Your browser does not support the audio element.
audio
3266 ஊரெல்லாம்துஞ்சி உலகெல்லாம்நள்ளிருளாய் *
நீரெல்லாம்தேறி ஓர்நீளிரவாய்நீண்டதால் *
பாரெல்லாமுண்ட நம்பாம்பணையான்வாரானால் *
ஆர்? எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார்இனியே? (2)
3267 ஆவிகாப்பாரினியார்? ஆழ்கடல்மண்விண்மூடி *
மாவிகாரமாய் ஓர்வல்லிரவாய்நீண்டதால் *
காவிசேர்வண்ணன் என்கண்ணனும்வாரானால் *
பாவியேன்நெஞ்சமே! நீயும்பாங்கல்லையே.
3268 நீயும்பாங்கல்லைகாண் நெஞ்சமே! நீளிரவும் *
ஓயும்பொழுதின்றி ஊழியாய்நீண்டதால் *
காயும்கடுஞ்சிலை என்காகுத்தன்வாரானால் *
மாயும்வகையறியேன் வல்வினையேன்பெண்பிறந்தே.
3269 பெண்பிறந்தாரெய்தும் பெருந்துயர்காண்கிலேனென்று *
ஒண்சுடரோன் வாராதொளித்தான் * இம்மண்ணளந்த
கண்பெரியசெவ்வாய் எங்காரேறுவாரானால் *
எண்பெரியசிந்தைநோய் தீர்ப்பாரார்என்னையே?
3270 ஆரென்னையாராய்வார்? அன்னையரும்தோழியரும் *
நீரென்னே? என்னாதே நீளிரவும்துஞ்சுவரால் *
காரன்னமேனி நங்கண்ணனும்வாரானால் *
பேரென்னைமாயாதால் வல்வினையேன்பின்னின்றே.
3271 பின்நின்றகாதல்நோய் நெஞ்சம்பெரிதடுமால் *
முன்நின்றிராவூழி கண்புதையமூடிற்றால் *
மன்னின்றசக்கரத்து எம்மாயவனும்வாரானால் *
இந்நின்றநீளாவி காப்பார்ஆர்இவ்விடத்தே?
3272 காப்பாரார் இவ்விடத்து? கங்கிருளின்நுண்துளியாய் *
சேட்பாலதூழியாய்ச் செல்கின்றகங்குல்வாய் *
தூப்பாலவெண்சங்கு சக்கரத்தன்தோன்றானால் *
தீப்பாலவல்வினையேன் தெய்வங்காள்! என்செய்கேனோ?
3273 தெய்வங்காள்! என்செய்கேன்! ஓரிரவுஏழூழியாய் *
மெய்வந்துநின்று எனதாவிமெலிவிக்கும் *
கைவந்தசக்கரத்து என்கண்ணனும்வாரானால் *
தைவந்ததண்தென்றல் வெஞ்சுடரில்தானடுமே.
3274 வெஞ்சுடரில்தானடுமால் வீங்கிருளின்நுண்துளியாய் *
அஞ்சுடரவெய்யோன் அணிநெடுந்தேர்தோன்றாதால் *
செஞ்சுடர்த்தாமரைக்கண் செல்வனும்வாரானால் *
நெஞ்சிடர்தீர்ப்பாரினியார்? நின்றுருகுகின்றேனே.
3275 நின்றுருகுகின்றேனேபோல நெடுவானம் *
சென்றுருகிநுண்துளியாய்ச் செல்கின்றகங்குல்வாய் *
அன்றொருகால்வையம் அளந்தபிரான்வாரானென்று *
ஒன்றொருகால்சொல்லாது உலகோஉறங்குமே.
3276 உறங்குவான்போல் யோகுசெய்தபெருமானை *
சிறந்தபொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்சொல் *
நிறங்கிளர்ந்தவந்தாதி ஆயிரத்திப்பத்தால் *
இறந்துபோய்வைகுந்தம் சேராவாறெங்ஙனேயோ? (2)