Your browser does not support the audio element.
audio
1428 கையிலங்காழி சங்கன் கருமுகில்திருநிறத்தன் *
பொய்யிலன்மெய்யன் தந்தாளடைவரேல்அடிமையாக்கும் *
செய்யலர்கமலமோங்கு செறிபொழில்தென்திருப்பேர் *
பையரவணையான்நாமம் பரவிநானுய்ந்தவாறே! (2)
1429 வங்கமார்கடல்களேழும் மலையும்வானகமும்மற்றும் *
அங்கண்மாஞாலமெல்லாம் அமுதுசெய்துமிழ்ந்தஎந்தை *
திங்கள்மாமுகிலணவு செறிபொழில்தென்திருப்பேர் *
எங்கள்மாலிறைவன்நாமம் ஏத்திநானுய்ந்தவாறே!
1430 ஒருவனைஉந்திப்பூமேல் ஓங்குவித்து, ஆகந்தன்னால் *
ஒருவனைச்சாபம்நீக்கி உம்பராளென்றுவிட்டான் *
பெருவரைமதிள்கள்சூழ்ந்தபெருநகரரவணைமேல் *
கருவரைவண்ணன் தென்பேர்கருதிநானுய்ந்தவாறே!
1431 ஊனமர்தலையொன்றேந்தி உலகெலாம்திரியும்ஈசன் *
ஈனமர்சாபம்நீக்காயென்ன ஒண்புனலையீந்தான் *
தேனமர்பொழில்கள்சூழ்ந்த செறிவயல்தென்திருப்பேர் *
வானவர்தலைவன்நாமம் வாழ்த்திநானுய்ந்தவாறே!
1432 வக்கரன்வாய்முன்கீண்டமாயனே! என்றுவானேர்
புக்கு * அரண்தந்தருளாயென்னப்பொன்னாகத்தானை *
நக்கரியுருவமாகி நகம்கிளர்ந்திடந்துகந்த *
சக்கரச்செல்வன்தென்பேர்த் தலைவன்தாளடைந்துய்ந்தேனே!
1433 விலங்கலால்கடலடைத்து விளங்கிழைபொருட்டு * வில்லால்
இலங்கைமாநகர்க்கிறைவன் இருபது புயம்துணித்தான் *
நலங்கொள்நான்மறைவல்லார்கள் ஒத்தொலியேத்தக்கேட்டு *
மலங்குபாய்வயல்திருப்பேர் மருவிநான்வாழ்ந்தவாறே!
1434 வெண்ணெய்தானமுதுசெய்ய வெகுண்டுமத்தாய்ச்சியோச்சி *
கண்ணியர்குறுங்கயிற்றால் கட்டவெட்டென்றிருந்தான் *
திண்ணமாமதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள் * வேலை
வண்ணனார்நாமம் நாளும்வாய்மொழிந்துய்ந்தவாறே!
1435 அம்பொனாருலகமேழுமறிய ஆய்ப்பாடிதன்னுள் *
கொம்பனார்பின்னைகோலம் கூடுதற்கேறுகொன்றான் *
செம்பொனார்மதிள்கள்சூழ்ந்த தென்திருப்பேருள்மேவும் *
எம்பிரான்நாமம் நாளும்ஏத்திநானுய்ந்தவாறே!
1436 நால்வகைவேதமைந்துவேள்வி ஆறங்கம்வல்லார் *
மேலைவானவரின்மிக்க வேதியர்ஆதிகாலம் *
சேலுகள்வயல்திருப்பேர்ச் செங்கண்மாலோடும்வாழ்வார் *
சீலமாதவத்தர்சிந்தையாளி என்சிந்தையானே.
1437 வண்டறைபொழில்திருப்பேர் வரியரவணையில்பள்ளி
கொண்டு * உறைகின்றமாலைக் கொடிமதிள்மாடமங்கை *
திண்திறல்தோள்கலியன் செஞ்சொலால்மொழிந்தமாலை *
கொண்டிவைபாடியாடக் கூடுவார்நீள்விசும்பே. (2)