Your browser does not support the audio element.
audio
3178 தீர்ப்பாரையாமினி எங்ஙனம்நாடுதும்? அன்னைமீர்! *
ஓர்ப்பாலிவ்வொண்ணுதல் உற்றநல்நோயிதுதேறினோம் *
போர்ப்பாகுதான்செய்து அன்றைவரைவெல்வித்த * மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்குஇவள் சிந்தை துழாய்த்திசைக்கின்றதே. (2)
3179 திசைக்கின்றதேயிவள்நோய் இதுமிக்கபெருந்தெய்வம் *
இசைப்பின்றி நீரணங்காடும்இளந்தெய்வமன்றிது *
திசைப்பின்றியே சங்குசக்கரமென்றிவள்கேட்க * நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில்பெறுமிதுகாண்மினே.
3180 இதுகாண்மின்அன்னைமீர்! இக்கட்டுவிச்சிசொற்கொண்டு * நீர்
எதுவானுஞ்செய்து அங்கோர்கள்ளுமிறைச்சியும் தூவேன்மின் *
மதுவார்துழாய்முடி மாயப்பிரான்கழல்வாழ்த்தினால் *
அதுவே இவளுற்றநோய்க்கும் அருமருந்தாகுமே.
3181 மருந்தாகுமென்று அங்கோர்மாயவலவைசொற்கொண்டு * நீர்
கருஞ்சோறும்மற்றைச்செஞ்சோறும் களனிழைத்தென் பயன்? *
ஒருங்காகவேஉலகேழும்விழுங்கியுமிழ்ந்திட்ட *
பெருந்தேவன்பேர்சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே.
3182 இவளைப்பெறும்பரிசு இவ்வணங்காடுதலன்றந்தோ! *
குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும்பயந்தனள் *
கவளக்கடாக்களிறட்டபிரான் திருநாமத்தால் *
தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமின்தணியுமே.
3183 தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர்அன்னைமீர்! *
பிணியுமொழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால் *
மணியினணிநிறமாயன் தமரடிநீறுகொண்டு *
அணியமுயலின் மற்றில்லைகண்டீர்இவ்வணங்குக்கே.
3184 அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்கள்ளும்பராய் *
துணங்கையெறிந்து நும்தோள்குலைக்கப்படுமன்னைமீர்! *
உணங்கல்கெடக் கழுதையுதடாட்டம்கண்டுஎன்பயன்? *
வணங்கீர்கள் மாயப்பிரான்தமர்வேதம்வல்லாரையே.
3185 வேதம்வல்லார்களைக்கொண்டு விண்ணோர்பெருமான்திருப்
பாதம்பணிந்து * இவள்நோயிதுதீர்த்துக்கொள்ளாதுபோய் *
ஏதம்பறைந்துஅல்லசெய்து கள்ளூடுகலாய்த்தூய் *
கீதமுழவிட்டு நீரணங்காடுதல்கீழ்மையே.
3186 கீழ்மையினாலங்கு ஓர்கீழ்மகனிட்டமுழவின்கீழ் *
நாழ்மைபலசொல்லி நீரணங்காடும்பொய்காண்கிலேன் *
ஏழ்மைப்பிறப்புக்கும்சேமம் இந்நோய்க்கும்ஈதேமருந்து *
ஊழ்மையில்கண்ணபிரான் கழல்வாழ்த்துமினுன்னித்தே.
3187 உன்னித்துமற்றொருதெய்வம்தொழாள் அவனை யல்லால் *
நும்மிச்சைசொல்லி நும்தோள்குலைக்கப்படும் அன்னைமீர்! *
மன்னப்படும்மறைவாணனை வண்துவராபதி
மன்னனை * ஏத்துமின் ஏத்துதலும்தொழுதாடுமே. (2)
3188 தொழுதாடித்தூமணிவண்ணனுக்கு ஆட்செய்துநோய்தீர்ந்த *
வழுவாததொல்புகழ் வண்குருகூர்ச்சடகோபன் * சொல்
வழுவாதவாயிரத்துள் இவைபத்துவெறிகளும் *
தொழுதாடிப்பாடவல்லார் துக்கசீலமிலர்களே. (2)