Chapter 7
Thiruvidavendai - (திவளும் வெண்)
திருவிடவெந்தை - தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் இரங்கல்
Near Thirukkadalmallai is the Divya Desam Thiruvidavendhai. Nowadays, this village is known as Thiruvidanthai. The Varaha Perumal here holds Bhoodevi on His left side. The Utsava deity is called Nithyakalyana Perumal. The āzhvār, engrossed in the Lord's auspicious qualities, assumes the role of both mother and daughter, experiencing and expressing the feelings as a mother would speak to the Lord about her daughter's state.
திருக்கடல்மல்லைக்கு அருகில் இருக்கும் திவ்வியதேசம் திருவிடவெந்தை. இவ்வூரை இப்போது திருவிடந்தை என்றே கூறுகிறார்கள். இங்கிருக்கும் வராகப் பெருமாள் இடப்பக்கத்தே பூதேவியைத் தாங்கி நிற்கிறார். உத்ஸவருக்கு நித்யகல்யாணப் பெருமாள் என்று திருநாமம். பகவானின் கல்யாண குணங்களில் ஈடுபட்ட ஆழ்வார், தாமே தாயாகவும் மகளாகவும் இருந்துகொண்டு, தாய் தன் மகளின் நிலையைப் பகவானிடம் கூறுவதுபோல் இங்கே கூறி அனுபவிக்கிறார்.
Verses: 1108 to 1117
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will be removed from the results of your karma
- PT 2.7.1
1108 ## திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை * செழுங் கடல் அமுதினில் பிறந்த
அவளும் * நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் * ஆகிலும் ஆசை விடாளால் **
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை * சொல்லு நின் தாள் நயந்திருந்த
இவளை * உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 1 - PT 2.7.2
1109 துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் * துணை முலை சாந்து கொண்டு அணியாள் *
குளம் படு குவளைக் கண் இணை எழுதாள் * கோல நல் மலர் குழற்கு அணியாள் **
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த * மால் என்னும் மால் இன மொழியாள் *
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 2 - PT 2.7.3
1110 சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் * தட முலைக்கு அணியிலும் தழல் ஆம் *
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் * பொரு கடல் புலம்பிலும் புலம்பும் **
மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் * வளைகளும் இறை நில்லா * என் தன்
ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 3 - PT 2.7.4
1111 ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் * ஒண் சுடர் துயின்றதால் என்னும் *
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா * தென்றலும் தீயினில் கொடிது ஆம் **
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் * சொல்லுமின் என் செய்கேன்? என்னும் *
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 4 - PT 2.7.5
1112 ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் * உருகும் நின் திரு உரு நினைந்து *
காதன்மை பெரிது கையறவு உடையள் * கயல் நெடுங் கண் துயில் மறந்தாள் **
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது * தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் *
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 5 - PT 2.7.6
1113 தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் * தடங் கடல் நுடங்கு எயில் இலங்கை *
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த * வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் **
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி * மென் முலை பொன் பயந்திருந்த *
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 6 - PT 2.7.7
1114 உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் * உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் *
வளங் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை * மாயனே என்று வாய்வெருவும் **
களங் கனி முறுவல் காரிகை பெரிது * கவலையோடு அவலம் சேர்ந்திருந்த *
இளங் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 7 - PT 2.7.8
1115 ## அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு * அழியுமால் என் உள்ளம் என்னும் *
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் * போதுமோ நீர்மலைக்கு என்னும் **
குலம் கெழு கொல்லி கோமள வல்லி * கொடி இடை நெடு மழைக் கண்ணி *
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 8 - PT 2.7.9
1116 பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் * பொரு கயல் கண் துயில் மறந்தாள் *
அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது * இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் *
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி * வீங்கிய வன முலையாளுக்கு *
என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்? * இடவெந்தை எந்தை பிரானே 9 - PT 2.7.10
1117 ## அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய * எம் மாயனே அருளாய் *
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் * இடவெந்தை எந்தை பிரானை *
மன்னு மா மாட மங்கையர் தலைவன் * மானவேல் கலியன் வாய் ஒலிகள் *
பன்னிய பனுவல் பாடுவார் * நாளும் பழவினை பற்று அறுப்பாரே 10