Chapter 8

Thiruvattapuyaharam - (திரிபுரம் மூன்று)

திருவட்டபுயகரம் - தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தோழி-தாயர்க்குக் கூறுதல்
Thiruvattapuyaharam - (திரிபுரம் மூன்று)
Attabuyakaram is a Divya Desam located in Chinna Kanchipuram. The Lord residing here is known as Attabuyakarathaan. The āzhvār sings, considering himself as the beloved (Nayaki) and the Lord as the beloved (Nayaka).
அட்டபுயகரம் என்ற திவ்வியதேசம் சின்ன காஞ்சீபுரத்தில் இருக்கிறது. இங்கிருக்கும் பகவான் அட்டபுயகரத்தான். தம்மைத் தலைவியாகவும், பகவானைத் தலைவனாகவும் பாவித்துப் பாடுகிறார் ஆழ்வார்.
Verses: 1118 to 1127
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
  • PT 2.8.1
    1118 ## திரிபுரம் மூன்று எரித்தானும் * மற்றை
    மலர்மிசைமேல் அயனும் வியப்ப *
    முரி திரை மா கடல் போல் முழங்கி *
    மூவுலகும் முறையால் வணங்க **
    எரி அன கேசர வாள் எயிற்றோடு *
    இரணியன் ஆகம் இரண்டு கூறா *
    அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 1 **
  • PT 2.8.2
    1119 வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் *
    வேதம் உரைத்து இமையோர் வணங்கும் *
    செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் *
    தேவர் இவர்கொல்? தெரிக்கமாட்டேன் **
    வந்து குறள் உருவாய் நிமிர்ந்து *
    மாவலி வேள்வியில் மண் அளந்த *
    அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 2 **
  • PT 2.8.3
    1120 செம் பொன் இலங்கு வலங்கை வாளி *
    திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் *
    உம்பர் இரு சுடர் ஆழியோடு *
    கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே **
    வெம்பு சினத்து அடல் வேழம் வீழ *
    வெண் மருப்பு ஒன்று பறித்து * இருண்ட
    அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 3 **
  • PT 2.8.4
    1121 மஞ்சு உயர் மா மணிக் குன்றம் ஏந்தி *
    மா மழை காத்து ஒரு மாய ஆனை
    அஞ்ச * அதன் மருப்பு ஒன்று வாங்கும் *
    ஆயர்கொல்? மாயம் அறியமாட்டேன் **
    வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி *
    வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து *
    அம் சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 4 **
  • PT 2.8.5
    1122 கலைகளும் வேதமும் நீதி நூலும் *
    கற்பமும் சொல் பொருள் தானும் * மற்றை
    நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் *
    நீர்மையினால் அருள்செய்து ** நீண்ட
    மலைகளும் மா மணியும் * மலர்மேல்
    மங்கையும் சங்கமும் தங்குகின்ற *
    அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 5 **
  • PT 2.8.6
    1123 எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் *
    ஏதும் அறிகிலம் ஏந்திழையார் *
    சங்கும் மனமும் நிறையும் எல்லாம் *
    தம்மன ஆகப் புகுந்து ** தாமும்
    பொங்கு கருங் கடல் பூவை காயா *
    போது அவிழ் நீலம் புனைந்த மேகம் *
    அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 6 **
  • PT 2.8.7
    1124 முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் *
    மொய்ம் மலர்க் கண்ணியும் மேனி * அம் சாந்து
    இழுசிய கோலம் இருந்தவாறும் *
    எங்ஙனம் சொல்லுகேன்? ஓவி நல்லார் **
    எழுதிய தாமரை அன்ன கண்ணும் *
    ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் *
    அழகியதாம் இவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 7 **
  • PT 2.8.8
    1125 மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க *
    வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
    தேவி * அப்பால் அதிர் சங்கம் இப்பால்
    சக்கரம் * மற்று இவர் வண்ணம் எண்ணில் **
    காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் *
    கண்ணும் வடிவும் நெடியர் ஆய் * என்
    ஆவி ஒப்பார் இவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தே என்றாரே 8 **
  • PT 2.8.9
    1126 தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா *
    நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு *
    வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி *
    வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு **
    நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் *
    நான் இவர் தம்மை அறியமாட்டேன் *
    அஞ்சுவன் மற்று இவர் ஆர்கொல்? என்ன *
    அட்டபுயகரத்தேன் என்றாரே 9 **
  • PT 2.8.10
    1127 ## மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் *
    நீள் முடி மாலை வயிரமேகன் *
    தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி *
    அட்டபுயகரத்து ஆதி தன்னை **
    கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் *
    காமரு சீர்க் கலிகன்றி * குன்றா
    இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை *
    ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே 10 **