Your browser does not support the audio element.
audio
3453 உண்ணிலாவியஐவரால்குமைதீற்றி என்னைஉன்பாதபங்கயம் *
நண்ணிலாவகையே நலிவான்இன்னுமெண்ணுகின்றாய் *
எண்ணிலாப்பெருமாயனே! இமையோர்களேத்தும்உலகம் மூன்றுடை *
அண்ணலே! அமுதே! அப்பனே! என்னையாள்வானே. (2)
3454 என்னையாளும்வன்கோவோரைந்திவைபெய்து இராப்பகல்மோதுவித்திட்டு *
உன்னைநானணுகாவகை செய்துபோதிகண்டாய் *
கன்னலே! அமுதே! கார்முகில்வண்ணனே! கடல்ஞாலம் காக்கின்ற *
மின்னுநேமியினாய்! வினையேனுடை வேதியனே!
3455 வேதியாநிற்குமைவரால் வினையேனைமோதுவித்து * உன்திருவடிச்
சாதியாவகை நீ தடுத்தென்பெறுதி? அந்தோ! *
ஆதியாகியகலிடம்படைத்து உண்டுமிழந்து கடந்திடந்திட்ட *
சோதிநீள்முடியாய்! தொண்டனேன்மதுசூதனனே!
3456 சூதுநானறியாவகை சுழற்றியோரைவரைக்காட்டி * உன்னடிப்
போதுநானணுகாவகை செய்துபோதிகண்டாய் *
யாதும்யாவருமின்றிநின்னகம்பாலொடுக்கி ஓராலின் நீளிலை *
மீதுசேர்குழவி! வினையேன்வினைதீர்மருந்தே!
3457 தீர்மருந்தின்றியைந்துநோயடும் செக்கிலிட்டுத் திரிக்குமைவரை *
நேர்மருங்குடைத்தாவடைத்து நெகிழ்ப்பா னொக்கின்றாய் *
ஆர்மருந்தினியாகுவார்? அடலாழியேந்தியசுரர்வன்குலம் *
வேர்மருங்கறுத்தாய்! விண்ணுளார்பெருமானேயோ!
3458 விண்ணுளார்பெருமாற்கடிமைசெய்வாரையும்செறும் ஐம்புலனிவை *
மண்ணுளென்னைப்பெற்றால் என்செய்யாமற்றுநீயும் விட்டால்? *
பண்ணுளாய்! கவிதன்னுளாய்! பத்தியினுள்ளாய்! பரமீசனே! * வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.
3459 ஒன்றுசொல்லிஒருத்தினில்நிற்கிலாத ஒரைவர்வன்கயவரை *
என்றுயான்வெல்கிற்பன் உன்திருவருளில்லையேல்? *
அன்றுதேவரசுரர்வாங்க அலைகடலரவமளாவி * ஓர்
குன்றம்வைத்தஎந்தாய்! கொடியேன்பருகின்னமுதே.
3460 இன்னமுதெனத்தோன்றி ஓரைவர்யாவரையும்மயக்க * நீவைத்த
முன்னமாயமெல்லால் முழுவேரரிந்து * என்னையுன்
சின்னமும்திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக்கைதொழவே யருளெனக்கு *
என்னம்மா! என்கண்ணா! இமையோர்தம்குலமுதலே!
3461 குலமுதலடுந்தீவினைக் கொடுவன்குழியினில்வீழ்க்கு மைவரை *
வலமுதல்கெடுக்கும் வரமேதந்தருள்கண்டாய் *
நிலமுதலினியெவ்வுலகுக்கும் நிற்பனசெல்வனவென * பொருள்
பலமுதல்படைத்தாய்! என்கண்ணா! என்பரஞ்சுடரே!
3462 என்பரஞ்சுடரே! என்றுஉன்னையலற்றி உன்னிணைத் தாமரைகட்கு *
அன்புருகிநிற்குமதுநிற்கச் சுமடுதந்தாய் *
வன்பரங்களெடுத்து ஐவர்திசைதிசை வலித்தெற்றுகின்றனர்
முன்பரவைகடைந்து அமுதங்கொண்டமூர்த்தியோ!
3463 கொண்டமூர்த்தியோர்மூவராய்க் குணங்கள்படைத்தளித்துக்கெடுக்கும் * அப்
புண்டரீகக்கொப்பூழ்ப் புனற்பள்ளியப்பனுக்கே *
தொண்டர்தொண்டர்தொண்டர்தொண்டன்சடகோபன் சொல்லாயிரத்துள் இப்பத்தும் *
கண்டுபாடவல்லார் வினைபோம்கங்குலும்பகலே. (2)