Your browser does not support the audio element.
audio
1598 சிங்கமதாய்அவுணன் திறலாகம்முன்கீண்டுகந்த *
சங்கமிடத்தானைத் தழலாழிவலத்தானை *
செங்கமலத்தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற *
அங்கமலக்கண்ணனை அடியேன்கண்டுகொண்டேனே. (2)
1599 கோவானார்மடியக் கொலையார்மழுக்கொண்டருளும் *
மூவாவானவனை முழுநீர்வண்ணனை * அடியார்க்கு
ஆ! ஆ! என்றிரங்கித் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
தேவாதிதேவனை யான்கண்டுகொண்டுதிளைத்தேனே.
1600 உடையானை ஒலிநீருலகங்கள்படைத்தானை *
விடையானோடஅன்று விறலாழிவிசைத்தானை *
அடையார்தென்னிலங்கையழித்தானை அணியழுந்தூர்
உடையானை * அடியேன் அடைந்துய்ந்துபோனேனே.
1601 குன்றால்மாரிதடுத்தவனைக் குலவேழம்அன்று
பொன்றாமை * அதனுக்குஅருள்செய்த போரேற்றை *
அன்றுஆவின்நறுநெய்யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றானை * அடியேன் கண்டுகொண்டுநிறைந்தேனே.
1602 கஞ்சனைக்காய்ந்தானைக் கண்ணமங்கையுள்நின்றானை *
வஞ்சனப்பேய்முலையூடு உயிர்வாய்மடுத்துண்டானை *
செஞ்சொல்நான்மறையோர் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
அஞ்சனக்குன்றந்தன்னை அடியேன்கண்டு கொண்டேனே.
1603 பெரியானை அமரர்தலைவற்கும்பிரமனுக்கும் *
உரியானையுகந்தானவனுக்கும் உணர்வதனுக்கு
அரியானை * அழுந்தூர்மறையோர்கள் அடிபணியும்
கரியானை * அடியேன் கண்டுகொண்டுகளித்தேனே.
1604 திருவாழ்மார்வன்தன்னைத் திசைமண்நீர்எரிமுதலா *
உருவாய்நின்றவனை ஒலிசேரும்மாருதத்தை *
அருவாய்நின்றவனைத் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
கருவார்கற்பகத்தைக் கண்டுகொண்டுகளித்தேனே.
1605 நிலையாளாக என்னையுகந்தானை * நிலமகள்தன்
முலையாள்வித்தகனை முதுநான்மறைவீதிதொறும் *
அலையாரும்கடல்போல்முழங்கும்தென்னழுந்தையில் மன்னிநின்ற *
கலையார்சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.
1606 பேரானைக் குடந்தைப்பெருமானை * இலங்குஒளிசேர்
வாரார்வனமுலையாள் மலர்மங்கைநாயகனை *
ஆராவின்னமுதைத் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
காரார்கருமுகிலைக் கண்டுகொண்டுகளித்தேனே. (2)
1607 திறல்முருகனனையார் தென்னழுந்தையில்மன்னிநின்ற *
அறமுதல்வனவனை அணியாலியர்கோன் * மருவார்
கறைநெடுவேல்வலவன் கலிகன்றிசொல்ஐயிரண்டும் *
முறைவழுவாமைவல்லார் முழுதுஆள்வர்வானுலகே. (2)