Your browser does not support the audio element.
audio
1528 பெடையடர்த்தமடவன்னம் பிரியாது * மலர்க்கமலம்
மடலெடுத்துமதுநுகரும் வயலுடுத்ததிருநறையூர் *
முடையடர்த்தசிரமேந்தி மூவுலகும்பலிதிரிவோன் *
இடர்கெடுத்ததிருவாளன் இணையடியேஅடைநெஞ்சே! (2)
1529 கழியாரும்கனசங்கம் கலந்துஎங்கும்நிறைந்தேறி *
வழியாரமுத்தீன்று வளங்கொடுக்கும்திருநறையூர் *
பழியாரும்விறலரக்கன் பருமுடிகளவைசிதற *
அழலாறும்சரந்துரந்தான் அடியிணையேஅடைநெஞ்சே!
1530 சுளைகொண்டபலங்கனிகள் தேன்பாய * கதலிகளின்
திளைகொண்டபழம்கெழுமு திகழ்சோலைத்திருநறையூர் *
வளைகொண்டவண்ணத்தன் பின்தோன்றல் * மூவுலகோடு
அளைவெண்ணெயுண்டான்தன் அடியிணையேஅடைநெஞ்சே!
1531 துன்றோளித்துகில்படலம் துன்னிஎங்கும்மாளிகைமேல் *
நின்றாரவான்மூடும் நீள்செல்வத்திருநறையூர் *
மன்றாரக்குடமாடி வரையெடுத்துமழைதடுத்த *
குன்றாரும்திரள்தோளன் குரைகழலேஅடைநெஞ்சே!
1532 அகிற்குறடும்சந்தனமும் அம்பொன்னும்அணிமுத்தும் *
மிகக்கொணர்ந்துதிரையுந்தும் வியன்பொன்னித்திருநறையூர் *
பகல்கரந்தசுடராழிப்படையான் இவ்வுலகேழும் *
புகக்கரந்ததிருவயிற்றன் பொன்னடியேஅடைநெஞ்சே!
1533 பொன்முத்தும்அரியுகிரும் புழைக்கைம்மாகரிக்கோடும் *
மின்னத்தண்திரையுந்தும் வியன்பொன்னித்திருநறையூர் *
மின்னொத்தநுண்மருங்குல் மெல்லியலை * திருமார்பில்
மன்னத்தான்வைத்துகந்தான் மலரடியேஅடைநெஞ்சே!
1534 சீர்தழைத்தகதிர்ச்செந்நெல் செங்கமலத்திடையிடையின் *
பார்தழைத்துக்கரும்போங்கிப் பயன்விளைக்கும்திருநறையூர் *
கார்தழைத்ததிருவுருவன் கண்ணபிரான்விண்ணவர்கோன் *
தார்தழைத்ததுழாய்முடியன் தளிரடியேஅடைநெஞ்சே!
1535 குலையார்ந்தபழுக்காயும் பசுங்காயும்பாளைமுத்தும் *
தலையார்ந்தஇளங்கமுகின் தடஞ்சோலைத்திருநறையூர் *
மலையார்ந்தகோலஞ்சேர் மணிமாடம்மிகமன்னி *
நிலையாரநின்றான்தன் நீள்கழலேஅடைநெஞ்சே! (2)
1536 மறையாரும்பெருவேள்விக் கொழும்புகைபோய்வளர்ந்து * எங்கும்
நிறையாரவான்மூடும் நீள்செல்வத்திருநறையூர் *
பிறையாரும்சடையானும் பிரமனுமுன்தொழுதேத்த *
இறையாகிநின்றான்தன் இணையடியேஅடைநெஞ்சே!
1537 திண்களகமதிள்புடைசூழ் திருநறையூர்நின்றானை *
வண்களகநிலவெறிக்கும் வயல்மங்கைநகராளன் *
பண்களகம்பயின்றசீர்ப் பாடலிவைபத்தும்வல்லார் *
விண்களகத்திமையவராய் வீற்றிருந்துவாழ்வாரே. (2)