Your browser does not support the audio element.
audio
2835 வளவேழுலகின்முதலாய வானோரிறையை * அருவினையேன்
களவேழ்வெண்ணெய்தொடுவுண்ட கள்வா! என்பன்பின்னையும் *
தளவேழ்முறுவற்பின்னைக்காய் வல்லானாயர்தலைவனாய் *
இளவேறேழும்தழுவிய எந்தாய்! என்பன் நினைந்துநைந்தே. (2)
2836 நினைந்துநைந்துள்கரைந்துருகிஇமையோர்பலரும் முனிவரும் *
புனைந்தகண்ணிநீர்சாந்தம் புகையோடேந்திவணங்கினால் *
நினைந்தவெல்லாப்பொருள்கட்கும் வித்தாய்முதலிற் சிதையாமே *
மனஞ்செய்ஞானத்துன்பெருமை மாசூணாதோ? மாயோனே!
2837 மாயோனிகளாய்நடைகற்ற வானோர்பலரும்முனிவரும் *
நீயோனிகளைப்படையென்று நிறைநான்முகனைப் படைத்தவன் *
சேயோனெல்லாவறிவுக்கும் திசைகளெல்லாம்திருவடியால்
தாயோன் * எல்லாவெவ்வுயிர்க்கும்தாயோன் தானோருருவனே.
2838 தானோருருவேதனிவித்தாய்த் தன்னில்மூவர்முதலாய *
வானோர்பலரும்முனிவரும் மற்றும்மற்றும்முற்றுமாய் *
தானோர்பெருநீர்தன்னுள்ளேதோற்றி அதனுள் கண்வளரும் *
வானோர்பெருமான்மாமாயன்வைகுந்தன் எம்பெருமானே.
2839 மானேய் நோக்கிமடவாளை மார்விற்கொண்டாய்! மாதவா! *
கூனேசிதையவுண்டைவில் நிறத்தில்தெறித்தாய்! கோவிந்தா! *
வானார்சோதிமணிவண்ணா! மதுசூதா! நீயருளாய் * உன்
தேனே மலரும்திருப்பாதம் சேருமாறுவினையேனே.
2840 வினையேன்வினைதீர்மருந்தானாய்! விண்ணோர்தலைவா! கேசவா! *
மனைசேராயர்குலமுதலே! மாமாயனே! மாதவா! *
சினையேய்தழையமராமரங்கள் ஏழுமெய்தாய்! சிரீதரா! *
இனையாய்! இனையபெயரினாய்! என்றுநைவனடியேனே.
2841 அடியேன்சிறியஞானத்தன்அறிதலார்க்குமரியானை *
கடிசேர்தண்ணந்துழாய்க் கண்ணிபுனைந்தான்தன்னைக் கண்ணனை *
செடியாராக்கையடியாரைச் சேர்தல்தீர்க்கும்திருமாலை *
அடியேன்காண்பானலற்றுவன்இதனில்மிக்கோரயர்வுண்டே?
2842 உண்டாயுலகேழ்முன்னமேஉமிழ்ந்துமாயையாற்புக்கு *
உண்டாய்வெண்ணெய்சிறுமனிசர் உவலையாக்கைநிலையெய்தி *
மண்தான்சோர்ந்ததுண்டேலும் மனிசர்க்காகும்பீர் * சிறிதும்
அண்டாவண்ணம்மண்கரைய நெய்யூண்மருந்தோ? மாயோனே!
2843 மாயோம்தீயவலவலைப் பெருமாவஞ்சப்பேய்வீய *
தூயகுழவியாய்விடப்பாலமுதா அமுதுசெய்திட்ட
மாயன் * வானோர்தனித்தலைவன்மலராள்மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் * தம்மானென்னம்மான் அம்மாமூர்த்தியைச்சார்ந்தே.
2844 சார்ந்தவிருவல்வினைகளும்சரித்து மாயப்பற்றறுத்து *
தீர்ந்துதன்பால்மனம்வைக்கத்திருத்தி வீடுதிருத்துவான் *
ஆர்ந்தஞானச்சுடராகி அகலம்கீழ்மேலளவிறந்து *
நேர்ந்தவுருவாயருவாகும் இவற்றினுயிராம் நெடுமாலே.
2845 மாலே! மாயப்பெருமானே! மாமாயனே! என்றென்று *
மாலேயேறிமாலருளால் மன்னுகுருகூர்ச்சடகோபன் *
பாலேய்தமிழரிசைகாரர் பத்தர்பரவுமாயிரத்தின்
பாலேபட்ட * இவைபத்தும்வல்லார்க்கு இல்லைபரிவதே. (2)