Your browser does not support the audio element.
audio
2879 இவையுமவையுமுவையும் இவருமவருமுவரும் *
எவையும்யவரும்தன்னுள்ளே ஆகியுமாக்கியும்காக்கும் *
அவையுள்தனிமுதலெம்மான் கண்ணபிரானென்னமுதம் *
சுவையன்திருவின்மணாளன் என்னுடைச்சூழலுளானே. (2)
2880 சூழல்பலபலவல்லான் தொல்லையங்காலத்துலகை *
கேழலொன்றாகியிடந்த கேசவனென்னுடையம்மான் *
வேழமருப்பையொசித்தான் விண்ணவர்க்கெண்ண லரியான் *
ஆழநெடுங்கடல்சேர்ந்தான் அவனென்னருகலிலானே.
2881 அருகலிலாயபெருஞ்சீர் அமரர்களாதிமுதல்வன் *
கருகியநீலநன்மேனிவண்ணன் செந்தாமரைக்கண்ணன் *
பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன் *
ஒருகதியின்சுவைதந்திட்டு ஒழிவிலனென்னோடுடனே.
2882 உடனமர்க்காதல்மகளிர் திருமகள்மண்மகளாயர்
மடமகள் * என்றிவர்மூவராளும் உலகமும்மூன்றே *
உடனவையொக்கவிழுங்கி ஆலிலைச்சேர்ந்தவனெம்மான் *
கடல்மலிமாயப்பெருமான் கண்ணன்என்ஒக்கலையானே.
2883 ஒக்கலைவைத்துமுலைப்பாலுண்ணென்று தந்திடவாங்கி *
செக்கஞ்செகஅன்று அவள்பால்உயிர்செகவுண்ட பெருமான் *
நக்கபிரானோடு அயனுமிந்திரனும்முதலாக *
ஒக்கவும்தோற்றியவீசன் மாயனென்னெஞ்சினுளானே.
2884 மாயனென்னெஞ்சினுள்ளான் மற்றும்யவர்க்கும்அதுவே *
காயமும்சீவனும்தானே காலுமெரியுமவனே *
சேயனணியன்யவர்க்கும் சிந்தைக்கும்கோசரமல்லன் *
தூயன்துயக்கன்மயக்கன் என்னுடைத்தோளிணையானே.
2885 தோளிணைமேலும்நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் *
தாளிணைமேலும்புனைந்த தண்ணந்துழாயுடையம்மான் *
கேளிணையொன்றுமிலாதான் கிளரும்சுடரொளிமூர்த்தி *
நாளணைந்தொன்றுமகலான் என்னுடைநாவினுளானே.
2886 நாவினுள்நின்றுமலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம் *
ஆவியுமாக்கையும்தானே அழிப்போடளிப்பவன்தானே *
பூவியல்நால்தடந்தோளன் பொருபடையாழிசங்கேந்தும் *
காவிநன்மேனிக்கமலக்கண்ணன் என்கண்ணினுளானே.
2887 கமலக்கண்ணனென்கண்ணினுள்ளான் காண்பனவன் கண்களாலே *
அமலங்களாகவிழிக்கும் ஐம்புலனும்அவன்மூர்த்தி *
கமலத்தயன்நம்பிதன்னைக் கண்ணுதலானொடும்தோற்றி *
அமலத்தெய்வத்தோடுலகமாக்கி என்நெற்றியுளானே.
2888 நெற்றியுள்நின்றென்னையாளும் நிரைமலர்ப்பாதங்கள்சூடி *
கற்றைத்துழாய்முடிக்கோலக் கண்ணபிரானைத் தொழுவார் *
ஒற்றைப்பிறையணிந்தானும் நான்முகனுமிந்திரனும் *
மற்றையமரருமெல்லாம்வந்து எனதுச்சியுளானே.
2889 உச்சியுள்ளேநிற்கும்தேவதேவற்குக் கண்ணபிராற்கு *
இச்சையுள்செல்லவுணர்த்தி வண்குருகூர்ச்சடகோபன் *
இச்சொன்னவாயிரத்துள் இவையுமோர்பத்து எம்பிராற்கு *
நிச்சலும்விண்ணப்பம்செய்ய நீள்கழல்சென்னி பொருமே. (2)