Your browser does not support the audio element.
audio
2585 முயற்றிசுமந்தெழுந்து முந்துற்றநெஞ்சே! *
இயற்றுவாயெம்மொடுநீகூடி * - நயப்புடைய
நாவீன்தொடைக்கிளவியுள் பொதிவோம் * நற்பூவைப்
பூவீன்றவண்ணன்புகழ். (2)
2586 புகழ்வோம்பழிப்போம் புகழோம்பழியோம் *
இகழ்வோம்மதிப்போம் மதியோம் - இகழோம் * மற்று
எங்கள்மால்! செங்கண்மால்! சீறல்நீதீவினையோம் *
எங்கள்மால்கண்டாய்இவை.
2587 இவையன்றேநல்ல இவையன்றேதீய *
இவையென்றிவையறிவனேலும் * - இவையெல்லாம்
என்னாலடைப்புநீக்கொண்ணாது இறையவனே! *
என்னாற்செயற்பாலதென்?
2588 என்னின்மிகுபுகழார்யாவரே? * பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன்யானல்லால் * - என்ன
கருஞ்சோதிக் கண்ணன், கடல்புரையும் * சீலப்
பெருஞ்சோதிக்குஎன்னெஞ்சாள்பெற்று.
2589 பெற்றதாய்நீயே பிறப்பித்ததந்தைநீ *
மற்றையாராவாரும்நீபேசில் * எற்றேயோ!
மாய! மாமாயவளை மாயமுலைவாய்வைத்த *
நீயம்மா! காட்டும்நெறி.
2590 நெறிகாட்டி நீக்குதியோ? * நின்பால்கருமா
முறிமேனிகாட்டுதியோ? * மேல்நாள் - அறியோமை
எஞ்செய்வானெண்ணினாய்? கண்ணனே! * ஈதுரையாய்
என்செய்தாலென்படோம்யாம்?
2591 யாமேயருவினையோம்சேயோம் * என்நெஞ்சினார்
தாமே அணுக்கராய்ச்சார்ந்தொழிந்தார் * - பூமேய
செம்மாதை நின்மார்வில்சேர்வித்து * பாரிடந்த
அம்மா! நின்பாதத்தருகு.
2592 அருகும்சுவடும் தெரிவுணரோம் * அன்பே
பெருகும்மிக இதுவென்? பேசீர் * - பருகலாம்
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம்கண்காண்பரிய *
நுண்புடையீர்! நும்மைநுமக்கு.
2593 நுமக்கடியோமென்றென்று நொந்துதுரைத்தென்? * மாலார்
தமக்கு அவர்த்தாம்சார்வரியரானால் * - எமக்கினி
யாதானும் ஆகிடுகாண்நெஞ்சே! * அவர்திறத்தே
யாதானும்சிந்தித்திரு.
2594 இருநால்வர் ஈரைந்தின்மேலொருவர் * எட்டோ
டொருநால்வர் ஓரிருவரல்லால் * திருமாற்கு
யாமார் வணக்கமார்? ஏபாவம்நன்னெஞ்சே! *
நாமாமிகவுடையோம்நாழ்.
2595 நாழாலமர்முயன்ற வல்லரக்கனின்னுயிரை *
வாழாவகைவலிதல்நின்வலியே * - ஆழாத
பாரும்நீவானும்நீ காலும்நீதீயும்நீ *
நீரும்நீயாய்நின்றநீ.
2596 நீயன்றேயாழ்துயரில் வீழ்விப்பான்நின்றுழன்றாய்? *
போயொன்றுசொல்லியென்? போநெஞ்சே! * - நீயென்றும்
காழ்த்துபதேசம்தரினும் கைகொள்ளாய் * கண்ணன்தாள்
வாழ்த்துவதேகண்டாய்வழக்கு.
2597 வழக்கொடுமாறுகொளன்று, அடியார்வேண்ட *
இழக்கவும்காண்டுமிறைவ! - இழப்புண்டே? *
எம்மாட்கொண்டாகிலும் யான்வேண்ட என்கண்கள்
தம்மால் * காட்டுன்மேனிச்சாய்.
2598 சாயால்கரியானை உள்ளறியாராய்நெஞ்சே! *
பேயார்முலைகொடுத்தார்பேயராய் * - நீயார்? போய்த்
தேம்பூண்சுவைத்து ஊனறிந்தறிந்தும் * தீவினையாம்
பாம்பார்வாய்க்கைநீட்டல்பார்த்தி.
2599 பார்த்தோர் எதிரிதா நெஞ்சே * படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம்பேச்சில்லை * - ஆர்த்துஓதம்
தம்மேனி தாள்தடவத்தாம்கிடந்து * தம்முடைய
செம்மேனிக்கண்வளர்வார்சீர்.
2600 சீரால்பிறந்து சிறப்பால்வளராது *
பேர்வாமனாகாக்கால் பேராளா! * - மார்பாரப்
புல்கிநீயுண்டுமிழ்ந்த பூமிநீரேற்பரிதே? *
சொல்லுநீயாமறியச்சூழ்ந்து.
2601 சூழ்ந்தடியார்வேண்டினக்கால் தோன்றாதுவிட்டாலும் *
வாழ்ந்திடுவர்பின்னும்தம்வாய்திறவார் * - சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள்போலரக்கன் வன்தலைகள்தாமிடிய *
தாள்வரைவில்லேந்தினார்தாம்.
2602 தாம்பாலாப்புண்டாலும் அத்தழும்புதானிளக *
பாம்பாலாப்புண்டுபாடுற்றாலும் * - சோம்பாதுஇப்
பல்லுருவையெல்லாம் படர்வித்தவித்தா! * உன்
தொல்லுருவையாரறிவார்? சொல்லு.
2603 சொல்லில்குறையில்லை சூதறியாநெஞ்சமே! *
எல்லிபகலென்னாதுஎப்போதும் * - தொல்லைக்கண்
மாத்தானைக்கெல்லாம் ஓரைவரையேமாறாக *
காத்தானைக்காண்டும்நீகாண்.
2604 காணப்புகிலறிவு கைக்கொண்டநல்நெஞ்சம் *
நாணப்படுமன்றே? நாம்பேசில் * - மாணி
யுருவாகிக்கொண்டு உலகம்நீரேற்றசீரான் *
திருவாகம்தீண்டிற்றுச்சென்று.
2605 சென்றங்குவெந்நரகில் சேராமல்காப்பதற்கு *
இன்றிங்கென்னெஞ்சாலிடுக்குண்ட * - அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்தநீருருவும்கண்புதைய *
காருருவன்தான்நிமிர்த்தகால்.
2606 காலேபொதத்திரிந்து கத்துவராமிந்நாள் *
மாலார்குடிபுகுந்தாரென்மனத்தே * - மேலால்
தருக்குமிடம்பாட்டினொடும் வல்வினையார்தாம் * வீற்
றிருக்குமிடம்காணாதிளைத்து.
2607 இளைப்பாயிளையாப்பாய் நெஞ்சமே! சொன்னேன் *
இளைக்கநமன்தமர்கள் பற்றி - இளைப்பெய்த *
நாய்தந்துமோதாமல் நல்குவான்நல்காப்பான் *
தாய்தந்தையெவ்வுயிர்க்கும்தான்.
2608 தானேதனித்தோன்றல் தன்னளப்பொன்றில்லாதான் *
தானேபிறர்கட்கும் தற்றோன்றல் * - தானே
இளைக்கிற்பார்கீழ்மேலாம் மீண்டமைப்பானானால் *
அளக்கிற்பார்பாரின்மேலார்?
2609 ஆரானுமாதானும்செய்ய * அகலிடத்தை
ஆராய்ந்து அதுதிருத்தலாவதே? * - சீரார்
மனத்தலை வன்துன்பத்தைமாற்றினேன் * வானோ
ரினத்தலைவன்கண்ணனால்யான்.
2610 யானும்என்னெஞ்சும் இசைந்தொழிந்தோம் * வல்வினையைக்
கானும்மலையும் புகக்கடிவான் * - தானோர்
இருளன்னமாமேனி எம்மிறையார்தந்த *
அருளென்னும்தண்டாலடித்து.
2611 அடியால்படிகடந்தமுத்தோ? * அதன்றேல்
முடியால் விசும்பளந்தமுத்தோ? * - நெடியாய்!
செறிகழல்கள்தாள்நிமிர்த்துச் சென்றுலகமெல்லாம் *
அறிகிலமால்நீயளந்தவன்று.
2612 அன்றேநம்கண்காணும் ஆழியான்காருருவம் *
இன்றேநாம்காணாதிருப்பதுவும் * - என்றேனும்
கட்கண்ணால் காணாதஅவ்வுருவை * நெஞ்சென்னும்
உட்கண்ணேல்காணுமுணர்ந்து.
2613 உணரவொருவர்க்கு எளியனே? செவ்வே *
இணரும்துழாயலங்கலெந்தை * - உணரத்
தனக்கெளியரெவ்வளவர் அவ்வளவன்ஆனால் *
எனக்கெளியனெம்பெருமானிங்கு.
2614 இங்கில்லை பண்டுபோல்வீற்றிருத்தல் * என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும்சிறிதுள்ளம் * - அங்கே
மடியடக்கிநிற்பதனில் வல்வினையார்தாம் * மீண்டு
அடியெடுப்பதன்றோவழகு?
2615 அழகுமறிவோமாய் வல்வினையைத்தீர்ப்பான் *
நிழலுமடிதோறுமானோம் * - சுழலக்
குடங்கள் தலைமீதெடுத்துக்கொண்டாடி * அன்றுஅத்
தடங்கடலைமேயார் தமக்கு.
2616 தமக்கடிமைவேண்டுவோர் தாமோதரனார்
தமக்கு * அடிமைசெய்யென்றால் செய்யாது * - எமக்கென்று
தாம்செய்யுந்தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் *
யாஞ்செய்வதிவ்விடத்திங்கியாது?
2617 யாதானுமொன்றறியில் தன்னுகக்கிலென்கொலோ? *
யாதானும்நேர்ந்தணுகாவாறுதான் * - யாதானும்
தேறுமாசெய்யா அசுரர்களை * நேமியால்
பாறுபாறாக்கினான்பால்.
2618 பாலாழி நீகிடக்கும்பண்பை * யாம்கேட்டேயும்
காலாழும்நெஞ்சழியும் கண்சுழலும் * - நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தொல்வினையெம்பால்கடியும் *
நீதியாய்! நிற்சார்ந்துநின்று.
2619 நின்றுமிருந்தும் கிடந்தும்திரிதந்தும் *
ஒன்றுமோவாற்றான் என்நெஞ்சகலான் * - அன்றங்கை
வன்புடையால்பொன்பெயரோன் வாய்தகர்த்து மார்விடந்தான் *
அன்புடையனன்றேயவன்?
2620 அவனாமிவனாமுவனாம் * மற்றுஉம்ப
ரவனாம் அவனென்றிராதே * - அவனாம்
அவனேயெனத்தெளிந்து கண்ணனுக்கேதீர்ந்தால் *
அவனேஎவனேலுமாம்.
2621 ஆமாறறிவுடையாராவது அரிதன்றே? *
நாமேயதுவுடையோம் நன்னெஞ்சே! * - பூமேய்
மதுகரமே தண்துழாய்மாலாரை * வாழ்த்தாம்
அதுகரமேயன்பாலமை.
2622 அமைக்கும்பொழுதுண்டே? ஆராயில்நெஞ்சே! *
இமைக்கும்பொழுதும் இடைச்சி - குமைத்திறங்கள் *
ஏசியேயாயினும் ஈன்துழாய்மாயனையே *
பேசியேபோக்காய்பிழை.
2623 பிழைக்கமுயன்றோமோ? நெஞ்சமே! பேசாய் *
தழைக்குந்துழாய்மார்வன்தன்னை * - அழைத்துஒருகால்
போயுபகாரம் பொலியக்கொள்ளாது * அவன்புகழே
வாயுபகாரம்கொண்டவாய்ப்பு.
2624 வாய்ப்போஇதுவொப்ப மற்றில்லைவாநெஞ்சே! *
போய்ப்போஒய்வெந்நரகில்பூவியேல் * - தீப்பால
பேய்த்தாய் உயிர்கலாய்ப்பாலுண்டு * அவளுயிரை
மாய்த்தானை வாழ்தேவலி.
2625 வலியமெனநினைந்து வந்தெதிர்ந்தமல்லர் *
வலியமுடியிடியவாங்கி * - வலியநின்
பொன்னாழிக்கையால் புடைத்திடுதிகீளாதே *
பல்நாளும்நிற்குமிப்பார்.
2626 பாருண்டான்பாருமிழ்ந்தான் பாரிடந்தான்பாரளந்தான் *
பாரிடமுன்படைத்தானென்பரால் * - பாரிட
மாவானும் தானானால்ஆரிடமே? * மற்றொருவர்க்கு
ஆவான்புகாவாலவை.
2627 அவயமெனநினைந்து வந்தசுரர்பாலே *
நவையைநளிர்விப்பான்தன்னை * - கவையில்
மனத்துயரவைத்திருந்து வாழ்த்தாதார்க்குண்டோ? *
மனத்துயரைமாய்க்கும்வகை.
2628 வகைசேர்ந்தநல் நெஞ்சும் நாவுடையவாயும் *
மிகவாய்ந்துவீழாவெனிலும் * - மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தாதிருப்பர்இதுவன்றே? *
மேலைத்தாம் செய்யும்வினை.
2629 வினையார்தரமுயலும் வெம்மையேயஞ்சி *
தினையாஞ்சிறிதளவுஞ்செல்ல - நினையாது *
வாசகத்தாலேத்தினேன் வானோர்தொழுதிறைஞ்சும் *
நாயகத்தான்பொன்னடிக்கள்நான்.
2630 நான்கூறும் கூற்றாவதுஇத்தனையே * நாள்நாளும்
தேங்கோத நீருருவன்செங்கண்மால் * - நீங்காத
மாகதியாம்வெந்நரகில் சேராமல்காப்பதற்கு *
நீகதியாநெஞ்சேநினை.
2631 நினித்திறைஞ்சிமானிடவர் ஒன்றிரப்பரென்றே *
நினைத்திடவும்வேண்டாநீநேரே * - நினைத்திறஞ்ச
எவ்வளவர்எவ்விடத்தோர்மாலே! * அதுதானும்
எவ்வளவுமுண்டோ? எமக்கு.
2632 எமக்குயாம்விண்ணாட்டுக்கு உச்சமதாம்வீட்டை *
அமைத்திருந்தோம் அஃதன்றேயாமாறு? * - அமைப்பொலிந்த
மென்தோளிகாரணமா வெங்கோட்டேறேழுடனே *
கொன்றானையேமனத்துக்கொண்டு.
2633 கொண்டல்தான்மால்வரைதான் மாகடல்தான் கூரிருள் தான் *
வண்டறாப்பூவைதான் மற்றுத்தான் * - கண்டநாள்
காருருவம் காண்தோறும்நெஞ்சோடும் * கண்ணனார்
பேருருவென்றெம்மைப்பிரிந்து.
2634 பிரிந்தொன்றுநோக்காது தம்முடையபின்னே *
திரிந்துழுலும்சிந்தனையார்தம்மை * - புரிந்தொருகால்
ஆவா! எனவிரங்கார் அந்தோ! வலிதேகொல்? *
மாவைபிளந்தார்மனம்.
2635 மனமாளுமோரைவர் வன்குறும்பர்தம்மை *
சினமாள்வித்துஓரிடத்தேசேர்த்து * - புனமேய
தண்துழாயானடியைத்தான் காணுமஃதன்றே? *
வண்டுழாஞ்சீரார்க்குமாண்பு.
2636 மாண்பாவித்துஅந்நான்றுமண்ணிரந்தான் * மாயவள்நஞ்சு
ஊண்பாவித்துண்டானதோருருவம் * - காண்பான்நங்
கண்ணவா மற்றொன்றுகாணுறா * சீர்பரவாது
உண்ணவாய்தானுறுமோவொன்று?
2637 ஒன்றுண்டுசெங்கண்மால்! யானுரைப்பது * உன்னடியார்க்கு
என்செய்வனென்றேயிருத்திநீ * - நின்புகழில்
வைகும் தம்சிந்தையிலும்மற்றினிதோ? * நீயவர்க்கு
வைகுந்தமென்றருளும்வான்.
2638 வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? *
கானோ? ஒருங்கிற்றும்கண்டிலமால் * ஆனீன்ற
கன்றுயரத்தாமெறிந்து காயுதிர்த்தார்தாள்பணிந்தோம் *
வன்துயரையாவா! மருங்கு.
2639 மருங்கோதம்மோதும் மணிநாகணையார் *
மருங்கேவரவரியரேலும் * - ஒருங்கே
எமக்கவரைக்காணலாம் எப்பொழுதுமுள்ளால் *
மனக்கவலைதீர்ப்பார்வரவு.
2640 வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால் * எல்லே!
ஒருவாறு ஒருவன்புகாவாறு * - உருமாறும்
ஆயவர்தாம்சேயவர்தாம் அன்றுலகம்தாயவர்தாம் *
மாயவர்தாம்காட்டும்வழி.
2641 வழித்தங்குவல்வினையை மாற்றானோ? நெஞ்சே! *
தழீஇக்கொண்டு போரவுணன்தன்னை * - சுழித்தெங்கும்
தாழ்விடங்கள்பற்றிப் புலால்வெள்ளந்தானுகள *
வாழ்வடங்கமார்விடந்தமால்.
2642 மாலே! படிச்சோதிமாற்றேல் * இனியுனது
பாலேபோல் சீரிற்பழுத்தொழிந்தேன் * - மேலால்
பிறப்பின்மைபெற்று அடிக்கீழ்க்குற்றேவலன்று *
மறப்பின்மை யான்வேண்டும்மாடு.
2643 மாடே வரப்பெறுவராமென்றே * வல்வினையார்
காடானுமாதானும் கைக்கொள்ளார் * - ஊடேபோய்ப்
பேரோதம்சிந்து திரைக்கண்வளரும் * பேராளன்
பேரோதச்சிந்திக்கப்பேர்ந்து.
2644 பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய்நில்லாப்பாய் *
ஈன்துழாய்மாயனையே என்னெஞ்சே! * பேர்ந்தெங்கும்
தொல்லைமாவெந்நரகில் சேராமல்காப்பதற்கு *
இல்லைகாண்மற்றோரிறை.
2645 இறைமுறையான்சேவடிமேல் மண்ணளந்தஅந்நாள் *
மறைமுறையால் வானாடர்கூடி * - முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தாலொவ்வாதே * தாழ்விசும்பின்
மீதிலகித்தாங்கிடக்கும்மீன்.
2646 மீனென்னுங்கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய் *
வானென்னும் கேடிலாவான்குடைக்கு * - தானோர்
மணிக்காம்புபோல் நிமிர்ந்து மண்ணளந்தான் * நங்கள்
பிணிக்காம்பெருமருந்துபின்.
2647 பின்துரக்கும்காற்றிழந்த சூல்கொண்டல்பேர்ந்தும் போய் *
வன்திரைக்கண் வந்தணைந்தவாய்மைத்தே * - அன்று
திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கும் *
பருச்செவியுமீர்ந்தபரன்.
2648 பரனாமவனாதல் பாவிப்பராகில் *
உரனாலொருமூன்றுபோதும் * - மரமேழன்று
எய்தானைப் புள்ளின் வாய்கீண்டானையே * அமரர்
கைதான்தொழாவேகலந்து.
2649 கலந்துநலியும் கடுந்துயரைநெஞ்சே! *
மலங்கவடித்து மடிப்பான் * - விலங்கல்போல்
தொன்மாலைக்கேசவனை நாரணனை மாதவனை *
சொன்மாலையெப்பொழுதும்சூட்டு.
2650 சூட்டாயநேமியான் தொல்லரக்கனின்னுயிரை *
மாட்டேதுயரிழைத்தமாயவனை * - ஈட்ட
வெறிகொண்ட தண்துழாய்வேதியனை * நெஞ்சே!
அறிகண்டாய் சொன்னேனது.
2651 அதுவோநன்றென்று அங்கமருலகோவேண்டில் *
அதுவோபொருளில்லையன்றே? * - அதுவொழிந்து
மண் இன்று ஆள்வேனெனிலும் கூடும்மடநெஞ்சே! *
கண்ணன்தாள் வாழ்த்துவதேகல்.
2652 கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் *
புல்லென்றொழிந்தனகொல்? ஏபாவம்! * - வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்துநீங்கான் *
அடியேனதுள்ளத்தகம்.
2653 அகஞ்சிவந்தகண்ணினராய் வல்வினையராவார் *
முகஞ்சிதைவராமன்றே? முக்கி * - மிகுந்திருமால்
சீர்க்கடலையுள்பொதிந்த சிந்தனையேன்தன்னை *
ஆர்க்கு அடலாம் செவ்வேயடர்த்து?
2654 அடர்பொன்முடியானை ஆயிரம்பேரானை *
சுடர்கொள்சுடராழியானை * - இடர்கடியும்
மாதாபிதுவாக வைத்தேன் எனதுள்ளே *
யாதாகில்யாதேயினி?
2655 இனிநின்று நின்பெருமை யானுரைப்பதென்னே? *
தனிநின்றசார்விலாமூர்த்தி! * - பனிநீர்
அகத்துலவு செஞ்சடையானாகத்தான் * நான்கு
முகத்தான் நின்னுந்திமுதல்.
2656 முதலாந்திருவுருவம் மூன்றென்பர் * ஒன்றே
முதலாகும் மூன்றுக்குமென்பர் * - முதல்வா!
நிகரிலகுகாருருவா! நின்னகத்ததன்றே? *
புகரிலகுதாமரையின்பூ.
2657 பூவையும் காயாவும் நீலமும், பூக்கின்ற *
காவிமலரென்றும் காண்தோறும் * - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் * அவ்வவை
யெல்லாம்பிரானுருவேயென்று.
2658 என்றுமொருநாள் ஒழியாமையானிரந்தால் *
ஒன்றுமிரங்காருருக்காட்டார் * - குன்று
குடையாக ஆகாத்தகோவலனார் * நெஞ்சே!
புடைதான்பெரிதேபுவி.
2659 புவியுமிருவிசும்பும் நின்னகத்த * நீயென்
செவியின் வழிபுகுந்து என்னுள்ளாய் * - அவிவின்றி
யான்பெரியன்நீபெரியை என்பதனையாரறிவார்? *
ஊன்பருகுநேமியாய்! உள்ளு.
2660 உள்ளிலுமுள்ளந்தடிக்கும் வினைப்படலம் *
விள்ள, விழித்துன்னைமெய்யுற்றால் * - உள்ள
உலகளவும் யானும்உளனாவனென்கொலோ? *
உலகளந்தமூர்த்தி! உரை.
2661 உரைக்கிலோர்சுற்றத்தார் உற்றாரென்றுஆரே? *
இரைக்குங்கடற்கிடந்தவெந்தாய்! * - உரைப்பெல்லாம் *
நின்னன்றி மற்றிலேன்கண்டாய் * எனதுயிர்க்குஓர்
சொல்நன்றியாகும்துணை.
2662 துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும் * சுற்றத்
திணைநாளும் இன்புடைத்தாமேலும் * - கணைநாணில்
ஓவாத்தொழிற்சார்ங்கன் தொல்சீரைநல்நெஞ்சே! *
ஓவாதவூணாகவுண்.
2663 உள்நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையையஞ்சுமே? *
விண்ணாட்டையொன்றாகமெச்சுமே? * - மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற்றானாலும் * ஆழியங்கைப்
பேராயற்கு ஆளாம்பிறப்பு.
2664 பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து * பின்னும்
இறக்கவுமின்புடைத்தாமேலும் * - மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே? * மண்ணளந்தான்
பாதமேயேத்தாப்பகல்.
2665 பகலிராவென்பதுவும் பாவியாது * எம்மை
இகல்செய்து இருபொழுதுமாள்வர் * - தகவாத்
தொழும்பரிவர்சீர்க்கும் துணையிலரென்றோரார் *
செழும்பரவைமேயார்தெரிந்து.
2666 தெரிந்துணர்வொன்றின்மையால் தீவினையேன் * வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம் * - கரந்துருவின்
அம்மானை அந்நான்றுபின் தொடர்ந்த * ஆழியங்கை
அம்மானையேத்தாதயர்ந்து.
2667 அயர்ப்பாயயராப்பாய் நெஞ்சமே! சொன்னேன் *
உயப்போம்நெறியிதுவேகண்டாய் * - செயற்பால
வல்லவேசெய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன் *
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
2668 வாழ்த்தியவனடியைய்ப் பூப்புனைந்து * நின்தலையைத்
தாழ்த்திருகைகூப்பென்றால் கூப்பாத - பாழ்த்தவிதி! *
எங்குற்றாயென்றவனை ஏத்தாதென்னெஞ்சமே! *
தங்கத்தானாமேலுந்தங்கு.
2669 தங்காமுயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து *
எங்கேபுக்கு எத்தவம்செய்திட்டனகொல்? * - பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும் * என்னுடைய
கண்ணன்பால் நல்நிறங்கொள்கார்.
2670 கார்க்கலந்தமேனியான் கைகலந்தவாழியான் *
பார்க்கலந்தவல்வயிற்றான் பாம்பணையான் * - சீர்கலந்த
சொல் நினைந்துபோக்காரேல் சூழ்வினையினாழ்துயரை *
என்னினைந்துபோக்குவரிப்போது? (2)
2671 இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் *
எப்போதும் ஈதேசொல் என்னெஞ்சே! - எப்போதும்
கைகழலாநேமியான் நம்மேல்வினை கடிவான் *
மெய்கழலேயேத்தமுயல். (2)