Your browser does not support the audio element.
audio
2901 வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்! *
ஆயுமமருலகும் துஞ்சிலும் நீதுஞ்சாயால் *
நோயும்பயலைமையும் மீதூரஎம்மேபோல் *
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட்பட்டாயே? (2)
2902 கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாயவன்றிலே! *
சேட்பட்டயாமங்கள் சேராதிரங்குதியால் *
ஆட்பட்டஎம்மேபோல் நீயும்அரவணையான் *
தாட்பட்டதண்துழாய்த்தாமம் காமுற்றாயே?
2903 காமுற்றகையறவோடு எல்லே! இராப்பகல் *
நீமுற்றக்கண்துயிலாய் நெஞ்சுருகியேங்குதியால் *
தீமுற்றத்தென்னிலங்கை ஊட்டினான்தாள்நயந்த *
யாமுற்றதுற்றாயோ? வாழிகனைகடலே!
2904 கடலும்மலையும் விசும்பும்துழாய்எம்போல் *
சுடர்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்! *
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ *
உடலம்நோயுற்றாயோ? ஊழிதோறூழியே.
2905 ஊழிதோறூழி உலகுக்குநீர்கொண்டு *
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற *
வாழியவானமே! நீயும்மதுசூதன் *
பாழிமையில்பட்டு அவன்கண் பாசத்தால்நைவாயே?
2906 நைவாயவெம்மேபோல் நாள்மதியே! நீஇந்நாள் *
மைவானிருளகற்றாய் மாழாந்துதேம்புதியால் *
ஐவாயரவணைமேல் ஆழிப்பெருமானார் *
மெய்வாசகம்கேட்டு உன்மெய்ந்நீர்மைதோற்றாயே?
2907 தோற்றோம்மடநெஞ்சம் எம்பெருமான்நாரணற்கு * எம்
ஆற்றாமைசொல்லி அழுவோமைநீநடுவே *
வேற்றோர்வகையில்கொடிதாய் எனையூழி *
மாற்றாண்மைநிற்றியோ? வாழிகனையிருளே!
2908 இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியேபோய் *
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால் *
உருளும்சகடம் உதைத்தபெருமானார் *
அருளின்பெருநசையால் ஆழாந்துநொந்தாயே?
2909 நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த *
நந்தாவிளக்கமே! நீயுமளியத்தாய் *
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான் *
அந்தாமத்தண் துழாய் ஆசையால்வேவாயே?
2910 வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த *
ஓவாதிராப்பகல் உன்பாலேவீழ்த்தொழிந்தாய் *
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த *
மூவாமுதல்வா! இனியெம்மைச்சோரேலே.
2911 சோராதஎப்பொருட்கும் ஆதியாம்சோதிக்கே *
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன் *
ஓராயிரஞ்சொன்ன அவற்றுளிவைப்பத்தும் *
சோரார்விடார்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. (2)