Your browser does not support the audio element.
audio
3211 நண்ணாதார்முறுவலிப்ப நல்லுற்றார்கரைந்தேங்க *
எண்ணாராத்துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை? *
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கேவரும்பரிசு *
தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய்சாமாறே. (2)
3212 சாமாறும்கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து *
ஏமாறிக்கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை? *
ஆமாறொன்றறியேன்நான் அரவணையாய்! அம்மானே! *
கூமாறேவிரைகண்டாய் அடியேனைக்குறிக்கொண்டே.
3213 கொண்டாட்டும்குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும் *
வண்டார்பூங்குழலாளும் மனையொழிய உயிர்மாய்தல் *
கண்டாற்றேன்உலகியற்கை கடல்வண்ணா! அடியேனை *
பண்டேபோற்கருதாது உன்னடிக்கேகூய்ப்பணி கொள்ளே.
3214 கொள்ளென்றுகிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக *
கொள்ளென்றுதமம்மூடும் இவையென்ன உலகியற்கை? *
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கேவரும்பரிசு *
வள்ளல்செய்தடியேனை உனதருளால்வாங்காயே.
3215 வாங்குநீர்மலருலகில் நிற்பனவும்திரிவனவும் *
ஆங்குயிர்கள்பிறப்பிறப்புப் பிணிமூப்பால்தகர்ப்புண்ணும் *
ஈங்கிதன்மேல்வெந்நரகம் இவையென்ன உலகியற்கை? *
வாங்கெனைநீமணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.
3216 மறுக்கிவல்வலைப்படுத்திக் குமைத்திட்டுக்கொன்றுண்பர் *
அறப்பொருளையறிந்தோரார் இவையென்ன உலகியற்கை? *
வெறித்துளவமுடியானே! வினையேனைஉனக்கடிமை
அறக்கொண்டாய் * இனியென்னாரமுதே! கூயருளாயே.
3217 ஆயே! இவ்வுலகத்து நிற்பனவும்திரிவனவும் *
நீயேமற்றொருபொருளும் இன்றிநீநின்றமையால் *
நோயேமூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவையொழிய *
கூயேகொள்ளடியேனைக் கொடுவுலகம்காட்டேலே.
3218 காட்டிநீகரந்துமிழும் நிலம்நீர்தீவிசும்புகால் *
ஈட்டீநீவைத்தமைத்த இமையோர்வாழ்தனிமுட்டை *
கோட்டையினில்கழித்து என்னைஉன்கொழுஞ்சோதியுயரத்து *
கூட்டரியதிருவடிக்கள் எஞ்ஞான்றுகூட்டுதியே?
3219 கூட்டுதிநின்குரைகழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து *
ஆட்டுதிநீஅரவணையாய்! அடியேனுமஃதறிவன் *
வேட்கையெல்லாம்விடுத்து என்னைஉன்திருவடியேசுமந்துழல *
கூட்டரியதிருவடிக்கள் கூட்டினைநான்கண்டேனே.
3220 கண்டுகேட்டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம் * தெரிவரிய அளவில்லாச்சிற்றின்பம் *
ஒண்தொடியாள்திருமகளும் நீயுமேநிலாநிற்ப *
கண்டசதிர்கண்டொழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே.
3221 திருவடியைநாரணனைக் கேசவனைப்பரஞ்சுடரை *
திருவடிசேர்வதுகருதிச் செழுங்குருகூர்ச்சடகோபன் *
திருவடிமேலுரைத்ததமிழ் ஆயிரத்துள்இப்பத்தும் *
திருவடியேயடைவிக்கும் திருவடிசேர்ந்தொன்றுமினே. (2)