Chapter 10

Thirunāngur Arimeyavinnagaram - (திரு மடந்தை)

திருநாங்கூர் அரிமேயவிண்ணகரம்
Thirunāngur Arimeyavinnagaram - (திரு மடந்தை)
The Lord, desiring to remove the enemies of His devotees, always resides in this Divya Desam with Sri Devi and Bhoo Devi. This place is also known as Kudamaadu Koothar Kovil. The presiding deity here is called Kudamaadu Koothan. It is one of the eleven Divya Desams in Thirunangur.
அடியார்களின் பகைவர்களை நீக்க விரும்பிய பகவான் ஸ்ரீ தேவி பூதேவியுடன் இந்தத் திவ்விய தேசத்தில் எப்போதும் எழுந்தருளியிருக்கிறான். இத்தலத்தைத் குடமாடு கூத்தர் கோயில் என்றும் கூறுவர். இங்கிருக்கும் பெருமாளுக்குக் குடமாடு கூத்தன் என்று பெயர். திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.
Verses: 1238 to 1247
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will live as the foremost people in the world and become the gods in the sky
  • PT 3.10.1
    1238 ## திரு மடந்தை மண் மடந்தை இருபாலும் திகழத் *
    தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
    அருள் நடந்து * இவ் ஏழ் உலகத்தவர் பணிய * வானோர்
    அமர்ந்து ஏத்த இருந்த இடம் ** பெரும் புகழ் வேதியர் வாழ்
    தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் *
    தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ *
    அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 1
  • PT 3.10.2
    1239 வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் *
    விறல் ஆழித் தடக் கையன் விண்ணவர்கட்கு அன்று *
    குன்று கொடு குரை கடலைக் கடைந்து அமுதம் அளிக்கும் *
    குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் **
    என்றும் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையோர் *
    ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் *
    அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 2
  • PT 3.10.3
    1240 உம்பரும் இவ் ஏழ் உலகும் ஏழ் கடலும் எல்லாம் *
    உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த *
    கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து * கஞ்சன்
    குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் ** மருங்கு எங்கும்
    பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட *
    பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் *
    அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3
  • PT 3.10.4
    1241 ஓடாத ஆள் அரியின் உருவம் அது கொண்டு * அன்று
    உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனைப் பற்றி *
    வாடாத வள் உகிரால் பிளந்து அவன் தன் மகனுக்கு *
    அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் **
    சேடு ஏறு மலர்ச் செருந்தி செழுங் கமுகம் பாளை *
    செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே *
    ஆடு ஏறு வயல் ஆலைப் புகை கமழும் நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 4
  • PT 3.10.5
    1242 கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்விக் *
    களவு இல் மிகு சிறு குறள் ஆய் மூவடி என்று இரந்திட்டு *
    அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் *
    அளந்த பிரான் அமரும் இடம் வளங் கொள் பொழில் அயலே *
    அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் *
    அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் *
    அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 5
  • PT 3.10.6
    1243 வாள் நெடுங் கண் மலர்க் கூந்தல் மைதிலிக்கா * இலங்கை
    மன்னன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர *
    தாள் நெடுந் திண் சிலை வளைத்த தயரதன் சேய் * என் தன்
    தனிச் சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் **
    சேண் இடம் கொள் மலர்க் கமலம் சேல் கயல்கள் வாளை *
    செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் *
    வாள் நெடுங் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 6
  • PT 3.10.7
    1244 தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் *
    தேனுகனும் பூதனை தன் ஆர் உயிரும் செகுத்தான் *
    காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் *
    கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி **
    நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் * ஐந்து
    வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று * அங்கு
    ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 7
  • PT 3.10.8
    1245 கன்று அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை *
    காமரு சீர் முகில் வண்ணன் காலிகள் முன் காப்பான் *
    குன்று அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் *
    குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் **
    துன்று மணி மண்டபங்கள் சாலைகள் * தூ மறையோர்
    தொக்கு ஈண்டித் தொழுதியொடு மிகப் பயிலும் சோலை *
    அன்று அலர்வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 8
  • PT 3.10.9
    1246 வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு * வாய்த்த
    தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு * வலி மிக்க
    கஞ்சன் உயிர் அது உண்டு இவ் உலகு உண்ட காளை *
    கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி **
    மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து *
    வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி *
    அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 9
  • PT 3.10.10
    1247 ## சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து * பின்னை
    செவ்வித் தோள் புணர்ந்து உகந்த திருமால் தன் கோயில் *
    அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் *
    அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழுங் குன்றை **
    கன்றி நெடு வேல் வலவன் மங்கையர் தம் கோமான் *
    கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் *
    ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் * உலகத்து
    உத்தமர்கட்கு உத்தமர் ஆய் உம்பரும் ஆவர்களே 10