Your browser does not support the audio element.
audio
3299 நோற்றநோன்பிலேன் நுண்ணறிவிலேன் * ஆகிலும் இனியுன்னை விட்டொன்றும் ஆற்றகிற்கின்றிலேன் அரவினணையம்மானே! *
சேற்றுத்தாமரைசெந்நெலூடுமலர் சிரீவரமங்கலநகர் *
வீற்றிருந்தஎந்தாய்! உனக்குமிகையல்லேனங்கே. (2)
3300 அங்குற்றேனல்லேன்இங்குற்றேனல்லேன் உன்னைக் காணுமவாவில் வீழ்ந்து * நான்
எங்குற்றேனுமல்லேன் இலங்கைசெற்றவம்மானே! *
திங்கள்சேர்மணிமாடநீடு சிரீவரமங்கலநகருறை *
சங்குசக்கரத்தாய்! தமியேனுக்கருளாயே.
3301 கருளப்புட்கொடிசக்கரப்படை வானநாட! எங்கார்முகில் வண்ணா! *
பொருளல்லாதவென்னைப்பொருளாக்கி அடிமை கொண்டாய்! *
தெருள்கொள்நான்மறைவல்லவர்பலர்வாழ் சிரீவரமங்கல நகர்க்கு *
அருள்செய்தங்கிருந்தாய்! அறியேனொருகைம்மாறே.
3302 மாறுசேர்படைநூற்றுவர்மங்க ஓரைவர்க்காயன்று மாயப்போர்பண்ணி *
நீறுசெய்தவெந்தாய்! நிலங்கீண்டவம்மானே! *
தேறுஞானத்தர்வேதவேள்வியறாச் சிரீவரமங்கலநகர் *
ஏறிவீற்றிருந்தாய்! உன்னையெங்கெய்தக்கூவுவனே?
3303 எய்தக்கூவுதலாவதேயெனக்கு எவ்வதெவ்வத்துளாயுமாய் நின்று *
கைதவங்கள்செய்யும் கருமேனியம்மானே! *
செய்தவேள்வியர்வையத்தேவரறாச் சிரீவரமங்கலநகர் *
கைதொழவிருந்தாய்! அதுநானும்கண்டேனே.
3304 ஏனமாய்நிலங்கீண்டஎன்னப்பனே! கண்ணா! என்றும்என்னையாளுடை *
வானநாயகனே! மணிமாணிக்கச்சுடரே! *
தேனமாம்பொழில்தண்சிரீவரமங்கலத்தவர் கைதொழவுறை *
வானமாமலையே! அடியேன்தொழவந்தருளே. (2)
3305 வந்தருளியென்னெஞ்சிடங்கொண்டவானவர்கொழுந்தே! * உலகுக்கோர்
முந்தைத்தாய்தந்தையே! முழுவேழுலகுமுண்டாய்! *
செந்தொழிலவர்வேதவேள்வியறாச் சிரீவரமங்கலநகர் *
அந்தமில்புகழாய்! அடியேனை யகற்றேலே.
3306 அகற்றநீவைத்தமாயவல்லைம்புலங்களாமவை நன்கறிந்தனன் *
அகற்றியென்னையும்நீ அருஞ்சேற்றில்வீழ்த்திகண்டாய் *
பகற்கதிர்மணிமாடநீடு சிரீவரமங்கைவாணனே! * என்றும்
புகற்கரியஎந்தாய்! புள்ளின்வாய்பிளந்தானே!
3307 புள்ளின்வாய்பிளந்தாய்! மருதிடைபோயினாய்! எருதேழடர்த்த * என்
கள்ளமாயவனே! கருமாணிக்கச்சுடரே! *
தெள்ளியார்திருநான்மறைகள்வல்லார் மலிதண்சிரீ வரமங்கை
உள் * இருந்தஎந்தாய் அருளாய்உய்யுமாறுஎனக்கே.
3308 ஆறெனக்குநின்பாதமே சரணாகத்தந்தொழிந்தாய் * உனக்கோர்கைம்
மாறுநானொன்றிலேன் எனதாவியும்உனதே *
சேறுகொள்கரும்பும்பெருஞ்செந்நெல்லும் மலிதண் சிரீவரமங்கை *
நாறுபூந்தண்துழாய்முடியாய்! தெய்வநாயகனே! (2)
3309 தெய்வநாயகன்நாரணன் திரிவிக்கிரமனடியிணைமிசை *
கொய்கொள்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் *
செய்தவாயிரத்துள்ளிவை தண்சிரீவரமங்கைமேய பத்து * உடன்
வைகல்பாடவல்லார் வானோர்க்காராவமுதே. (2)