Your browser does not support the audio element.
audio
3706 மையார்கருங்கண்ணி கமலமலர்மேல்
செய்யாள் * திருமார்வினில்சேர் திருமாலே! *
வெய்யார்சுடராழி சுரிசங்கமேந்தும்
கையா! * உன்னைக்காணக் கருதும்என்கண்ணே. (2)
3707 கண்ணே! உன்னைக் காணக்கருதி * என்னெஞ்சம்
எண்ணேகொண்ட சிந்தையதாய்நின்றியம்பும் *
விண்ணோர்முனிவர்க்கு என்றும்காண்பரியாயை *
நண்ணாதொழியேன்என்று நானழைப்பனே.
3708 அழைக்கின்றஅடிநாயேன் நாய்கூழைவாலால் *
குழைக்கின்றதுபோல என்னுள்ளம்குழையும் *
மழைக்குஅன்றுகுன்றமெடுத்து ஆநிரைகாத்தாய்! *
பிழைக்கின்றதருளென்று பேதுறுவேனே.
3709 உறுவதிதுவென்று உனக்காட்பட்டு * நின்கண்
பெறுவதெதுகொலென்று பேதையேன்நெஞ்சம் *
மறுகல்செய்யும் வானவர்தானவர்க்குஎன்றும் *
அறிவதரிய அரியாயவம்மானே.
3710 அரியாயவம்மானை அமரர்பிரானை *
பெரியானைப் பிரமனைமுன்படைத்தானை *
வரிவாளரவினணைப் பள்ளிகொள்கின்ற *
கரியான்கழல்காணக் கருதும்கருத்தே.
3711 கருத்தே! உன்னைக் காணக்கருதி * என்னெஞ்சத்து
இருத்தாகஇருத்தினேன் தேவர்கட்கெல்லாம்
விருத்தா! * விளங்கும்சுடர்ச்சோதி உயரத்
தொருத்தா! * உனையுள்ளும் என்னுள்ளம்உகந்தே.
3712 உகந்தேயுன்னை உள்ளும் என்னுள்ளத்து * அகம்பால்
அகந்தானமர்ந்தே இடங்கொண்டஅமலா! *
மிகுந்தானவன்மார்வகலம் இருகூறா
நகந்தாய் * நரசிங்கமதாயவுருவே!
3713 உருவாகிய ஆறுசமயங்கட்கெல்லாம் *
பொருவாகிநின்றானவன் எல்லாப்பொருட்கும் *
அருவாகியஆதியைத் தேவர்கட்கெல்லாம் *
கருவாகியகண்ணனைக் கண்டுகொண்டேனே.
3714 கண்டுகொண்டு என்கண்ணிணையாரக்களித்து *
பண்டைவினையாயின பற்றோடறுத்து *
தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள்சொன்னேன் *
அண்டத்தமரர்பெருமான் அடியேனே.
3715 அடியானிவனென்று எனக்காரருள்செய்யும்
நெடியானை * நிறைபுகழ் அஞ்சிறைப்புள்ளின்
கொடியானை * குன்றாமல் உலகமளந்த
அடியானை * அடைந்து அடியேனுய்ந்தவாறே!
3716 ஆறாமதயானை அடர்த்தவன்தன்னை *
சேறார்வயல் தென்குருகூர்ச்சடகோபன் *
நூறேசொன்ன ஓராயிரத்துள்இப்பத்தும் *
ஏறேதரும் வானவர்தமின்னுயிர்க்கே. (2)