Your browser does not support the audio element.
audio
3717 இன்னுயிர்ச்சேவலும் நீரும்கூவிக்கொண்டு, இங்கு எத்தனை *
என்னுயிர் நோவமிழற்றேன்மின் குயில்பேடை காள் *
என்னுயிர்க்கண்ணபிரானை நீர்வரக்கூவுகிலீர் *
என்னுயிர்க்கூவிக்கொடுப்பார்க்கும் இத்தனைவேண்டுமோ? (2)
3718 இத்தனைவேண்டுவதன்றந்தோ! அன்றில்பேடைகாள்! *
எத்தனைநீரும்நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர் *
வித்தகன்கோவிந்தன் மெய்யனல்லன்ஒருவர்க்கும் *
அத்தனையாம்இனி என்னுயிர்அவன்கையதே.
3719 அவன்கையதேஎனதாருயிர் அன்றில்பேடைகாள்! *
எவன்சொல்லிநீர்குடைந்தாடுதிர் புடைசூழவே *
தவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர்இங்குண்டோ? *
எவன்சொல்லிநிற்றும்? நும்ஏங்குகூக்குரல்கேட்டுமே.
3720 கூக்குரல்கேட்டும் நங்கண்ணன்மாயன்வெளிப்படான் *
மேற்கிளைகொள்ளேன்மின் நீரும்சேவலும்கோழிகாள்! *
வாக்கும்மனமும்கருமமும் நமக்காங்கதே *
ஆக்கையுமாவியும் அந்தரம்நின்றுழலுமே.
3721 அந்தரம்நின்றுழல்கின்ற யானுடைப்பூவைகாள்! *
நுந்திறத்தேதுமிடையில்லை குழறேன்மினோ *
இந்திரஞாலங்கள்காட்டி இவ்வேழுலகும்கொண்ட *
நந்திருமார்பன் நம்மாவியுண்ணநன்கெண்ணினான்.
3722 நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளிப்பைதலே! *
இன்குரல்நீமிழிற்றேல் என்னாருயிர்க்காகுத்தன் *
நின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன்கை காலினன் *
நின்பசுஞ்சாமநிறத்தன் கூட்டுண்டுநீங்கினான்.
3723 கூட்டுண்டுநீங்கிய கோலத்தாமரைக்கண்செவ்வாய் *
வாட்டமிலென்கருமாணிக்கம் கண்ணன்மாயன்போல் *
கோட்டியவில்லொடு மின்னும்மேகக்குழாங்கள்காள்! *
காட்டேன்மின்நும்முரு என்னுயிர்க்குஅதுகாலனே.
3724 உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு * நீர்
குயிற்பைதல்காள்! கண்ணன்நாமமேகுழறிக்கொன்றீர் *
தயிர்ப்பழஞ்சோற்றொடு பாலடிசிலும்தந்து * சொல்
பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே!
3725 பண்புடைவண்டொடுதும்பிகாள்! பண்மிழற்றேன்மின் *
புண்புரைவேல்கொடு குத்தாலொக்கும்நும்இன்குரல் *
தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தாலொக்கும்
கண்பெருங்கண்ணன் * நம்மாவியுண்டெழநண்ணினான்.
3726 எழநண்ணிநாமும் நம்வானநாடனோடொன்றினோம் *
பழனநன்னாரைக்குழாங்கள்காள்! பயின்றென்னினி! *
இழைநல்லவாக்கையும் பையவேபுயக்கற்றது *
தழைநல்லவின்பம்தலைப்பெய்து எங்கும்தழைக்கவே.
3727 இன்பந்தலைப்பெய்தெங்கும்தழைத்த பல்லூழிக்கு *
தன்புகழேத்தத் தனக்கருள்செய்தமாயனை *
தென்குருகூர்ச்சடகோபன் சொல்லாயிரத்துள்இவை *
ஒன்பதோடொன்றுக்கும் மூவுலகுமுருகுமே. (2)