Your browser does not support the audio element.
audio
872 காவலிற்புலனைவைத்துக் கலிதன்னைக்கடக்கப்பாய்ந்து *
நாவலிட்டுழிதருகின்றோம் நமன்தமர்தலைகள்மீதே *
மூவுலகுண்டுமிழ்ந்தமுதல்வ! நின்நாமம் கற்ற *
ஆவலிப்புடைமைகண்டாய் அரங்கமாநகருளானே! (2)
873 பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும் *
இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும் *
அச்சுவைபெறினும்வேண்டேன் அரங்கமாநகருளானே! (2)
874 வேதநூல்பிராயம்நூறு மனிசர்தாம்புகுவரேலும் *
பாதியுமுறங்கிப்போகும் நின்றப்பதினையாண்டு *
பேதைபாலகனதாகும் பிணிபசிமூப்புத்துன்பம் *
ஆதலால்பிறவிவேண்டேன் அரங்கமாநகருளானே!
875 மொய்த்தவல்வினையுள்நின்று மூன்றெழுத்துடையபேரால் *
கத்திரபந்துமன்றே பராங்கதிகண்டுகொண்டான் *
இத்தனையடியரானார்க்கு இரங்கும்நம்மரங்கனாய
பித்தனைப்பெற்றுமந்தோ! பிறவியுள்பிணங்குமாறே.
876 பெண்டிராற்சுகங்களுய்ப்பான் பெரியதோரிடும்பைபூண்டு *
உண்டிராக்கிடக்கும்போது உடலுக்கேகரைந்துநைந்து *
தண்டுழாய்மாலைமார்பன் தமர்களாய்ப்பாடியாடி *
தொண்டுபூண்டமுதமுண்ணாத் தொழும்பர் சோறுகக்குமாறே!
877 மறஞ்சுவர்மதிளெடுத்து மறுமைக்கேவெறுமைபூண்டு *
புறஞ்சுவரோட்டைமாடம் புரளும்போதறியமாட்டீர் *
அறஞ்சுவராகிநின்ற அரங்கனார்க்காட்செய்யாதே *
புறஞ்சுவர்கோலஞ்செய்து புள்கவ்வக்கிடக்கின்றீரே.
878 புலையறமாகிநின்ற புத்தொடுசமணமெல்லாம் *
கலையறக்கற்றமாந்தர் காண்பரோகேட்பரோதாம்? *
தலையறுப்புண்டும்சாவேன் சத்தியங்காண்மின்ஐயா *
சிலையினாலிலங்கைசெற்ற தேவனே தேவனாவான்.
879 வெறுப்பொடுசமணர்முண்டர் விதியில்சாக்கியர்கள் * நின்பால்
பொறுப்பரியனகள்பேசில் போவதேநோயதாகி *
குறிப்பெனக்கடையுமாகில் கூடுமேல்தலையைஆங்கே *
அறுப்பதேகருமங்கண்டாய் அரங்கமாநகருளானே!
880 மற்றுமோர்தெய்வமுண்டே? மதியிலாமானிடங்காள் *
உற்றபோதன்றிநீங்கள் ஒருவனென்றுணரமாட்டீர் *
அற்றமேலொன்றறீயீர் அவனல்லால்தெய்வமில்லை *
கற்றினம்மேய்த்தவெந்தை கழலிணைபணிமின்நீரே.
881 நாட்டினான்தெய்வமெங்கும் நல்லதோரருள்தன்னாலே *
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம் *
கேட்டிரேநம்பிமீர்காள்! கெருடவாகனனும்நிற்க *
சேட்டைதன்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே.
882 ஒருவில்லாலோங்குமுந்நீரடைத்து உலகங்களுய்ய *
செருவிலேயரக்கர்கோனைச்செற்ற நம்சேவகனார் *
மருவியபெரியகோயில் மதிள்திருவரங்கமென்னா *
கருவிலேதிருவிலாதீர்! காலத்தைக்கழிக்கின்றீரே.
883 நமனும்முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க *
நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி *
அவனதூரரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர் *
கவலையுள்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே.
884 எறியுநீர்வெறி கொள்வேலை மாநிலத்துயிர்களெல்லாம் *
வெறிகொள்பூந்துளவமாலை விண்ணவர்கோனையேத்த *
அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில் *
பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே.
885 வண்டினமுரலும்சோலை மயிலினமாலும்சோலை *
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும்சோலை *
அண்டர்கோனமரும்சோலை அணிதிருவரங்கமென்னா *
மிண்டர்பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே. (2)
886 மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல *
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான் *
உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை *
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே.
887 சூதனாய்க்கள்வனாகித் தூர்த்தரோடிசைந்தகாலம் *
மாதரார்கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனை *
போதரேயென்றுசொல்லிப் புந்தியுள்புகுந்து * தன்பால்
ஆதரம்பெருகவைத்த அழகனூரரங்கமன்றே.
888 விரும்பிநின்றேத்த மாட்டேன் விதியிலேன்மதியொன்றில்லை *
இரும்புபோல்வலியநெஞ்சம் இறையிறையுருகும் வண்ணம் *
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட *
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணை களிக்குமாறே!
889 இனிதிரைத்திவலைமோத எறியும் தண்பரவைமீதே *
தனிகிடந்தரசுசெய்யும் தாமரைக்கண்ணனெம்மான் *
கனியிருந்தனையசெவ்வாய்க் கண்ணணைக்கண்டகண்கள் *
பனியரும்புதிருமாலோ! என்செய்கேன்பாவியேனே?
890 குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி *
வடதிசைபின்புகாட்டித் தென்திசையிலங்கை நோக்கி *
கடல்நிறக்கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு *
உடலெனக்குருகுமாலோ? என்செய்கேன்? உலகத்தீரே! (2)
891 பாயுநீரரங்கந்தன்னுள் பாம்பணைப்பள்ளிகொண்ட *
மாயனார்திருநன்மார்பும் மரகதவுருவும்தோளும் *
தூய தாமரைக்கண்களும் துவரிதழ்பவளவாயும் *
ஆயசீர்முடியும்தேசும் அடியரோர்க்ககலலாமே?
892 பணிவினால்மனமதொன்றிப் பவளவாயரங்கனார்க்கு *
துணிவினால்வாழமாட்டாத் தொல்லைநெஞ்சே! நீ சொல்லாய் *
அணியனார்செம்பொனாய அருவரையனையகோயில் *
மணியனார்கிடந்தவாற்றை மனத்தினால்நினைக்கலாமே?
893 பேசிற்றேபேசலல்லால் பெருமையொன்றுணரலாகாது *
ஆசற்றார் தங்கட்கல்லால் அறியலாவானுமல்லன் *
மாசற்றார்மனத்துளானை வணங்கிநாமிருப்பதல்லால் *
பேசத்தானாவதுண்டோ? பேதைநெஞ்சே! நீ சொல்லாய்.
894 கங்கயிற்புனிதமாய காவிரிநடுவுபாட்டு *
பொங்கு நீர்பரந்துபாயும் பூம்பொழிலரங்கந்தன்னுள் *
எங்கள் மாலிறைவனீசன் கிடந்ததோர்கிடக்கைகண்டும் *
எங்ஙனம்மறந்துவாழ்கேன்? ஏழையேனேழையேனே.
895 வெள்ளநீர்பரந்துபாயும் விரிபொழிலரங்கந்தன்னுள் *
கள்வனார்கிடந்தவாறும் கமலநன்முகமும்கண்டும் *
உள்ளமே! வலியைபோலும் ஒருவனென்றுணரமாட்டாய் *
கள்ளமேகாதல்செய்து உன்கள்ளத்தேகழிக்கின் றாயே.
896 குளித்துமூன் றனலையோம்பும் குறிகொளந்தணமைதன்னை *
ஒளித்திட்டேன், என்கணில்லை நின்கணும்பத்தனல்லேன் *
களிப்பதென்கொண்டு? நம்பீ! கடல்வண்ணா! கதறுகின்றேன் *
அளித்தெனக்கருள்செய்கண்டாய் அரங்கமாநகருளானே!
897 போதெல்லாம்போதுகொண்டு உன்பொன்னடி புனையமாட்டேன் *
தீதிலாமொழிகள் கொண்டு உன்திருக்குணம்செப்பமாட்டேன் *
காதலால்நெஞ்சமன்பு கலந்திலேன், அதுதன்னாலே *
ஏதிலேனரங்கர்க்குஎல்லே! என்செய்வான் தோன்றினேனே.
898 குரங்குகள்மலையைநூக்கக் குளித்துத்தாம் புரண்டிட்டோடி *
தரங்கநீரடைக்க லுற்ற சலமிலாவணிலும்போலேன் *
மரங்கள்போல்வலியநெஞ்சம் வஞ்சனேன், நெஞ்சுதன்னால் *
அரங்கனார்க்காட்செய்யாதே அளியத்தேனயர்க்கின்றேனே.
899 உம்பராலறியலாகா ஒளியுளார், ஆனைக்காகி *
செம்புலாலுண்டுவாழும் முதலைமேல்சீறிவந்தார் *
நம்பரமாயதுண்டே? நாய்களோம் சிறுமையோரா *
எம்பிராற்காட்செய்யாதே என்செய்வான் தோன்றினேனே?
900 ஊரிலேன்காணியில்லை உறவுமற்றொருவரில்லை *
பாரில்நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி! *
காரொளிவண்ணனே! கண்ணனே! கதறுகின்றேன் *
ஆருளர்? களைகணம்மா! அரங்கமாநகருளானே!
901 மனத்திலோர்தூய்மையில்லை வாயிலோரின்சொலில்லை *
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளிவிளிவன்வாளா *
புனத்துழாய்மாலையானே! பொன்னிசூழ்திருவரங்கா *
எனக்கினிக்கதியென் சொல்லாய்? என்னையாளுடைய கோவே!
902 தவத்துளார்தம்மிலல்லேன் தனம்படத்தாரிலல்லேன் *
உவர்த்த நீர்போல என்றன்உற்றவர்க்கொன்றுமல்லேன் *
துவர்த்தசெவ்வாயினார்க்கே துவக்கறத்துரிசனானேன் *
அவத்தமே பிறவிதந்தாய் அரங்கமாநகருளானே!
903 ஆர்த்துவண்டலம்பும்சோலை அணிதிருவரங்கந்தன்னுள் *
கார்த்திரளனைய மேனிக் கண்ணனே! உன்னைக்காணும் *
மார்க்கமொன்றறியமாட்டா மனிசரில்துரிசனாய *
மூர்க்கனேன்வந்துநின்றேன் மூர்க்கனேன்மூர்க்கனேனே.
904 மெய்யெல்லாம் போகவிட்டு விரிகுழலாரில்பட்டு *
பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன்வந்துநின்றேன் *
ஐயனே! அரங்கனே! உன்னருளென்னுமாசை தன்னால் *
பொய்யனேன் வந்துநின்றேன் பொய்யனேன் பொய்யனேனே.
905 உள்ளத்தேயுறையும் மாலை உள்ளுவானுணர்வொன்றில்லா *
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கேகோலம்பூண்டு *
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று *
வெள்கிப்போயென்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.
906 தாவியன்றுலகமெல்லாம் தலைவிளாக்கொண்டவெந்தாய் *
சேவியேனுன்னையல்லால் சிக்கெனச்செங்கண்மாலே *
ஆவியே! அமுதே! என்தனாருயிரனையவெந்தாய் *
பாவியேனுன்னையல்லால் பாவியேன் பாவியேனே.
907 மழைக்கன்று வரைமுனேந்தும் மைந்தனே! மதுரவாறே! *
உழைக்கன்றே போல நோக்கம்முடையவர் வலையுள்பட்டு *
உழைக்கின்றேற்கு என்னை நோக்காதொழிவதே! * உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி! அரங்கமாநகருளானே!
908 தெளிவிலாக்கலங்கல் நீர்சூழ் திருவரங்கங்கத்துள்ளோங்கும் *
ஒளியுளார்தாமேயன்றே தந்தையும்தாயுமாவார் *
எளியதோரருளுமன்றே எந்திறத்தெம்பிரானார் *
அளியன்நம்பையல் என்னார் அம்மவோ! கொடியவாறே!
909 மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிகவுணர்ந்து *
ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலனகத்தடக்கி *
காம்புறத்தலைசிரைத்து உன்கடைத்தலையிருந்து * வாழும்
சோம்பரை உகத்திபோலும் சூழ்புனலரங்கத்தானே! (2)
910 அடிமையில்குடிமையில்லா அயல்சதுப்பேதிமாரில் *
குடிமையில்கடைமைபட்ட குக்கரில்பிறப்பரேலும் *
முடியினில்துளபம்வைத்தாய்! மொய்கழற்கன்புசெய்யும் *
அடியரையுகத்திபோலும் அரங்கமாநகருளானே!
911 திருமறுமார்வ! நின்னைச்சிந்தையுள் திகழவைத்து *
மருவியமனத்தராகில் மாநிலத்துயிர்களெல்லாம் *
வெருவரக்கொன்று சுட்டிட்டு ஈட்டியவினையரேலும் *
அருவினைப்பயனதுய்யார் அரங்கமாநகருளானே!
912 வானுளாரறியலாகா வானவா என்பராகில் *
தேனுலாந்துளபமாலைச் சென்னியாய் என்பராகில் *
ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும் *
போனகம்செய்த சேடம் தருவரேல், புனிதமன்றே.
913 பழுதிலாவொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள்! *
இழிகுலத்தவர்களேலும் எம்மடியார்களாகில் *
தொழுமினீர் கொடுமின்கொள்மின் என்று நின்னோடு மொக்க *
வழிபடஅருளினாய்போல் மதில் திருவரங்கத்தானே!
914 அமரவோரங்கமாறும் வேதமோர்நான்குமோதி *
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும் *
நுமர்களைப்பழிப்பராகில் நொடிப்பதோரளவில் * ஆங்கே
அவர்கள்தாம் புலையர்போலும் அரங்கமாநகருளானே!
915 பெண்ணுலாம் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான் *
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார்வெள்கிநிற்ப *
விண்ணுளார்வியப்பவந்து ஆனைக்கன்றருளையீந்த
கண்ணறா * உன்னையென்னோ? களைகணாக்கருதுமாறே. (2)
916 வளவெழும் தவளமாட மதுரை மாநகரந்தன்னுள் *
கவளமால்யானை கொன்ற கண்ணனை அரங்கமாலை *
துவளத்தொண்டாயதொல்சீர்த் தொண்டரடிப்பொடிசொல் *
இளையபுன்கவிதையேலும் எம்பிறார்கினியவாறே. (2)