Your browser does not support the audio element.
audio
3728 உருகுமால்நெஞ்சம் உயிரின்பரமன்றி *
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்? *
தெருவெல்லாம்காவிகமழ் திருக்காட்கரை *
மருவியமாயன்தன் மாயம்நினைதொறே. (2)
3729 நினைதொறும்சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் *
வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர் *
சுனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா! *
நினைகிலேன்நான் உனக்குஆட்செய்யும்நீர்மையே.
3730 நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து * என்னை
ஈர்மைசெய்து என்னுயிராய்என்னுயிருண்டான் *
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன் *
கார்முகில்வண்ணன்தன் கள்வமறிகிலேன்.
3731 அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும்நிற்க *
நெறிமையால்தானும் அவற்றுள்நிற்கும்பிரான் *
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *
சிறியவென்னாருயிருண்ட திருவருளே.
3732 திருவருள்செய்பவன்போல் என்னுள்புகுந்து *
உருவமுமாருயிரும் உடனேயுண்டான் *
திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *
கருவளர்மேனிநங்கண்ணங்கள்வங்களே.
3733 என்கண்ணன்கள்வம் எனக்குச்செம்மாய்நிற்கும் *
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது *
புன்கண்மையெய்திப் புலம்பியிராப்பகல் *
என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.
3734 காட்கரையேத்தும் அதனுள்கண்ணா! என்னும் *
வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும் *
ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால் *
கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே.
3735 கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான் *
நாளுநாள்வந்து என்னைமுற்றவும்தானுண்டான் *
காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு *
ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.
3736 ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது? *
பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயது * ஓர்
காரெழில்மேகத் தென்காட்கரைகோயில்கொள் *
சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே.
3737 வாரிக்கொண்டு உன்னைவிழுங்குவன்காணிலென்று *
ஆர்வுற்ற என்னையொழிய என்னின்முன்னம்
பாரித்து * தானென்னை முற்றப்பருகினான் *
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே.
3738 கடியனாய்க் கஞ்சனைக்கொன்றபிரான்தன்னை *
கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல் *
வடிவமையாயிரத்து இப்பத்தினால் * சன்மம்
முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே. (2)