Chapter 9
Thirunāngur Thiruvaikundavinnagaram - (சலம் கொண்ட)
திருநாங்கூர் வைகுந்தவிண்ணகரம்
The Lord resides here in a majestic form, similar to His presence in Srivaikunta. Therefore, this Divya Desam is named Vaikunta Vinnagaram. It is one of the eleven Divya Desams located in Thirunangur.
எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியிருப்பது போல் இவ்விடத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான். அதனால் இத்திருப்பதிக்கு வைகுந்த விண்ணகரம் என்று பெயர் ஏற்பட்டது. திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் இதுவும் ஒன்று.
Verses: 1228 to 1237
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: இந்தளம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
- PT 3.9.1
1228 ## சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு *
தடங் கடலைக் கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை *
நலம் கொண்ட கரு முகில்போல் திருமேனி அம்மான் *
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி *
செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே *
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடு நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 1 - PT 3.9.2
1229 திண்ணியது ஓர் அரி உருவாய்த் திசை அனைத்தும் நடுங்கத் *
தேவரொடு தானவர்கள் திசைப்ப * இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் *
நாள்தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
எண் இல் மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும் *
ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெருங் குணத்தோர் *
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 2 - PT 3.9.3
1230 அண்டமும் இவ் அலை கடலும் அவனிகளும் எல்லாம் *
அமுது செய்த திரு வயிற்றன் அரன் கொண்டு திரியும் *
முண்டம் அது நிறைத்து அவன்கண் சாபம் அது நீக்கும் *
முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
எண் திசையும் பெருஞ் செந்நெல் இளந் தெங்கு கதலி *
இலைக்கொடி ஒண் குலைக் கமுகோடு இசலி வளம் சொரிய *
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 3 - PT 3.9.4
1231 கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக் *
காதொடு மூக்கு உடன் அரியக் கதறி அவள் ஓடி *
தலையில் அங் கை வைத்து மலை இலங்கை புகச் செய்த *
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
சிலை இலங்கு மணி மாடத்து உச்சிமிசைச் சூலம் *
செழுங் கொண்டல் அகடு இரியச் சொரிந்த செழு முத்தம் *
மலை இலங்கு மாளிகைமேல் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 4 - PT 3.9.5
1232 மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா * இலங்கை
வேந்தன் முடி ஒருபதும் தோள் இருபதும் போய் உதிர *
தன் நிகர் இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த *
தடந் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை *
செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் *
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 5 - PT 3.9.6
1233 பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளைப் * பெரிய
பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு *
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் *
தேவன் அவன்மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் *
உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா * பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 6 - PT 3.9.7
1234 விளங்கனியை இளங் கன்று கொண்டு உதிர எறிந்து *
வேல் நெடுங் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் *
உளம்குளிர அமுது செய்து இவ் உலகு உண்ட காளை *
உகந்து இனிது நாள்தோறும் மருவி உறை கோயில் **
இளம்படி நல் கமுகு குலைத் தெங்கு கொடிச் செந்நெல் *
ஈன் கரும்பு கண்வளரக் கால் தடவும் புனலால் *
வளம் கொண்ட பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 7 - PT 3.9.8
1235 ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த *
அடல் ஆழித் தடக் கையன் அலர் மகட்கும் அரற்கும் *
கூறாகக் கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் *
குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
மாறாத மலர்க் கமலம் செங்கழுநீர் ததும்பி *
மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப *
மாறாத பெருஞ் செல்வம் வளரும் அணி நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 8 - PT 3.9.9
1236 வங்கம் மலி தடங் கடலுள் வானவர்களோடு *
மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி *
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் *
ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் **
செங் கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச் *
சேல் உகளும் செழும் பணை சூழ் வீதிதொறும் மிடைந்து *
மங்குல் மதி அகடு உரிஞ்சு மணி மாட நாங்கூர் *
வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே 9 - PT 3.9.10
1237 ## சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் *
தாமரைக் கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் *
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் *
வைகுந்தவிண்ணகர்மேல் வண்டு அறையும் பொழில் சூழ் **
மங்கையர் தம் தலைவன் மருவலர் தம் உடல் துணிய *
வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன *
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் *
தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே 10