Your browser does not support the audio element.
audio
2082 வையம்தகளியா வார்கடலேநெய்யாக *
வெய்யகதிரோன்விளக்காக * - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன்சொல்மாலை *
இடராழி நீங்குகவேயென்று. (2) 1
2083 என்றுகடல்கடைந்தது? எவ்வுலகம்நீரேற்றது? *
ஒன்றுமதனையுணரேன்நான் * - அன்றுஅது
அடைத்துடைத்துக் கண்படுத்தவாழி * இதுநீ
படைத்திடந்துஉண்டுமிழ்ந்தபார்.
2084 பாரளவும்ஓரடிவைத்து ஓரடியும்பாருடுத்த *
நீரளவும்செல்லநிமிர்ந்ததே * - சூருருவில்
பேயளவுகண்டபெருமான்! அறிகிலேன் *
நீயளவுகண்டநெறி.
2085 நெறிவாசல் தானேயாய்நின்றானை * ஐந்து
பொறிவாசல்போர்க்கதவம் சார்த்தி * - அறிவானாம்
ஆலமரநீழல் அறம்நால்வர்க்கன்றுரைத்த *
ஆலமமர்கண்டத்தரன்.
2086 அரன்நாரணன்நாமம் ஆன்விடைபுள்ளூர்தி *
உரைநூல்மறையுறையும்கோயில் * -வரைநீர்
கருமம்அழிப்பளிப்புக் கையதுவேல்நேமி *
உருவமெரிகார்மேனிஒன்று.
2087 ஒன்றும்மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான் *
இன்றுமறப்பனோ? ஏழைகாள்! - அன்று
கருவரங்கத்துட்கிடந்து கைதொழுதேன்கண்டேன் *
திருவரங்கமேயான்திசை.
2088 திசையும் திசையுறுதெய்வமும் * தெய்வத்
திசையும்கருமங்களெல்லாம் * -அசைவில்சீர்க்
கண்ணன்நெடுமால் கடல்கடைந்த * காரோத
வண்ணன் படைத்தமயக்கு.
2089 மயங்கவலம்புரி வாய்வைத்து * வானத்
தியங்கும்எறிகதிரோன்தன்னை * - முயங்கமருள்
தேராழியால்மறைத்தது என்? நீ திருமாலே! *
போராழிக்கையால் பொருது.
2090 பொருகோட்டோரேனமாய்ப்புக்கிடந்தாய்க்கு * அன்றுஉன்
ஒருகோட்டின்மேல்கிடந்ததன்றே * - விரிதோட்ட
சேவடியைநீட்டித் திசைநடுங்கவிண்துளங்க *
மாவடிவின்நீயளந்தமண்.
2091 மண்ணும்மலையும் மறிகடலும்மாருதமும் *
விண்ணும்விழுங்கியதுமெய்யென்பர் * - எண்ணில்
அலகளவுகண்ட சீராழியாய்க்கு * அன்றுஇவ்
வுலகளவும்உண்டோ? உன்வாய்.
2092 வாயவனையல்லது வாழ்த்தாது * கையுலகம்
தாயவனையல்லது தான்தொழா * - பேய்முலைநஞ்சு
ஊணாகவுண்டான் உருவொடுபேரல்லால் *
காணாகண் கேளாசெவி.
2093 செவிவாய்கண்மூக்கு உடலென்றைம்புலனும் * செந்தீ
புவிகால் நீர்விண்பூதமைந்தும் * - அவியாத
ஞானமும்வேள்வியும் நல்லறமும்என்பரே *
ஏனமாய்நின்றாற்குஇயல்வு.
2094 இயல்வாக ஈன்துழாயானடிக்கேசெல்ல *
முயல்வாரியலமரர்முன்னம் * - இயல்வாக
நீதியாலோதி நியமங்களால்பரவ *
ஆதியாய்நின்றாரவர்.
2095 அவரவர்தாம்தாம் அறிந்தவாறேத்தி *
இவரிவரெம்பெருமானென்று * - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும்தொழுவர் * உலகளந்த
மூர்த்தியுருவேமுதல்.
2096 முதலாவார்மூவரே * அம்மூவருள்ளும்
முதலாவான் மூரிநீர்வண்ணன் * - முதலாய
நல்லானருளல்லால் நாமநீர்வையகத்து *
பல்லாரருளும்பழுது.
2097 பழுதேபலபகலும் போயினவென்று * அஞ்சி
அழுதேன் அரவணைமேல்கண்டு - தொழுதேன் *
கடலோதம்காலலைப்பக் கண்வளரும் * செங்கண்
அடலோதவண்ணரடி.
2098 அடியும் படிகடப்பத் தோள்திசைமேல்செல்ல *
முடியும்விசும்பளந்ததென்பர் * - வடியுகிரால்
ஈர்ந்தான் இரணியனதாகம் * இருஞ்சிறைப்புள்
ஊர்ந்தான் உலகளந்தநான்று.
2099 நான்றமுலைத்தலை நஞ்சுண்டு * உறிவெண்ணெய்
தோன்றவுண்டான் வென்றிசூழ்களிற்றை - ஊன்றி *
பொருதுடைவுகண்டானும் புள்ளின்வாய்கீண்டானும் *
மருதிடைபோய்மண்ணளந்தமால்.
2100 மாலுங்கருங்கடலே! என்நோற்றாய்? * வையகமுண்டு
ஆலினிலைத்துயின்றவாழியான் * - கோலக்
கருமேனிச் செங்கண்மால்கண்படையுள் * என்றும்
திருமேனி நீதீண்டப்பெற்று.
2101 பெற்றார்தளைகழலப் பேர்ந்தோர்குறளுருவாய் *
செற்றார்படிகடந்தசெங்கண்மால் * - நற்றா
மரைமலர்ச்சேவடியை வானவர்கைகூப்பி *
நிரைமலர்கொண்டுஏத்துவரால்நின்று.
2102 நின்றுநிலமங்கை நீரேற்றுமூவடியால் *
சென்றுதிசையளந்தசெங்கண்மாற்கு * - என்றும்
படையாழிபுள்ளூர்தி பாம்பணையான்பாதம் *
அடையாழிநெஞ்சே! அறி.
2103 அறியுமுலகெல்லாம் யானேயுமல்லேன் *
பொறிகொள்சிறையுவணமூர்ந்தாய் * - வெறிகமழும்
காம்பேய்மென்தோளி கடைவெண்ணெயுண்டாயை *
தாம்பேகொண்டார்த்ததழும்பு.
2104 தழும்பிருந்தசார்ங்கநாண் தோய்ந்தவாமங்கை *
தழும்பிருந்த தாள்சகடம்சாடி * - தழும்பிருந்த
பூங்கோதையாள்வெருவப் பொன்பெயரோன் மார்பிடந்த *
வீங்கோதவண்ணர்விரல்.
2105 விரலொடுவாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு * ஆய்ச்சி
உரலோடுஉறப்பிணித்தநான்று * - குரலோவாது
ஏங்கிநினைந்து அயலார்காணவிருந்திலையே? *
ஓங்கோதவண்ணா! உரை.
2106 உரைமேற்கொண்டு என்னுள்ளமோவாது * எப்போதும்
வரைமேல் மரதகமேபோல * - திரைமேல்
கிடந்தானைக் கீண்டானை * கேழலாய்ப்பூமி
யிடந்தானை யேத்தியெழும்.
2107 எழுவார்விடைகொள்வார் ஈன்துழாயானை *
வழுவாவகைநினைந்து வைகல் - தொழுவார் *
வினைச்சுடரைநந்துவிக்கும் வேங்கடமே * வானோர்
மனச்சுடரைத் தூண்டும்மலை.
2108 மலையால்குடைகவித்து மாவாய்பிளந்து *
சிலையால் மராமரமேழ்செற்று * - கொலையானைப்
போர்க்கோடொசித்தனவும் பூங்குருந்தம்சாய்த்தனவும்
கார்க்கோடுபற்றியான்கை.
2109 கையவலம்புரியும்நேமியும் * கார்வண்ணத்து
ஐய! மலர்மகள்நின்ஆகத்தாள் * - செய்ய
மறையான்நின்உந்தியான் மாமதிள்மூன்றெய்த *
இறையான்நின்னாகத்திறை.
2110 இறையும்நிலனும் இருவிசும்பும்காற்றும் *
அறைபுனலும் செந்தீயுமாவான் * - பிறைமருப்பின்
பைங்கண்மால்யானை படுதுயரம்காத்தளித்த *
செங்கண்மால்கண்டாய்தெளி.
2111 தெளிதாக உள்ளத்தைச்செந்நிறீஇ * ஞானத்
தெளிதாக நன்குணர்வார்சிந்தை * - எளிதாகத்
தாய்நாடுகன்றேபோல் தண்டுழாயானடிக்கே *
போய்நாடிக்கொள்ளும்புரிந்து.
2112 புரியொருகைபற்றி ஓர்பொன்னாழியேந்தி *
அரியுருவும்ஆளுருவுமாகி * - எரியுருவ
வண்ணத்தான்மார்பிடந்த மாலடியையல்லால் * மற்று
எண்ணத்தானாமோ? இமை.
2113 இமையாதகண்ணால் இருளகலநோக்கி *
அமையாப்பொறிபுலன்களைந்தும் - நமையாமல் *
ஆகத்தணைப்பார் அணைவரே * ஆயிரவாய்
நாகத்தணையான்நகர்.
2114 நகரமருள்புரிந்து நான்முகற்குப் * பூமேல்
பகரமறைபயந்தபண்பன் * - பெயரினையே
புந்தியால்சிந்தியாது ஓதிஉருவெண்ணும் *
அந்தியாலாம்பயனங்கென்?
2115 என்! ஒருவர்மெய்யென்பர் ஏழுலகுண்டு * ஆலிலையில்
முன்னொருவனாய முகில்வண்ணா! * - நின்னுருகிப்
பேய்த்தாய்முலைதந்தாள் பேர்ந்திலளால் * பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலைதந்தவாறு!
2116 ஆறியவன்பில் அடியார்தமார்வத்தால் *
கூறியகுற்றமாக்கொள்ளல்நீ - தேறி *
நெடியோய்! அடி அடைதற்கன்றே * ஈரைந்து
முடியான்படைத்தமுரண்.
2117 முரணவலி தொலைதற்காமென்றே * முன்னம்
தரணிதனதாகத்தானே * - இரணியனைப்
புண்நிரந்தவள்ளுகிரால் பொன்னாழிக்கையால் * நீ
மண்ணிரந்துகொண்டவகை.
2118 வகையறுநுண்கேள்வி வாய்வார்கள் * நாளும்
புகைவிளக்கும் பூம்புனலுமேந்தி * - திசைதிசையின்
வேதியர்கள் சென்றிறைஞ்சும்வேங்கடமே * வெண்சங்கம்
ஊதியவாய் மாலுகந்தவூர்.
2119 ஊரும்வரியரவம் ஒண்குறவர்மால்யானை *
பேரவெறிந்த பெருமணியை * - காருடைய
மின்னென்று புற்றடையும்வேங்கடமே * மேலசுரர்
எம்மென்றமாலதிடம்.
2120 இடந்தது பூமி எடுத்ததுகுன்றம் *
கடந்ததுகஞ்சனைமுன்னஞ்ச * - கிடந்ததுவும்
நீரோதமாகடலே நின்றதுவும்வேங்கடமே *
பேரோதவண்ணர்பெரிது.
2121 பெருவில்பகழிக் குறவர்கைச்செந்தீ *
வெருவிப்புனம்துறந்தவேழம் * - இருவிசும்பில்
மீன்வீழக் கண்டஞ்சும்வேங்கடமே * மேலசுரர்
கோன்வீழக்கண்டுகந்தான்குன்று.
2122 குன்றனையகுற்றம்செய்யினும் குணங்கொள்ளும் *
இன்றுமுதலாகவென்னெஞ்சே! * - என்றும்
புறனுரையேயாயினும் பொன்னாழிக்கையான் *
திறனுரையேசிந்தித்திரு.
2123 திருமகளும்மண்மகளும் ஆய்மகளும்சேர்ந்தால் *
திருமகட்கேதீர்ந்தவாறென்கொல்? * - திருமகள்மேல்
பாலோதம்சிந்தப் படநாகணைக்கிடந்த *
மாலோதவண்ணர்மனம்.
2124 மனமாசுதீரும் அருவினையும்சாரா *
தனமாய தானேகைகூடும் * - புனமேய
பூந்துழாயானடிக்கே போதொடுநீரேந்தி *
தாம்தொழாநிற்பார்தமர்.
2125 தமருகந்ததுஎவ்வுருவம் அவ்வுருவம்தானே *
தமருகந்ததஎப்பேர் மற்றப்பேர் * - தமருகந்தது
எவ்வண்ணம்சிந்தித்து இமையாதிருப்பரே *
அவ்வண்ணமாழியானாம்.
2126 ஆமே, அமரர்க்கு அறிய? அதுநிற்க *
நாமேயறிகிற்போம் நன்னெஞ்சே! * - பூமேய
மாதவத்தோன்தாள்பணிந்த வாளரக்கன்நீண்முடியை *
பாதமத்தால்எண்ணினான்பண்பு.
2127 பண்புரிந்தநான்மறையோன் சென்னிப்பலியேற்ற *
வெண்புரிநூல்மார்பன்வினைதீர * - புண்புரிந்த
ஆகத்தான் தாள்பணிவார்கண்டீர் * அமரர்தம்
போகத்தால் பூமியாள்வார்.
2128 வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும் *
சேரிதிரியாமல் செந்நிறீஇ * - கூரிய
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார்காண்பரே * மேலொருநாள்
கைந்நாகம்காத்தான்கழல்.
2129 கழலொன்றெடுத்து ஒருகைசுற்றிஓர்கைமேல் *
சுழலும்சுராசுரர்களஞ்ச * - அழலும்
செருவாழியேந்தினான் சேவடிக்கேசெல்ல *
மருவாழிநெஞ்சே! மகிழ்.
2130 மகிழலகொன்றேபோல் மாறும்பல்யாக்கை *
நெகிழமுயல்கிற்பார்க்கல்லால் * - முகிழ்விரிந்த
சோதிபோல்தோன்றும் சுடர்ப்பொன்நெடுமுடி * எம்
ஆதிகாண்பார்க்குமரிது.
2131 அரியபுலனைந்தடக்கி ஆய்மலர்கொண்டு * ஆர்வம்
புரியப் பரிசினால்புல்கில் * - பெரியனாய்
மாற்றாதுவீற்றிருந்த மாவலிபால் * வண்கைநீர்
ஏற்றானைக் காண்பதெளிது.
2132 எளிதிலிரண்டடியும் காண்பதற்கு * என்னுள்ளம்
தெளியத் தெளிந்தொழியும்செவ்வே * - களியில்
பொருந்தாதவனைப் பொரலுற்று * அரியா
யிருந்தான் திருநாமமெண்.
2133 எண்மர்பதினொருவர் ஈரறுவரோரிருவர் *
வண்ணமலரேந்திவைகலும் * - நண்ணி
ஒருமாலையால் பரவியோவாது * எப்போதும்
திருமாலைக்கைதொழுவர்சென்று.
2134 சென்றால்குடையாம் இருந்தால்சிங்காசனமாம் *
நின்றால்மரவடியாம் நீள்கடலுள் * - என்றும்
புணையாம்மணிவிளக்காம் பூம்பட்டாம்புல்கும்
அணையாம் * திருமாற்குஅரவு. (2)
2135 அரவமடல்வேழம் ஆன்குருந்தம்புள்வாய்
குரவைகுடமுலைமற்குன்றம் * - கரவின்றி
விட்டிறுத்துமேய்த்தொசித்துக் கீண்டுகோத்தாடி * உண்
டட்டெடுத்தசெங்கணவன்.
2136 அவன்தமர் எவ்வினையராகிலும் * எங்கோ
னவன்தமரே என்றொழிவதல்லால் * - நமன்தமரால்
ஆராயப்பட்டு அறியார்கண்டீர் * அரவணைமேல்
பேராயற்காட்பட்டார்பேர்.
2137 பேரேவரப் பிதற்றலல்லால் என்பெம்மானை *
ஆரேயறிவார்? அதுநிற்க * - நேரே
கடிக்கமலத்துள்ளிருந்தும் காண்கிலான் * கண்ணன்
அடிக்கமலந்தன்னையயன்.
2138 அயல்நின்றவல்வினையை அஞ்சினேனஞ்சி *
உயநின்திருவடியேசேர்வான் * - நயம்நின்ற
நன்மாலைகொண்டு நமோநாரணாவென்னும் *
சொன்மாலைகற்றேன்தொழுது.
2139 தொழுதுமலர்கொண்டு தூபம்கையேந்தி *
எழுதுமெழுவாழிநெஞ்சே! * - பழுதின்றி
மந்திரங்கள்கற்பனவும் மாலடியேகைதொழுவான் *
அந்தரமொன்றில்லையடை.
2140 அடைந்தவருவினையோடு அல்லல்நோய்பாவம் *
மிடைந்தவைமீண்டொழியவேண்டில் * - நுடங்கிடையை
முன்னிலங்கைவைத்தான் முரணழிய * முன்னொருநாள்
தன்வில்அங்கைவைத்தான்சரண்.
2141 சரணாமறைபயந்த தாமரையானோடு *
மரணாயமன்னுயிர்கட்கெல்லாம் * - அரணாய
பேராழிகொண்ட பிரானன்றிமற்றறியாது *
ஓராழிசூழ்ந்தவுலகு.
2142 உலகும் உலகிறந்தவூழியும் * ஒண்கேழ்
விலகுகருங்கடலும்வெற்பும் * - உலகினில்
செந்தீயும் மாருதமும்வானும் * திருமால்தன்
புந்தியிலாயபுணர்ப்பு.
2143 புணர்மருதினூடுபோய்ப் பூங்குருந்தம்சாய்த்து *
மணமருவமால்விடையேழ்செற்று * - கணம்வெருவ
ஏழுலகும்தாயினவும் எண்திசையும்போயினவும் *
சூழரவப்பொங்கணையான்தோள்.
2144 தோளவனையல்லால்தொழா * என்செவியிரண்டும்
கேளவனது இன்மொழியேகேட்டிருக்கும் * - நாநாளும்
கோணாகணையான் குரைகழலேகூறுவதே *
நாணாமைநள்ளேன்நயம்.
2145 நயவேன்பிறர்பொருளை நள்ளேன்கீழாரோடு *
உயவேன்உயர்ந்தவரோடல்லால் * - வியவேன்
திருமாலையல்லது தெய்வமென்றேத்தேன் *
வருமாறென்நம்மேல்வினை? 64
2146 வினையாலடர்ப்படார் வெந்நரகில்சேரார் *
தினையேனும்தீக்கதிக்கண்செல்லார் * - நினைதற்
கரியானைச் சேயானை * ஆயிரம்பேர்ச்செங்கண்
கரியானைக் கைதொழுதக்கால்.
2147 காலையெழுந்து உலகங்கற்பனவும் * கற்றுணர்ந்த
மேலைத்தலைமறையோர் வேட்பனவும் * - வேலைக்கண்
ஓராழியானடியே ஓதுவதுமோர்ப்பனவும் *
பேராழிகொண்டான் பெயர்.
2148 பெயரும் கருங்கடலே நோக்குமாறு * ஒண்பூ
உயரும் கதிரவனே நோக்கும் * -உயிரும்
தருமனையே நோக்குமொண் டாமரையாள் கேள்வன் *
ஒருவனையே நோக்கும் உணர்வு.
2149 உணர்வாரார்உன்பெருமை? ஊழிதோறூழி *
உணர்வாரார் உன்னுருவந்தன்னை? * உணர்வாரார்?
விண்ணகத்தாய்! மண்ணகத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப்
பண்ணகத்தாய்! நீகிடந்தபால்.
2150 பாலன்தனதுருவாய் ஏழுலகுண்டு * ஆலிலையின்
மேலன்று நீவளர்ந்தமெய்யென்பர் * - ஆலன்று
வேலைநீருள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ?
சோலைசூழ்குன்றெடுத்தாய்! சொல்லு.
2151 சொல்லுந்தனையும் தொழுமின் * விழுமுடம்பு
செல்லுந்தனையும்திருமாலை * - நல்லிதழ்த்
தாமத்தால்வேள்வியால் தந்திரத்தால்மந்திரத்தால் *
நாமத்தாலேத்துதிரேல்நன்று.
2152 நன்றுபிணிமூப்புக் கையகற்றி, நான்கூழி *
நின்றுநிலமுழுதுமாண்டாலும் * என்றும்
விடலாழிநெஞ்சமே! வேண்டினேன்கண்டாய் *
அடலாழிகொண்டான்மாட்டன்பு.
2153 அன்பாழியானை அணுகென்னும் * நாஅவன்தன்
பண்பாழித்தோள்பரவியேத்தென்னும் * முன்பூழி
காணானைக்காணென்னும்கண் செவிகேளென்னும் *
பூணாரம்பூண்டான்புகழ்.
2154 புகழ்வாய்பழிப்பாய்நீ பூந்துழாயானை *
இகழ்வாய்கருதுவாய் நெஞ்சே! * - திகழ்நீர்க்
கடலும்மலையும் இருவிசும்பும்காற்றும் *
உடலுமுயிருமேற்றான்.
2155 ஏற்றான்புள்ளூர்ந்தான் எயிலெரித்தான்மார்விடந்தான் *
நீற்றான்நிழல்மணிவண்ணத்தான் * - கூற்றொருபால்
மங்கையான் பூமகளான்வார்சடையான் * நீள்முடியான்
கங்கையான் நீள்கழலான்காப்பு.
2156 காப்புன்னையுன்னக் கழியும் * அருவினைகள்
ஆப்புன்னையுன்ன அவிழ்ந்தொழியும் * - மூப்புன்னைச்
சிந்திப்பார்க்கில்லை திருமாலே! * நின்னடியை
வந்திப்பார் காண்பர்வழி.
2157 வழிநின்று நின்னைத்தொழுவார் * வழுவா
மொழிநின்ற மூர்த்தியரேயாவர் * - பழுதொன்றும்
வாராதவண்ணமே விண்கொடுக்கும் * மண்ணளந்த
சீரான்திருவேங்கடம்.
2158 வேங்கடமும் விண்ணகரும்வெஃகாவும் * அஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல்பொன்னகரும் * - நான்கிடத்தும்
நின்றான்இருந்தான் கிடந்தான்நடந்தானே *
என்றால்கெடுமாம் இடர்.
2159 இடரார்படுவார்? எழுநெஞ்சே! * வேழம்
தொடர்வான் கொடுமுதலைசூழ்ந்த * - படமுடைய
பைந்நாகப்பள்ளியான் பாதமேகைதொழுதும் *
கொய்ந்நாகப்பூம்போதுகொண்டு.
2160 கொண்டானையல்லால் கொடுத்தாரையார்பழிப்பார்? *
மண்தாவெனவிரந்து மாவலியை * ஒண்தாரை
நீரங்கைதோய நிமிர்ந்திலையே * நீள்விசும்பி
லாரங்கைதோயவடுத்து.
2161 அடுத்தகடும்பகைஞர்க்கு ஆற்றேனென்றோடி *
படுத்தபொரும்பாழிசூழ்ந்த - விடத்தரவை *
வல்லாளன்கைக்கொடுத்த மாமேனிமாயவனுக்கு *
அல்லாதுமாவரோ ஆள்?
2162 ஆளமர்வென்றி அடுக்களத்துளஞ்ஞான்று *
வாளமர்வேண்டிவரைநட்டு * - நீளரவைச்
சுற்றிக்கடைந்தான் பெயரன்றே? * தொன்னரகைப்
பற்றிக்கடத்தும்படை.
2163 படையாரும்வாட்கண்ணார் பாரசிநாள் * பைம்பூந்
தொடையலோடு ஏந்தியதூபம் * - இடையிடையில்
மீன்மாய மாசூணும்வேங்கடமே * மேலொருநாள்
மான்மாயவெய்தான்வரை.
2164 வரைகுடைதோள்காம்பாக ஆநிரைகாத்து * ஆயர்
நிரைவிடையேழ்செற்றவாறென்னே! * - உரவுடைய
நீராழியுள்கிடந்து நேராநிசாசரர்மேல் *
பேராழிகொண்டபிரான்!
2165 பிரான்! உன்பெருமை பிறராரறிவார்? *
உராய்உலகளந்தஞான்று * - வராகத்
தெயிற்றளவு போதாவாறென்கொலோ * எந்தை
அடிக்களவுபோந்தபடி.
2166 படிகண்டறிதியே? பாம்பணையினான் * புள்
கொடிகண்டறிதியே? கூறாய் * - வடிவிற்
பொறியைந்துமுள்ளடக்கிப் போதொடுநீரேந்தி *
நெறிநின்றநெஞ்சமே! நீ.
2167 நீயும்திருமகளும் நின்றாயால் * குன்றெடுத்துப்
பாயும் பனி மறுத்தபண்பாளா! * - வாசல்
கடைகழியாவுள்புகாக் காமர்பூங்கோவல் *
இடைகழியேபற்றியினி.
2168 இனியார்புகுவார் எழுநரகவாசல்? *
முனியாதுமூரித்தாள்கோமின் * - கனிசாயக்
கன்றெறிந்ததோளான் கனைகழலேகாண்பதற்கு *
நன்கறிந்தநாவலம்சூழ்நாடு.
2169 நாடிலும் நின்னடியேநாடுவன் * நாள்தோறும்
பாடிலும் நின்புகழேபாடுவன் * சூடிலும்
பொன்னாழியேந்தினான் பொன்னடியேசூடுவேற்கு *
என்னாகிலென்னேயெனக்கு?
2170 எனக்காவார் ஆரொருவரே! * எம்பெருமான்
தனக்காவான் தானேமற்றல்லால் * - புனக்காயாம்
பூமேனிகாணப் பொதியவிழும்பூவைப்பூ *
மாமேனிகாட்டும்வரம்.
2171 வரத்தால்வலிநினைந்து மாதவ! நின்பாதம் *
சிரத்தால் வணங்கானாமென்றே? * - உரத்தினால்
ஈரரியாய் நேர்வலியோனாயவிரணியனை *
ஓரரியாய்நீயிடந்ததூன்.
2172 ஊனக்குரம்பையின் உள்புக்கிருள்நீக்கி *
ஞானச்சுடர்கொளீஇ நாள்தோறும்- * ஏனத்
துருவாயுலகிடந்த ஊழியான்பாதம் *
மருவாதார்க்குண்டாமோவான்?
2173 வானாகித்தீயாய் மறிகடலாய்மாருதமாய்
தேனாகிப்பாலாம் திருமாலே! * - ஆனாய்ச்சி
வெண்ணெய்விழுங்க நிறையுமே? * முன்னொருநாள்
மண்ணையுமிழ்ந்தவயிறு.
2174 வயிறழலவாளுருவி வந்தானையஞ்ச *
எயிறிலகவாய்மடுத்ததென் நீ * - பொறியுகிரால்
பூவடியையீடழித்த பொன்னாழிக்கையா! * நின்
சேவடிமேலீடழியச்செற்று.
2175 செற்றெழுந்துதீவிழித்துச் சென்றவிந்தவேழுலகும் *
மற்றிவைஆவென்று வாயங்காந்து * முற்றும்
மறையவற்குக்காட்டிய மாயவனையல்லால் *
இறையேனுமேத்தாதுஎன்நா.
2176 நாவாயிலுண்டே நமோநாரணாவென்று *
ஓவாதுரைக்கும்உரையுண்டே * - மூவாத
மாக்கதிக்கண்செல்லும் வகையுண்டே * என்னொருவர்
தீக்கதிக்கண்செல்லுந்திறம்?
2177 திறம்பாதென்னெஞ்சமே! செங்கண்மால்கண்டாய் *
அறம்பாவமென்றிரண்டுமாவான் * புறந்தான்இம்
மண்தான் மறிகடல்தான்மாருதந்தான் * வான்தானே
கண்டாய் கடைக்கட்பிடி.
2178 பிடிசேர் களிறளித்தபேராளா! * உன்தன்
அடிசேர்ந்தருள்பெற்றாளன்றே * - பொடிசேர்
அனற்கங்கையேற்றான் அவிர்சடைமேல்பாய்ந்த *
புனல்கங்கையென்னும்பேர்ப்பொன்.
2179 பொன்திகழும்மேனிப் புரிசடையம்புண்ணியனும் *
நின்றுலகந்தாயநெடுமாலும் * - என்றும்
இருவரங்கத்தால் திரிவரேலும் * ஒருவன்
ஒருவனங்கத்தென்றுமுளன்.
2180 உளன்கண்டாய்நன்னெஞ்சே! உத்தமனென்றும்
உளன்கண்டாய் * உள்ளூவாருள்ளத்து-உளன்கண்டாய் *
வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்துமேயானும் *
உள்ளத்தினுள்ளானென்றுஓர். (2)
2181 ஓரடியும்சாடுதைத்த ஒண்மலர்ச்சேவடியும் *
ஈரடியும்காணலாம் என்னெஞ்சே! * - ஓரடியின்
தாயவனைக்கேசவனைத் தண்துழாய்மாலைசேர் *
மாயவனையேமனத்துவை. (2)