Your browser does not support the audio element.
audio
3607 மாயக்கூத்தா! வாமனா! வினையேன்கண்ணா! கண்கைகால் *
தூயசெய்யமலர்களாச் சோதிச்செவ்வாய்முகிழதா *
சாயல்சாமத்திருமேனி தண்பாசடையா * தாமரைநீள்
வாசத்தடம்போல்வருவானே!ஒருநாள்காணவாராயே! (2)
3608 காணவாராயென்றென்று கண்ணும்வாயும்துவர்ந்து * அடியேன்
நாணிநன்னாட்டுஅலமந்தால் இரங்கிஒருநாள்நீஅந்தோ! *
காணவாராய்கருநாயிறுதிக்கும் கருமாமாணிக்க *
நாள்நல்மலைபோல்சுடர்ச்சோதி முடிசேர்சென்னி யம்மானே!
3609 முடிசேர்சென்னியம்மா! நின்மொய்பூந்தாமத்தண்துழாய் *
கடிசேர்கண்ணிப்பெருமானே! என்றென்றேங்கி யழுதக்கால் *
படிசேர்மகரக்குழைகளும் பவளவாயும்நால்தோளும் *
துடிசேரிடையுமமைந்தது ஓர்தூநீர்முகில்போல் தோன்றாயே.
3610 தூநீர்முகில்போல்தோன்றும் நின்சுடர்கொள்வடிவும் கனிவாயும் *
தேநீர்க்கமலக்கண்களும் வந்தென்சிந்தைநிறைந்தவா! *
மாநீர்வெள்ளிமலைதன்மேல் வண்கார்நீலமுகில்போல *
தூநீர்க்கடலுள்துயில்வானே! எந்தாய்! சொல்ல மாட்டேனே.
3611 சொல்லமாட்டேனடியேன் உன்துளங்குசோதித்திருப்பாதம் *
எல்லையில்சீரிளஞாயிறு இரண்டுபோலென்னுள்ளவா *
அல்லலென்னுமிருள்சேர்தற்கு உபாயமென்னே? * ஆழிசூழ்
மல்லல்ஞாலமுழுதுண்ட மாநீர்க்கொண்டல் வண்ணனே!
3612 கொண்டல்வண்ணா! குடக்கூத்தா! வினையேன்கண்ணா! கண்ணா! * என்
அண்டவாணா! என்றென்னைஆளக்கூப்பிட்டழைத்தக்கால் *
விண்டன்மேல்தான்மண்மேல்தான் விரிநீர்க்கடல்தான் மற்றுத்தான் *
தொண்டனேனுன்கழல்காணஒருநாள்வந்துதோன்றாயே.
3613 வந்துதோன்றாயன்றேல் உன்வையம்தாயமலரடிக்கீழ் *
முந்திவந்துயான்நிற்ப முகப்பேகூவிப்பணிகொள்ளாய் *
செந்தண்கமலக்கண்கைகால் சிவந்தவாயோர்கருஞாயிறு *
அந்தமில்லாக்கதிர்பரப்பி அலர்ந்ததொக்குமம்மானே!
3614 ஒக்குமம்மானுருவமென்று உள்ளம்குழைந்துநாணாளும் *
தொக்கமேகப் பல்குழாங்கள் காணுந்தோறும்தொலைவன் நான் *
தக்கஐவர்தமக்காய்அன்று ஈரைம்பதின்மர்தாள் சாய *
புக்கநல்தேர்த்தனிப்பாகா! வாராய்இதுவோ பொருத்தமே?
3615 இதுவோ பொருத்தம்? மின்னாழிப்படையாய்! ஏறுமிருஞ்சிசிறைப்புள்
அதுவே * கொடியாவுயர்த்தானே! என்றென்றேங்கி யழுதக்கால் *
எதுவேயாகக்கருதுங்கொல்? இம்மாஞாலம்பொறை தீர்ப்பான் *
மதுவார்சோலை உத்தரமதுரைப்பிறந்தமாயனே.
3616 பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா! * நீ இன்னே
சிறந்தகால்தீநீர்வான் மண்பிறவுமாயபெருமானே! *
கறந்தபாலுள்நெய்யேபோல் இவற்றுளெங்கும்கண்டுகொள் *
இறந்துநின்றபெருமாயா! உன்னையெங்கேகாண்கேனே?
3617 எங்கேகாண்கேன்? ஈன்துழாயம்மான்தன்னை
யானென்றென்று *
அங்கேதாழ்ந்தசொற்களால்
அந்தண்குருகூர்ச்சடகோபன் *
செங்கேழ்சொன்னவாயிரத்துள்
இவையும்பத்தும் வல்லார்கள் *
இங்கேகாணஇப்பிறப்பே
மகிழ்வர்எல்லியும்காலையே. (2)