Your browser does not support the audio element.
audio
1588 தந்தைகாலில்பெருவிலங்கு தாளவிழ * நள்ளிருட்கண்
வந்தஎந்தைபெருமானார் மருவிநின்றஊர்போலும் *
முந்திவானம்மழைபொழியும் மூவாவுருவின்மறையாளர் *
அந்திமூன்றும்அனலோம்பும் அணியார்வீதிஅழுந்தூரே. (2)
1589 பாரித்தெழுந்தபடைமன்னர்தம்மை மாள * பாரதத்துத்
தேரில்பாகனாயூர்ந்த தேவதேவன்ஊர்போலும் *
நீரில்பணைத்தநெடுவாளைக்கு அஞ்சிப்போனகுருகினங்கள் *
ஆரல்கவுளோடுஅருகணையும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.
1590 செம்பொன்மதிள்சூழ்தென்னிலங்கைக்கிறைவன் சிரங்கள்ஐயிரண்டும் *
உம்பர்வாளிக்குஇலக்காக உதிர்த்தவுரவோன் ஊர்போலும் *
கொம்பிலார்ந்தமாதவிமேல் கோதிமேய்ந்தவண்டினங்கள் *
அம்பராவும்கண்மடவார் ஐம்பாலணையும்அழுந்தூரே.
1591 வெள்ளத்துள்ஓராலிலைமேல் மேவிஅடியேன்மனம்புகுந்து * என்
உள்ளத்துள்ளும்கண்ணுள்ளும்நின்றார் நின்றஊர்போலும் *
புள்ளுப்பிள்ளைக்கிரைதேடிப் போனகாதல்பெடையோடும் *
அள்ளல்செறுவில்கயல்நாடும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.
1592 பகலு மிரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய் *
நிகரில் சுடரா யிருளாகி நின்றார் நின்ற வூர்போலும் *
துகிலின் கொடியும் தேர்த்துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய் *
அகிலின் புகையால் முகிலேய்க்கும் அணியார்வீதிஅழுந்தூரே.
1593 ஏடிலங்குதாமரைபோல் செவ்வாய்முறுவல்செய்தருளி *
மாடுவந்துஎன்மனம்புகுந்துநின்றார் நின்றஊர்போலும் *
நீடுமாடத்தனிச்சூலம்போழக் கொண்டல்துளிதூவ *
ஆடலரவத்தார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.
1594 மாலைப்புகுந்துமலரணைமேல்வைகி அடியேன்மனம் புகுந்து * என்
நீலக்கண்கள்பனிமல்கநின்றார் நின்றஊர்போலும் *
வேலைக்கடல்போல்நெடுவீதி விண்தோய்சுதைவெண்மணிமாடத்து *
ஆலைப்புகையால்அழற்கதிரைமறைக்கும் வீதிஅழுந்தூரே.
1595 வஞ்சிமருங்குலிடைநோவ மணந்துநின்றகனவகத்து * என்
நெஞ்சுநிறையக்கைகூப்பிநின்றார் நின்றஊர்போலும் *
பஞ்சியன்னமெல்லடி நற்பாவைமார்கள் ஆடகத்தின் *
அஞ்சிலம்பினார்ப்புஓவா அணியார்வீதிஅழுந்தூரே.
1596 என்னைம்புலனும்எழிலுங்கொண்டு இங்கேநெருநல்எழுந்தருளி *
பொன்னங்கலைகள்மெலிவெய்தப்போன புனிதர்ஊர்போலும் *
மன்னுமுதுநீரரவிந்தமலர்மேல் வரிவண்டுஇசைபாட *
அன்னம்பெடையோடுஉடனாடும் அணியார்வயல்சூழ்அழுந்தூரே.
1597 நெல்லில்குவளைகண்காட்ட நீரில்குமுதம்வாய்காட்ட *
அல்லிக்கமலம்முகங்காட்டும் கழனிஅழுந்தூர்நின்றானை *
வல்லிப்பொதும்பில்குயில்கூவும் மங்கைவேந்தன்பரகாலன் *
சொல்லில்பொலிந்ததமிழ்மாலை சொல்லப்பாவம்நில்லாவே. (2)