ThiruvichikkOdu, ThiruvanjikkOdu
Your browser does not support the audio element.
audio
688 தருதுயரம்தடாயேல் உன்சரணல்லால்சரணில்லை *
விரைகுழுவுமலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே! *
அரிசினத்தாலீன்றதாய் அகற்றிடினும் * மற்றவள்தன்
அருள்நினைந்தேயழும் குழவிஅதுவேபோன்றிருந்தேனே. (2)
689 கண்டாரிகழ்வனவே காதலன்தான்செய்திடினும் *
கொண்டானையல்லால் அறியாக்குலமகள்போல் *
விண்டோய்மதிள்புடைசூழ் விற்றுவக்கோட்டம்மா! நீ *
கொண்டாளாயாகிலும் உன்குரைகழலேகூறுவனே.
690 மீன்நோக்கும்நீள்வயல்சூழ் விற்றுவக்கோட்டம்மா! * என்
பால்நோக்காயாகிலும் உன்பற்றல்லால்பற்றில்லேன் *
தான்நோக்காது எத்துயரம்செய்திடினும் * தார்வேந்தன்
கோல்நோக்கிவாழும் குடிபோன்றிருந்தேனே.
691 வாளாலறுத்துச்சுடினும் மருத்துவன்பால் *
மாளாதகாதல் நோயாளன்போல் * மாயத்தால்
மீளாத்துயர்தரினும் விற்றுவக்கோட்டம்மா! * நீ
ஆளாவுனதருளே பார்ப்பனடியேனே.
692 வெங்கண்திண்களிறடர்த்தாய்! விற்றுவக்கோட்டம்மானே! *
எங்குப்போயுய்கேன்? உன்னிணையடியேயடையலல்லால் *
எங்கும்போய்க்கரைகாணாது எறிகடல்வாய்மீண்டேயும் *
வங்கத்தின்கூம்பேறும் மாப்பறவைபோன்றேனே.
693 செந்தழலேவந்து அழலைச்செய்திடினும் * செங்கமலம்
அந்தரஞ்சேர்வெங்கதிரோற்கல்லால் அலராவால் *
வெந்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட் டம்மா! * உன்
அந்தமில்சீர்க்கல்லால் அகங்குழையமாட்டேனே.
694 எத்தனையும் வான்மறந்தகாலத்தும் பைங்கூழ்கள் *
மைத்தெழுந்தமாமுகிலே பார்த்திருக்கும்மற்றவைபோல் *
மெய்த்துயர்வீட்டாவிடினும் விற்றுவக்கோட்டம்மா! * என்
சித்தம்மிகவுன்பாலே வைப்பனடியேனே.
695 தொக்கிலங்குயாறெல்லாம் பரந்தோடி * தொடுகடலே
புக்கன்றிப்புறம்நிற்கமாட்டாத மற்றவைபோல் *
மிக்கிலங்குமுகில்நிறத்தாய்! விற்றுவக்கோட்டம்மா! * உன்
புக்கிலங்குசீரல்லால் புக்கிலன்காண்புண்ணியனே!
696 நின்னையேதான்வேண்டி நீள்செல்வம்வேண்டாதான்
தன்னையே * தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால் *
மின்னையேசேர்திகிரி விற்றுவக்கோட்டம்மா! *
நின்னையேதான்வேண்டி நிற்பனடியேனே.
697 விற்றுவக்கோட்டம்மா! நீவேண்டாயேயாயிடினும் *
மற்றாரும்பற்றிலேனென்று அவனைத்தாள்நயந்த *
கொற்றவேல்தானைக் குலசேகரன்சொன்ன *
நற்றமிழ்பத்தும்வல்லார் நண்ணார்நரகமே. (2)