கீழே சில உபாய விசேஷங்களை உபதேசிக்க அவை துச்சகங்களென்றும், ஸ்வரூப விரோதிகளென்றும் நினைத்து சோகாவிஷ்டனான அர்ஜுநனைக் குறித்து அவனுடைய சோக நிவ்ருத்த்யர்த்தமாக "இனி இதுக்கு அவ்வருகில்லை" என்னும்படியான சரமோபாயத்தை அருளிச் செய்கையாலே, சரமச்லோகமென்று இதுக்குப் பேராயிருக்கிறது.
இதில் பூர்வார்த்தத்தாலே அதிகாரி க்ருத்யத்தை அருளிச்செய்கிறான்;
உத்தரார்த்தத்தாலே உபாயக்ருத்யத்தை அருளிச்செய்கிறான்.
அதிகாரிக்கு க்ருத்யமாவது - உபாய பரிக்ரஹம்.
அத்தை ஸாங்கமாக விதிக்கிறான்.
ராகப்ராப்தமான உபாயந்தானே வைதமானால் கடுகப் பரிக்ரஹிக்கைக்கு உடலாயிருக்குமிறே.
இதில் பூர்வார்த்தம் ஆறு பதம்.
ஸர்வதர்மாந் - எல்லா தர்மங்களையும்.
தர்மமாவது - பலஸாதநமாயிருக்குமது.
இங்கு சொல்லுகிற தர்மசப்தம் த்ருஷ்ட பலஸாதநங்களைச் சொல்லுகையன்றிக்கே, மோக்ஷ பலஸாதநங்களைச் சொல்லுகிறது.
அவைதான் - ச்ருதிஸ்ம்ருதி விஹிதங்களாய்ப் பலவாயிருக்கையாலே பஹுவசந ப்ரயோகம் பண்ணுகிறது - என்கிறது.
அவையாவன– கர்ம ஜ்ஞாந பக்தி யோகங்களும், அவதார ரஹஸ்ய ஜ்ஞாநம், புருஷோத்தம வித்யை, தேசவாஸம், திருநாம ஸங்கீர்த்தநம், திருவிளக்கெரிக்கை, திருமாலையெடுக்கை தொடக்கமான உபாய புத்த்யா செய்யுமவையும்.
ஸர்வ சப்தத்தாலே அவ்வவஸாதந விசேஷங்களை அநுஷ்டிக்குமிடத்தில் அவற்றுக்கு யோக்யதா பாதகங்களான நித்யகர்மங்களைச் சொல்லுகிறது.
ஆக, ச்ருதி ஸ்ம்ருதி சோதிதங்களாய் நித்யநைமித்திகாதி ரூபங்களான
கர்மயோகாத்யுபாயங்களை என்றபடி.
இவற்றை தர்மம் என்கிறது - ப்ரமித்த அர்ஜுநன் கருத்தாலே.
பரித்யஜ்ய
த்யாகமாவது– உக்தோபாயங்களை அநுஸந்தித்து சுக்திகையிலே ரஜதபுத்தி பண்ணுவாரைப் போலேயும், விபரீததிசா கமநம் பண்ணுவாரைப் போலேயும் அநுபாயங்களிலே உபாயபுத்தி பண்ணினோம் என்கிற புத்தி விசேஷத்தோடே த்யஜிக்கை.
பரி என்கிற உபஸர்க்கத்தாலே பாதகாதிகளை விடுமா போலே ருசி வாஸனைகளோடும் லஜ்ஜையோடுங் கூட மறுவலிடாதபடி விடவேணுமென்கிறது.
ல்யப்பாலே "ஸ்நாத்வா புஞ்ஜீத" என்னுமாபோலே, உபாயாந்தரங்களைவிட்டேபற்ற வேணும் என்கிறது.
"சசால சாபஞ்ச முமோச வீர:" என்கிறபடியே இவை அநுபாயங்களான மாத்ரமன்றிக்கே கால் கட்டு என்கிறது.
சக்ரவர்த்தியைப்போலே இழக்கைக்கு உறுப்பு.
ஸர்வ தர்மங்களையும் விட்டு என்று சொல்லுகையாலே, சிலர் "அதர்மங்கள் புகுரும்", என்றார்கள்.
அது கூடாது; அதர்மங்களைச் செய் என்று சொல்லாமையாலே.
தன்னடையே சொல்லிற்றாகாதோ? என்னில்
ஆகாது; தர்மசப்தம் அதர்ம நிவ்ருத்தியைக் காட்டாமையாலே.
காட்டினாலும், அத்தை ஒழிந்தவற்றைச் சொல்லிற்றாமித்தனை.
தன்னையும், ஈச்வரனையும், பலத்தையும் பார்த்தால் அவை புகுர வழியில்லை.
ஸர்வரக்ஷகனாய், உனக்குக் கையாளாய், உன்னிசைவு பார்த்து, உன் தோஷத்தை போக்யமாகக் கொண்டு, உனக்குப் புகலாய், நீர் சுடுமாபோலே சேர்ப்பாரே பிரிக்கும் போதும் விடமாட்டாதே ரக்ஷிக்கிற என்னை.
இத்தால் பரவ்யூஹங்களையும் தேவதாந்தர்யாமித்வத்தையும் தவிர்க்கிறது.
தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணப் பிறந்தவன் தானே ஸர்வ தர்மங்களையும் விட்டு என்னைப் பற்று” என்கையாலே ஸாக்ஷாத் தர்மம் தானேயென்கிறது.
இத்தால், விட்ட ஸாதநங்களில் ஏற்றஞ் சொல்லுகிறது.
அதாவது, ஸித்தமாய், பரமசேதநமாய், ஸர்வசக்தியாய், நிரபாயமாய், ப்ராப்தமாய், ஸஹாயாந்தர நிரபேக்ஷமாயிருக்கை.
மற்றை உபாயங்கள் ஸாத்யங்களாகையாலே, ஸ்வரூபஸித்தியில் சேதநனை அபேக்ஷித்திருக்கும்; அசேதநங்களுமாய், அசக்தங்களுமாயிருக்கையாலே கார்ய ஸித்தியில் ஈச்வரனை அபேக்ஷித்திருக்கும். இந்த உபாயம் அவற்றுக்கு எதிர்த்தட்டாயிருக்கையாலே, இதர நிரபேக்ஷமாயிருக்கும்.
இதிலே, வாத்ஸல்ய ஸ்வாமித்வ ஸௌசீல்ய ஸௌலப்யங்களாகிற
குண விசேஷங்கள் நேராக ப்ரகாசிக்கிறது.
கையும் உழவுகோலும், பிடித்த சிறுவாய்க் கயிறும், ஸேநாதூளிதூஸரிதமான திருக்குழலும், தேருக்குக் கீழே நாற்றின திருவடிகளுமாய் நிற்கிற ஸாரத்யவேஷத்தை "மாம்" என்று காட்டுகிறான்.
ஏகம்.
இந்த ஏகசப்தம் ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்தத்தைக் காட்டுகிறது.
"மாமேவ யே ப்ரபத்யந்தே ", "தமேவ சாத்யம்", "த்வமேவோபாய பூதோ மே பவ", "ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்" என்றுஞ் சொல்லுகிறபடியே.
இத்தால், "வ்ரஜ" என்கிற ஸ்வீகாரத்தில் உபாய பாவத்தைத் தவிர்க்கிறது.
ஸ்வீகாரந்தானும் அவனாலே வந்தது.
ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே பண்ணின க்ருஷிபலம்.
"அதுவும் அவனது இன்னருளே".
இத்தை ஒழியவும் தானே கார்யஞ்செய்யும் என்று நினைக்கக்கடவன்.
அல்லாதபோது உபாயநரபேக்ஷயம் ஜீவியாது.
இது ஸர்வமுக்தி ப்ரஸங்க பரிஹாரார்த்தம், புத்தி ஸமாதாநார்த்தம் சைதந்ய கார்யம் ராகப்ராப்தம், ஸ்வரூபநிஷ்டம், அப்ரதிஷேதத்யோதகம்.
கீழ் தானும் பிறருமான நிலையைக் குலைத்தான்; இங்குத்தானும் இவனுமான நிலையைக் குலைக்கிறான்.
அவனை இவன் பற்றும்பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம்.
அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்.
மற்றை உபாயங்களுக்கு நிவ்ருத்தி தோஷம், இதுக்கு ப்ரவ்ருத்தி தோஷம்.
"சிற்றவேண்டா".
நிவ்ருத்தி கீழே சொல்லிற்று.
உபகார ஸ்ம்ருதியும் சைதந்யத்தாலே வந்தது; உபாயத்தில் அந்தர்பவியாது.
சரணம்—உபாயமாக.
இந்த சரண சப்தம் ரக்ஷிதாவையும் க்ருஹத்தையும் உபாயத்தையும் காட்டக் கடவதேயாகிலும், இவ்விடத்தில் உபாயத்தையே காட்டுகிறது; கீழோடே சேர வேண்டுகையாலே.
வ்ரஜ - புத்தி பண்ணு.
கத்யர்த்தமாவது புத்த்யர்த்தமாய், அத்யவஸியென்றபடி.
வாசிக காயிகங்களும் இதுக்கு அபேக்ஷிதங்களாயிருக்கச் செய்தேயும் ஜ்ஞாநாந் மோக்ஷமாகையாலே மாநஸமான அநுஷ்டாநத்தைச் சொல்லுகிறது.
ஆக, த்யாஜ்யத்தைச் சொல்லி, த்யாக ப்ரகாரத்தைச் சொல்லி, பற்றப்படும்
உபாயத்தைச் சொல்லி, உபாயநைரபேஷ்யஞ் சொல்லி, உபாயத்வஞ் சொல்லி, உபாயஸ்வீகாரம் சொல்லுகிறது.
அஹம்.
ஸ்வக்ருத்யத்தை அருளிச்செய்கிறான்.
ஸர்வஜ்ஞனாய், ஸர்வசக்தியாய், ப்ராப்தனான நான்.
இவன் கீழ்நின்ற நிலையும், மேல் போக்கடியும் அறிகைக்கும், அறிந்தபடியே செய்து தலைக்கட்டுகைக்கும் ஏகாந்தமான குணவிசேஷங்களையும், தன் பேறாகச் செய்து தலைக்கட்டுகைக்கு ஈடான பந்தவிசேஷத்தையும் காட்டுகிறது.
தனக்காக் கொண்ட ஸாரத்ய வேஷத்தை அவனையிட்டுப் பாராதே தன்னை யிட்டுப்பார்த்து, அஞ்சின அச்சந்தீரத் தானான தன்மையை “அஹம்” என்று காட்டுகிறான்.
கீழில் பாரதந்த்ர்யமும் இந்த ஸ்வாதந்தர்யத்தினுடைய எல்லை நிலமிறே.
த்வா– அஜ்ஞனாய், அஸக்தனாய், அப்ராப்தனாய், என்னையே உபாயமாகப் பற்றியிருக்கிற உன்னை.
ஸர்வபாபேப்ய:-- மத் ப்ராப்தி ப்ரதிபந்தகங்கள் என்று யாவையாவை சில
பாபங்களைக் குறித்து அஞ்சுகிறாய், அவ்வோபாபங்கள் எல்லாவற்றில் நின்றும்.
"பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்" என்கிறபடியே அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களைச் சொல்லுகிறது.
திருணச்சேதகண்டூயநாதிகளைப்போலே ப்ரக்ருதி வாஸனையாலே அநுவர்த்திக்குமவையென்ன, லோகாபவாத பீதியாலும், கருணையாலும், கலக்கத்தாலும் செய்யுமவையென்ன, எல்லாவற்றையும் நினைக்கிறது.
"உந்மத்த ப்ரவ்ருத்திக்கு க்ராமப்ராப்தி போலே த்யஜித்த உபாயங்களிலே அந்விதங்களாமோ?" என்று நினைக்கவேண்டா.
கலங்கி உபாயபுத்த்யா பண்ணும் ப்ரபத்தியும் பாதகத்தோடு ஒக்கும்.
மோக்ஷயிஷ்யாமி - முக்தனாம்படி பண்ணக்கடவேன்.
ணிச்சாலே நானும் வேண்டா, நீயும் வேண்டா, அவை தன்னடையே விட்டுப்போங்காணென்கிறான்.
என்னுடைய நிக்ரஹபலமாய் வந்தவை நானிரங்கினால் கிடக்குமோ? என்கை.
அநாதிகாலம் பாபங்களைக் கண்டு நீ பட்ட பாட்டை அவைதாம் படும்படி பண்ணுகிறேன்.
இனி உன்கையிலும் உன்னைக் காட்டித் தாரேன். என்னுடம்பிலழுக்கை நானே போக்கிக் கொள்ளேனோ?
மாசுச: - "நீ உன் கார்யத்திலே அதிகரியாமையாலும், நான் உன் கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு போருகையாலும், உனக்கு சோகநிமித்தம் இல்லை காண்" என்று அவனுடைய சோக நிவ்ருத்தியை பண்ணிக் கொடுக்கிறான்.
நிவர்த்தக ஸ்வரூபத்தைச் சொல்லி, நிவர்த்யங்கள் உன்னை வந்த மேலிடாதென்று சொல்லி, உனக்கு சோகநிமித்தம் இல்லைகாண் என்கிறான்.
எத்தினாலிடர்க்கடற்கிடத்தியேழை நெஞ்சமே என்கிறான்
பாபங்களை நான் பொறுத்துப் புண்யமென்று நினைப்பிடா நிற்க, நீ சோகிக்கக் கடவையோ?
உய்யக்கொண்டார் விஷயமாக உடையவர் அருளிச்செய்த வார்த்தையை ஸ்மரிப்பது.
இதுக்கு ஈச்வர ஸ்வாதந்தர்யத்திலே நோக்கு.
"இதுதான் அநுவாத கோடியிலே" என்று வங்கிப்புரத்துநம்பி வார்த்தை.
அர்ஜுநன், க்ருஷ்ணனுடைய ஆனைத் தொழில்களாலும், ருஷிகள்
வாக்யங்களாலும், க்ருஷ்ணன் தன் கார்யத்திலே அதிகரித்துக் கொண்டு போருகையாலும், இவனே நமக்குத் தஞ்சமென்று துணிந்த பின்பு தன்னைப் பற்றச் சொல்லுகையாலே.
புறம்பு பிறந்தது எல்லாம், இவன் நெஞ்சை சோதிக்கைக்காக.
வேதபுருஷன் உபாயந்தரங்களை விதித்தது, கொண்டிப் பசுவுக்குத் தடி கட்டி விடுவாரைப்போலே, அஹங்காரமமகாரங்களால் வந்த களிப்பு அற்று ஸ்வரூபஜ்ஞாநம் பிறக்கைக்காக.
ஸந்யாஸி முன்புள்ளவற்றை விடுமாபோலே இவ்வளவு பிறந்தவன் இவற்றை விட்டால் குற்றம் வாராது.
இவன்தான் இவை தன்னை நேராக விட்டிலன்.
கர்மம் கைங்கர்யத்திலே புகும்; ஜ்ஞாநம் ஸ்வரூபப்ரகாசத்திலே புகும்; பக்தி ப்ராப்ய ருசியிலே புகும்; ப்ரபத்தி ஸ்வரூப யாதாத்ம்யஜ்ஞாநத்திலே புகும்.
ஒரு பலத்துக்கு அரிய வழியையும், எளிய வழியையும் உபதேசிக்கையாலே, இரண்டும் ஒழிய பகவத் ப்ரஸாதமே உபாயமாகக் கடவது.
பேற்றுக்கு வேண்டுவது - விலக்காமையும் இரப்பும்.
சக்ரவர்த்தித் திருமகன், பாபத்தோடே வரிலும் அமையுமென்றான்; இவன், புண்யத்தைப் போகட்டு வரவேணுமென்றான்.
"ஆஸ்திகனாய் இவ்வர்த்தத்தில் ருசி விச்வாஸங்களுடையனாய் உஜ்ஜீவித்தல், நாஸ்திகனாய் நஸித்தல் ஒழிய நடுவில் நிலையில்லை" என்று பட்டர்க்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை.
வ்யாவஸாயம் இல்லாதவனுக்கு இதில் அந்வயம், ஆமத்தில் போஜநம் போலே.
"விட்டுசித்தர் கேட்டிருப்பர்" என்கிறபடியே அதிகாரிகள் நியதர்.
"வார்த்தையறிபவர்" என்கிற பாட்டும், "அத்தனாகி” என்கிற பாட்டும் இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்.