Your browser does not support the audio element.
audio
3167 வீற்றிருந்தேழுலகும் தனிக்கோல்செல்ல, வீவில்சீர் *
ஆற்றல்மிக்காளுமம்மானை வெம்மாபிளந்தான்தன்னை *
போற்றியென்றேகைகளாரத் தொழுதுசொல்மாலைகள் *
ஏற்றநோற்றேற்கு இனியென்னகுறையெழுமையுமே? (2)
3168 மையகண்ணாள்மலர்மேலுறைவாள் உறைமார்பினன் *
செய்யகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான் தன்னை *
மொய்யசொல்லாலிசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன் *
வெய்யநோய்கள்முழுதும் வியன்ஞாலத்துவீயவே.
3169 வீவிலின்பமிக எல்லைநிகழ்ந்தநம்அச்சுதன் *
வீவில்சீரன்மலர்க்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை *
வீவில்காலமிசைமாலைகளேத்தி மேவப்பெற்றேன் *
வீவிலின்பமிக எல்லை நிகழ்ந்தனன்மேவியே.
3170 மேவிநின்றுதொழுவார் வினைபோகமேவும்பிரான் *
தூவியம்புள்ளுடையான் அடலாழியம்மான்தன்னை *
நாவியலாலிசைமாலைகளேத்தி நண்ணப்பெற்றேன் *
ஆவியென்னாவியை யானறியேன்செய்தவாற்றையே.
3171 ஆற்றநல்ல வகைகாட்டுமம்மானை * அமரர்தம்
ஏற்றைஎல்லாப்பொருளும்விரித்தானை எம்மான்தன்னை *
மாற்றமாலைபுனைந்தேத்தி நாளும்மகிழ்வெய்தினேன் *
காற்றின்முன்னங்கடுகி வினைநோய்கள்கரியவே.
3172 கரியமேனிமிசை வெளியநீறுசிறிதேயிடும் *
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான் தன்னை *
உரியசொல்லாலிசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேற்கு *
அரியதுண்டோ? எனக்கு இன்றுதொட்டும்இனி யென்றுமே.
3173 என்றுமொன்றாகிஒத்தாரும்மிக்கார்களும் * தன்தனக்
கின்றிநின்றானை எல்லாவுலகும்உடையான்தன்னை *
குன்றமொன்றால்மழைகாத்தபிரானைச் சொன்மாலைகள் *
நன்றுசூட்டும்விதியெய்தினம் என்னகுறைநமக்கே!
3174 நமக்கும்பூவின்மிசைநங்கைக்கும் இன்பனை * ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும்பெருமானை * தண்தாமரை
சுமக்கும்பாதப்பெருமானைச் சொன்மாலைகள் * சொல்லுமாறு
அமைக்கவல்லேற்கு இனியாவர்நிகரகல்வானத்தே?
3175 வானத்தும்வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்
தானத்தும் * எண்திசையும் தவிராதுநின்றான்தன்னை *
கூனற்சங்கத்தடக்கையவனைக் குடமாடியை வானக்
கோனை * கவிசொல்லவல்லேற்கு இனிமாறுண்டோ?
3176 உண்டுமுமிழ்ந்தும்கடந்துமிடந்தும் கிடந்தும்நின்றும் *
கொண்டகோலத்தொடுவீற்றிருந்தும் மணங்கூடியும் *
கண்டவாற்றால் தனதேயுலகெனநின்றான்தன்னை *
வண்தமிழ்நூற்கநோற்றேன் அடியார்க்கின்பமாரியே.
3177 மாரிமாறாததண்ணம்மலை வேங்கடத்தண்ணலை *
வாரிமாறாதபைம்பூம்பொழில்சூழ் குருகூர்நகர் *
காரிமாறன்சடகோபன் சொல்லாயிரத்திப்பத்தால் *
வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்குமே. (2)