Your browser does not support the audio element.
audio
2846 பரிவதிலீசனைப்பாடி *
விரிவதுமேவலுறுவீர் *
பிரிவகையின்றி நன்னீர் தூய் *
புரிவதுவும்புகைபூவே. (2)
2847 மதுவார்தண்ணந் துழாயான் *
முதுவேதமுதல்வனுக்கு *
எதுவேது? என்பணி? என்னாது *
அதுவேஆட்செய்யுமீடே.
2848 ஈடுமெடுப்புமிலீசன் *
மாடுவிடாதுஎன்மனனே *
பாடுமென்நா அவன் பாடல் *
ஆடுமெனங்கம்அணங்கே.
2849 அணங்கென ஆடுமெனங்கம் *
வணங்கிவழிபடுமீசன் *
பிணங்கியமரர்பிதற்றும் *
குணங்கெழுகொள்கையினானே.
2850 கொள்கைகொளாமை யிலாதான் *
எள்கலிராகமிலாதான் *
விள்கைவிள்ளாமை விரும்பி *
உள்கலந்தார்க் கோரமுதே.
2851 அமுதமமரகட்கீந்த *
நிமிர்சுடராழிநெடுமால் *
அமுதிலுமாற்றவினியன் *
நிமிர்திரைநீள் கடலானே.
2852 நீள்கடல்சூழிலங்கைக் கோன் *
தோள்கள்தலைதுணி செய்தான் *
தாள்கள்தலையில்வணங்கி *
நாள்கடலைக்கழிமினே.
2853 கழிமின்தொண்டீர்கள்! கழித்து *
தொழுமின்அவனைத் தொழுதால் *
வழிநின்றவல்வினை மாள்வித்து *
அழிவின்றியாக்கம் தருமே.
2854 தருமவரும்பயனாய *
திருமகளார்தனிக் கேள்வன் *
பெருமையுடையபிரானார் *
இருமைவினைகடிவாரே.
2855 கடிவார்தீயவினைகள் *
நொடியாருமளவைக்கண் *
கொடியாவடுபுள் ளுயர்த்த *
வடிவார்மாதவனாரே.
2856 மாதவன்பால் சடகோபன் *
தீதவமின்றியுரைத்த *
ஏதமிலாயிரத்திப்பத்து *
ஓதவல்லார்பிறவாரே. (2)