Your browser does not support the audio element.
audio
3112 சன்மம்பலபலசெய்துவெளிப்பட்டுச் சங்கொடுசக்கரம்வில் *
ஒண்மையுடையவுலக்கையொள்வாள் தண்டுகொண்டு புள்ளூர்ந்து * உலகில்
வன்மையுடையவரக்கர்அசுரரை மாளப்படைபொருத *
நன்மையுடையவன்சீர்ப்பரவப்பெற்ற நானோர் குறைவிலனே. (2)
3113 குறைவில்தடங்கடல்கோளரவேறித் தன்கோலச் செந்தாமரைக்கண் *
உறைபவன்போலவோர்யோகுபுணர்ந்த ஒளிமணிவண்ணன் கண்ணன் *
கறையணிமூக்குடைப்புள்ளைக்கடாவி அசுரரைக்காய்ந்த அம்மான் *
நிறைபுகழேத்தியும்பாடியுமாடியும் யானொருமுட்டிலனே.
3114 முட்டில்பல்போகத்தொருதனிநாயகன் மூவுலகுக்குரிய *
கட்டியைத்தேனையமுதை நன்பாலைக்கனியைக் கரும்பு தன்னை *
மட்டவிழ்தண்ணந்துழாய்முடியானைவணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை * இறையாகிலும் யானென்மனத்துப் பரிவிலனே.
3115 பரிவின்றிவாணனைக் காத்துமென்று அன்றுபடையொடும் வந்தெதிர்ந்த *
திரிபுரஞ்செற்றவனும்மகனும் பின்னுமங்கியும்போர் தொலைய *
பொருசிறைப்புள்ளைக்கடாவிய மாயனையாயனைப்பொற் சக்கரத்
தரியினை * அச்சுதனைப்பற்றி யானிறையேனுமிடரிலனே.
3116 இடரின்றியேயொருநாளொருபோழ்தில் எல்லாவுலகும் கழிய *
படர்புகழ்ப்பார்த்தனும்வைதிகனும் உடனேறத்திண்தேர்கடவி *
சுடரொளியாய்நின்றதன்னுடைச்சோதியில் வைதிகன் பிள்ளைகளை *
உடலொடும்கொண்டுகொடுத்தவனைப்பற்றி ஒன்றும் துயரிலனே.
3117 துயரில்சுடரொளிதன்னுடைச்சோதி நின்றவண்ணம் நிற்கவே *
துயரில்மலியும்மனிசர்பிறவியில் தோன்றிக்கண் காணவந்து *
துயரங்கள்செய்துதன்தெய்வநிலையுலகில் புகவுய்க்குமம் மான் *
துயரமில்சீர்க்கண்ணன்மாயன்புகழ்துற்ற யானோர் துன்பமிலனே.
3118 துன்பமுமின்பமுமாகிய செய்வினையாய்உலகங்களுமாய் *
இன்பமில்வெந்நரகாகி இனியநல்வான்சுவர்க்கங்களுமாய் *
மன்பல்லுயிர்களுமாகிப் பலபலமாயமயக்குகளால் *
இன்புறுமிவ்விளையாட்டுடையானைப்பெற்று ஏதுமல்லலிலனே.
3119 அல்லலிலின்பமளவிறந்தெங்கும் அழகமர்சூழொளியன் *
அல்லிமலர்மகள்போகமயக்குக்கள் ஆகியும்நிற்குமம்மான் *
எல்லையில்ஞானத்தன்ஞானமஃதேகொண்டு எல்லாக் கருமங்களும்செய் *
எல்லையில்மாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யானோர் துக்கமிலனே.
3120 துக்கமில்ஞானச்சுடரொளிமூர்த்தி துழாயலங்கல்பெருமான் *
மிக்கபன்மாயங்களால்விகிர்தஞ்செய்து வேண்டு முருவுகொண்டு *
நக்கபிரானோடயன்முதலாக எல்லாருமெவையும் * தன்னுள்
ஒக்கவொடுங்கவிழுங்கவல்லானைப்பெற்று ஒன்றும் தளர்விலனே.
3121 தளர்வின்றியேயென்றுமெங்கும்பரந்த தனிமுதல் ஞானமொன்றாய் *
அளவுடையைம்புலன்கள் அறியாவகையால் அருவாகி நிற்கும் *
வளரொளியீசனைமூர்த்தியைப் பூதங்களைந்தை இருசுடரை *
கிளரொளிமாயனைக்கண்ணனைத்தாள்பற்றி யானென்றும் கேடிலனே.
3122 கேடில்விழுப்புகழ்க்கேசவனைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன *
பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும்பயிற்ற வல்லார்கட்கு * அவன்
நாடும்நகரமும்நன்குடன்காண நலனிடையூர்திபண்ணி *
வீடும்பெறுத்தித்தன்மூவுலகுக்கும்தரும் ஒருநாயகமே. (2)