Thirukkurundānḍagam
திருக்குறுந்தாண்டகம்
Thirukurunthandakam is one of the Prabandhams that emerged as an angam ( auxiliary discipline) of the four Vedas composed by Nammazhvar. Thirumangai āzhvār, having been refined and engaged in service by the Lord, begins by lamenting with 'Vadinen Vadi,' crying out to the Lord. Unable to bear the separation, Thirumangai āzhvār sings of the Lord with
+ Read moreநம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு வேதஸாரமான பிரபந்தங்களுக்கு ஆறங்கம் கூற அவதரித்த பிரபந்தங்களில் ஒன்று திருக்குறுந்தாண்டகம். திருமங்கை ஆழ்வார் எம்பெருமானால் திருத்திப் பணி கொள்ளப்பட்டு 'வாடினேன் வாடி' என்று தொடங்கி அவனிடத்தில் கதறி அழுகிறார். பகவானோ இவருக்கு முகம் காட்டாதிருக்க, பிரிவை
+ Read moreGroup: 2nd 1000
Verses: 2032 to 2051
Glorification: Archa / Manifest State (அர்ச்சாவதாரம்)
Eq scripture: Nirukta
- TKT 1
2032 ## நிதியினைப் பவளத் தூணை * நெறிமையால் நினைய வல்லார் *
கதியினைக் கஞ்சன் மாளக் * கண்டு முன் அண்டம் ஆளும் **
மதியினை மாலை வாழ்த்தி * வணங்கி என் மனத்து வந்த *
விதியினைக் கண்டு கொண்ட * தொண்டனேன் விடுகிலேனே 1 - TKT 2
2033 காற்றினைப் புனலைத் தீயைக் * கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை * இமயம் மேய * எழில் மணித் திரளை * இன்ப
ஆற்றினை அமுதம் தன்னை * அவுணன் ஆர் உயிரை உண்ட
கூற்றினை * குணங்கொண்டு உள்ளம் * கூறு நீ கூறுமாறே 2 - TKT 3
2034 பா இரும் பரவை தன்னுள் * பரு வரை திரித்து * வானோர்க்கு
ஆய் இருந்து அமுதங் கொண்ட * அப்பனை எம் பிரானை **
வேய் இருஞ் சோலை சூழ்ந்து * விரி கதிர் இரிய நின்ற *
மா இருஞ் சோலை மேய * மைந்தனை வணங்கினேனே 3 - TKT 4
2035 கேட்க யான் உற்றது உண்டு * கேழல் ஆய் உலகம் கொண்ட *
பூக் கெழு வண்ணனாரைப் * போதரக் கனவில் கண்டு **
வாக்கினால் கருமம் தன்னால் * மனத்தினால் சிரத்தை தன்னால் *
வேட்கை மீதூர வாங்கி * விழுங்கினேற்கு இனியவாறே 4 - TKT 5
2036 இரும்பு அனன்று உண்ட நீர்போல் * எம் பெருமானுக்கு * என் தன்
அரும் பெறல் அன்பு புக்கிட்டு * அடிமைபூண்டு உய்ந்து போனேன் **
வரும் புயல் வண்ணனாரை * மருவி என் மனத்து வைத்து *
கரும்பின் இன் சாறு போலப் * பருகினேற்கு இனியவாறே 5 - TKT 6
2037 மூவரில் முதல்வன் ஆய * ஒருவனை உலகம் கொண்ட *
கோவினைக் குடந்தை மேய * குரு மணித் திரளை ** இன்பப்
பாவினைப் பச்சைத் தேனைப் * பைம் பொன்னை அமரர் சென்னிப்
பூவினை * புகழும் தொண்டர் * என் சொல்லிப் புகழ்வர் தாமே? 6 - TKT 7
2038 இம்மையை மறுமை தன்னை * எமக்கு வீடு ஆகி நின்ற *
மெய்ம்மையை விரிந்த சோலை * வியன் திரு அரங்கம் மேய **
செம்மையைக் கருமை தன்னைத் * திருமலை ஒருமையானை *
தன்மையை நினைவார் என் தன் * தலைமிசை மன்னுவாரே 7 - TKT 8
2039 வானிடைப் புயலை மாலை * வரையிடைப் பிரசம் ஈன்ற *
தேனிடைக் கரும்பின் சாற்றைத் * திருவினை மருவி வாழார் **
மானிடப் பிறவி அந்தோ * மதிக்கிலர் கொள்க * தம் தம்
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக்கு * உறுதியே வேண்டினாரே 8 - TKT 9
2040 உள்ளமோ ஒன்றில் நில்லாது * ஓசையில் எரி நின்று உண்ணும் *
கொள்ளிமேல் எறும்புபோலக் * குழையுமால் என் தன் உள்ளம் **
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் * தேவராய் உலகம் கொண்ட *
ஒள்ளியீர் உம்மை அல்லால் * எழுமையும் துணை இலோமே 9 - TKT 10
2041 சித்தமும் செவ்வை நில்லாது * என் செய்கேன் தீவினையேன் *
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே * பணியாய் எந்தாய் **
முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில் வண்ணா * என்
அத்த நின் அடிமை அல்லால் * யாதும் ஒன்று அறிகிலேனே 10 - TKT 11
2042 தொண்டு எல்லாம் பரவி நின்னைத் * தொழுது அடி பணியுமாறு
கண்டு * தான் கவலை தீர்ப்பான் ஆவதே * பணியாய் எந்தாய் **
அண்டம் ஆய் எண் திசைக்கும் * ஆதி ஆய் நீதி ஆன *
பண்டம் ஆம் பரம சோதி * நின்னையே பரவுவேனே 11 - TKT 12
2043 ஆவியை அரங்க மாலை * அழுக்கு உடம்பு எச்சில் வாயால் *
தூய்மை இல் தொண்டனேன் நான் * சொல்லினேன் தொல்லை நாமம் **
பாவியேன் பிழைத்தவாறு என்று * அஞ்சினேற்கு அஞ்சல் என்று *
காவிபோல் வண்ணர் வந்து * என் கண்ணுளே தோன்றினாரே 12 - TKT 13
2044 இரும்பு அனன்று உண்ட நீரும் * போதரும் கொள்க * என் தன்
அரும் பிணி பாவம் எல்லாம் * அகன்றன என்னை விட்டு **
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த * அரங்க மா கோயில் கொண்ட *
கரும்பினைக் கண்டுகொண்டு * என் கண் இணை களிக்குமாறே 13 - TKT 14
2045 காவியை வென்ற கண்ணார் * கலவியே கருதி * நாளும்
பாவியேன் ஆக எண்ணி * அதனுள்ளே பழுத்தொழிந்தேன் **
தூவி சேர் அன்னம் மன்னும் * சூழ் புனல் குடந்தையானை *
பாவியேன் பாவியாது * பாவியேன் ஆயினேனே 14 - TKT 15
2046 முன் பொலா இராவணன் தன் * முது மதிள் இலங்கை வேவித்து *
அன்பினால் அனுமன் வந்து * ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு **
என்பு எலாம் உருகி உக்கிட்டு * என்னுடை நெஞ்சம் என்னும் *
அன்பினால் ஞான நீர் கொண்டு * ஆட்டுவன் அடியனேனே 15 - TKT 16
2047 மாய மான் மாயச் செற்று * மருது இற நடந்து * வையம்
தாய் அமா பரவை பொங்கத் * தட வரை திரித்து ** வானோர்க்கு
ஈயும் மால் எம்பிரானார்க்கு * என்னுடைச் சொற்கள் என்னும் *
தூய மா மாலைகொண்டு * சூட்டுவன் தொண்டனேனே 16 - TKT 17
2048 பேசினார் பிறவி நீத்தார் * பேர் உளான் பெருமை பேசி *
ஏசினார் உய்ந்து போனார் * என்பது இவ் உலகின் வண்ணம் **
பேசினேன் ஏச மாட்டேன் * பேதையேன் பிறவி நீத்தற்கு *
ஆசையோ பெரிது கொள்க * அலை கடல் வண்ணர்பாலே 17 - TKT 18
2049 இளைப்பினை இயக்கம் நீக்கி * இருந்து முன் இமையைக் கூட்டி *
அளப்பு இல் ஐம்புலன் அடக்கி * அன்பு அவர்கண்ணே வைத்து **
துளக்கம் இல் சிந்தைசெய்து * தோன்றலும் சுடர்விட்டு * ஆங்கே
விளக்கினை விதியின் காண்பார் * மெய்ம்மையைக் காண்கிற்பாரே 18 - TKT 19
2050 பிண்டி ஆர் மண்டை ஏந்திப் * பிறர் மனை திரிதந்து உண்ணும் *
முண்டியான் சாபம் தீர்த்த * ஒருவன் ஊர் ** உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் * உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யல் ஆமே? 19 - TKT 20
2051 ## வானவர் தங்கள் கோனும் * மலர்மிசை அயனும் * நாளும்
தே மலர் தூவி ஏத்தும் * சேவடிச் செங் கண் மாலை **
மான வேல் கலியன் சொன்ன * வண் தமிழ் மாலை நாலைந்தும் *
ஊனம் அது இன்றி வல்லார் * ஒளி விசும்பு ஆள்வர் தாமே 20