Your browser does not support the audio element.
audio
1518 மான்கொண்டதோல்மார்வின் மாணியாய் * மாவலிமண்
தான்கொண்டு தாளாலளந்தபெருமானை *
தேன்கொண்டசாரல் திருவேங்கடத்தானை *
நான்சென்றுநாடி நறையூரில்கண்டேனே. (2)
1519 முந்நீரைமுன்னாள்கடைந்தானை * மூழ்த்தநாள்
அந்நீரைமீனாய் அமைத்தபெருமானை *
தென்னாலிமேய திருமாலைஎம்மானை *
நன்னீர்வயல்சூழ் நறையூரில்கண்டேனே.
1520 தூவாயபுள்ளூர்ந்துவந்து துறைவேழம் *
மூவாமைநல்கி முதலைதுணித்தானை *
தேவாதிதேவனைச் செங்கமலக்கண்ணானை *
நாவாயுளானை நறையூரில்கண்டேனே.
1521 ஓடாஅரியாய் இரணியனைஊனிடந்த *
சேடார்பொழில்சூழ் திருநீர்மலையானை *
வாடாமலர்த்துழாய் மாலைமுடியானை *
நாடோறும்நாடி நறையூரில்கண்டேனே.
1522 கல்லார்மதிள்சூழ் கடியிலங்கைக்காரரக்கன் *
வல்லாகங்கீள வரிவெஞ்சரம்துரந்த
வில்லானை * செல்வவிபீடணற்கு வேறாக *
நல்லானைநாடி நறையூரில்கண்டேனே.
1523 உம்பருலகோடு உயிரெல்லாம் * உந்தியில்
வம்புமலர்மேல் படைத்தானைமாயோனை *
அம்பன்னகண்ணாள் அசோதைதன்சிங்கத்தை *
நம்பனைநாடி நறையூரில்கண்டேனே.
1524 கட்டேறுநீள்சோலைக் காண்டவத்தைத்தீமூட்டி
விட்டானை * மெய்யம்அமர்ந்த பெருமானை *
மட்டேறுகற்பகத்தை மாதர்க்காய் * வண்துவரை
நட்டானைநாடி நறையூரில்கண்டேனே.
1525 மண்ணின்மீபாரங்கெடுப்பான் மறமன்னர் *
பண்ணின்மேல்வந்த படையெல்லாம்பாரதத்து *
விண்ணின்மீதேற விசயன்தேரூர்ந்தானை *
நண்ணிநான்நாடி நறையூரில்கண்டேனே.
1526 பொங்கேறுநீள்சோதிப் பொன்னாழிதன்னோடும் *
சங்கேறுகோலத் தடக்கைப்பெருமானை *
கொங்கேறுசோலைக் குடந்தைக்கிடந்தானை *
நங்கோனைநாடி நறையூரில்கண்டேனே. (2)
1527 மன்னுமதுரை வசுதேவர்வாழ்முதலை *
நன்னறையூர்நின்ற நம்பியை * வம்பவிழ்தார்க்
கன்னவிலும்தோளான் கலியனொலிவல்லார் *
பொன்னுலகில்வானவர்க்குப் புத்தேளிராகுவரே. (2)