Chapter 7
Praising the conch - (கருப்பூரம் நாறுமோ)
வலம்புரிக்குக் கிடைத்த பேறு
"White Conch! Panchajanya! Among the five divine weapons, you have gained the greatest fortune! How can one describe the blessings you have received? You are in contact with the ruby-red lips of Lord Krishna! You taste the nectar of His mouth! The wealth you have attained is immense! Even Indra cannot match you! But there is one thing! It is not fair that you alone enjoy the nectar of Krishna's lips, which rightfully belongs to all the Gopis!" says Andal.
வெண் சங்கே! பாஞ்சசன்னியமே! பஞ்சாயுதங்களுள் நீயே பெரும்பேறு பெற்றவன்! நீ அடைந்த பாக்கியத்தை என்ன வென்று கூறுவது! கண்ணபிரான் திருப்பவளச் செவ்வாயோடு தொடர்பு கொண்டுள்ளாய்! வாயமுதைப் பருகுகிறாய்! நீ பெற்ற செல்வமே பெருஞ்செல்வம்! இந்திரனும் உனக்கு நிகராக மாட்டான்! ஆனால் ஒன்று! எல்லா கோபியர்களுக்கும் உரியதான கண்ணன் வாயமுதத்தை ஆக்கிரமித்து நீ ஒருவனே பருகுவது நல்லதன்று! என்று கூறுகிறாள் ஆண்டாள்.
Verses: 567 to 576
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will be with the Lord
- NAT 7.1
567 ## கருப்பூரம் நாறுமோ? * கமலப் பூ நாறுமோ? *
திருப் பவளச் செவ்வாய்தான் * தித்தித்திருக்குமோ? **
மருப்பு ஒசித்த மாதவன் தன் * வாய்ச்சுவையும் நாற்றமும் *
விருப்புற்றுக் கேட்கின்றேன் * சொல் ஆழி வெண்சங்கே (1) - NAT 7.2
568 கடலிற் பிறந்து கருதாது * பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் * ஊழியான் கைத்தலத்து
திடரில் ** குடியேறி * தீய அசுரர் *
நடலைப் பட முழங்கும் * தோற்றத்தாய் நற் சங்கே (2) - NAT 7.3
569 தட வரையின் மீதே * சரற்கால சந்திரன் *
இடை உவாவில் வந்து * எழுந்தாலே போல நீயும் **
வட மதுரையார் மன்னன் * வாசுதேவன் கையில் *
குடியேறி வீற்றிருந்தாய் * கோலப் பெருஞ் சங்கே (3) - NAT 7.4
570 சந்திர மண்டலம் போல் * தாமோதரன் கையில் *
அந்தரம் ஒன்று இன்றி * ஏறி அவன் செவியில் **
மந்திரம் கொள்வாயே போலும் * வலம்புரியே ! *
இந்திரனும் உன்னோடு * செல்வத்துக்கு ஏலானே (4) - NAT 7.5
571 உன்னோடு உடனே * ஒரு கடலில் வாழ்வாரை *
இன்னார் இனையார் என்று * எண்ணுவார் இல்லை காண் **
மன் ஆகி நின்ற * மதுசூதன் வாயமுதம் *
பன்னாளும் உண்கின்றாய் * பாஞ்சசன்னியமே (5) - NAT 7.6
572 போய்த் தீர்த்தம் ஆடாதே * நின்ற புணர் மருதம் *
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே * ஏறிக் குடிகொண்டு **
சேய்த் தீர்த்தமாய் நின்ற * செங்கண் மால்தன்னுடைய *
வாய்த் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் * வலம்புரியே (6) - NAT 7.7
573 செங்கமல நாள் மலர்மேல் * தேன் நுகரும் அன்னம் போல் *
செங்கண் கருமேனி * வாசுதேவனுடைய **
அங்கைத் தலம் ஏறி * அன்ன வசஞ் செய்யும் *
சங்கு அரையா உன் செல்வம் * சால அழகியதே (7) - NAT 7.8
574 உண்பது சொல்லில் * உலகு அளந்தான் வாயமுதம் *
கண்படை கொள்ளில் * கடல்வண்ணன் கைத்தலத்தே **
பெண் படையார் உன் மேல் * பெரும் பூசல் சாற்றுகின்றார் *
பண் பல செய்கின்றாய் * பாஞ்சசன்னியமே (8) - NAT 7.9
575 பதினாறாம் ஆயிரவர் * தேவிமார் பார்த்திருப்ப *
மது வாயிற் கொண்டாற்போல் * மாதவன் தன் வாயமுதம் **
பொதுவாக உண்பதனைப் * புக்கு நீ உண்டக்கால் *
சிதையாரோ? உன்னோடு * செல்வப் பெருஞ்சங்கே (9) - NAT 7.10
576 ## பாஞ்சசன்னியத்தைப் * பற்பநாபனோடும் *
வாய்ந்த பெருஞ் சுற்றம் * ஆக்கிய வண்புதுவை **
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் * கோதை தமிழ் ஈரைந்தும் *
ஆய்ந்து ஏத்த வல்லார் * அவரும் அணுக்கரே (10)