Your browser does not support the audio element.
audio
752 பூநிலாயவைந்துமாய்ப் புனற்கண்நின்றநான்குமாய் *
தீநிலாயமூன்றுமாய்ச் சிறந்தகாலிரண்டுமாய் *
மீநிலாயதொன்றுமாகி வேறுவேறுதன்மையாய் *
நீநிலாயவண்ணநின்னை யார்நினைக்கவல்லரே? (2)
753 ஆறுமாறுமாறுமாயொ ரைந்துமைந்துமைந்துமாய் *
ஏறுசீரிரண்டுமூன்றும் ஏழுமாறுமெட்டுமாய் *
வேறுவேறுஞானமாகி மெய்யினொடுபொய்யுமாய் *
ஊறோடோசையாயஐந்தும் ஆய ஆயமாயனே!
754 ஐந்துமைந்துமைந்துமாகி அல்லவற்றுளாயுமாய் *
ஐந்துமூன்றுமொன்றுமாகி நின்றவாதிதேவனே! *
ஐந்துமைந்துமைந்துமாகி அந்தரத்த ணைந்துநின்று *
ஐந்துமைந்துமாயநின்னை யாவர்காணவல்லரே?
755 மூன்றுமுப்பதாறினோடு ஒரைந்துமைந்துமைந்துமாய் *
மூன்றுமூர்த்தியாகிமூன்று மூன்றுமூன்றுமூன்றுமாய *
தோன்றுசோதிமூன்றுமாய்த் துளக்கமில்விளக்கமாய் *
ஏன்றெனாவியுள்புகுந்த தென்கொலோ? எம்மீசனே!
756 நின்றியங்குமொன்றலா உருக்கள் தோறும்ஆவியாய் *
ஒன்றியுள்கலந்துநின்ற நின்னதன்மையின்னதென்று *
என்றும்யார்க்குமெண்ணிறந்த ஆதியாய்! நின்னுந்திவாய் *
அன்றுநான்முகற்பயந்த ஆதிதேவனல்லையே?
757 நாகமேந்துமேருவெற்பை நாகமேந்துமண்ணினை *
நாகமேந்துமாகமாகம் மாகமேந்துவார்புனல் *
மாகமேந்துமங்குல்தீ ஓர் வாயுவைந்தமைந்துகாத்து *
ஏகமேந்திநின்றநீர்மை நின்கணேயியன்றதே.
758 ஒன்றிரண்டுமூர்த்தியாய் உறக்கமோடுணர்ச்சியாய் *
ஒன்றிரண்டுகாலமாகி வேலைஞாலமாயினாய் *
ஒன்றிரண்டுதீயுமாகி ஆயனாயமாயனே! *
ஒன்றிரண்டுகண்ணினானும் உன்னையேத்தவல்லனே?
759 ஆதியானவானவர்க்கும் அண்டமாயவப்புறத்து *
ஆதியானவானவர்க்கும் ஆதியானவாதிநீ *
ஆதியானவானவாணர் அந்தகாலம் நீயுரைத்தி *
ஆதியானகாலம்நின்னை யாவர்காணவல்லரே?
760 தாதுலாவுகொன்றைமாலை துன்னுசெஞ்சடைச்சிவன் *
நீதியால்வணங்குபாத நின்மலா! நிலாயசீர் *
வேதவாணர்கீதவேள்வி நீதியானகேள்வியார் *
நீதியால்வணங்குகின்றநீர்மை நின்கண்நின்றதே.
761 தன்னுளேதிரைத்தெழும் தரங்கவெண்தடங்கடல் *
தன்னுளேதிரைத்தெழுந்து அடங்குகின்றதன்மைபோல் *
நின்னுளேபிறந்திறந்து நிற்பவும்திரிபவும் *
நின்னுளேயடங்குகின்ற நீர்மைநின்கண்நின்றதே.
762 சொல்லினால்தொடர்ச்சிநீ சொலப்படும்பொருளும்நீ *
சொல்லினால்சொலப்படாது தோன்றுகின்றசோதிநீ *
சொல்லினால்படைக்க நீபடைக்கவந்துதோன்றினார் *
சொல்லினால்சுருங்க நின்குணங்கள்சொல்லவல்லரே?
763 உலகுதன்னைநீபடைத்தி உள்ளொடுக்கிவைத்தி * மீண்டு
உலகுதன்னுளேபிறத்தி ஒரிடத்தையல்லையால் *
உலகுநின்னொடொன்றிநிற்க வேறுநிற்றியாதலால் *
உலகில்நின்னையுள்ளசூழல் யாவர்உள்ளவல்லரே?
764 இன்னையென்றுசொல்லலாவது இல்லையாதும் இட்டிடை *
பின்னைகேள்வனென்பர் உன்பிணக்குணர்ந்தபெற்றியோர் *
பின்னையாயகோலமோடு பேருமூருமாதியும் *
நின்னையார்நினைக்கவல்லர்? நீர்மையால்நினைக்கிலே.
765 தூய்மையோகமாயினாய்! துழாயலங்கல்மாலையாய்! *
ஆமையாகியாழ்கடல்துயின்ற ஆதிதேவ! * நின்
நாமதேயமின்னதென்ன வல்லமல்லவாகிலும் *
சாமவேதகீதனாய சக்ரபாணியல்லையே?
766 அங்கமாறும்வேதநான்கும் ஆகிநின்றவற்றுளே *
தங்குகின்றதன்மையாய்! தடங்கடல்பணத்தலை *
செங்கண்நாகணைக்கிடந்த செல்வமல்குசீரினாய் *
சங்கவண்ணமன்னமேனி சார்ங்கபாணியல்லையே?
767 தலைக்கணத்துகள்குழம்புசாதி சோதிதோற்றமாய் *
நிலைக்கணங்கள்காணவந்து நிற்றியேலும் நீடிரும் *
கலைக்கணங்கள்சொற்பொருள் கருத்தினால்நினைக்கொணா *
மலைக்கணங்கள்போலுணர்த்தும்மாட்சி நின்றன்மாட்சியே.
768 ஏகமூர்த்திமூன்றுமூர்த்திநாலுமூர்த்தி நன்மைசேர் *
போகமூர்த்திபுண்ணியத்தின்மூர்த்தி எண்ணில்மூர்த்தியாய் *
நாகமூர்த்திசயனமாய் நலங்கடல்கிடந்து * மேல்
ஆகமூர்த்தியாயவண்ணம் என்கொல்? ஆதிதேவனே!
769 விடத்தவாயொராயிரம் இராயிரம்கண்வெந்தழல் *
விடத்துவீழ்விலாதபோகம் மிக்கசோதிதொக்கசீர் *
தொடுத்துமேல்விதானமாய பௌவநீரராவணை *
படுத்தபாயல்பள்ளிகொள்வது என்கொல்? வேலைவண்ணானே.
770 புள்ளாதாகிவேதம்நான்கும் ஒதினாய் அதன்றியும் *
புள்ளின்வாய்பிளந்து புட்கொடிப்பிடித்தபின்னரும் *
புள்ளையூர்தியாதலால் அதென்கொல்? மின்கொள்நேமியாய்! *
புள்ளின்மெய்ப்பகைக்கடல்கிடத்தல் காதலித்ததே.
771 கூசமொன்றுமின்றி மாசுணம்படுத்து வேலைநீர் *
பேசநின்றதேவர்வந்து பாடமுன்கிடந்ததும் *
பாசம்நின்றநீரில்வாழும் ஆமையானகேசவா *
ஏசஅன்றுநீகிடந்தவாறு கூறுதேறவே.
772 அரங்கனே! தரங்கநீர் கலங்கவன்று, குன்றுசூழ் *
மரங்கள்தேயமாநிலம்குலுங்க மாசுணம்சுலாய் *
நெருங்க, நீகடைந்தபோது நின்றசூரரெஞ்செய்தார்? *
குரங்கையாளுகந்தவெந்தை! கூறுதேறவேறிதே.
773 பண்டுமின்றுமேலுமாய் ஓர்பாலனாகி ஞாலமேழ் *
உண்டுமண்டியாலிலைத்துயின்ற ஆதிதேவனே *
வண்டுகிண்டுதண்டுழாய் அலங்கலாய்! கலந்தசீர் *
புண்டரீகபாவைசேரும் மார்ப! பூமிநாதனே.
774 வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாளெயிற்றவன் *
ஊன்நிறத்துகிர்த்தலம் அழுத்தினாய்! உலாயசீர் *
நால்நிறத்தவேதநாவர் நல்லயோகினால்வணங்கு *
பால்நிறக்கடல்கிடந்த பற்பநாபனல்லையே?
775 கங்கைநீர்பயந்தபாத பங்கயத்தெம்மண்ணலே! *
அங்கையாழிசங்குதண்டு வில்லும்வாளுமேந்தினாய்! *
சிங்கமாயதேவதேவ! தேனுலாவுமென்மலர் *
மங்கைமன்னிவாழுமார்ப! ஆழிமேனிமாயனே!
776 வரத்தினில்சிரத்தைமிக்க வாளெயிற்றுமற்றவன் *
உரத்தினில்கரத்தைவைத்து உகிர்த்தலத்தையூன்றினாய் *
இரத்திநீயிதென்னபொய்? இரந்தமண்வயிற்றுளே
கரத்தி * உன்கருத்தை யாவர்காணவல்லர்கண்ணனே.
777 ஆணினோடுபெண்ணுமாகி அல்லவோடுநல்லவாய் *
ஊணொடோசையூறுமாகி ஒன்றலாதமாயையாய் *
பூணிபேணுமாயனாகிப் பொய்யினோடுமெய்யுமாய் *
காணிபேணும்மாணியாய்க் கரந்துசென்றகள்வனே.
778 விண்கடந்தசோதியாய் விளங்குஞானமூர்த்தியாய் *
பண்கடந்ததேசமேவு பாவநாசநாதனே *
எண்கடந்தயோகினோடு இரந்துசென்றுமாணியாய் *
மண்கடந்தவண்ணம்நின்னை யார்மதிக்கவல்லரே?
779 படைத்தபாரிடந்தளந்து அதுண்டுமிழ்ந்து பௌவநீர் *
படைத்தடைத்ததிற்கிடந்து முன்கடைந்தபெற்றியோய்! *
மிடைத்தமாலிமாலிமான் விலங்குகாலனூர்புக *
படைக்கலம்விடுத்த பல்படைத்தடக்கைமாயனே!
780 பரத்திலும்பரத்தையாதி பௌவநீரணைக்கிடந்து *
உரத்திலும்மொருத்திதன்னை வைத்துகந்து அதன்றியும் *
நரத்திலும்பிறத்திநாத ஞானமூர்த்தியாயினாய்! *
ஒருத்தரும்நினாதுதன்மை இன்னதென்னவல்லரே.
781 வானகம்மும்மண்ணாகம்மும் வெற்புமேழ்கடல்களும் *
போனகம்செய்தாலிலைத்துயின்ற புண்டரீகனே! *
தேனகஞ்செய்தண்ணறும் மலர்த்துழாய்நன்மாலையாய்! *
கூனகம்புகத்தெறித்த கொற்றவில்லியல்லையே?
782 காலநேமிகாலனே! கணக்கிலாதகீர்த்தியாய்! *
ஞாலமேழுமுண்டு பண்டோர்பாலனாயபண்பனே! *
வேலைவேவவில்வளைத்த வெல்சினத்தவீர! * நின்
பாலராயபத்தர்சித்தம் முத்திசெய்யும்மூர்த்தியே!
783 குரக்கினப்ப டைகொடுகுரைகடலின் மீதுபோய்
அரக்கரங்க ரங்கவெஞ்சரம்துரந்த ஆதிநீ *
இரக்கமண்கொடுத்தவற்கு இருக்கமொன்று மின்றியே *
பரக்கவைத்த ளந்துகொண்டபற்பபாத னல்லையே?
784 மின்னிறத்தெயிற்றரக்கன் வீழவெஞ்சரம்துரந்து *
பின்னவற்கருள்புரிந்து அரசளித்தபெற்றியோய்! *
நன்னிறத்தொரின்சொலேழை பின்னைகேள்வ! மன்னுசீர் *
பொன்னிறத்தவண்ணனாய புண்டரீகனல்லையே?
785 ஆதியாதியாதிநீ ஒரண்டமாதியாதலால் *
சோதியாதசோதிநீ அதுண்மையில்விளங்கினாய் *
வேதமாகிவேள்வியாகி விண்ணினோடுமண்ணுமாய் *
ஆதியாகிஆயனாய மாயமென்னமாயமே?
786 அம்புலாவுமீனுமாகி ஆமையாகி ஆழியார் *
தம்பிரானுமாகி மிக்கதுஅன்புமிக்கு அதன்றியும் *
கொம்பராவுநுண்மருங்குல் ஆயர்மாதர்பிள்ளையாய் *
எம்பிரானுமாயவண்ணம் என்கொலோ? எம்மீசனே!
787 ஆடகத்தபூண்முலைய சோதையாய்ச்சிபிள்ளையாய் *
சாடுதைத்தோர்புள்ளதாவி கள்ளதாயபேய்மகள் *
வீடவைத்தவெய்யகொங்கை ஐயபாலமுதுசெய்து *
ஆடகக்கைமாதர்வாயமுதம் உண்டதென்கொலோ?
788 காய்த்தநீள்விளங்கனியுதிர்த்து எதிர்ந்த பூங்குருந்து
சாய்த்து * மாபிளந்தகைத்தலத்த கண்ணனென்பரால் *
ஆய்ச்சிபாலையுண்டுமண்ணையுண்டு வெண்ணெயுண்டு * பின்
பேய்ச்சிபாலையுண்டு பண்டொரேனமாயவாமனா!
789 கடங்கலந்தவன்கரி மருப்பொசித்து ஓர்பொய்கைவாய் *
விடங்கலந்தபாம்பின்மேல் நடம்பயின்றநாதனே! *
குடங்கலந்தகூத்தனாய கொண்டல்வண்ண! தண்துழாய் *
வடங்கலந்தமாலைமார்ப! காலநேமிகாலனே!
790 வெற்பெடுத்துவேலைநீர் கலக்கினாய், அதன்றியும் *
வெற்பெடுத்துவேலைநீர் வரம்புகட்டி வேலைசூழ் *
வெற்பெடுத்தஇஞ்சிசூழ் இலங்கைகட்டழித்தநீ *
வெற்பெடுத்துமாரிகாத்த மேகவண்ணனல்லையே?
791 ஆனைகாத்துஓரானைகொன்று அதன்றி, ஆயர்பிள்ளையாய்
ஆனைமேய்த்தியானெயுண்டி அன்றுகுன்றமொன்றினால் *
ஆனைகாத்து, மையரிக்கண் மாதரார்திறத்து * முன்
ஆனையன்று சென்றடர்த்த மாயமென்னமாயமே?
792 ஆயனாகி ஆயர்மங்கை வேயதோள்விரும்பினாய் *
ஆய! நின்னை யாவர்வல்லர்? அம்பரத்தொடிம்பராய் *
மாய! மாய மாயைகொல்? அதன்றிநீவகுத்தலும் *
மாயமாயமாக்கினாய் உன்மாயமுற்றுமாயமே.
793 வேறிசைந்தசெக்கர்மேனி நீரணிந்தபுஞ்சடை *
கீறுதிங்கள்வைத்தவன் கைவைத்தவன்கபால்மிசை *
ஊறுசெங்குருதியால் நிறைத்தகாரணந்தனை *
ஏறுசென்றடர்த்தஈச! பேசுகூச மின்றியே.
794 வெஞ்சினத்தவேழவெண்மருப்பொசித்து உருத்தமா *
கஞ்சனைக்கடிந்து மண்ணளந்துகொண்ட காலனே! *
வஞ்சனத்துவந்தபேய்ச்சியாவி பாலுள்வாங்கினாய் *
அஞ்சனத்தவண்ணானாய ஆதிதேவனல்லையே?
795 பாலினீர்மைசெம்பொனீர்மை பாசியின்பசும்புறம்
போலுநீர்மை * பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலாம்
நீலநீர்மையென்றிவை நிறைந்தகாலம்நான்குமாய் *
மாலினீர்மைவையகம் மறைத்ததென்னநீர்மையே?
796 மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேமயங்கிநின்று *
எண்ணுமெண்ணகப்படாய்கொல் என்னமாயை * நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல் * அனந்தன்மேல்கிடந்தஎம்
புண்ணியா * புனந்துழாயலங்கலம்புனிதனே!
797 தோடுபெற்றதண்டுழாய் அலங்கலாடுசென்னியாய்! *
கோடுபற்றியாழியேந்தி அஞ்சிறைப்புள்ளூர்தியால் *
நாடுபெற்றநன்மை நண்ணமில்லையேனும், நாயினேன் *
வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமாசொலே.
798 காரொடொத்தமேனி நங்கள்கண்ண! விண்ணிண்நாதனே! *
நீரிடத்தராவணைக்கிடத்தி யென்பர், அன்றியும் *
ஓரிடத்தையல்லை எல்லையில்லையென்பராதலால் *
சேர்விடத்தைநாயினேன் தெரிந்திறைஞ்சுமாசொலே.
799 குன்றில்நின்றுவானிருந்து நீள்கடல்கிடந்து * மண்
ஒன்றுசென்றதொன்றையுண்டு அதொன்றிடந்துபன்றியாய் *
நன்றுசென்றநாளவற்றுள் நல்லுயிர்படைத்து, அவர்க்கு *
அன்றுதேவமைத்தளித்த ஆதிதேவனல்லயே?
800 கொண்டைகொண்டகோதைமீது தேனுலாவுகூனிகூன்
உண்டைகொண்டரங்கவோட்டி உள்மகிழ்ந்தநாதனூர் *
நண்டையுண்டுநாரைபேர வாளைபாய, நீலமே *
அண்டைகொண்டுகெண்டைமேயும் அந்தணீரரங்கமே. (2)
801 வெண்டிரைக்கருங்கடல் சிவந்துவேவ, முன்னோர்நாள் *
திண்டிறல்சிலைக்கைவாளி விட்டவீரர்சேருமூர் *
எண்டிசைக்கணங்களும் இறைஞ்சியாடுதீர்த்தநீர் *
வண்டிரைத்தசோலைவேலி மன்னுசீரரங்கமே.
802 சரங்களைத்துரந்து வில்வளைத்து, இலங்கைமன்னவன் *
சிரங்கள்பத்தறுத்துதிர்த்த செல்வர்மன்னுபொன்னிடம் *
பரந்துபொன்நிரந்துநுந்தி வந்தலைக்கும்வார்புனல் *
அரங்கமென்பர் நான்முகத்தயன்பணிந்தகோயிலே.
803 பொற்றையுற்றமுற்றல்யானை போரெதிர்ந்துவந்ததை *
பற்றியுற்றுமற்றதன் மருப்பொசித்தபாகனூர் *
சிற்றெயிற்றுமுற்றல்மூங்கில் மூன்றுதண்டரொன்றினர் *
அற்றபற்றர்சுற்றிவாழும் அந்தணீரரங்கமே.
804 மோடியோடிலச்சையாய சாபமெய்திமுக்கணான் *
கூடுசேனைமக்களோடு கொண்டுமண்டிவெஞ்சமத்து
ஒட * வாணனாயிரம் கரங்கழித்த ஆதிமால் *
பீடுகோயில்கூடுநீர் அரங்கமென்றபேரதே.
805 இலைத்தலைச்சரந்துரந்து இலங்கைகட்டழித்தவன் *
மலைத்தலைப்பிறந்திழிந்து வந்துநுந்துசந்தனம் *
குலைத்தலைத்திறுத்தெறிந்த குங்குமக்குழம்பினோடு *
அலைத்தொழுகுகாவிரி அரங்கமேய அண்ணலே!
806 மன்னுமாமலர்க்கிழத்தி வையமங்கைமைந்தனாய் *
பின்னுமாயர்பின்னைதோள் மணம்புணர்ந்ததன்றியும் *
உன்னபாதமென்னசிந்தை மன்னவைத்துநல்கினாய் *
பொன்னிசூழரங்கமேய புண்டரீகனல்லையே?
807 இலங்கைமன்னனைந்தொடைந்து பைந்தலைநிலத்துக *
கலங்கவன்றுசென்றுகொன்று வென்றிகொண்டவீரனே! *
விலங்குநூலர்வேதநாவர் நீதியானகேள்வியார் *
வலங்கொளக்குடந்தையுள் கிடந்தமாலுமல்லையே?
808 சங்குதங்குமுன்கைநங்கை கொங்கைதங்கலுற்றவன் *
அங்கமங்கவன்றுசென்று அடர்த்தெறிந்தவாழியான் *
கொங்குதங்குவார்குழல் மடந்தைமார்குடைந்தநீர் *
பொங்குதண்குடந்தையுள் கிடந்தபுண்டரீகனே. 57
809 மரங்கெடநடந்தடர்த்து மத்தயானைமத்தகத்து *
உரங்கெடப்புடைத்து ஒர்கொம்பொசித்துகந்தவுத்தமா! *
துரங்கம்வாய்பிளந்து மண்ணளந்தபாத! * வேதியர்
வரங்கொளக்குடந்தையுள் கிடந்தமாலுமல்லையே.
810 சாலிவேலிதண்வயல் தடங்கிடங்குபூம்பொழில் *
கோலமாடநீடு தண்குடந்தைமேயகோவலா! *
காலநேமிவக்கரன் கரன்முரன்சிரம்மவை *
காலனோடுகூட விற்குனித்தவிற்கை வீரனே!
811 செழுங்கொழும்பெரும்பனி பொழிந்திட * உ யர்ந்தவேய்
விழுந்துலர்ந்தெழுந்து விண்புடைக்கும்வேங்கடத்துள்நின்று *
எழுந்திருந்துதேன்பொருந்து பூம்பொழில்தழைக்கொழும் *
செழுந்தடங்குடந்தையுள் கிடந்தமாலுமல்லையே?
812 நடந்தகால்கள்நொந்தவோ? நடுங்குஞாலமேனமாய் *
இடந்தமெய்குலுங்கவோ? விலங்குமால்வரைச்சுரம் *
கடந்தகால்பரந்தகாவிரிக்கரைக்குடந்தையுள் *
கிடந்தவாறெழுந்திருந்துபேசு வாழிகேசனே! (2)
813 கரண்டமாடுபொய்கையுள் கரும்பனைப்பெரும்பழம் *
புரண்டுவீழ, வாளைபாய் குறுங்குடிநெடுந்தகாய்! *
திரண்டதோளிரணியஞ் சினங்கொளாகமொன்றையும் *
இரண்டுகூறுசெய்துகந்த சிங்கமென்பதுன்னையே. (2)
814 நன்றிருந்துயோகநீதி நண்ணுவார்கள்சிந்தையுள் *
சென்றிருந்துதீவினைகள் தீர்த்ததேவதேவனே! *
குன்றிருந்தமாடநீடு பாடகத்தும்ஊரகத்தும் *
நின்றிருந்து, வெஃகணைக்கிடந்தது என்னநீர்மையே?
815 நின்றதெந்தையூரகத்து இருந்ததெந்தைபாடகத்து *
அன்றுவெஃக ணைக்கிடந்தது என்னிலாதமுன்னெலாம் *
அன்றுநான்பிறந்திலேன் பிறந்தபின்மறந்திலேன் *
நின்றதும்இருந்ததும் கிடந்ததும்என்நெஞ்சுளே.
816 நிற்பதும்ஓர்வெற்பகத்து இருப்பும்விண், கிடப்பதும் *
நற்பெருந்திரைக்கடலுள் நானிலாதமுன்னெலாம் *
அற்புதனனந்தசயனன் ஆதிபூதன்மாதவன் *
நிற்பதும்மிருப்பதும் கிடப்பதும்என்நெஞ்சுளே.
817 இன்றுசாதல்நின்றுசாதல் அன்றி யாரும்வையகத்து *
ஒன்றிநின்றுவாழ்தலின்மைகண்டும் நீசரென்கொலோ? *
அன்றுபாரளந்தபாதபோதை யொன்றி, வானின்மேல் *
சென்றுசென்றுதேவராய் இருக்கிலாதவண்ணமே
818 சண்டமண்டலத்தினூடு சென்றுவீடுபெற்று * மேல்
கண்டுவீடிலாதகாதலின்பம் நாளுமெய்துவீர் *
புண்டரீகபாதபுண்யகீர்த்தி நுஞ்செவிமடுத்து
உண்டு * நும்முறுவினைத் துயருள்நீங்கியுய்ம்மினோ.
819 முத்திறத்துவாணியத்து இரண்டிலொன்றுநீசர்கள் *
மத்தராய்மயங்குகின்றது இட்டதிலிறந்துபோந்து *
எத்திறத்துமுய்வது ஒருபாயமில்லை உய்குறில் *
தொத்திறத்ததண்துழாய் நன்மாலைவாழ்த்திவாழ்மினோ.
820 காணிலும்உருப்பொலார் செவிக்கினாதகீர்த்தியார் *
பேணிலும்வரந்தரமிடுக்கிலாததேவரை *
ஆணமென்றடைந்துவாழும் ஆதர்காள்! எம்மாதிபால் *
பேணிநும்பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே.
821 குந்தமோடுசூலம்வேல்கள் தோமரங்கள்தண்டுவாள் *
பந்தமானதேவர்கள் பரந்துவானகம்முற *
வந்தவாணனீரைஞ்நூறு தோள்களைத்துணித்தநாள் *
அந்தவந்தவாகுலம் அமரரேயறிவரே.
822 வண்டுலாவுகோதைமாதர் காரணத்தினால்வெகுண்டு *
இண்டவாணனீரைஞ்ஞூறுதோள்களைத்துணித்தநாள் *
முண்டனீறன்மக்கள்வெப்பு மோடியங்கியோடிடக் *
கண்டு * நாணிவாணனுக்கு இரங்கினானெம்மாயனே.
823 போதில்மங்கை பூதலக்கிழத்தி தேவி, அன்றியும் *
போதுதங்குநான்முகன்மகன் அவன்மகன்சொலில் *
மாதுதங்குகூறன் ஏறதூர்தியென்று வேதநூல் *
ஓதுகின்றதுண்மை அல்லதில்லைமற்றுரைக்கிலே
824 மரம்பொதச்ரந்துரந்து வாலிவீழமுன்னொர்நாள் *
உரம்பொதச்சரந்துரந்த உம்பராளியெம்பிரான் *
வரம்குறிப்பில்வைத்தவர்க்கு அலாதுவானமாளிலும் *
நிரம்புநீடுபோகம் எத்திறத்தும்யார்க்குமில்லையே.
825 அறிந்தறிந்துவாமனன் அடியிணைவணங்கினால் *
செறிந்தெழுந்தஞானமோடு செல்வமும்சிறந்திடும் *
மறிந்தெழுந்ததெண்டிரையுள் மன்னுமாலைவாழ்த்தினால் *
பறிந்தெழுந்துதீவினைகள் பற்றறுதல்பான்மையே.
826 ஒன்றிநின்றுநற்றவம்செய்து ஊழியூழிதோறெலாம் *
நின்றுநின்றவன்குணங்கள்உள்ளியுள்ளம்தூயராய் *
சென்றுசென்றுதேவதேவர் உம்பரும்பரும்பராய் *
அன்றி, எங்கள்செங்கண்மாலை யாவர்காணவல்லரே?
827 புன்புலவழியடைத்து அரக்கிலச்சினைசெய்து *
நன்புலவழிதிறந்து ஞானநற்சுடர்கொளீஇ *
என்பிலெள்கிநெஞ்சுருகி உள்கனிந்தெழுந்ததோர் *
அன்பிலன்றியாழியானை யாவர்காணவல்லரே?
828 எட்டுமெட்டுமெட்டுமாய் ஒரேழுமேழுமேழுமாய் *
எட்டுமூன்றுமொன்றுமாகி நின்றஆதிதேவனை *
எட்டினாயபேதமோடு இறைஞ்சிநின்று, அவன்பெயர் *
எட்டெழுத்துமோதுவார்கள் வல்லர்வானமாளவே.
829 சோர்விலாதகாதலால் தொடக்கறாமனத்தராய் *
நீரராவணைக்கிடந்த நின்மலன்நலங்கழல் *
ஆர்வமோடிறைஞ்சிநின்ற வன்பெயரெட்டெழுத்தும் *
வாரமாகவோதுவார்கள் வல்லர்வானமாளவே.
830 பத்தினோடுபத்துமாய் ஒரேழினோடொரொன்பதாய் *
பத்தினால்திசைக்கணின்ற நாடுபெற்றநன்மையாய் *
பத்தினாயதோற்றமோடு ஒராற்றல்மிக்கஆதிபால் *
பத்தராமவர்க்கலாது முத்திமுற்றலாகுமே?
831 வாசியாகிநேசமின்றி வந்தெதிர்ந்ததேனுகன் *
நாசமாகிநாளுலப்ப நன்மைசேர்பனங்கனிக்கு
வீசி * மேல்நிமிர்ந்ததோளிலில் இல்லையாக்கினாய் * கழற்கு
ஆசையாமவர்க்கலால் அமரராகலாகுமே?
832 கடைந்துபாற்கடல்கிடந்து காலநேமியைக்கடிந்து *
உடைந்தவாலிதன்தனக்கு உதவவந்திராமனாய் *
மிடைந்தவேழ்மரங்களும் அடங்கவெய்து * வேங்கடம்
அடைந்தமாலபாதமே அடைந்துநாளுமுய்ம்மினோ.
833 எத்திறத்துமொத்துநின்று உயர்ந்துயர்ந்தபெற்றியோய்! *
முத்திறத்துமூரிநீர் அராவணைத்துயின்ற * நின்
பத்துறுத்தசிந்தையோடுநின்று, பாசம்விட்டவர்க்கு *
எத்திறத்துமின்பம் இங்குமங்குமெங்குமாகுமே.
834 மட்டுலாவுதண்டுழா யலங்கலாய்! புலன்கழல் *
விட்டுவிள்விலாதபோகம் விண்ணில்நண்ணியேறினும் *
எட்டினோடிரண்டெனும் கயிற்றினால்மனந்தனைக்
கட்டி * வீடிலாதுவைத்த காதலின்பமாகுமே.
835 பின்பிறக்கவைத்தனன்கொல்? அன்றிநின்றுதன்கழற்கு *
அன்புறைக்கவைத்தநாள் அறிந்தனன்கொல்? ஆழியான் *
தந்திறத்தொரன்பிலா அறிவிலாதநாயினேன் *
எந்திறத்திலென்கொல்? எம்பிரான்குறிப்பில்வைத்ததே?
836 நச்சராவணைக்கிடந்த நாத! பாதபோதினில் *
வைத்தசிந்தைவாங்குவித்து நீங்குவிக்கநீயினம் *
மெய்த்தன்வல்லையாதலால் அறிந்தனன், நின்மாயமே *
உய்த்துநின்மயக்கினில் மயக்கலென்னைமாயனே!
837 சாடுசாடுபாதனே! சலங்கலந்தபொய்கைவாய் *
ஆடராவின்வன்பிடர் நடம்பயின்றநாதனே! *
கோடுநீடுகைய! செய்யபாதநாளுமுள்ளினால் *
வீடனாகமெய்செயாத வண்ணமென்கொல்? கண்ணனே!
838 நெற்றிபெற்றகண்ணன் விண்ணினாதனோடுபோதின்மேல் *
நற்றவத்துநாதனோடு மற்றுமுள்ளவானவர் *
கற்றபெற்றியால்வணங்குபாத! நாத! வேத! * நின்
பற்றலாலொர்பற்று மற்றதுற்றிலேனுரைக்கிலே.
839 வெள்ளைவேலைவெற்புநாட்டி வெள்ளெயிற்றராவளாய் *
அள்ளலாக்கடைந்தவன்று அருவரைக்கொராமையாய் *
உள்ளநோய்கள்தீர்மருந்து வானவர்க்களித்த * எம்
வள்ளலாரையன்றி மற்றொர் தெய்வம்நான்மதிப்பனே?
840 பார்மிகுத்தபாரம் முன்ஒழிச்சுவான், அருச்சுனன் *
தேர்மிகுத்துமாயமாக்கி நின்றுகொன்று, வென்றிசேர் *
மாரதர்க்குவான்கொடுத்து வையமைவர்பாலதாம் *
சீர்மிகுத்தநின்னலால் ஒர்தெய்வம்நான்மதிப்பனே?
841 குலங்களாயஈரிரண்டில் ஒன்றிலும்பிறந்திலேன் *
நலங்களாயநற்கலைகள் நாவிலும்நவின்றிலேன் *
புலன்களைந்தும்வென்றிலேன் பொறியிலேன்புனித! * நின்
இலங்குபாதமன்றி மற்றொர்பற்றிலேனெம்மீசனே!
842 பண்ணுலாவுமென்மொழிப் படைத்தடங்கணாள்பொருட்டு *
எண்ணிலாவரக்கரை நெருப்பினால்நெருக்கினாய் *
கண்ணலாலொர்கண்ணிலேன் கலந்தசுற்றம்மற்றிலேன் *
எண்ணிலாதமாய! நின்னை என்னுள்நீக்கலென்றுமே.
843 விடைக்குலங்களேழடர்த்துவென்றிவேற்கண்மாதரார் *
கடிக்கலந்ததோள்புணர்ந்த காலிஆய! வேலைநீர் *
படைத்தடைத்ததிற்கிடந்து முன்கடைந்து, நின்றனக்கு *
அடைக்கலம்புகுந்தவென்னையஞ்சலென்னவேண்டுமே. (2)
844 சுரும்பரங்குதண்டுழாய் துதைந்தலர்ந்தபாதமே *
விரும்பிநின்றிறைஞ்சுவேற்கு இரங்குஅரங்கவாணனே! *
கரும்பிருந்தகட்டியே! கடல்கிடந்தகண்ணனே! *
இரும்பரங்கவெஞ்சரந்துரந்த வில்லிராமனே!
845 ஊனில்மேயஆவிநீ உறக்கமோடுணர்ச்சிநீ *
ஆனில்மேயவைந்தும்நீ அவற்றுள்நின்றதூய்மைநீ *
வானினோடுமண்ணும்நீ வளங்கடற்பயனும்நீ *
யானும்நீஅதன்றி எம்பிரானும்நீஇராமனே!
846 அடக்கரும்புலன்கள்ஐந்தடக்கி ஆசையாமவை *
தொடக்கறுத்துவந்து நின்தொழிற்கணின்றஎன்னைநீ *
விடக்கருதிமெய்செயாது மிக்கொராசையாக்கிலும் *
கடற்கிடந்தநின்னலால் ஒர்கண்ணிலேன்எம்மண்ணலே.
847 வரம்பிலாதமாயமாய! வையமேழும்மெய்ம்மையே *
வரம்பிலூழியேத்திலும் வரம்பிலாதகீர்த்தியாய் *
வரம்பிலாதபல்பிறப்பு அறுத்துவந்துநின்கழல் *
பொருந்துமாதிருந்தநீ வரஞ்செய்புண்டரீகனே!
848 வெய்யவாழிசங்குதண்டு வில்லும்வாளுமேந்துசீர்க்
கைய * செய்யபோதில்மாது சேரும்மார்ப! நாதனே! *
ஐயிலாயஆக்கைநோய் அறுத்துவந்துநின்னடைந்து *
உய்வதோருபாயம்நீ எனக்குநல்கவேண்டுமே.
849 மறம்துறந்துவஞ்சமாற்றி ஐம்புலன்களாசையும்
துறந்து * நின்கணாசையே தொடர்ந்துநின்றநாயினேன் *
பிறந்திறந்துபேரிடர்ச் சுழிக்கணின்றுநீங்குமா *
மறந்திடாதுமற்றெனெக்கு மாய! நல்கவேண்டுமே.
850 காட்டிநான்செய்வல்வினை பயன்தனால்மனந்தனை *
நாட்டிவைத்துநல்லவல்ல செய்யவெண்ணினாரென *
கேட்டதன்றியென்னதாவி பின்னைகேள்வ! நின்னொடும் *
பூட்டிவைத்தவென்னை நின்னுள்நீக்கல்பூவைவண்ணனே!
851 பிறப்பினோடுபேரிடர்ச் சுழிக்கண்நின்றும்நீங்குமஃது *
இறப்பவைத்தஞானநீசரைக்கரைக்கொடேற்றுமா *
பெறற்கரியநின்னபாத பத்தியானபாசனம் *
பெறற்கரியமாயனே! எனக்குநல்கவேண்டுமே.
852 இரந்துரைப்பதுண்டுவாழி ஏமநீர்திறத்தமா! *
வரம்தரும்திருக்குறிப்பில் வைத்ததாகில்மன்னுசீர் *
பரந்தசிந்தையொன்றிநின்று நின்னபாதபங்கயம் *
நிரந்தரம்நினைப்பதாக நீநினைக்கவேண்டுமே.
853 விள்விலாதகாதலால் விளங்குபாதபோதில்வைத்து *
உள்ளுவேனதூனநோய் ஒழிக்குமா, தெழிக்குநீர் *
பள்ளிமாய! பன்றியாய வென்றிவீர! * குன்றினால்
துள்ளுநீர்வரம்புசெய்த தோன்றல் ஒன்று சொல்லிடே.
854 திருக்கலந்துசேருமார்ப! தேவதேவதேவனே *
இருக்கலந்தவேதநீதி ஆகிநின்றநின்மலா! *
கருக்கலந்தகாளமேக மேனியாய நின்பெயர் *
உருக்கலந்தொழிவிலாது உரைக்குமாறுரைசெயே.
855 கடுங்கவந்தன்வக்கரன் கரன்முரன்சிரம்மவை *
இடந்துகூறுசெய்த பல்படைத்தடக்கைமாயனே! *
கிடந்திருந்துநின்றியங்குபோதும் நின்னபொற்கழல் *
தொடர்ந்துவிள்விலாதது ஒர்தொடர்ச்சிநல்கவேண்டுமே.
856 மண்ணையுண்டுமிழ்ந்து பின்இரந்துகொண்டளந்து * மண்
கண்ணுளல்லதில்லையென்று வென்றகாலமாயினாய்! *
பண்ணைவென்றவின்சொல்மங்கை கொங்கைதங்குபங்கயக்
கண்ண! * நின்னவண்ணமல்லதில்லை எண்ணும்வண்ணமே.
857 கறுத்தெதிர்ந்தகாலநேமி காலனோடுகூட * அன் று
அறுத்தவாழிசங்குதண்டு வில்லும்வாளுமேந்தினாய்! *
தொறுக்கலந்தவூனமஃது ஒழிக்கஅன்று, குன்றம்முன் *
பொறுத்தநின்புகழ்க்கலால் ஒர்நேசமில்லைநெஞ்சமே!
858 காய்சினத்தகாசிமன்னன் வக்கரன்பவுண்டிரன் *
மாசினத்தமாலிமான் சுமாலிகேசிதேனுகன் *
நாசமுற்றுவீழநாள்கவர்ந்தநின்கழற்கலால் *
நேசபாசமெத்திறத்தும் வைத்திடேனெம்மீசனே!
859 கேடில்சீர்வரத்தனாய்க்கெடும்வரத்தயன்அரன் *
நாடினோடுநாட்டமாயிரத்தன் நாடுநண்ணிலும் *
வீடதானபோகமெய்தி வீற்றிருந்தபோதிலும் *
கூடுமாசையல்லதொன்று கொள்வனோ?குறிப்பிலே.
860 சுருக்குவாரையின்றியே சுருங்கினாய், சுருங்கியும் *
பெருக்குவாரையின்றியே பெருக்கமெய்துபெற்றியோய்! *
செருக்குவார்கள்தீக்குணங்கள் தீர்த்ததேவதேவனென்று *
இருக்குவாய்முனிக்கணங்களேத்த யானுமேத்தினேன்.
861 தூயனாயுமன்றியும் சுரும்புலாவுதண்துழாய் *
மாய! நின்னைநாயினேன் வணங்கிவாழ்த்துமீதெலாம் *
நீயுநின்குறிப்பினில் பொறுத்துநல்கு, வேலைநீர் *
பாயலோடுபத்தர்சித்தம்மேய வேலைவண்ணனே!
862 வைதுநின்னைவல்லவா பழித்தவர்க்கும், மாறில்போர் *
செய்துநின்னைசெற்றதீயில் வெந்தவர்க்கும், வந்துன்னை *
எய்தலாகுமென்பர் ஆதலால், எம்மாய! நாயினேன் *
செய்தகுற்றம்நற்றமாகவேகொள் ஞாலநாதனே!
863 வாள்களாகிநாள்கள்செல்ல நோய்மைகுன்றிமூப்பெய்தி *
மாளுநாளதாதலால் வணங்கிவாழ்த்துஎன்நெஞ்சமே! *
ஆளதாகுநன்மையென்று நன்குணர்ந்ததன்றியும் *
மீள்விலாதபோகம்நல்கவேண்டும் மாலபாதமே.
864 சலங்கலந்தசெஞ்சடைக் கறுத்தகண்டன், வெண்தலை *
புலன்கலங்கவுண்டபாதகத்தன் வன்துயர்கெட *
அலங்கல்மார்வில்வாசநீர் கொடுத்தவன், அடுத்தசீர் *
நலங்கொள்மாலைநண்ணும்வண்ணம் எண்ணுவாழி நெஞ்சமே!
865 ஈனமாயஎட்டும்நீக்கி ஏதமின்றிமீதுபோய் *
வானமாளவல்லையேல் வணங்கிவாழ்த்தென்நெஞ்சமே! *
ஞானமாகிஞாயிறாகி ஞாலமுற்றும், ஒரெயிற்று *
ஏனமாயிடந்தமூர்த்தி எந்தைபாதமெண்ணியே.
866 அத்தனாகியன்னையாகி ஆளுமெம்பிரானுமாய் *
ஒத்தொவ்வாதபல்பிறப்பொழித்து நம்மையாட்கொள்வான் *
முத்தனார்முகுந்தனார் புகுந்துநம்முள்மேவினார் *
எத்தினால்இடர்க்கடல்கிடத்தி? ஏழைநெஞ்சமே! (2)
867 மாறுசெய்தவாளரக்கன் நாளுலப்ப * அன்றிலங்கை
நீறுசெய்துசென்றுகொன்று வென்றிகொண்டவீரனார் *
வேறுசெய்துதம்முளென்னை வைத்திடாமையால் * நமன்
கூறுசெய்துகொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே?
868 அச்சம்நோயொடல்லல்பல் பிறப்பஆயமூப்பிவை *
வைத்தசிந்தைவைத்தவாக்கை மாற்றிவானிலேற்றுவான் *
அச்சுதன் அனந்தகீர்த்தி ஆதியந்தமில்லவன் *
நச்சுநாகணைக்கிடந்த நாதன்வேதகீதனே.
869 சொல்லினும்தொழிற்கணும் தொடக்கறாதஅன்பினும் *
அல்லுநன்பகலினோடும் ஆனமாலைகாலையும் *
வல்லிநாண்மலர்க்கிழத்திநாத! பாதபோதினை *
புல்லியுள்ளம்விள்விலாது பூண்டுமீண்டதில்லையே.
870 பொன்னிசூழரங்கமேய பூவைவண்ண! மாய!கேள் *
என்னதாவியென்னும் வல்வினையினுள்கொழுந்தெழுந்து *
உன்னபாதமென்னநின்ற ஒண்சுடர்க்கொழுமலர் *
மன்னவந்துபூண்டு வாட்டமின்றியெங்கும்நின்றதே. (2)
871 இயக்கறாதபல்பிறப்பில் என்னைமாற்றி, இன்றுவந்து *
உயக்கொள்மேகவண்ணன்நண்ணி என்னிலாயதன்னுளே *
மயக்கினான்றன்மன்னுசோதி ஆதலால், என்னாவிதான் *
இயக்கெலாமறுத்து அறாதவின்பவீடுபெற்றதே. (2)