Your browser does not support the audio element.
audio
3695 ஓராயிரமாய் உலகேழளிக்கும் *
பேராயிரங்கொண்டது ஓர்பீடுடையன் *
காராயின காளநன்மேனியினன் *
நாராயணன் நங்கள்பிரானவனே. (2)
3696 அவனேயகல்ஞாலம் படைத்திடந்தான் *
அவனேயஃதுண்டு உமிழ்ந்தானளந்தான் *
அவனேயவனும் அவனும்அவனும் *
அவனேமற்றெல்லாமும் அறிந்தனமே.
3697 அறிந்தனவேத வரும்பொருள்நூல்கள் *
அறிந்தனகொள்க அரும்பொருளாதல் *
அறிந்தனரெல்லாம் அரியைவணங்கி *
அறிந்தனர் நோய்களறுக்கும்மருந்தே.
3698 மருந்தே நங்கள்போகமகிழ்ச்சிக்கென்று *
பெருந்தேவர்குழாங்கள் பிதற்றும்பிரான் *
கருந்தேவனெம்மான் கண்ணன் விண்ணுலகம் *
தரும்தேவனைச் சோரேல்கண்டாய்மனமே!
3699 மனமே! உன்னை வல்வினையேன் இரந்து *
கனமேசொல்லினேன் இதுசோரேல்கண்டாய் *
புனமேவிய பூந்தண்துழாயலங்கல் *
இனமேதுமிலானை அடைவதுமே.
3700 அடைவதும் அணியார்மலர்மங்கைதோள் *
மிடைவதும் அசுரர்க்குவெம்போர்களே *
கடைவதும் கடலுளமுதம் * என்மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே.
3701 ஆகம்சேர் நரசிங்கமதாகி * ஓர்
ஆகம்வள்ளுகிரால் பிளந்தானுறை *
மாகவைகுந்தம் காண்பதற்கு * என்மனம்
ஏகமெண்ணும் இராப்பகலின்றியே.
3702 இன்றிப்போக இருவினையும்கெடுத்து *
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான் *
நின்றவேங்கடம் நீள்நிலத்துள்ளது *
சென்றுதேவர்கள் கைதொழுவார்களே.
3703 தொழுதுமாமலர் நீர்சுடர்தூபம்கொண்டு *
எழுதுமென்னும்இது மிகையாதலில் *
பழுதில்தொல்புகழ்ப் பாம்பணைப்பள்ளியாய்! *
தழுவுமாறறியேன் உனதாள்களே.
3704 தாளதாமரையான் உனதுந்தியான் *
வாள்கொள்நீள்மழுவாளி உன்னாகத்தான் *
ஆளராய்த்தொழுவாரும் அமரர்கள் *
நாளும்என்புகழ்கோ உனசீலமே.
3705 சீலமெல்லையிலான் அடிமேல் * அணி
கோலநீள் குருகூர்ச்சடகோபன் * சொல் *
மாலையாயிரத்துள் இவைபத்தினின்
பாலர் * வைகுந்தமேறுதல் பான்மையே. (2)