Your browser does not support the audio element.
audio
2824 அஞ்சிறையமடநாராய்! அளியத்தாய் * நீயும்நின்
அஞ்சிறையசேவலுமாய் ஆவா! என்றெனக்கருளி *
வெஞ்சிறைப்புள்ளுயர்த்தார்க்கு என்விடுதூதாய்ச் சென்றக்கால் *
வன்சிறையிலவன்வைக்கில் வைப்புண்டாலென் செய்யுமோ? (2)
2825 என்செய்யதாமரைக்கண் பெருமானார்க்கென்தூதாய் *
என்செய்யும்? உரைத்தக்கால் இனக்குயில்காள்! நீரலிரே? *
முன்செய்தமுழுவினையால் திருவடிக்கீழ்க்குற்றேவல் *
முன்செய்யமுயலாதேன் அகல்வதுவோ? விதியினமே.
2826 விதியினால்பெடைமணக்கும் மென்னடையஅன்னங்காள்! *
மதியினால்குறள்மாணாய் உலகிரந்தகள்வற்கு *
மதியிலேன்வல்வினையே மாளாதோ? என்று * ஒருத்தி
மதியெல்லாமுள்கலங்கி மயங்குமாலென்னீரே.
2827 என்நீர்மைகண்டிரங்கி இதுதகாதென்னாத *
என்நீலமுகில்வண்ணற்கு என்சொல்லியான் சொல்லுகேனோ? *
நன்னீர்மையினியவர்கண் தங்காதென்றொருவாய்ச்சொல் *
நன்னீலமகன்றில்காள்! நல்குதிரோ? நல்கீரோ?
2828 நல்கித்தான்காத்தளிக்கும் பொழிலேழும்வினையேற்கே *
நல்கத்தானாகாதோ? நாரணனைக்கண்டக்கால் *
மல்குநீர்ப்புனற்படப்பை இரைதேர்வண்சிறுகுருகே *
மல்குநீர்க்கண்ணேற்கு ஓர்வாசகங்கொண்டருளாயே.
2829 அருளாதநீரருளி அவராவிதுவராமுன் *
அருளாழிப்புட்கடவீர் அவர்வீதியொருநாளென்று *
அருளாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி
யருள் * ஆழிவரிவண்டே! யாமும்என்பிழைத்தோமே?
2830 என்பிழைகோப்பதுபோலப் பனிவாடை யீர்கின்ற *
என்பிழையேநினைந்தருளி அருளாததிருமாலார்க்கு *
என்பிழைத்தாள்திருவடியின்தகவினுக்கு என்றொருவாய்ச்சொல் *
என்பிழைக்குமிளங்கிளியே! யான்வளர்த்தநீயலையே?
2831 நீயலையே? சிறுபூவாய்! நெடுமாலார்க்கென்தூதாய் *
நோயெனதுநுவலென்னநுவலாதேயிருந்தொழிந்தாய் *
சாயலொடுமணிமாமை தளர்ந்தேன்நான் * இனிஉனது
வாயலகிலின்னடிசில் வைப்பாரைநாடாயே.
2832 நாடாதமலர்நாடி நாள்தோறும்நாரணன்தன் *
வாடாதமலரடிக்கீழ் வைக்கவேவகுக்கின்று *
வீடாடிவீற்றிருத்தல் வினையற்றதென்செய்வதோ? *
ஊடாடுபனிவாடாய்! உரைத்தீராயெனதுடலே.
2833 உடலாழிப்பிறப்புவீடு உயிர்முதலாமுற்றுமாய் *
கடலாழிநீர்தோற்றி அதனுள்ளேகண்வளரும் *
அடலாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி *
விடல் ஆழிமடநெஞ்சே! வினையோமொன்றாமளவே.
2834 அளவியன்றவேழுலகத்தவர் பெருமான்கண்ணனை *
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த *
அளவியன்றவந்தாதி ஆயிரத்துள்இப்பத்தின் *
வளவுரையால்பெறலாகும் வானோங்குபெருவளமே. (2)