Your browser does not support the audio element.
audio
3343 வைகல்பூங்கழிவாய் வந்துமேயுங்குருகினங்காள்! *
செய்கொள்செந்நெலுயர் திருவண்வண்டூருறையும் *
கைகொள்சக்கரத்து என்கனிவாய்பெருமானைக்கண்டு *
கைகள்கூப்பிச்சொல்லீர் வினையாட்டியேன்காதன்மையே. (2)
3344 காதல்மென்பெடையோடு உடன்மேயுங்கருநாராய்! *
வேதவேள்வியொலிமுழங்கும் தண்திருவண்வண்டூர் *
நாதன்ஞாலமெல்லாமுண்ட நம்பெருமானைக்கண்டு *
பாதம்கைதொழுதுபணியீர் அடியேன்திறமே.
3345 திறங்களாகியெங்கும் செய்களூடுழல்புள்ளினங்காள்! *
சிறந்தசெல்வம்மல்கு திருவண்வண்டூருறையும் *
கறங்குசக்கரக் கைக் கனிவாய்ப்பெருமானைக்கண்டு *
இறங்கிநீர்தொழுதுபணியீர் அடியேனிடரே.
3346 இடரில்போகம்மூழ்கி இணைந்தாடும்மடவன்னங்காள்! *
விடலில்வேதவொலிமுழங்கும் தண்திருவண்வண்டூர் *
கடலின்மேனிப்பிரான் கண்ணணைநெடுமாலைக்கண்டு *
உடலம்நைந்தொருத்தி உருகுமென்றுணர்த்துமினே.
3347 உணர்த்தலூடலுணர்ந்து உடன்மேயும்மடவன்னங்காள் *
திணர்த்தவண்டல்கள்மேல் சங்குசேரும்திருவண்வண்டூர் *
புணர்த்தபூந்தண்துழாய்முடி நம்பெருமானைக்கண்டு *
புணர்த்தகையினராய் அடியேனுக்கும்போற்றுமினே.
3348 போற்றியானிரந்தேன் புன்னைமேலுறைபூங்குயில்காள்! *
சேற்றில்வாளைதுள்ளும் திருவண்வண்டூருறையும் *
ஆற்றலாழியங்கை அமரர்பெருமானைக்கண்டு *
மாற்றங்கொண்டருளீர் மையல்தீர்வதொருவண்ணமே.
3349 ஒருவண்ணம்சென்றுபுக்கு எனக்கொன்றுரைஒண்கிளியே! *
செருவொண்பூம்பொழில்சூழ் செக்கர்வேலைத் திருவண்வண்டூர் *
கருவண்ணம்செய்யவாய் செய்யகண்செய்யகை செய்யகால் *
செருவொண்சக்கரம்சங்கு அடையாளம்திருந்தக்கண்டே.
3350 திருந்தக்கண்டெனக்கொன்றுரையாய் ஒண்சிறுபூவாய்! *
செருந்திஞாழல்மகிழ் புன்னைசூழ்தண்திருவண்வண்டூர் *
பெருந்தண்தாமரைக்கண் பெருநீள்முடிநால்தடந்தோள் *
கருந்திண்மாமுகில்போல் திருமேனியடிகளையே.
3351 அடிகள்கைதொழுது அலர்மேலசையுமன்னங்காள்! *
விடிவைசங்கொலிக்கும் திருவண்வண்டூருறையும் *
கடியமாயன்தன்னைக் கண்ணனைநெடுமாலைக்கண்டு *
கொடியவல்வினையேன் திறம்கூறுமின்வேறுகொண்டே.
3352 வேறுகொண்டும்மையானிரந்தேன் வெறிவண்டினங்காள்! *
தேறுநீர்ப்பம்பை வடபாலைத்திருவண்வண்டூர் *
மாறில்போரரக்கன் மதிள்நீறெழச்செற்றுகந்த *
ஏறுசேவகனார்க்கு என்னையும்உளளென்மின்களே.
3353 மின்கொள்சேர்புரிநூல்குறளாய் அகல்ஞாலம் கொண்ட *
வன்கள்வனடிமேல் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
பண்கொளாயிரத்துள்இவைபத்தும் திருவண்வண்டூர்க்கு *
இன்கொள்பாடல்வல்லார் மதனர்மின்னிடையவர்க்கே. (2)