Your browser does not support the audio element.
audio
2182 அன்பேதளியா ஆர்வமேநெய்யாக *
இன்புருகுசிந்தையிடுதிரியா * - நன்புருகி
ஞானச்சுடர்விளக்கேற்றினேன், நாரணற்கு *
ஞானத்தமிழ்புரிந்தநான். (2)
2183 ஞானத்தால்நன்குணர்ந்து நாரணன்றன்நாமங்கள் *
தானத்தால்மற்றவன்பேர்சாற்றினால் * - வானத்
தணியமரர் ஆக்குவிக்குமஃதன்றே? * நங்கள்
பணியமரர்கோமான்பரிசு.
2184 பரிசுநறுமலரால் பாற்கடலான்பாதம் *
புரிவார்புகழ்பெறுவர்போலாம் * - புரிவார்கள்
தொல்லமரர்கேள்வித் துலங்கொளிசேர்தோற்றத்து *
நல்லமரர்கோமான்நகர்.
2185 நகரிழைத்துநித்திலத்து நாண்மலர்கொண்டு * ஆங்கே
திகழுமணிவயிரஞ்சேர்த்து * - நிகரில்லாப்
பைங்கமலமேந்திப் பணிந்தேன்பனிமலராள் *
அங்கம்வலம்கொண்டானடி.
2186 அடிமூன்றிலிவ்வுலகம் அன்றளந்தாய்போலும் *
அடிமூன்றிரந்துஅவனிகொண்டாய் * - படிநின்ற
நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை
யாரோதவல்லாரறிந்து?
2187 அறிந்தைந்துமுள்ளடக்கி ஆய்மலர்கொண்டு * ஆர்வம்
செறிந்தமனத்தராய்ச்செவ்வே * - அறிந்தவன்தன்
பேரோதியேத்தும் பெருந்தவத்தோர்காண்பரே *
காரோதவண்ணன்கழல்.
2188 கழலெடுத்துவாய்மடித்துக் கண்சுழன்று * மாற்றார்
அழலெடுத்த சிந்தையராயஞ்ச * தழலெடுத்த
போராழியேந்தினான் பொன்மலர்ச்சேவடியை *
ஓராழிநெஞ்சே! உகந்து.
2189 உகந்துன்னைவாங்கி ஒளிநிறங்கொள்கொங்கை *
அகங்குளிரஉண்ணென்றாளாவி * -உகந்து
முலையுண்பாய்போலே முனிந்துண்டாய் * நீயும்
அலைபண்பா லானமையாலன்று.
2190 அன்றதுகண்டஞ்சாத ஆய்ச்சிஉனக்கிரங்கி *
நின்றுமுலைதந்த இந்நீர்மைக்கு * அன்று
வரன்முறையால்நீயளந்த மாகடல்சூழ்ஞாலம் *
பெருமுறையாலெய்துமோபேர்த்து?
2191 பேர்த்தனை மாசகடம்பிள்ளையாய் * மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும்காவலனே! * ஏத்திய
நாவுடையேன்பூவுடையேன் நின்னுள்ளிநின்றமையால் *
காஅடியேன்பட்டகடை.
2192 கடைநின்றமரர் கழல்தொழுது * நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் * -புடைநின்ற
நீரோதமேனி நெடுமாலே! * நின்னடியை
யாரோதவல்லாரவர்?
2193 அவரிவரென்றில்லை அரவணையான்பாதம் *
எவர்வணங்கி யேத்தாதாரெண்ணில் * -பவரும்
செழுங்கதிரோன்ஒண்மலரோன் கண்ணுதலோனன்றே? *
தொழுந்தகையார் நாளும்தொடர்ந்து.
2194 தொடரெடுத்தமால்யானை சூழ்கயம்புக்கஞ்சி *
படரெடுத்தபைங்கமலம்கொண்டு * -அன்றுஇடரடுக்க
ஆழியான் பாதம்பணிந்தன்றே? * வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப்பண்டு.
2195 பண்டிப்பெரும்பதியையாக்கி * பழிபாவம்
கொண்டுஇங்குவாழ்வாரைக்கூறாதே * - எண்திசையும்
பேர்த்தகரம்நான்குடையான் பேரோதிப்பேதைகாள்! *
தீர்த்தகரராமின்திரிந்து.
2196 திரிந்ததுவெஞ்சமத்துத் தேர்கடவி * அன்று
பிரிந்தது சீதையை மான்பின்போய் * -புரிந்ததுவும்
கண்பள்ளிகொள்ள, அழகியதே! * நாகத்தின்
தண்பள்ளிகொள்வான்தனக்கு.
2197 தனக்கடிமைபட்டது தானறியானேலும் *
மனத்தடைய வைப்பதாம்மாலை * - வனத்திடரை
ஏரியாம்வண்ணம் இயற்றுமிதுவல்லால் *
மாரியார்பெய்கிற்பாற்மற்று?
2198 மற்றாரியலாவர்? வானவர்கோன்மாமலரோன் *
சுற்றும்வணங்கும்தொழிலானை * - ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான்பின்சென்று * மாலைக்
குறையிரந்து தான்முடித்தான்கொண்டு.
2199 கொண்டதுலகம் குறளுருவாய், கோளரியாய் *
ஒண்திறலோன்மார்வத்துகிர்வைத்தது * - உண்டதுவும்
தான்கடந்தவேழுலகே தாமரைக்கண்மாலொருநாள் *
வான்கடந்தான்செய்தவழக்கு.
2200 வழக்கன்றுகண்டாய் வலிசகடஞ்செற்றாய் *
வழக்கென்றுநீமதிக்கவேண்டா * - குழக்கன்று
தீவிளவின்காய்க்கெறிந்த தீமைதிருமாலே! *
பார்விளங்கச்செய்தாய்பழி.
2201 பழிபாவங்கையகற்றிப் பல்காலும்நின்னை *
வழிவாழ்வார் வாழ்வராம்மாதோ * - வழுவின்றி
நாரணன்தன்நாமங்கள் நன்குணர்ந்துநன்கேத்தும் *
காரணங்கள்தாமுடையார்தாம்.
2202 தாமுளரே தம்முள்ளமுள்ளுளதே * தாமரையின்
பூவுளதே ஏத்தும்பொழுதுண்டே * - வாமன்
திருமருவு தாள்மருவுசென்னியரே * செவ்வே
அருநரகஞ்சேர்வதரிது.
2203 அரியதெளிதாகும் ஆற்றலால்மாற்றி *
பெருகமுயல்வாரைப் பெற்றால் * - கரியதோர்
வெண்கோட்டுமால்யானை வென்றுமுடித்தன்றே *
தண்கோட்டுமாமலரால்தாழ்ந்து.
2204 தாழ்ந்துவரங்கொண்டு தக்கவகைகளால் *
வாழ்ந்துகழிவாரை வாழ்விக்கும் * - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்துவேற்றுருவாய் * ஞாலம்
அளந்தடிக்கீழ்க்கொண்டவவன்.
2205 அவன்கண்டாய்நன்னெஞ்சே!ஆரருளும்கேடும் *
அவன்கண்டாய் ஐம்புலனாய்நின்றான் * - அவன்கண்டாய்
காற்றுத்தீநீர்வான் கருவரைமண்காரோதச் *
சீற்றத்தீயாவானும்சென்று.
2206 சென்றதிலங்கைமேல் செவ்வேதன்சீற்றத்தால் *
கொன்றதிராவணனைக்கூறுங்கால் * - நின்றதுவும்
வேயோங்குதண்சாரல் வேங்கடமே * விண்ணவர்தம்
வாயோங்குதொல்புகழான்வந்து.
2207 வந்தித்தவனை வழிநின்றவைம்பூதம் *
ஐந்துமகத்தடக்கி ஆர்வமாய் * - உந்திப்
படியமரர்வேலையான் பண்டமரர்க்கீந்த *
படியமரர்வாழும்பதி.
2208 பதியமைந்துநாடிப் பருத்தெழுந்தசிந்தை *
மதியுரிஞ்சிவான்முகடுநோக்கி - கதிமிகுத்துஅம்
கோல்தேடியோடும் கொழுந்ததேபோன்றதே *
மால்தேடியோடும்மனம்.
2209 மனத்துள்ளான்வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் * - எனைப்பலரும்
தேவாதிதேவ னெனப்படுவான் * முன்னொருநாள்
மாவாய்பிளந்தமகன்.
2210 மகனாகக்கொண்டெடுத்தாள் மாண்பாயகொங்கை *
அகனாரவுண்பனென்றுண்டு * - மகனைத்தாய்
தேறாதவண்ணம் திருத்தினாய் * தென்னிலங்கை
நீறாகவெய்தழித்தாய்! நீ.
2211 நீயன்றுலகளந்தாய் நீண்டதிருமாலே! *
நீயன்றுலகிடந்தாயென்பரால் * நீயன்று
காரோதம்முன்கடைந்து பின்னடைத்தாய்மாகடலை *
பேரோதமேனிப்பிரான்!
2212 பிரானென்றுநாளும் பெரும்புலரியென்றும் *
குராநற்செழும்போதுகொண்டு * - வராகத்
தணியுருவன் பாதம்பணியுமவர்கண்டீர் *
மணியுருவம்காண்பார்மகிழ்ந்து.
2213 மகிழ்ந்ததுசிந்தை திருமாலே! * மற்றும்
மகிழ்ந்தது உன்பாதமேபோற்றி * - மகிழ்ந்தது
அழலாழிசங்க மவைபாடியாடும் *
தொழிலாகம் சூழ்ந்துதுணிந்து.
2214 துணிந்ததுசிந்தை துழாயலங்கல் * அங்கம்
அணிந்தவன்பேர் உள்ளத்துப்பல்கால் * - பணிந்ததுவும்
வேய்பிறங்குசாரல் விறல்வேங்கடவனையே *
வாய்திறங்கள்சொல்லும்வகை.
2215 வகையாலவனி இரந்தளந்தாய்பாதம் *
புகையால்நறுமலரால்முன்னே * - மிகவாய்ந்த
அன்பாக்கியேத்தி அடிமைப்பட்டேன்உனக்கு *
என்பாக்கியத்தாலினி.
2216 இனிதென்பர்காமம் அதனிலுமாற்ற *
இனிதென்பர் தண்ணீருமெந்தாய்! * - இனிதென்று
காமநீர்வேளாது நின்பெருமைவேட்பரேல் *
சேமநீராகும்சிறிது.
2217 சிறியார்பெருமை சிறிதின்கணெய்தும் *
அறியாரும் தாமறியாராவர் * - அறியாமை
மண்கொண்டுமண்ணுண்டு மண்ணுமிழ்ந்தமாயனென்று *
எண்கொண்டுஎன்னெஞ்சே! இரு.
2218 இருந்தண்கமலத் திருமலரினுள்ளே *
திருந்துதிசைமுகனைத்தந்தாய்! * - பொருந்தியநின்
பாதங்களேத்திப் பணியாவேல் * பல்பிறப்பும்
ஏதங்களெல்லாம்எமக்கு.
2219 எமக்கென்றிருநிதியம் ஏமாந்திராதே *
தமக்கென்றுஞ்சார்வமறிந்து * - நமக்கென்றும்
மாதவனேயென்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்
ஓதுவதே நாவினாலோத்து.
2220 ஓத்தின்பொருள்முடிவுமித்தனையே * உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமின்ஏழைகாள்! * -ஓத்ததனை
வல்லீரேல் நன்று. அதனைமாட்டீரேல் * மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின்சுருக்கு.
2221 சுருக்காகவாங்கிச் சுலாவினின்று * ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின்கண்டீர்! * - திருப்பொலிந்த
ஆகத்தான் பாதமறிந்தும் அறியாத *
போகத்தாலில்லைபொருள்.
2222 பொருளாலமருலகம் புக்கியலலாகாது *
அருளாலறமருளுமன்றே? * - அருளாலே
மாமறையோர்க்கீந்த மணிவண்ணன்பாதமே *
நீமறவேல்நெஞ்சே! நினை.
2223 நினைப்பன்திருமாலை நீண்டதோள்காண *
நினைப்பார் பிறப்பொன்றும்நேரார் * - மனைப்பால்
பிறந்தார்பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் *
துறந்தார்தொழுதாரத்தோள்.
2224 தோளிரண்டெட்டேழும்மூன்றும் முடியனைத்தும் *
தாளிரண்டும்வீழச் சரந்துரந்தான் * - தாளிரண்டும்
ஆர்தொழுவார் பாதமவைதொழுவதன்றே? * என்
சீர்கெழுதோள் செய்யும்சிறப்பு.
2225 சிறந்தார்க்கெழுதுணையாம் செங்கண்மால்நாமம் *
மறந்தாரைமானிடமாவையேன் * அறம்தாங்கும்
மாதவனே! என்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்
ஓதுவதே நாவினாலுள்ளு.
2226 உளதென்றிறுமாவார் உண்டில்லையென்று *
தளர்தலதனருகும்சாரார் * - அளவரிய
வேதத்தான்வேங்கடத்தான் விண்ணோர்முடிதோயும் *
பாதத்தான் பாதம்பயின்று.
2227 பயின்றதுஅரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் -பயின்றது
அணிதிகழுஞ்சோலை அணிநீர்மலையே *
மணிதிகழும்வண்தடக்கைமால்.
2228 மாலையரியுருவன் பாதமலரணிந்து *
காலைதொழுதெழுமின் கைகோலி * - ஞாலம்
அளந்திடந்துஉண்டுமிழ்ந்த அண்ணலை மற்றல்லால் *
உளங்கிடந்தவாற்றாலுணர்ந்து.
2229 உணர்ந்தாய்மறைநான்கும் ஓதினாய்நீதி *
மணந்தாய்மலர்மகள்தோள்மாலே! * - மணந்தாய்போய்
வேயிருஞ்சாரல் வியலிருஞாலம்சூழ் *
மாயிருஞ்சோலைமலை.
2230 மலையேழும் மாநிலங்களேழுமதிர *
குலைசூழ் குரைகடல்களேழும் * - முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப்பெண்ணை நவின்றுண்டநாவனென்று *
அஞ்சாதுஎன்னெஞ்சே! அழை.
2231 அழைப்பன்திருமாலை ஆங்கவர்கள்சொன்ன *
பிழைப்பில் பெரும்பெயரேபேசி * - இழைப்பரிய
ஆயவனே! யாதவனே! என்று அவனையார்முகப்பும் *
மாயவனே! என்றுமதித்து.
2232 மதிக்கண்டாய் நெஞ்சே! மணிவண்ணன்பாதம் *
மதிக்கண்டாய் மற்றவன்பேர்தன்னை * - மதிக்கண்டாய்
பேராழிநின்று பெயர்ந்துகடல்கடைந்த *
நீராழிவண்ணன்நிறம்.
2233 நிறங்கரியன் செய்யநெடுமலராள்மார்வன் *
அறம்பெரியனாரதறிவார்? * - மறம்புரிந்த
வாளரக்கன்போல்வானை வானவர்கோன்தானத்து *
நீளிருக்கைக்குய்த்தான்நெறி.
2234 நெறியார்குழற்கற்றை முன்னின்றுபின்தாழ்ந்து *
அறியாதிளங்கிரியென்றெண்ணி * - பிறியாது
பூங்கொடிக்கள்வைகும் பொருபுனல்குன்றென்றும் *
வேங்கடமே யாம்விரும்பும்வெற்பு.
2235 வெற்பென்றிருஞ்சோலை வேங்கடமென்றிவ்விரண்டும் *
நிற்பென்று நீமதிக்கும்நீர்மைபோல் * - நிற்பென்று
உளங்கோயில் உள்ளம்வைத்துள்ளினேன் * வெள்ளத்
திளங்கோயில் கைவிடேலென்று.
2236 என்றும்மறந்தறியேன் ஏழ்பிறப்புமெப்பொழுதும் *
நின்றுநினைப்பொழியாநீர்மையால் * - வென்றி
அடலாழிகொண்ட அறிவனே! * இன்பக்
கடலாழி நீயருளிக்காண்.
2237 காணக்கழிகாதல் கைமிக்குக்காட்டினால் *
நாணப்படுமென்றால்நாணுமே? - பேணிக்
கருமாலைப் பொன்மேனிகாட்டாமுன்காட்டும் *
திருமாலை நங்கள்திரு.
2238 திருமங்கைநின்றருளும்தெய்வம் நாவாழ்த்தும் *
கருமம் கடைப்பிடிமின்கண்டீர் * - உரிமையால்
ஏத்தினோம்பாதம் இருந்தடக்கையெந்தைபேர் *
நால்திசையும்கேட்டீரே? நாம்.
2239 நாம்பெற்றநன்மையும் நாமங்கைநன்னெஞ்சத்து *
ஓம்பியிருந்துஎம்மையோதுவித்து * - வேம்பின்
பொருள்நீர்மையாயினும் பொன்னாழிபாடென்று *
அருள்நீர்மைதந்தஅருள்.
2240 அருள்புரிந்தசிந்தை அடியார்மேல்வைத்து *
பொருள்தெரிந்துகாண்குற்றவப்போது * - இருள்திரிந்து
நோக்கினேன்நோக்கி நினைந்தேனதொண்கமலம் *
ஓக்கினேனென்னையுமங்கோர்ந்து.
2241 ஓருருவனல்லை ஒளியுருவம்நின்னுருவம் *
ஈருருவனென்பர் இருநிலத்தோர் * ஓருருவம்
ஆதியாம்வண்ணம் அறிந்தாரவர்கண்டீர் *
நீதியால் மண்காப்பார்நின்று.
2242 நின்றதோர்பாதம் நிலம்புடைப்ப * நீண்டதோள்
சென்றளந்ததென்பர் திசையெல்லாம் * - அன்று
கருமாணியாய் இரந்தகள்வனே! * உன்னைப்
பிரமாணித்தார் பெற்றபேறு!
2243 பேறொன்றுமுன்னறியேன் பெற்றறியேன்பேதைமையால் *
மாறென்றுசொல்லிவணங்கினேன் * -ஏறின்
பெருத்தெருத்தம்கோடொசியப் பெண்நசையின்பின்போய் *
எருத்திறுத்தநல்லாயரேறு.
2244 ஏறேழும் வென்றுஅடர்த்தவெந்தை * எரியுருவத்து
ஏறேறி பட்டவிடுசாபம் * - பாறேறி
யுண்டதலைவாய்நிறையக் கோட்டங்கை யொண்குருதி *
கண்டபொருள்சொல்லின்கதை.
2245 கதையின்பெரும்பொருளும் கண்ணா! * நின்பேரே
இதயமிருந்தவையேயேத்தில் * - கதையும்
திருமொழியாய் நின்றதிருமாலே! * உன்னைப்
பருமொழியால்காணப்பணி.
2246 பணிந்தேன்திருமேனி பைங்கமலம்கையால் *
அணிந்தேனுன்சேவடிமேலன்பாய் * - துணிந்தேன்
புரிந்தேத்தி உன்னைப்புகலிடம்பார்த்து * ஆங்கே
இருந்தேத்திவாழுமிது.
2247 இதுகண்டாய்நன்னெஞ்சே! இப்பிறவியாவது *
இதுகண்டாய்எல்லாம்நாமுற்றது * - இதுகண்டாய்
நாரணன்பேரோதி நகரத்தருகணையா *
காரணமும்வல்லையேல்காண்.
2248 கண்டேன் திருமேனி யான்கனவில் * ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ்சுடராழி * கண்டேன்
உறுநோய்வினையிரண்டும் ஓட்டுவித்து * பின்னும்
மறுநோய்செறுவான்வலி.
2249 வலிமிக்கவாளெயிற்று வாளவுணர்மாள *
வலிமிக்க வாள்வரைமத்தாக * -வலிமிக்க
வாள்நாகஞ்சுற்றி மறுகக்கடல்கடைந்தான் *
கோள்நாகங்கொம்பொசித்தகோ.
2250 கோவாகி மாநிலங்காத்து * நங்கண்முகப்பே
மாவேகிச்செல்கின்ற மன்னவரும் * - பூமேவும்
செங்கமலநாபியான் சேவடிக்கேயேழ்பிறப்பும் *
தண்கமலமேய்ந்தார்தமர்.
2251 தமருள்ளம்தஞ்சை தலையரங்கம்தண்கால் *
தமருள்ளும்தண்பொருப்புவேலை * - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தையென்பரே *
ஏவல்லவெந்தைக்கிடம்.
2252 இடங்கை வலம்புரிநின்றார்ப்ப * எரிகான்று
அடங்கார் ஓடுங்குவித்ததாழி * - விடங்காலும்
தீவாயரவணைமேல்தோன்றல் திசையளப்பான் *
பூவாரடி நிமிர்த்தபோது.
2253 போதறிந்துவானரங்கள் பூஞ்சுனைபுக்கு * ஆங்கலர்ந்த
போதரிந்துகொண்டேத்தும் போது * உள்ளம்! - போது
மணிவேங்கடவன் மலரடிக்கேசெல்ல *
அணிவேங்கடவன்பேராய்ந்து.
2254 ஆய்ந்துரைப்பனாயிரம்பேர் ஆய்நடுவந்திவாய் *
வாய்ந்தமலர்தூவிவைகலும் * - ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண்கரிவிடுத்தபெம்மான்
இறைக்குஆட்படத்துணிந்தயான்.
2255 யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்புமெப்பொழுதும் *
யானேதவமுடையேன் எம்பெருமான்! * - யானே
இருந்ததமிழ்நன்மாலை இணையடிக்கேசொன்னேன் *
பெருந்தமிழன்நல்லேன்பெரிது.
2256 பெருகுமதவேழம் மாப்பிடிக்கிமுன்னின்று *
இருகணிளமூங்கில்வாங்கி * - அருகிருந்த
தேன்கலந்துநீட்டும் திருவேங்கடம்கண்டீர் *
வான்கலந்தவண்ணன்வரை.
2257 வரைச்சந்தனக்குழம்பும் வான்கலனும்பட்டும் *
விரைப்பொலிந்த வெண்மல்லிகையும்-நிரைத்துக் கொண்டு *
ஆதிக்கண்நின்ற அறிவனடியிணையே *
ஓதிப்பணிவதுறும்.
2258 உறுங்கண்டாய்நன்னெஞ்சே! உத்தமன்நற்பாதம் *
உறுங்கண்டா யொண்கமலந்தன்னால் * - உறுங்கண்டாய்
ஏத்திப்பணிந்து அவன்பேர் ஈரைஞ்ஞூறுஎப்பொழுதும் *
சாத்தியுரைத்தல்தவம்.
2259 தவஞ்செய்து நான்முகனேபெற்றான் * தரணி
நிவந்தளப்ப நீட்டியபொற்பாதம் * - சிவந்ததன்
கையனைத்தும் ஆரக்கழுவினான் * கங்கைநீர்
பெய்தனைத்துப்பேர்மொழிந்துபின்.
2260 பின்னின்று தாயிரப்பக்கேளான் * பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் * -சொல்நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத்தோன்றல் * அவனளந்த
நீள்ணிலந்தானத்தனைக்கும்நேர்.
2261 நேர்ந்தேனடிமை நினைந்தேனதொண்கமலம் *
ஆர்ந்தேனுன்சேவடிமேலன்பாய் * - ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்குஎன்கொலோ? * முன்னைப்
படிக்கோலம்கண்டபகல்.
2262 பகல்கண்டேன் நாரணனைக்கண்டேன் * - கனவில்
மிகக்கண்டேன் மீண்டுஅவனைமெய்யே * - மிகக்கண்டேன்
ஊன்திகழும்நேமி ஒளிதிகழும்சேவடியான் *
வான்திகழும்சோதி வடிவு.
2263 வடிக்கோலவாள்நெடுங்கண் மாமலராள் * செவ்விப்
படிக்கோலங்கண்டு அகலாள்பல்நாள் * - அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும்நலம்புரிந்ததென்கொலோ? *
கோலத்தாலில்லைகுறை.
2264 குறையாகவெஞ்சொற்கள் கூறினேன்கூறி *
மறையாங்கெனவுரைத்தமாலை * - இறையேனும்
ஈயுங்கொல்! என்றே இருந்தேன்எனைப்பகலும் *
மாயன்கண்சென்றவரம்.
2265 வரங்கருதித்தன்னை வணங்காதவன்மை *
உரம்கருதி மூர்க்கத்தவனை * -நரங்கலந்த
சிங்கமாய்க்கீண்ட திருவனடியிணையே *
அங்கண்மாஞாலத்தமுது.
2266 அமுதென்றும்தேனென்றும் ஆழியானென்றும் *
அமுதன்றுகொண்டுகந்தானென்றும் * - அமுதன்ன
சொன்மாலையேத்தித் தொழுதேன்சொலப்பட்ட *
நன்மாலையேத்திநவின்று.
2267 நவின்றுரைத்தநாவலர்கள் நாண்மலர்கொண்டு * ஆங்கே
பயின்றதனால் பெற்றபயனென்கொல்? * - பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரியமேகமணிவண்ணனை * யான்
எத்தவத்தால்காண்பன்கொல் இன்று?
2268 இன்றாவறிகின்றேனல்லேன் * இருநிலத்தைச்
சென்றுஆங்களந்த திருவடியை * - அன்று
கருக்கோட்டியுள்கிடந்து கைதொழுதேன், கண்டேன் *
திருக்கோட்டியெந்தைதிறம்.
2269 திறம்பிற்றினியறிந்தேன் தென்னரங்கத்தெந்தை *
திறம்பாவழிசென்றார்க்கல்லால் * - திறம்பாச்
செடிநரகைநீக்கித் தாம்செல்வதன்முன் * வானோர்
கடிநகரவாசற்கதவு.
2270 கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து *
அதவிப்போர்யானையொசித்து * - பதவியாய்ப்
பாணியால்நீரேற்றுப் பண்டொருகால்மாவலியை *
மாணியாய்க்கொண்டிலையேமண்?
2271 மண்ணுலகம்ஆளேனே? வானவர்க்கும்வானவனாய் *
விண்ணுலகம்தன்னகத்துமேவேனே? * - நண்ணித்
திருமாலைச் செங்கணெடியானை * எங்கள்
பெருமானைக் கைதொழுதபின்.
2272 பின்னாலருநரகம் சேராமல் பேதுறுவீர் *
முன்னால்வணங்கமுயன்மினோ * - பல்நூல்
அளந்தானைக் கார்க்கடல்சூழ்ஞாலத்தை * எல்லாம்
அளந்தானவன்சேவடி.
2273 அடியால் முன்கஞ்சனைச்செற்று * அமரரேத்தும்
படியான் கொடிமேற்புள்கொண்டான் * -நெடியான்றன்
நாமமே ஏத்துமின்கள், ஏத்தினால் * தாம்வேண்டும்
காமமே காட்டும்கடிது.
2274 கடிதுகொடுநரகம் பிற்காலுஞ்செய்கை *
கொடிதென்று அதுகூடாமுன்னம் * - வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய்கீண்டானை * கொங்கைநஞ்சு
உண்டானையேத்துமினோவுற்று.
2275 உற்றுவணங்கித்தொழுமின் * உலகேழும்
முற்றும்விழுங்கும் முகில்வண்ணன் * - பற்றிப்
பொருந்தாதான்மார்பிடந்து பூம்பாடகத்துள்
இருந்தானை * ஏத்தும்என்நெஞ்சு.
2276 என்னெஞ்சமேயான் என்சென்னியான் * தானவனை
வன்னெஞ்சங்கீண்ட மணிவண்ணன் * -முன்னம்சேய்
ஊழியான் ஊழிபெயர்த்தான் * உலகேத்தும்
ஆழியான் அத்தியூரான்.
2277 அத்தியூரான் புள்ளையூர்வான் * அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல்துயில்வான் * - மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ்சுண்டான்தனக்கும்
இறையாவான் எங்கள்பிரான்.
2278 எங்கள்பெருமான்! இமையோர்தலைமகன்! நீ *
செங்கண்நெடுமால்! திருமார்பா! * - பொங்கு
படமூக்கினாயிரவாய்ப் பாம்பணைமேல்சேர்ந்தாய் *
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
2279 கொண்டுவளர்க்கக் குழவியாய்த்தான்வளர்ந்தது *
உண்டதுலகேழும்உள்ளொடுங்க * - கொண்டு
குடமாடிக் கோவலனாய்மேவி * என்னெஞ்சம்
இடமாகக்கொண்டஇறை.
2280 இறையெம்பெருமான்! அருளென்று * இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள்தூவ * - அறைகழல
சேவடியான் செங்கணெடியான் * குறளுருவாய்
மாவடிவில்மண்கொண்டான்மால்.
2281 மாலே! நெடியோனே! கண்ணனே! * விண்ணவர்க்கு
மேலா! வியன்துழாய்க்கண்ணியனே! * - மேலால்
விளவின்காய் கன்றினால்வீழ்த்தவனே! * என்தன்
அளவன்றால் யானுடையஅன்பு.