Chapter 9

Thirupparameswara Vinnaharam - (சொல்லு வன்)

திருப்பரமேச்சுரவிண்ணகரம்
Thirupparameswara Vinnaharam - (சொல்லு வன்)

In Periya Kanchipuram, there is the Vaikunta Perumal temple. The āzhvār refers to this temple as Paramechura Vinnagaram. The Pallava king undertook several renovations and improvements to this temple. Therefore, the āzhvār also praises this king along with the temple.


In his profound state of divine contemplation, the glorious Thirumaṅgai Āzhvār

+ Read more

பெரிய காஞ்சீபுரத்தில் வைகுந்தப் பெருமாள் சன்னதி இருக்கிறது. ஆழ்வார் அதைப் பரமேச்சுவர விண்ணகரம் என்று கூறுகிறார். பல்லவ மன்னன் இக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறான். எனவே, இம்மன்னனையும் சேர்த்துப் புகழ்கிறார் ஆழ்வார்.

Verses: 1128 to 1137
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will rule the world surrounded by sounding oceans under a white umbrella and become gods
  • PT 2.9.1
    1128 ## சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்ச் *
    சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய் *
    நல் அரன் நாரணன் நான்முகனுக்கு *
    இடம் தான் தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    பல்லவன் வில்லவன் என்று உலகில் *
    பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
    பல்லவன் * மல்லையர் கோன் பணிந்த
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 1 **
  • PT 2.9.2
    1129 கார் மன்னு நீள் விசும்பும் கடலும் *
    சுடரும் நிலனும் மலையும் * தன் உந்தித்
    தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம் *
    தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    தேர் மன்னு தென்னவனை முனையில் *
    செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் *
    பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 2 **
  • PT 2.9.3
    1130 உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான் *
    ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள் *
    வரம் தரு மா மணிவண்ணன் இடம் *
    மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் *
    நெடு வாயில் உகச் செருவில் முன நாள் *
    பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 3 **
  • PT 2.9.4
    1131 அண்டமும் எண் திசையும் நிலனும் *
    அலை நீரொடு வான் எரி கால் முதலா *
    உண்டவன் எந்தை பிரானது இடம் *
    ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    விண்டவர் இண்டைக் குழாமுடனே *
    விரைந்தார் இரியச் செருவில் முனிந்து *
    பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 4 **
  • PT 2.9.5
    1132 தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் *
    துயர் தீர்த்து அரவம் வெருவ * முன நாள்
    பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு *
    இடம் தான் தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத் *
    திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற *
    பாம்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 5 **
  • PT 2.9.6
    1133 திண் படைக் கோளரியின் உரு ஆய்த் *
    திறலோன் அகலம் செருவில் முன நாள் *
    புண் படப் போழ்ந்த பிரானது இடம் *
    பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப *
    விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த *
    பண்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 6 **
  • PT 2.9.7
    1134 இலகிய நீள் முடி மாவலி தன் *
    பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள் *
    சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு *
    இடம் தான் தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    உலகு உடை மன்னவன் தென்னவனைக் *
    கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ *
    பல படை சாய வென்றான் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 7 **
  • PT 2.9.8
    1135 குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால் *
    குரங்கைப் படையா * மலையால் கடலை
    அடைத்தவன் எந்தை பிரானது இடம் *
    மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    விடைத் திறல் வில்லவன் நென்மெலியில் *
    வெருவச் செரு வேல் வலங் கைப் பிடித்த *
    படைத் திறல் பல்லவர் கோன் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 8 **
  • PT 2.9.9
    1136 பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து * முன்னே
    ஒருகால் செருவில் உருமின் *
    மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு * இடம் தான்
    தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
    கறை உடை வாள் மற மன்னர் கெடக் *
    கடல்போல முழங்கும் குரல் கடுவாய் *
    பறை உடைப் பல்லவர் கோன் பணிந்த *
    பரமேச்சுரவிண்ணகரம் அதுவே 9 **
  • PT 2.9.10
    1137 ## பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர் கோன்
    பணிந்த * பரமேச்சுரவிண்ணகர்மேல் *
    கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன் *
    கலிகன்றி குன்றாது உரைத்த **
    சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் *
    திரு மா மகள் தன் அருளால் * உலகில்
    தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் *
    செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே 10 **