனமாய் நின்றாற்கு இயல்வு 12
  • MLT 13
    2094 இயல்வு ஆக * ஈன் துழாயான் அடிக்கே செல்ல *
    முயல்வார் இயல் அமரர் முன்னம் ** இயல்வு ஆக
    நீதியால் ஓதி * நியமங்களால் பரவ *
    ஆதியாய் நின்றார் அவர் 13
  • MLT 14
    2095 அவர் அவர் தாம் தாம் * அறிந்தவாறு ஏத்தி *
    இவர் இவர் எம் பெருமான் என்று ** சுவர் மிசைச்
    சார்த்தியும் * வைத்தும் தொழுவர் * உலகு அளந்த
    மூர்த்தி உருவே முதல் 14
  • MLT 15
    2096 முதல் ஆவார் மூவரே * அம் மூவருள்ளும்
    முதல் ஆவான் * மூரி நீர் வண்ணன் ** முதல் ஆய
    நல்லான் அருள் அல்லால் * நாம நீர் வையகத்து *
    பல்லார் அருளும் பழுது 15
  • MLT 16
    2097 பழுதே பல பகலும் * போயின என்று * அஞ்சி
    அழுதேன் * அரவு அணைமேல் கண்டு தொழுதேன் **
    கடல் ஓதம் கால் அலைப்பக் * கண்வளரும் * செங்கண்
    அடல் ஓத வண்ணர் அடி 16
  • MLT 17
    2098 அடியும் படி கடப்பத் * தோள் திசைமேல் செல்ல *
    முடியும் விசும்பு அளந்தது என்பர் ** வடி உகிரால்
    ஈர்ந்தான் * இரணியனது ஆகம் * இரும் சிறைப் புள்
    ஊர்ந்தான் உலகு அளந்த நான்று 17
  • MLT 18
    2099 நான்ற முலைத்தலை நஞ்சு உண்டு * உறி வெண்ணெய்
    தோன்ற உண்டான் * வென்றி சூழ் களிற்றை ஊன்றி **
    பொருது உடைவு கண்டானும் * புள்ளின்வாய் கீண்டானும் *
    மருது இடை போய் மண் அளந்த மால் 18
  • MLT 19
    2100 மாலும் கருங் கடலே * என் நோற்றாய் * வையகம் உண்டு
    ஆலின் இலைத் துயின்ற ஆழியான் ** கோலக்
    கரு மேனிச் * செங்கண் மால் கண்படையுள் * என்றும்
    திருமேனி நீ தீண்டப்பெற்று? 19
  • MLT 20
    2101 பெற்றார் தளை கழலப் * பேர்ந்து ஓர் குறள் உருவாய் *
    செற்றார் படி கடந்த செங்கண் மால் ** நல்
    தாமரை மலர்ச் சேவடியை * வானவர் கை கூப்பி *
    நிரை மலர் கொண்டு * ஏத்துவரால் நின்று 20
  • MLT 21
    2102 நின்று நிலம் அங்கை * நீர் ஏற்று மூவடியால் *
    சென்று திசை அளந்த செங்கண் மாற்கு ** என்றும்
    படை ஆழி புள் ஊர்தி * பாம்பு அணையான் பாதம் *
    அடை ஆழி நெஞ்சே அறி 21
  • MLT 22
    2103 அறியும் உலகு எல்லாம் * யானேயும் அல்லேன் *
    பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் ** வெறி கமழும்
    காம்பு ஏய் மென்தோளி * கடை வெண்ணெய் உண்டாயை *
    தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு 22
  • MLT 23
    2104 தழும்பு இருந்த சார்ங்க நாண் * தோய்ந்தவாம் அங்கை *
    தழும்பு இருந்த தாள் சகடம் சாடி ** தழும்பு இருந்த
    பூங்கோதையாள் வெருவ * பொன் பெயரோன் மார்பு இடந்த *
    வீங்கு ஓத வண்ணர் விரல் 23
  • MLT 24
    2105 விரலோடு வாய் தோய்ந்த * வெண்ணெய் கண்டு * ஆய்ச்சி
    உரலோடு உறப் பிணித்த நான்று ** குரல் ஓவாது
    ஏங்கி நினைந்து * அயலார் காண இருந்திலையே? *
    ஓங்கு ஓத வண்ணா! உரை 24
  • MLT 25
    2106 உரை மேல் கொண்டு * என் உள்ளம் ஓவாது * எப்போதும்
    வரைமேல் * மரதகமே போலத் ** திரைமேல்
    கிடந்தானை * கீண்டானை * கேழலாய்ப் பூமி
    இடந்தானை ஏத்தி எழும் 25
  • MLT 26
    2107 எழுவார் விடைகொள்வார் * ஈன் துழாயானை *
    வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் **
    வினைச் சுடரை நந்துவிக்கும் * வேங்கடமே * வானோர்
    மனச் சுடரைத் தூண்டும் மலை 26
  • MLT 27
    2108 மலையால் குடை கவித்து * மா வாய் பிளந்து *
    சிலையால் மராமரம் ஏழ் செற்று ** கொலை யானைப்
    போர்க் கோடு ஒசித்தனவும் * பூங் குருந்தம் சாய்த்தனவும் *
    கார்க் கோடு பற்றியான் கை 27
  • MLT 28
    2109 கைய வலம்புரியும் நேமியும் * கார் வண்ணத்து
    ஐய ! * மலர்மகள் நின் ஆகத்தாள் ** செய்ய
    மறையான் நின் உந்தியான் * மா மதிள் மூன்று எய்த *
    இறையான் நின் ஆகத்து இறை 28
  • MLT 29
    2110 இறையும் நிலனும் * இரு விசும்பும் காற்றும் *
    அறை புனலும் செந்தீயும் ஆவான் ** பிறை மருப்பின்
    பைங்கண் மால் யானை * படு துயரம் காத்து அளித்த *
    செங்கண் மால் கண்டாய் தெளி 29
  • MLT 30
    2111 தெளிது ஆக * உள்ளத்தைச் செந்நிறீஇ * ஞானத்து
    எளிது ஆக * நன்கு உணர்வார் சிந்தை ** எளிது ஆகத்
    தாய் நாடு கன்றே போல் * தண் துழாயான் அடிக்கே *
    போய் நாடிக்கொள்ளும் புரிந்து 30
  • MLT 31
    2112 புரி ஒரு கை பற்றி * ஓர் பொன் ஆழி ஏந்தி *
    அரி உருவும் ஆள் உருவும் ஆகி ** எரி உருவ
    வண்ணத்தான் மார்பு இடந்த * மால் அடியை அல்லால் * மற்று
    எண்ணத்தான் ஆமோ இமை? 31
  • MLT 32
    2113 இமையாத கண்ணால் * இருள் அகல நோக்கி *
    அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் **
    ஆகத்து அணைப்பார் * அணைவரே * ஆயிர வாய்
    நாகத்து அணையான் நகர் 32
  • MLT 33
    2114 நகரம் அருள்புரிந்து * நான்முகற்குப் பூமேல் *
    பகர மறை பயந்த பண்பன் ** பெயரினையே
    புந்தியால் சிந்தியாது * ஓதி உரு எண்ணும் *
    அந்தியால் ஆம் பயன் அங்கு என்? 33
  • MLT 34
    2115 என் ஒருவர் மெய் என்பர் * ஏழ் உலகு உண்டு * ஆல் இலையில்
    முன் ஒருவன் ஆய முகில் வண்ணா ** நின் உருகிப்
    பேய்த் தாய் முலை தந்தாள் * பேர்ந்திலளால் * பேர் அமர்க் கண்
    ஆய்த் தாய் முலை தந்த ஆறு? 34
  • MLT 35
    2116 ஆறிய அன்பு இல் * அடியார் தம் ஆர்வத்தால் *
    கூறிய குற்றமாக் கொள்ளல் நீ தேறி **
    நெடியோய் அடி * அடைதற்கு அன்றே * ஈர் ஐந்து
    முடியான் படைத்த முரண். 35
  • MLT 36
    2117 முரணை வலி * தொலைதற்கு ஆம் என்றே * முன்னம்
    தரணி தனது ஆகத்தானே ** இரணியனைப்
    புண் நிரந்த வள் உகிரால் * பொன் ஆழிக் கையால் * நீ
    மண் இரந்து கொண்ட வகை? 36
  • MLT 37
    2118 வகை அறு நுண் கேள்வி * வாய்வார்கள் * நாளும்
    புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி ** திசை திசையின்
    வேதியர்கள் * சென்று இறைஞ்சும் வேங்கடமே * வெண் சங்கம்
    ஊதிய வாய் மால் உகந்த ஊர் 37
  • MLT 38
    2119 ஊரும் வரி அரவம் * ஒண் குறவர் மால் யானை *
    பேர் எறிந்த பெரு மணியை ** கார் உடைய
    மின் என்று * புற்று அடையும் வேங்கடமே * மேல சுரர்
    எம் என்னும் மாலது இடம் 38
  • MLT 39
    2120 இடந்தது பூமி * எடுத்தது குன்றம் *
    கடந்தது கஞ்சனை முன் அஞ்ச ** கிடந்ததுவும்
    நீர் ஓத மா கடலே * நின்றதுவும் வேங்கடமே *
    பேர் ஓத வண்ணர் பெரிது 39
  • MLT 40
    2121 பெரு வில் பகழிக் * குறவர் கைச் செந்தீ *
    வெருவிப் புனம் துறந்த வேழம் ** இரு விசும்பில்
    மீன் வீழக் * கண்டு அஞ்சும் வேங்கடமே * மேல் அசுரர்
    கோன் வீழக் கண்டு உகந்தான் குன்று 40
  • MLT 41
    2122 குன்று அனைய குற்றம் செய்யினும் * குணம் கொள்ளும் *
    இன்று முதலாக என் நெஞ்சே ** என்றும்
    புறன் உரையே ஆயினும் * பொன் ஆழிக் கையான் *
    திறன் உரையே சிந்தித்திரு 41
  • MLT 42
    2123 திருமகளும் மண்மகளும் * ஆய்மகளும் சேர்ந்தால் *
    திருமகட்கே தீர்ந்தவாறு என்கொல் * திருமகள்மேல்
    பால் ஓதம் சிந்தப் * பட நாகணைக் கிடந்த *
    மால் ஓத வண்ணர் மனம்? 42
  • MLT 43
    2124 மன மாசு தீரும் * அரு வினையும் சாரா *
    தனம் ஆய தானே கைகூடும் ** புனம் மேய
    பூந் துழாயான் அடிக்கே * போதொடு நீர் ஏந்தி *
    தாம் தொழா நிற்பார் தமர் 43
  • MLT 44
    2125 தமர் உகந்தது எவ் உருவம் * அவ் உருவம் தானே *
    தமர் உகந்தது எப் பேர் மற்று அப் பேர் ** தமர் உகந்தது
    எவ் வண்ணம் சிந்தித்து * இமையாது இருப்பரே *
    அவ் வண்ணம் ஆழியான் ஆம் 44
  • MLT 45
    2126 ஆமே, அமரர்க்கு * அறிய? அது நிற்க *
    நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே ** பூ மேய
    மா தவத்தோன் தாள் பணிந்த * வாள் அரக்கன் நீள் முடியை *
    பாதம் அத்தால் எண்ணினான் பண்பு 45
  • MLT 46
    2127 பண் புரிந்த நான்மறையோன் * சென்னிப் பலி ஏற்ற *
    வெண் புரி நூல் மார்பன் வினை தீர ** புண் புரிந்த
    ஆகத்தான் * தாள் பணிவார் கண்டீர் * அமரர் தம்
    போகத்தால் பூமி ஆள்வார் 46
  • MLT 47
    2128 வாரி சுருக்கி * மதக் களிறு ஐந்தினையும் *
    சேரி திரியாமல் செந்நிறீஇ ** கூரிய
    மெய்ஞ்ஞானத்தால் * உணர்வார் காண்பரே * மேல் ஒருநாள்
    கைந் நாகம் காத்தான் கழல் 47
  • MLT 48
    2129 கழல் ஒன்று எடுத்து * ஒரு கை சுற்றி ஓர் கைமேல் *
    சுழலும் சுராசுரர்கள் அஞ்ச ** அழலும்
    செரு ஆழி ஏந்தினான் * சேவடிக்கே செல்ல *
    மருவு ஆழி நெஞ்சே மகிழ் 48
  • MLT 49
    2130 மகிழ் அலகு ஒன்றே போல் * மாறும் பல் யாக்கை *
    நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் ** முகிழ் விரிந்த
    சோதிபோல் தோன்றும் * சுடர் பொன் நெடு முடி * எம்
    ஆதி காண்பார்க்கும் அரிது 49
  • MLT 50
    2131 அரிய புலன் ஐந்து அடக்கி * ஆய் மலர் கொண்டு * ஆர்வம்
    புரியப் பரிசினால் புல்கில் ** பெரியனாய்
    மாற்றாது வீற்றிருந்த * மாவலிபால் * வண் கை நீர்
    ஏற்றானைக் காண்பது எளிது 50
  • MLT 51
    2132 எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு * என் உள்ளம்
    தெளியத் * தெளிந்தொழியும் செவ்வே ** களியில்
    பொருந்தாதவனைப் * பொரல் உற்று * அரியாய்
    இருந்தான் திருநாமம் எண் 51
  • MLT 52
    2133 எண்மர் பதினொருவர் * ஈர் அறுவர் ஓர் இருவர் *
    வண்ண மலர் ஏந்தி வைகலும் ** நண்ணி
    ஒரு மாலையால் * பரவி ஓவாது * எப்போதும்
    திருமாலைக் கை தொழுவர் சென்று 52
  • MLT 53
    2134 ## சென்றால் குடை ஆம் * இருந்தால் சிங்காசனம் ஆம் *
    நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் ** என்றும்
    புணை ஆம் மணி விளக்கு ஆம் * பூம் பட்டு ஆம் புல்கும்
    அணை ஆம் * திருமாற்கு அரவு 53
  • MLT 54
    2135 அரவம் அடல் வேழம் * ஆன் குருந்தம் புள் வாய் *
    குரவை குடமுலை மல் குன்றம் ** கரவு இன்றி
    விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து * கீண்டு கோத்து ஆடி * உண்டு
    அட்டு எடுத்த செங்கண் அவன் 54
  • MLT 55
    2136 அவன் தமர் * எவ் வினையர் ஆகிலும் * எம் கோன்
    அவன் தமரே * என்று ஒழிவது அல்லால் * நமன் தமரால்
    ஆராயப்பட்டு * அறியார் கண்டீர் * அரவு அணைமேல்
    பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் 55
  • MLT 56
    2137 பேரே வரப் * பிதற்றல் அல்லால் என் பெம்மானை *
    ஆரே அறிவார்? அது நிற்க ** நேரே
    கடிக் கமலத்து உள் இருந்தும் * காண்கிலான் * கண்ணன்
    அடிக்கமலம் தன்னை அயன் 56
  • MLT 57
    2138 அயல் நின்ற வல் வினையை * அஞ்சினேன் அஞ்சி *
    உய நின் திருவடியே சேர்வான் ** நயம் நின்ற
    நல் மாலை கொண்டு * நமோ நாரணா என்னும் *
    சொல் மாலை கற்றேன் தொழுது 57
  • MLT 58
    2139 தொழுது மலர் கொண்டு * தூபம் கை ஏந்தி *
    எழுதும் எழு வாழி நெஞ்சே * பழுது இன்றி
    மந்திரங்கள் கற்பனவும் * மால் அடியே கைதொழுவான் *
    அந்தரம் ஒன்று இல்லை அடை 58
  • MLT 59
    2140 அடைந்த அரு வினையோடு * அல்லல் நோய் பாவம் *
    மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் ** நுடங்கு இடையை
    முன் இலங்கை வைத்தான் * முரண் அழிய * முன் ஒரு நாள்
    தன் வில் அங்கை வைத்தான் சரண் 59
  • MLT 60
    2141 சரணா மறை பயந்த * தாமரையானோடு *
    மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் ** அரண் ஆய
    பேர் ஆழி கொண்ட * பிரான் அன்றி மற்று அறியாது *
    ஓர் ஆழி சூழ்ந்த உலகு 60
  • MLT 61
    2142 உலகும் உலகு இறந்த ஊழியும் * ஒண் கேழ்
    விலகு * கருங் கடலும் வெற்பும் ** உலகினில்
    செந்தீயும் * மாருதமும் வானும் * திருமால் தன்
    புந்தியில் ஆய புணர்ப்பு 61
  • MLT 62
    2143 புணர் மருதின் ஊடு போய்ப் * பூங் குருந்தம் சாய்த்து *
    மணம் மருவ மால் விடை ஏழ் செற்று ** கணம் வெருவ
    ஏழ் உலகும் தாயினவும் * எண் திசையும் போயினவும் *
    சூழ் அரவப் பொங்கு அணையான் தோள் 62
  • MLT 63
    2144 தோள் அவனை அல்லால் தொழா * என் செவி இரண்டும் *
    கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் ** நா நாளும்
    கோள் நாகணையான் * குரை கழலே கூறுவதே *
    நாணாமை நள்ளேன் நயம் 63
  • MLT 64
    2145 நயவேன் பிறர் பொருளை * நள்ளேன் கீழாரோடு *
    உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் ** வியவேன்
    திருமாலை அல்லது * தெய்வம் என்று ஏத்தேன் *
    வரும் ஆறு என் நம் மேல் வினை? 64
  • MLT 65
    2146 வினையால் அடர்ப்படார் * வெம் நரகில் சேரார் *
    தினையேனும் தீக்கதிக்கண் செல்லார் ** நினைதற்கு
    அரியானை * சேயானை * ஆயிரம் பேர்ச் செங்கண்
    கரியானைக் கை தொழுதக்கால் 65
  • MLT 66
    2147 காலை எழுந்து * உலகம் கற்பனவும் * கற்று உணர்ந்த
    மேலைத் தலை மறையோர் வேட்பனவும் ** வேலைக்கண்
    ஓர் ஆழியான் அடியே * ஓதுவதும் ஓர்ப்பனவும் *
    பேர் ஆழி கொண்டான் பெயர் 66
  • MLT 67
    2148 பெயரும் கருங் கடலே * நோக்கும் ஆறு * ஒண் பூ
    உயரும் * கதிரவனே நோக்கும் ** உயிரும்
    தருமனையே நோக்கும் * ஒண் தாமரையாள் கேள்வன் *
    ஒருவனையே நோக்கும் உணர்வு 67
  • MLT 68
    2149 உணர்வார் ஆர் உன்பெருமை? * ஊழிதோறு ஊழி *
    உணர்வார் ஆர் உன் உருவம் தன்னை ** உணர்வார் ஆர்
    விண்ணகத்தாய் ! மண்ணகத்தாய்! * வேங்கடத்தாய்! * நால்வேதப்
    பண்ணகத்தாய் ! நீ கிடந்த பால்? 68
  • MLT 69
    2150 பாலன் தனது உருவாய் * ஏழ் உலகு உண்டு * ஆல் இலையின்
    மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ** ஆல் அன்று
    வேலை நீர் உள்ளதோ? * விண்ணதோ? மண்ணதோ? *
    சோலை சூழ் குன்று எடுத்தாய் ! சொல்லு 69
  • MLT 70
    2151 சொல்லும் தனையும் தொழுமின் விழும் உடம்பு *
    செல்லும் தனையும் திருமாலை ** நல் இதழ்த்
    தாமத்தால் வேள்வியால் * தந்திரத்தால் மந்திரத்தால் *
    நாமத்தால் ஏத்துதிரேல் நன்று 70
  • MLT 71
    2152 நன்று பிணி மூப்புக் * கையகற்றி நான்கு ஊழி *
    நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் * என்றும்
    விடல் ஆழி நெஞ்சமே * வேண்டினேன் கண்டாய் *
    அடல் ஆழி கொண்டான் மாட்டு அன்பு 71
  • MLT 72
    2153 அன்பு ஆழியானை * அணுகு என்னும் நா அவன் தன் *
    பண்பு ஆழித் தோள் பரவி ஏத்து என்னும் * முன்பு ஊழி
    காணானைக் காண் என்னும் கண் * செவி கேள் என்னும் *
    பூண் ஆரம் பூண்டான் புகழ் 72
  • MLT 73
    2154 புகழ்வாய் பழிப்பாய் * நீ பூந் துழாயானை *
    இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே! ** திகழ் நீர்க்
    கடலும் மலையும் * இரு விசும்பும் காற்றும் *
    உடலும் உயிரும் ஏற்றான் 73
  • MLT 74
    2155 ஏற்றான் புள் ஊர்ந்தான் * எயில் எரித்தான் மார்வு இடந்தான் *
    நீற்றான் நிழல் மணி வண்ணத்தான் ** கூற்று ஒருபால்
    மங்கையான் * பூமகளான் வார் சடையான் * நீள் முடியான்
    கங்கையான் நீள் கழலான் காப்பு 74
  • MLT 75
    2156 காப்பு உன்னை உன்னக் கழியும் * அரு வினைகள்
    ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்தொழியும் ** மூப்பு உன்னைச்
    சிந்திப்பார்க்கு இல்லை * திருமாலே * நின் அடியை
    வந்திப்பார் காண்பர் வழி 75
  • MLT 76
    2157 வழி நின்று * நின்னைத் தொழுவார் * வழுவா
    மொழி நின்ற * மூர்த்தியரே ஆவர் ** பழுது ஒன்றும்
    வாராத வண்ணமே விண் கொடுக்கும் * மண் அளந்த
    சீரான் திருவேங்கடம் 76
  • MLT 77
    2158 வேங்கடமும் * விண்ணகரும் வெஃகாவும் * அஃகாத
    பூங் கிடங்கின் * நீள் கோவல் பொன் நகரும் ** நான்கு இடத்தும்
    நின்றான் இருந்தான் * கிடந்தான் நடந்தானே *
    என்றால் கெடுமாம் இடர் 77
  • MLT 78
    2159 இடர் ஆர் படுவார் * எழு நெஞ்சே * வேழம்
    தொடர் வான் * கொடு முதலை சூழ்ந்த ** படம் உடைய
    பைந் நாகப் பள்ளியான் * பாதமே கைதொழுதும் *
    கொய்ந் நாகப் பூம் போது கொண்டு 78
  • MLT 79
    2160 கொண்டானை அல்லால் * கொடுத்தாரை யார் பழிப்பார்? *
    மண் தா என இரந்து மாவலியை ** ஒண் தாரை
    நீர் அங்கை தோய * நிமிர்ந்திலையே? * நீள் விசும்பில்
    ஆரம் கை தோய அடுத்து 79
  • MLT 80
    2161 அடுத்த கடும் பகைஞர்க்கு * ஆற்றேன் என்று ஓடி *
    படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை **
    வல்லாளன் கைக்கொடுத்த * மா மேனி மாயவனுக்கு *
    அல்லாதும் ஆவரோ ஆள்? 80
  • MLT 81
    2162 ஆள் அமர் வென்றி * அடு களத்துள் அஞ்ஞான்று *
    வாள் அமர் வேண்டி வரை நட்டு * நீள் அரவைச்
    சுற்றிக் கடைந்தான் * பெயர் அன்றே ? * தொல் நரகைப்
    பற்றிக் கடத்தும் படை 81
  • MLT 82
    2163 படை ஆரும் வாள் கண்ணார் * பாரசி நாள் * பைம் பூந்
    தொடையலோடு * ஏந்திய தூபம் ** இடை இடையில்
    மீன் மாய * மாசூணும் வேங்கடமே * மேல் ஒரு நாள்
    மான் மாய எய்தான் வரை 82
  • MLT 83
    2164 வரை குடை தோள் காம்பு ஆக * ஆ நிரை காத்து * ஆயர்
    நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே ! ** உரவு உடைய
    நீர் ஆழியுள் கிடந்து * நேரா நிசாசரர் மேல்
    பேர் ஆழி கொண்ட பிரான் ! 83
  • MLT 84
    2165 பிரான் ! உன் பெருமை * பிறர் ஆர் அறிவார்? *
    உராய் உலகு அளந்த ஞான்று ** வராகத்து
    எயிற்று அளவு * போதாவாறு என்கொலோ? * எந்தை
    அடிக்கு அளவு போந்த படி 84
  • MLT 85
    2166 படி கண்டு அறிதியே? * பாம்பு அணையினான் * புள்
    கொடி கண்டு அறிதியே? கூறாய் ** வடிவில்
    பொறி ஐந்தும் உள் அடக்கிப் * போதொடு நீர் ஏந்தி *
    நெறி நின்ற நெஞ்சமே நீ 85
  • MLT 86
    2167 நீயும் திருமகளும் நின்றாயால் * குன்று எடுத்துப்
    பாயும் * பனி மறுத்த பண்பாளா ** வாசல்
    கடை கழியா உள் புகாக் * காமர் பூங் கோவல் *
    இடைகழியே பற்றி இனி 86
  • MLT 87
    2168 இனி யார் புகுவார் * எழு நரக வாசல்? *
    முனியாது மூரித் தாள் கோமின் ** கனி சாயக்
    கன்று எறிந்த தோளான் * கனை கழலே காண்பதற்கு *
    நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு 87
  • MLT 88
    2169 நாடிலும் * நின் அடியே நாடுவன் * நாள்தோறும்
    பாடிலும் * நின் புகழே பாடுவன் ** சூடிலும்
    பொன் ஆழி ஏந்தினான் * பொன் அடியே சூடுவேற்கு *
    என் ஆகில் என்னே எனக்கு? 88
  • MLT 89
    2170 எனக்கு ஆவார் * ஆர் ஒருவரே * எம் பெருமான்
    தனக்கு ஆவான் * தானே மற்று அல்லால் ** புனக் காயாம்
    பூ மேனி காணப் * பொதி அவிழும் பூவைப் பூ *
    மா மேனி காட்டும் வரம் 89
  • MLT 90
    2171 வரத்தால் வலி நினைந்து * மாதவ ! நின் பாதம் *
    சிரத்தால் வணங்கானாம் என்றே ? ** உரத்தினால்
    ஈர் அரியாய் * நேர் வலியோன் ஆய இரணியனை *
    ஓர் அரியாய் நீ இடந்தது ஊன்? 90
  • MLT 91
    2172 ஊனக் குரம்பையின் * உள் புக்கு இருள் நீக்கி *
    ஞானச் சுடர் கொளீஇ நாள்தோறும் ** ஏனத்து
    உருவாய் உலகு இடந்த * ஊழியான் பாதம் *
    மருவாதார்க்கு உண்டாமோ வான்? 91
  • MLT 92
    2173 வான் ஆகி தீ ஆய் * மறி கடல் ஆய் மாருதம் ஆய் *
    தேன் ஆகி பால் ஆம் திருமாலே! ** ஆன் ஆய்ச்சி
    வெண்ணெய் விழுங்க * நிறையுமே * முன் ஒரு நாள்
    மண்ணை உமிழ்ந்த வயிறு 92
  • MLT 93
    2174 வயிறு அழல வாள் உருவி * வந்தானை அஞ்ச *
    எயிறு இலக வாய் மடுத்தது என் நீ ? ** பொறி உகிரால்
    பூ வடிவை ஈடு அழித்த * பொன் ஆழிக் கையா ! * நின்
    சேவடிமேல் ஈடு அழிய செற்று 93
  • MLT 94
    2175 செற்று எழுந்து தீவிழித்து * சென்ற இந்த ஏழுலகும் *
    மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து ** முற்றும்
    மறையவற்குக் காட்டிய * மாயவனை அல்லால் *
    இறையேனும் ஏத்தாது என் நா 94
  • MLT 95
    2176 நா வாயில் உண்டே * நமோ நாரணா என்று *
    ஓவாது உரைக்கும் உரை உண்டே ** மூவாத
    மாக் கதிக்கண் செல்லும் * வகை உண்டே * என் ஒருவர்
    தீக் கதிக்கண் செல்லும் திறம்? 95
  • MLT 96
    2177 திறம்பாது என் நெஞ்சமே! * செங்கண் மால் கண்டாய் *
    அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் ** புறம் தான் இம்
    மண் தான் * மறிகடல் தான் மாருதம் தான் * வான் தானே
    கண்டாய் கடைக்கண் பிடி 96
  • MLT 97
    2178 பிடி சேர் * களிறு அளித்த பேராளா * உன் தன்
    அடி சேர்ந்து அருள் பெற்றாள் அன்றே ** பொடி சேர்
    அனற்கு அங்கை ஏற்றான் * அவிர் சடைமேல் பாய்ந்த *
    புனல் கங்கை என்னும் பேர்ப் பொன் 97
  • MLT 98
    2179 பொன் திகழும் மேனிப் * புரி சடை அம் புண்ணியனும் *
    நின்று உலகம் தாய நெடுமாலும் ** என்றும்
    இருவர் அங்கத்தால் * திரிவரேலும் * ஒருவன்
    ஒருவன் அங்கத்து என்றும் உளன் 98
  • MLT 99
    2180 ## உளன் கண்டாய் நல் நெஞ்சே * உத்தமன் என்றும்
    உளன் கண்டாய் * உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் **
    வெள்ளத்தின் உள்ளானும் * வேங்கடத்து மேயானும் *
    உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் 99
  • MLT 100
    2181 ## ஓர் அடியும் சாடு உதைத்த * ஒண் மலர்ச் சேவடியும் *
    ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே! ** ஓர் அடியின்
    தாயவனைக் கேசவனைத் * தண் துழாய் மாலை சேர் *
    மாயவனையே மனத்து வை 100