Your browser does not support the audio element.
audio
2890 பொருமாநீள்படை ஆழிசங்கத்தொடு *
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ *
ஒருமாணிக்குறளாகிநிமிர்ந்த * அக்
கருமாணிக்கம் என்கண்ணுளதாகுமே. (2)
2891 கண்ணுள்ளேநிற்கும் காதன்மையால்தொழில் *
எண்ணிலும்வரும் என்னினிவேண்டுவம்? *
மண்ணும்நீரும் எரியும்நல்வாயுவும் *
விண்ணுமாய்விரியும் எம்பிரானையே.
2892 எம்பிரானை எந்தைதந்தைதந்தைக்கும்
தம்பிரானை * தண்தாமரைக்கண்ணனை *
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை *
எம்பிரானைத்தொழாய் மடநெஞ்சமே!
2893 நெஞ்சமே! நல்லைநல்லைஉன்னைப்பெற்றால்
என்செய்யோம்? இனியென்னகுறைவினம்? *
மைந்தனை மலராள்மணவாளனை *
துஞ்சும்போதும் விடாதுதொடர்கண்டாய்.
2894 கண்டாயேநெஞ்சே! கருமங்கள்வாய்க்கின்று * ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு *
உண்டானை உலகேழும்ஓர்மூவடி
கொண்டானை * கண்டுகொண்டனைநீயுமே.
2895 நீயும்நானும் இந்நேர்நிற்கில் * மேல்மற்றோர்
நோயும்சார்கொடான் நெஞ்சமே!சொன்னேன் *
தாயும்தந்தையுமாய் இவ்வுலகினில் *
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே.
2896 எந்தையே! என்றும் எம்பெருமான்! என்றும் *
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன் *
எந்தை! எம்பெருமான்! என்று வானவர்
சிந்தையுள்வைத்துச் * சொல்லும்செல்வனையே.
2897 செல்வநாரணனென்றசொல்கேட்டலும் *
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே *
அல்லும்நன்பகலும் இடைவீடின்றி
நல்கி * என்னைவிடான் நம்பிநம்பியே.
2898 நம்பியைத் தென்குறுங்குடி நின்ற * அச்
செம்பொனேதிகழும் திருமூர்த்தியை *
உம்பர்வானவர் ஆதியஞ்சோதியை *
எம்பிரானை என்சொல்லிமறப்பனோ? (2)
2899 மறப்பும்ஞானமும் நானொன்றுணர்ந்திலன் *
மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு *
மறப்பறஎன்னுள்ளே மன்னினான் தன்னை *
மறப்பனோ? இனியானென்மணியையே.
2900 மணியைவானவர் கண்ணனைத் தன்னதோ
ரணியை * தென்குருகூர்ச்சடகோபன் * சொல்
பணிசெயாயிரத்துள் இவைபத்துடன் *
தணிவிலர் கற்பரேல் கல்விவாயுமே. (2)