Your browser does not support the audio element.
audio
3101 சொன்னால்விரோதமிது ஆகிலும்சொல்லுவன் கேண்மினோ *
என்னாவிலின்கவி யானொருவர்க்கும்கொடுக்கிலேன் *
தென்னாதெனாவென்று வண்டுமுரல்திருவேங்கடத்து *
என்னானைஎன்னப்பன் எம்பெருமானுளனாகவே. (2)
3102 உளனாகவேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை *
வளனாமதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்? *
குளனார்கழனிசூழ் கண்ணன்குறுங்குடிமெய்ம்மையே *
உளனாயவெந்தையை எந்தைபெம்மானையொழியவே?
3103 ஒழிவொன்றில்லாத பல்லூழிதோறூழிநிலாவ * போம்
வழியைத்தரும் நங்கள்வானவரீசனைநிற்கப்போய் *
கழியமிகநல்லவான்கவிகொண்டு புலவீர்காள்! *
இழியக்கருதி ஓர்மானிடம்பாடலென்னாவதே?
3104 என்னாவது? எத்தெனைநாளைக்குப்போதும்? புலவீர்காள்! *
மன்னாமனிசரைப்பாடிப் படைக்கும்பெரும்பொருள் *
மின்னார்மணிமுடி விண்ணவர்தாதையைப்பாடினால் *
தன்னாகவேகொண்டு சன்மஞ்செய்யாமையும் கொள்ளுமே.
3105 கொள்ளும்பயனில்லைக் குப்பைகிளர்த்தன்னசெல்வத்தை *
வள்ளல்புகழ்ந்து நும்வாய்மையிழக்கும்புலவீர்காள்! *
கொள்ளக்குறைவிலன் வேண்டிற்றெல்லாம்தரும்கோதில் * என்
வள்ளல்மணிவண்ணன்தன்னைக் கவிசொல்லவம்மினோ.
3106 வம்மின்புலவீர்! நும்மெய்வருத்திக்கைசெய்துய்ம்மினோ *
இம்மன்னுலகில் செல்வரிப்போதில்லைநோக்கினோம் *
நும்மின்கவிகொண்டு நும்நும்இட்டாதெய்வமேத்தினால் *
செம்மின்சுடர்முடி என்திருமாலுக்குச்சேருமே.
3107 சேருங்கொடைபுகழ் எல்லையிலானை * ஓராயிரம்
பேருமுடையபிரானையல்லால் மற்றுயான்கிலேன் *
மாரியனையகை மால்வரையொக்கும்திண்தோளென்று *
பாரிலோர்பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள்பேசவே.
3108 வேயின்மலிபுரைதோளி பின்னைக்குமணாளனை *
ஆயபெரும்புகழ் எல்லையிலாதனபாடிப்போய் *
காயம்கழித்து அவன்தாளிணைக்கீழ்ப்புகுங்காதலன் *
மாயமனிசரை என்சொல்லவல்லேன்என்வாய்கொண்டே?
3109 வாய்கொண்டுமானிடம்பாடவந்த கவியேனல்லேன் *
ஆய்கொண்டசீர்வள்ளல் ஆழிப்பிரான்எனக்கேஉளன் *
சாய்கொண்டஇம்மையும்சாதித்து வானவர்நாட்டையும் *
நீகண்டுகொள்ளென்று வீடும்தரும்நின்றுநின்றே.
3110 நின்றுநின்றுபலநாளுய்க்கும் இவ்வுடல்நீங்கிப்போய் *
சென்றுசென்றாகிலும்கண்டு சன்மங்கழிப்பானெண்ணி *
ஒன்றியொன்றியுலகம்படைத்தான் கவியாயினேற்கு *
என்றுமென்றுமினி மற்றொருவர்கவியேற்குமே?
3111 ஏற்கும்பெரும்புகழ் வானவரீசன்கண்ணன்தனக்கு *
ஏற்கும்பெரும்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல் *
ஏற்கும்பெரும்புகழ் ஆயிரத்துள்இவையுமோர்பத்து *
ஏற்கும்பெரும்புகழ் சொல்லவல்லார்க்குஇல்லை சன்மமே. (2)