Your browser does not support the audio element.
audio
3893 பூமன்னுமாது பொருந்தியமார்பன் * புகழ்மலிந்த
பாமன்னுமாற னடிபணிந்துய்ந்தவன் * பல்கலையோர்
தாம்மன்னவந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம்மன்னிவாழ * நெஞ்சேசொல்லுவோம் அவன் நாமங்களே. (2)
3894 கள்ளார்பொழில்தென்னரங்கன் * கமலப்பதங்கள் நெஞ்சிற்
கொள்ளா மனிசரைநீங்கி * குறையல்பிரானடிக்கீழ்
விள்ளாதவன்பனிராமானுசன்மிக்கசீலமல்லால்
உள்ளாதுஎன்நெஞ்சு * ஒன்றறியேன்எனக்குற்றபேரியல்வே. (2)
3895 பேரியல்நெஞ்சே! அடிபணிந்தேனுன்னை * பேய்ப்பிறவிப்
பூரியரோடுள்ள சுற்றம்புலர்த்தி * பொருவருஞ்சீர்
ஆரியன்செம்மை இராமானுசமுனிக்கன்புசெய்யும்
சீரியபேறுடையார் * அடிக்கீழ்என்னைச்சேர்த்ததற்கே.
3896 என்னைப்புவியில் ஒருபொருளாக்கி * மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேரறுத்து * ஊழிமுதல்வனையே
பன்னப்பணித்தஇராமனுசன் பரன்பாதமுமென்
சென்னித்தரிக்கவைத்தான் * எனக்கேதுஞ்சிதைவில்லையே.
3897 எனக்குற்றசெல்வம் மிராமானுசனென்று * இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் * அவன்மன்னியசீர்
தனக்குற்றவன்பரவன் திருநாமங்கள்சாற்றுமென்பா
இனக்குற்றம்காணகில்லார் * பத்தியேய்ந்த இயல்விதென்றே.
3898 இயலும்பொருளும் இசையத்தொடுத்து * ஈன்கவிகள்அன்பால்
மயல்கொண்டுவாழ்த்துமிராமானுசனை * மதியின்மையால்
பயிலும்கவிகளில்பத்தியில்லாதவென்பாவிநெஞ்சால்
முயல்கின்றனன் * அவன்றன்பெருங்கீர்த்திமொழிந்திடவே.
3899 ## மொழியைக்கடக்கும் பெரும்புகழான் * வஞ்சமுக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம்கூரத்தாழ்வான்சரண்கூடியபின் *
பழியைக்கடத்துமிராமானுசன்புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல் * எனக்குஇனியாதும்வருத்தமன்றே. (2)
3900 வருத்தும்புறவிருள்மாற்ற * எம்பொய்கைப்பிரான் மறையின்
குருத்தின்பொருளையும் செந்தமிழ்தன்னையும்கூட்டி * ஒன்றத்
திரித்தன்றெரித்ததிருவிளக்கைத் தன்திருவுள்ளத்தே
இருத்தும்பரமன் * இராமானுசன் எம்மிறையவனே.
3901 இறைவனைக்காணும் இதயத்திருள்கெட * ஞானமென்னும்
நிறைவிளக்கேற்றிய பூதத்திருவடிதாள்கள் * நெஞ்சத்து
உறையவைத்தாளுமிராமானுசன்புகழோதும்நல்லோர்
மறையினைக்காத்து * இந்தமண்ணகத்தே மன்னவைப்பவரே.
3902 மன்னியபேரிருள்மாண்டபின் * கோவலுள்மாமலராள்
தன்னொடுமாயனைக்கண்டமைகாட்டும் * தமிழ்த்தலைவன்
பொன்னடிபோற்றுமிராமானுசற்கு அன்புபூண்டவர்தாள்
சென்னியில்சூடும் * திருவுடையார் என்றும்சீரியரே.
3903 சீரியநான்மறைச் செம்பொருள் * செந்தமிழாலளித்த
பாரியலும்புகழ்ப்பாண்பெருமாள் * சரணாம்பதுமத்
தாரியல்சென்னியிராமானுசன் தன்னைச்சார்ந்தவர்தம்
காரியவண்மை * என்னாற்சொல்லொணாது இக்கடலிடத்தே.
3904 இடங்கொண்டகீர்த்திமழிசைக்கிறைவன் * இணையடிப்போது
அடங்குமிதயத்திராமானுசன் * அம்பொற்பாதமென்றும்
கடங்கொண்டிறைஞ்சுந்திருமுனிவர்க்கன்றிக்காதல்செய்யாத்
திடங்கொண்டஞானியர்க்கே * அடியேன் அன்பு செய்வதுவே.
3905 செய்யும்பசுந்துளவத்தொழில்மாலையும் * செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ்மாலையும் * பேராதசீரரங்கத்து
ஐயன்கழற்கணியும்பரன்தாளன்றி ஆதரியா
மெய்யன் * இராமானுசன்சரணேகதிவேறெனக்கே.
3906 கதிக்குப்பதறி * வெங்கானமும்கல்லும்கடலுமெல்லாம்
கொதிக்கத்தவஞ்செய்யுங்கொள்கையற்றேன் * கொல்லிகாவலன்சொல்
பதிக்கும்கலைக்கவிபாடும்பெரியவர்பாதங்களே
துதிக்கும்பரமன் * இராமானுசன்என்னைச் சோர்விலனே.
3907 சோராதகாதல் பெருஞ்சுழிப்பால் * தொல்லைமாலை யொன்றும்
பாராது அவனைப்பல்லாண்டென்றுகாப்பிடும் * பான்மையன் தாள்
பேராதவுள்ளத்திராமானுசன்றன்பிறங்கியசீர்
சாராமனிசரைச்சேரேன் * எனக்குஎன்னதாழ்வினியே?
3908 ## தாழ்வொன்றில்லாமறைதாழ்ந்து * தலமுழுதும்கலியே
ஆள்கின்றநாள்வந்து அளித்தவன்காண்மின் * அரங்கர்மௌலி
சூழ்கின்றமாலையைச்சூடிக்கொடுத்தவள்தொல்லருளால்
வாழ்கின்றவள்ளல் * இராமானுசனென்னும்மாமுனியே. (2)
3909 முனியார்துயரங்கள்முந்திலும் * இன்பங்கள்மொய்த்திடினும்
கனியார்மனம் கண்ணமங்கைநின்றானை * கலைபரவும்
தனியானையைத்தண்தமிழ்செய்தநீலன்தனக்கு உலகில்
இனியானை * எங்களிராமானுசனைவந்தெய்தினரே.
3910 எய்தற்கரியமறைகளை * ஆயிரமின்தமிழால்
செய்தற்குஉலகில்வரும் சடகோபனை * சிந்தையுள்ளே
பெய்தற்கிசையும்பெரியவர்சீரை உயிர்களெல்லாம்
உய்வதற்குஉதவும் * இராமானுசன்எம்உறுதுணையே.
3911 உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும் * உயர்குருவும்
வெறிதருபூமகள்நாதனும் * மாறன்விளங்கியசீர்
நெறிதருஞ்செந்தமிழாரணமேயென்று இந்நீணிலத்தோர்
அறிதரநின்ற * இராமானுசன் எனக்காரமுதே.
3912 ஆரப்பொழில்தென்குருகைப்பிரான் * அமுதத்திருவாய்
ஈரத்தமிழின் இசையுணர்ந்தோர்கட்கு * இனியவர்தம்
சீரைப்பயின்றுய்யுஞ்சீலங்கொள்நாதமுனியை நெஞ்சால்
வாரிப்பருகும் * இராமானுசன்என்தன்மாநிதியே.
3913 நிதியைப்பொழியும் முகிலென்று * நீசர்தம்வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் இனி * தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன்யமுனைத்துறைவனிணையடியாம்
கதிபெற்றுடைய * இராமானுசன்என்னைக்காத்தனனே.
3914 கார்த்திகையானும் கரிமுகத்தானும் * கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும்வெப்பும்முதுகிட்டு * மூவுலகும்
பூத்தவனே! என்றுபோற்றிடவாணன்பிழைபொறுத்த
தீர்த்தனையேத்தும் * இராமானுசன்என்தன்சேமவைப்பே.
3915 வைப்பாயவான்பொருளென்று * நல்லன்பர்மனத்தகத்தே
எப்போதும்வைக்கும் இராமானுசனை * இருநிலத்தில்
ஒப்பாரிலாத உறுவினையேன்வஞ்சநெஞ்சில்வைத்து
முப்போதும்வாழ்த்துவன் * என்னாம்இதுஅவன்மொய் புகழ்க்கே?
3916 மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து * அதனால்
எய்த்தொழிந்தேன் முனநாள்களெல்லாம் * இன்றுகண்டுயர்ந்தேன்
பொய்த்தவம்போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக்
கைத்தமெய்ஞ்ஞானத்து * இராமானுசனெனும்கார்தன்னையே.
3917 காரேய்கருணையிராமானுச! * இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர் நின்னருளின்தன்மை * அல்லலுக்கு
நேரேயுறைவிடம்நான்வந்துநீயென்னைஉய்த்தபின் உன்
சீரேயுயிர்க்குயிராய் * அடியேற்குஇன்றுதித்திக்குமே.
3918 தீக்குற்றகீர்த்தி யிராமானுசனை * என்செய்வினையாம்
மெய்க்குற்றம்நீக்கி விளங்கியமேகத்தை * மேவுநல்லோர்
எக்குற்றவாளரெதுபிறப்பேதியல்வாகநின்றோர்
அக்குற்றமப்பிறப்பு * அவ்வியல்வேநம்மையாட் கொள்ளுமே.
3919 கொள்ளக்குறைவற்றிலங்கி * கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளல்தனத்தினால் வல்வினையேன்மனம்நீபுகுந்தாய் *
வெள்ளைச்சுடர்விடுமுன்பெருமேன்மைக்கிழுக்கிதென்று
தள்ளுற்றிரங்கும் * இராமானுச! என்தனிநெஞ்சமே.
3920 நெஞ்சிற்கறைகொண்டகஞ்சனைக் காய்ந்தநிமலன் * நங்கள்
பஞ்சித்திருவடிப் பின்னைதன்காதலன் * பாதம்நண்ணா
வஞ்சர்க்கரியவிராமானுசன்புகழன்றி என்வாய்
கொஞ்சிப்பரவகில்லாது * என்னவாழ்வின்றுகூடியதே!
3921 கூட்டும்விதியென்றுகூடுங்கொலோ? * தென்குருகைப்பிரான்
பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ்தன்னை * தன்பத்தியென்னும்
வீட்டின்கண்வைத்தஇராமானுசன்புகழ்மெய்யுணர்ந்தோர்
ஈட்டங்கள்தன்னை * என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே.
3922 இன்பந்தருபெருவீடுவந்தெய்திலென்? * எண்ணிறந்த
துன்பந்தருநிரயம்பலசூழிலென்? * தொல்லுலகில்
மன்பல்லுயிர்கட்கிறையவன்மாயனெனமொழிந்த
அன்பன்அனகன் * இராமானுசன்என்னையாண்டனனே.
3923 ஆண்டுகள்நாள்திங்களாய் * நிகழ்காலமெல்லாம் மனமே!
ஈண்டுபல்யோனிகள்தோறுழல்வோம் * இன்றோ ரெண்ணின்றியே
காண்தகுதோளண்ணல்தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப்
பூண்டவன்பாளன் * இராமானுசனைப்பொருந்தினமே. (2)
3924 பொருந்தியதேசும் பொறையும்திறலும்புகழும் * நல்ல
திருந்தியஞானமும் செல்வமும்சேரும் * செறுகலியால்
வருந்தியஞாலத்தைவண்மையினால் வந்தெடுத்தளித்த
அருந்தவன் * எங்களிராமானுசனையடைபவர்க்கே.
3925 அடையார்கமலத்து அலர்மகள்கேள்வன் * கையாழியென்னும்
படையோடுநாந்தகமும் படர்தண்டும் * ஒண்சார்ங்கவில்லும்
புடையார்புரிசங்கமும்இந்தப்பூதலங்காப்பதற்கென்று *
இடையே இராமானுசமுனியாயினஇந்நிலத்தே.
3926 நிலத்தைச்செறுத்துண்ணும் நீசக்கலியை * நினைப்பரிய
பலத்தைச்செறுத்தும் பிறங்கியதில்லை * என்பெய்வினை தென்
புலத்திற்பொறித்தவப்புத்தகச்சும்மைபொறுக்கியபின்
நலத்தைப்பொறுத்தது * இராமானுசன்தன்நயப்புகழே.
3927 நயவேன்ஒருதெய்வம் நானிலத்தே * சிலமானிடத்தைப்
புயலேயெனக் கவிபோற்றிசெய்யேன் * பொன்னரங்க மென்னில்
மயலேபெருகுமிராமானுசன்மன்னுமாமலர்த்தாள் *
அயரேன் * அருவினையென்னையெவ்வாறின்றடர்ப்பதுவே?
3928 அடல்கொண்டநேமிய னாருயிர்நாதன் * அன்றுஆரணச் சொல்
கடல்கொண்டவொண்பொருள்கண்டளிப்ப * பின்னும்காசினியோர்
இடரின்கண்வீழ்ந்திடத்தானுமவ்வொண்பொருள் கொண்டு அவர்பின்
படருங்குணன் * எம்மிராமானுசன்தன்படியிதுவே.
3929 படிகொண்டகீர்த்தி இராமாயணமென்னும்பத்தி வெள்ளம் *
குடிகொண்டகோயி லிராமானுசன்குணங்கூறும் * அன்பர்
கடிகொண்டமாமலர்த்தாள்கலந்துள்ளங்கனியும்நல்லோர்
அடிகண்டுகொண்டுகந்து * என்னையுமாளவர்க்காக்கினரே.
3930 ஆக்கியடிமைநிலைப்பித்தனை என்னையின்று * அவமே
போக்கிப் புறத்திட்டதென்பொருளாமுன்பு? * புண்ணியர் தம்
வாக்கிற்பிரியாஇராமானுச! நின்னருளின்வண்ணம்
நோக்கில்தெரிவரிதால் * உரையாய்இந்தநுண்பொருளே.
3931 பொருளும்புதல்வரும்பூமியும் * பூங்குழலாருமென்றே
மருள்கொண்டிளைக்கும் நமக்குநெஞ்சே! * மற்றுளார்தரமோ
இருள்கொண்டவெந்துயர்மாற்றித்தன்னீறில்பெரும்புகழே
தெருளும்தெருள்தந்து * இராமானுசன்செய்யும் சேமங்களே.
3932 சேமநல்வீடும்பொருளும்தருமமும் * சீரியநற்
காமமுமென்றிவை நான்கென்பர் * நான்கினும் கண்ணனுக்கே
ஆமதுகாமம்அறம்பொருள்வீடிதற்கென்றுரைத்தான்
வாமனன்சீலன் * இராமானுசன்இந்தமண்மிசையே.
3933 மண்மிசை யோனிகள்தோறும்பிறந்து * எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா * உலகோர்களெல்லாம்
அண்ணலிராமானுசன்வந்துதோன்றியஅப்பொழுதே
நண்ணருஞானம்தலைக்கொண்டு * நாரணற்காயினரே.
3934 ஆயிழையார்கொங்கைதங்கும் * அக்காதலளற்றழுந்தி
மாயுமெனாவியை வந்தெடுத்தானின்று * மாமலராள்
நாயகனெல்லாவுயிர்கட்கும்நாத னரங்கனென்னும்
தூயவன் * தீதிலிராமானுசன்தொல்லருள்சுரந்தே.
3935 சுரக்குந்திருவுமுணர்வும் * சொலப்புகில்வாயமுதம்
பரக்கும் இருவினைபற்றறவோடும் * படியிலுள்ளீர்!
உரைக்கின்றனன்உமக்கியான் அறஞ்சீறுமுறுகலியைத்
துரக்கும்பெருமை * இராமானுசனென்று சொல்லுமினே.
3936 சொல்லார்தமிழொருமூன்றும் * சுருதிகள்நான்கும்எல்லை
யில்லாவறநெறி யாவும்தெரிந்தவன் * எண்ணருஞ்சீர்
நல்லார்பரவுமிராமானுசன் திருநாமம்நம்பிக்
கல்லார்அகலிடத்தோர் * எதுபேறென்றுகாமிப்பரே.
3937 பேறொன்றுமற்றில்லை நின்சரணன்றி * அப்பேறளித்தற்கு
ஆறொன்றுமில்லைமற்றைச்சரணன்றி * என்றுஇப்பொருளைத்
தேறுமவர்க்குமெனக்குமுனைத்தந்தசெம்மை சொல்லால்
கூறும்பரமன்று * இராமானுச! மெய்ம்மைகூறிடிலே.
3938 கூறுஞ்சமயங்களாறும்குலைய * குவலயத்தே
மாறன்பணித்த மறையுணர்ந்தோனை * மதியிலியேன்
தேறும்படியென்மனம்புகுந்தானைத் திசையனைத்தும்
ஏறும்குணனை * இராமானுசனைஇறைஞ்சினமே.
3939 இறைஞ்சப்படும்பரன் ஈசனரங்கனென்று * இவ்வுலகத்து
அறஞ்செப்பு மண்ணலிராமானுசன் * என்னருவினையின்
திறஞ்செற்றிரவும்பகலும்விடாது என்தன்சிந்தையுள்ளே
நிறைந்தொப்பறவிருந்தான் * எனக்காரும்நிகரில்லையே.
3940 நிகரின்றிநின்ற என்நீசதைக்கு * உன்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை அருட்குமஃதேபுகல் * புன்மையிலோர்
பகரும்பெருமையிராமானுச! இனிநாம்பழுதே
அகலும்பொருளென்? * பயனிருவோமுக்குமான பின்னே.
3941 ஆனதுசெம்மையறநெறி * பொய்ம்மையறுசமயம்
போனதுபொன்றி இறந்ததுவெங்கலி * பூங்கமலத்
தேனதிபாய்வயல்தென்னரங்கன்கழல்சென்னிவைத்துத்
தானதில்மன்னும் * இராமானுசன்இத்தலத்துதித்தே.
3942 உதிப்பனவுத்தமர்சிந்தையுள் * ஒன்னலர்நெஞ்சமஞ்சிக்
கொதித்திடமாறிநடப்பன * கொள்ளைவன்குற்றமெல்லாம்
பதித்தஎன்புன்கவிப்பாவினம்பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலைநாதன் * இராமானுசன்தனிணையடியே.
3943 அடியைத்தொடர்ந்தெழுமைவர்கட்காய் * அன்று பாரதப்போர்
முடியப்பரிநெடுந்தேர்விடுங்கோனை முழுதுணர்ந்த
அடியர்க்கமுதமிராமானுசன் என்னையாளவந்து இப்
படியிற்பிறந்தது * மற்றில்லைகாரணம்பார்த்திடிலே.
3944 பார்த்தான்அறுசமயங்கள்பதைப்ப * இப்பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடைத்தான் புகுந்து *
தீர்த்தானிருவினைதீர்த்து அரங்கன்செய்யதாளிணையோடு
ஆர்த்தான் * இவைஎம்மிராமானுசன்செய்யுமற்புதமே.
3945 அற்புதன் செம்மையிராமானுசன் * என்னையாளவந்த
கற்பகம் கற்றவர்காமுறுசீலன் * கருதிய
பற்பல்லுயிர்களும்பல்லுலகுயாவும்பரனதென்னும்
நற்பொருள்தன்னை * இந்நானிலத்தேவந்துநாட்டினனே.
3946 நாட்டிய நீசச்சமயங்கள்மாண்டன * நாரணனைக்
காட்டியவேதம் களிப்புற்றது * தென்குருகைவள்ளல்
வாட்டமிலாவண்தமிழ்மறைவாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டியசீலத்து * இராமானுசன்தனியல்வுகண்டே.
3947 கண்டவர் சிந்தைகவரும் * கடிபொழில்தென்னரங்கன்
தொண்டர்குலாவு மிராமானுசனை * தொகையிறந்த
பண்தருவேதங்கள்பார்மேல்நிலவிடப்பார்த்தருளும்
கொண்டலைமேவித்தொழும் * குடியாம்எங்கள் கோக்குடியே.
3948 கோக்குலமன்னரை மூவெழுகால் * ஒருகூர்மழுவால்
போக்கியதேவனைப் போற்றும்புனிதன் * புவனமெங்கும்
ஆக்கியகீர்த்தியிராமானுசனையடைந்தபின் என்
வாக்குஉரையாது * என்மனம்நினையாதுஇனி மற்றொன்றையே.
3949 மற்றொருபேறுமதியாது * அரங்கன்மலரடிக்கு ஆள்
உற்றவரே தனக்குஉற்றவராக்கொள்ளும்உத்தமனை *
நற்றவர்போற்றுமிராமானுசனை இந்நானிலத்தே
பெற்றனன் * பெற்றபின் மற்றறியேன்ஒரு பேதைமையே.
3950 பேதையர் வேதப்பொருளிதென்றுன்னி * பிரமம் நன்றென்று
ஓதிமற்றெல்லாவுயிருமஃதென்று * உயிர்கள்மெய்விட்டு
ஆதிப்பரனோடொன்றாமென்றுசொல்லுமவ்வல்லலெல்லாம்
வாதில்வென்றான் * எம்மிராமானுசன்மெய்ம்மதிக்கடலே.
3951 கடலளவாய திசையெட்டினுள்ளும் * கலியிருளே
மிடைதருகாலத்து இராமானுசன் * மிக்கநான்மறையின்
சுடரொளியாலவ்விருளைத்துரந்திலனேல் உயிரை
யுடையவன் * நாரணனென்றறிவாரில்லையுற்றுணர்ந்தே.
3952 உணர்ந்தமெய்ஞ்ஞானியர் யோகந்தொறும் * திருவாய்மொழியின்
மணந்தருமின்னிசை மன்னுமிடந்தொறும் * மாமலராள்
புணர்ந்தபொன்மார்பன்பொருந்தும்பதிதொறும்புக்கு நிற்கும்
குணந்திகழ்கொண்டல் * இராமானுசன்எங்குலக் கொழுந்தே.
3953 கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால் * நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்தாட்கொண்டபின்னும் * அருமுனிவர்
தொழுந்தவத்தோன்எம்இராமானுசன் தொல்புகழ் சுடர்மிக்
கெழுந்தது * அத்தால்நல்லதிசயங்கண்டதிருநிலமே.
3954 இருந்தேனிருவினைப் பாசம்கழற்றி * இன்றியானிறையும்
வருந்தேன்இனி எம்மிராமானுசன் * மன்னுமாமலர்த்தாள்
பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கொன்றும் நன்மை செய்யாப்
பெருந்தேவரைப்பரவும் * பெரியோர்தங்கழல்பிடித்தே.
3955 பிடியைத்தொடரும் களிறென்ன * யான்உன்பிறங்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும் * அறுசமயச்
செடியைத்தொடரும்மருள்செறிந்தோர்சிதைந்தோடவந்து இப்
படியைத்தொடரும் * இராமனுச! மிக்கபண்டிதனே!
3956 பண்தருமாறன்பசுந்தமிழ் * ஆனந்தம்பாய்மதமாய்
விண்டிட எங்களிராமானுசமுனிவேழம் * மெய்ம்மை
கொண்டநல்வேதக்கொழுந்தண்டமேந்திக்குவலயத்தே
மண்டிவந்தேன்றது * வாதியர்காள்! உங்கள்வாழ்வற்றதே.
3957 வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு * என்றும்மறையவர்தம்
தாழ்வற்றது தவம்தாரணிபெற்றது * தத்துவநூல்
கூழற்றதுகுற்றமெல்லாம்பதித்தகுணத்தினர்க்கு அந்
நாழற்றது * நம்மிராமானுசன்தந்தஞானத்திலே.
3958 ஞானம் கனிந்த நலங்கொண்டு * நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் ** வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்கு * அத்
தானம் கொடுப்பது * தன்தக வென்னும் சரண்கொடுத்தே.
3959 சரணமடைந்த தருமனுக்கா * பண்டுநூற்றுவரை
மரணமடைவித்தமாயவன் * தன்னைவணங்கவைத்த
கரணமிவையுமக்கன்றென்றிராமானுசன் உயிர்கட்கு
அரணங்கமைத்திலனேல் * அரணார்மற்றிவ்வாருயிர்க்கே?
3960 ஆரெனக்கின்று நிகர்சொல்லில்? * மாயனன்றைவர்தெய்வத்
தேரினில் செப்பியகீதையின் * செம்மைப்பொருள்தெரியப்
பாரினிற்சொன்னஇராமானுசனைப்பணியும்நல்லோர்
சீரினிற்சென்றுபணிந்தது * என்ஆவியும்சிந்தையுமே.
3961 சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன்னாள்
அந்தமுற்றாழ்ந்ததுகண்டு * அவைஎன்றனக்கன்றருளால்
தந்தவரங்கனும் தன் சரண்தந்திலன் தானதுதந்து *
எந்தை யிராமானுசன்வந்தெடுத்தனனின்றென்னையே.
3962 என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து * எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதேநலம் * அன்றிஎன்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன்பெருங்கருணை
தன்னையென்பார்ப்பர்? * இராமானுச! உன்னைச் சார்ந்தவரே.
3963 சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக்கீழ் * அன்புதான் மிகவும்
கூர்ந்தது அத்தாமரைத்தாள்களுக்கு * உன்தன் குணங்களுக்கே
தீர்ந்ததுஎன்செய்கை முன்செய்வினை நீசெய்வினையதனால்
பேர்ந்தது * வண்மையிராமானுச! எம்பெருந்தகையே!
3964 கைத்தனன் தீயசமயக்கலகரை * காசினிக்கே
உய்த்தனன் தூயமறைநெறிதன்னை * என்றுன்னியுள்ளம்
நெய்த்தவன்போடிருந்தேத்தும் நிறைபுகழோருடனே
வைத்தனன் என்னை * இராமானுசன் மிக்கவண்மை செய்தே.
3965 வண்மையினாலும் தன்மாதகவாலும் * மதிபுரையும்
தண்மையினாலும் இத்தாரணியோர்கட்கு * தான்சரணாய்
உண்மைநல்ஞானமுரைத்த இராமானுசனையுன்னும்
திண்மையல்லா லெனக்கில்லை * மற்றோர் நிலைதேர்ந்திடிலே.
3966 தேரார் மறையின் திறமென்று * மாயவன் தீயவரைக்
கூராழிகொண்டு குறைப்பது * கொண்டலனையவண்மை
ஏரார்குணத்தெம்மிராமானுச னவ்வெழில்மறையில்
சேராதவரைச் சிதைப்பது * அப்போது ஒரு சிந்தை செய்தே.
3967 செய்த்தலைச் சங்கம் செழுமுத்தமீனும் * திருவரங்கர்
கைத்தலத்தாழியும் சங்கமுமேந்தி * நங்கண்முகப்பே
மொய்த்தலைத் துன்னைவிடேனென்றிருக்கிலும் நின்புகழே
மொய்த்தலைக்கும்வந்து * இராமானுச! என்னை முற்றும் நின்றே.
3968 நின்றவண்கீர்த்தியும் நீள்புனலும் * நிறைவேங்கடப் பொற்
குன்றமும் வைகுந்தநாடும் குலவியபாற்கடலும் *
உன்தனக்கெத்தனையின்பந்தரும் உன்னிணை மலர்த்தாள்
என்தனுக்கும் அது * இராமானுச! இவையீந்தருளே. (2)
3969 ஈந்தனனீயாதவின்னருள் * எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப்பல்பொருளால் * இப்படியனைத்தும்
ஏய்ந்தனன்கீர்த்தியினா லென்வினைகளைவேர்பறியக்
காய்ந்தனன் * வண்மையிராமானுசற்குஎன்கருத்தினியே?
3970 கருத்திற்புகுந்து உள்ளிற்கள்ளம்கழற்றி * கருதிய
வருத்தத்தினால் மிகவஞ்சித்து * நீயிந்தமண்ணகத்தே
திருத்தித்திருமகள்கேள்வனுக்காக்கியபின் என்னெஞ்சில்
பொருத்தப்படாது * எம்மிராமானுச! மற்றோர்பொய்ப்பொருளே.
3971 பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து * இந்தப்பூதலத்தே
மெய்யைப்புரக்கும் இராமானுசன்நிற்க * வேறுநம்மை
உய்யக்கொள்ளவல்லதெய்வமிங்கியாதென்றுலர்ந்து அவமே
ஐயப்படாநிற்பர் * வையத்துள்ளோர்நல்லறிவிழந்தே.
3972 நல்லார்பரவும் இராமானுசன் * திருநாமம்நம்ப
வல்லார்திறத்தை மறவாதவர்கள்யவர் * அவர்க்கே
எல்லாவிடத்திலுமென்றுமெப்போதிலுமெத்தொழும்பும்
சொல்லால்மனத்தால் * கருமத்தினால்செய்வன் சோர்வின்றியே.
3973 சோர்வின்றி உன்தன்துணையடிக்கீழ் * தொண்டுபட்டவர்பால்
சார்வின்றிநின்றவெனக்கு * அரங்கன்செய்யதாளிணைகள்
பேர்வின்றியின்றுபெறுத்தும்இராமானுச! இனியுன்
சீரொன்றியகருணைக்கு * இல்லைமாறுதெரிவுறிலே.
3974 தெரிவுற்றஞானம்செறியப்பெறாது * வெந்தீவினையால்
உருவற்றஞானத்து உழல்கின்ற வென்னை * ஒருபொழுதில்
பொருவற்றகேள்வியனாக்கிநின்றான்என்னபுண்ணியனோ?
தெரிவுற்றகீர்த்தி * இராமானுசனென்னுஞ்சீர்முகிலே.
3975 சீர்கொண்டுபேரறம்செய்து * நல்வீடுசெறிதுமென்னும்
பார்கொண்டமேன்மையர் கூட்டனல்லேன் * உன்பதயுகமாம்
ஏர்கொண்ட வீட்டையெளிதினிலெய்துவன் உன்னுடைய
கார்கொண்டவண்மை * இராமானுச! இதுகண்டுகொள்ளே.
3976 கண்டுகொண்டேன் எம்மிராமானுசன்தன்னை * காண்டலுமே
தொண்டுகொண்டேன் அவன்தொண்டர் பொற்றாளில் * என்தொல்லைவெந்நோய்
விண்டுகொண்டேன்அவன்சீர்வெள்ளவாரியைவாய் மடுத்து இன்று
உண்டுகொண்டேன் * இன்னமுற்றனவோதிலுலப்பில்லையே.
3977 ஓதியவேதத்தினுட்பொருளாய் * அதனுச்சிமிக்க
சோதியைநாதனெனவறியாது உழல்கின்றதொண்டர் *
பேதமைதீர்த்தஇராமானுசனைத்தொழும்பெரியோர்
பாதமல்லால்என்தனாருயிர்க்கு * யாதென்றும் பற்றில்லையே.
3978 பற்றாமனிசரைப்பற்றி * அப்பற்றுவிடாதவரே
உற்றாரெனவுழன்று ஓடிநையேன்இனி * ஒள்ளிய நூல்
கற்றார்பரவும்இராமானுசனைக் கருதுமுள்ளம்
பெற்றார்யவர் * அவர்எம்மைநின்றாளும்பெரியவரே.
3979 பெரியவர்பேசிலும்பேதையர்பேசிலும் * தங்குணங்கட்கு
உரியசொல் லென்றுமுடையவனென்றென்று * உணர்வில்மிக்கோர்
தெரியும்வண்கீர்த்தியிராமானுசன்மறைதேர்ந்துஉலகில்
புரியுநல்ஞானம் * பொருந்தாதவரைப்பொரும்கலியே.
3980 கலிமிக்கசெந்நெல் கழனிக்குறையல் * கலைப்பெருமான்
ஒலிமிக்கபாடலையுண்டு தன்னுள்ளம்தடித்து * அதனால்
வலிமிக்கசீயமிராமானுசன் மறைவாதியராம்
புலிமிக்கதென்று * இப்புவனத்தில்வந்தமை போற்றுவனே.
3981 போற்றருஞ்சீலத்திராமானுச! * நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேல்அதுதாழ்வு * அதுதீரில்உன்சீர்தனக்குஓர்
ஏற்றமென்றேகொண்டிருக்கிலு மென்மனம்ஏத்தியன்றி
ஆற்றகில்லாது * இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே.
3982 நினையார் பிறவியை நீக்கும்பிரானை * இந்நீணிலத்தே
எனையாளவந்தவிராமானுசனை * இருங்கவிகள்
புனையார் புனையும்பெரியவர்தாள்களில் பூந்தொடையல்
வனையார் * பிறப்பில்வருந்துவர் மாந்தர்மருள்சுரந்தே.
3983 மருள்சுரந்தாகமவாதியர்கூறும் * அவப்பொருளாம்
இருள்சுரந்தெய்த்த உலகிருள்நீங்க * தன்னீண்டியசீர்
அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும்நாதனரங்கனென்னும்
பொருள்சுரந்தான் * எம்மிராமானுசன் மிக்கபுண்ணியனே.
3984 புண்ணியநோன்பு புரிந்துமிலேன் * அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங்கேள்வி நுவன்றுமிலேன் * செம்மைநூற் புலவர்க்கு
எண்ணருங்கீர்த்தியிராமானுச! இன்றுநீபுகுந்து என்
கண்ணுள்ளும்நெஞ்சுள்ளும் * நின்றவிக்காரணம் கட்டுரையே.
3985 கட்டப்பொருளை மறைப்பொருளென்று * கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும் பிரானல்லனே? * என்பெருவினையைக்
கிட்டிக் கிழங்கொடுதன்னருளென்னுமொள்வாளுருவி
வெட்டிக்களைந்த * இராமானுசனென்னும் மெய்த்தவனே.
3986 தவந்தரும் செல்வந்தகவும்தரும் * சலியாப்பிறவிப்
பவந்தரும்தீவினை பாற்றித்தரும் * பரந்தாமமென்னும்
திவந்தரும்தீதிலிராமானுசன்தன்னைச்சார்ந்தவர்கட்கு
உவந்தருந்தேன் * அவன்சீரன்றியானொன்றும் உள்மகிழ்ந்தே.
3987 உண்ணின்றுஉயிர்களுக்குஉற்றனவேசெய்து * அவர்க்கு உயவே
பண்ணும்பரனும் பரிவிலனாம்படி * பல்லுயிர்க்கும்
விண்ணிந்தலைநின்றுவீடளிப்பான்எம்மிராமானுசன்
மண்ணின்தலத்துதித்து * உய்மறைநாலும்வளர்த்தனனே.
3988 வளரும்பிணிகொண்ட வல்வினையால் * மிக்கநல்வினையில்
கிளரும்துணிவுகிடைத்தறியாது * முடைத்தலையூன்
தளருமளவுந்தரித்தும்விழுந்தும்தனிதிரிவேற்கு
உளரெம்மிறைவர் * இராமானுசன்தன்னைஉற்றவரே.
3989 தன்னையுற்றாட்செய்யும்தன்மையினோர் * மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட்செய்ய என்னையுற்றானின்று * தன்தகவால்
தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லையென்றறிந்து
தன்னையுற்றாரை * இராமானுசன்குணம்சாற்றிடுமே.
3990 இடுமே? இனியசுவர்க்கத்தில் * இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே? அவற்றைத்தொடர்தருதொல்லை * சுழல்பிறப்பில்
நடுமே? இனிநம்மிராமானுசன் நம்மைநம்வசத்தே
விடுமே? சரணமென்றால் * மனமே! நையல்மேவுதற்கே. (2)
3991 தற்கச்சமணரும் சாக்கியப்பேய்களும் * தாழ்சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனியவாதரும் * நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீள்நிலத்தே
பொற்கற்பகம் * எம்மிராமானுசமுனிபோந்தபின்னே.
3992 போந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு * உனதடிப்போதில் ஒண்சீ
ராந்தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி * நின்பாலதுவே
ஈந்திடவேண்டும் இராமானுச! இதுவன்றியொன்றும்
மாந்தகில்லாது * இனிமற்றொன்று காட்டிமயக்கிடலே.
3993 மயக்குமிருவினை வல்லியிற்பூண்டு * மதிமயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றியவென்னை * துயரகற்றி
உயக்கொண்டுநல்கும் இராமானுச! என்றதுஉன்னையுன்னி
நயக்குமவர்க்கிதிழுக்கென்பர் * நல்லவரென்றுநைந்தே.
3994 நையும்மனம் உன்குணங்களையுன்னி * என்நாவிருந்துஎம்
ஐயனிராமானுச னென்றழைக்கும் * அருவினையேன்
கையுந்தொழும் கண்கருதிடும் காணக் கடல்புடைசூழ்
வையமிதனில் * உன்வண்மை என்பாலென் வளர்ந்ததுவே?
3995 வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய் * அன்று வாளவுணன்
கிளர்ந்தபொன்னாகங் கிழித்தவன் * கீர்த்திப் பயிரெழுந்து
விளைந்திடுஞ்சிந்தையிராமானுசன் என்தன்மெய்வினைநோய்
களைந்து நன்ஞானமளித்தனன் * கையிற்கனியென்னவே.
3996 கையிற்கனியென்னக் கண்ணனைக் காட்டித்தரிலும் * உன்தன்
மெய்யிற் பிறங்கியசீரன்றி வேண்டிலன்யான் * நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
செய்யில் தரிப்பன் * இராமானுச! என்செழுங் கொண்டலே!
3997 செழுந்திரைப்பாற்கடல் கண்துயில்மாயன் * திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்நெஞ்சில் மேவுநன்ஞானி * நல்வேதியர்கள்
தொழுந்திருப்பாத னிராமானுசனைத் தொழும்பெரியோர்
எழுந்திரைத்தாடுமிடம் * அடியேனுக்கு இருப்பிடமே. (2)
3998 இருப்பிடம் வைகுந்தம்வேங்கடம் * மாலிருஞ் சோலையென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் * அவை தம்மொடும்வந்து
இருப்பிடம்மாயன் இராமானுசன்மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் * என்தனிதயத்துள்ளேதனக்கின்புறவே. (2)
3999 இன்புற்றசீலத்திராமானுச! * என்றுமெவ்விடத்தும்
என்புற்றநோயுடல்தோறும் பிறந்திருந்து * எண்ணரிய
துன்புற்றுவீயினும்சொல்லுவதொன்றுண்டு உன்தொண்டர்கட்கே
அன்புற்றிருக்கும்படி * என்னையாக்கியங்காட்படுத்தே. (2)
4000 அங்கயல்பாய்வயல்தென்னரங்கன் * அணியாகமன்னும்
பங்கயமாமலர்ப்பாவையைப் போற்றுதும் * பத்தியெல்லாம்
தங்கியதென்னத்தழைத்துநெஞ்சே! நம்தலைமிசையே
பொங்கியகீர்த்தி * இராமானுசனடிப்பூ மன்னவே. (2)