Your browser does not support the audio element.
audio
3739 எங்கானலகங்கழிவாய் இரைத்தேர்ந்திங்கினிதமரும் *
செங்காலமடநாராய்! திருமூழிக்களத்துறையும் *
கொங்கார்பூந்துழாய்முடி எங்குடக்கூத்தர்க்கு என் தூதாய் *
நுங்கால்கள்என்தலைமேல் கெழுமீரோநுமரோடே. (2)
3740 நுமரோடும்பிரியாதே நீரும்நும்சேவலுமாய் *
அமர்காதல்குருகி னங்காள்! அணிமூழிக்களத்துறையும் *
எமராலும்பழிப்புண்டு இங்கென்? தம்மாலிழிப்புண்டு *
தமரோடங்குறைவார்க்குத் தக்கிலமே? கேளீரே.
3741 தக்கிலமே? கேளீர்கள் தடம்புனல்வாயிரைதேரும் *
கொக்கினங்காள்! குருகினங்காள்! குளிர்மூழிக்களத்துறையும் *
செக்கமலத்தலர்போலும் கண்கைகால்செங்கனிவாய் *
அக்கமலத்திலைபோலும் திருமேனியடிகளுக்கே.
3742 திருமேனியடிகளுக்குத் தீவினையேன்விடுதூதாய் *
திருமூழிக்களமென்னும் செழுநகர்வாயணிமுகில்காள்! *
திருமேனியவட்கருளீர் என்றக்கால் * உம்மைத்தன்
திருமேனியொளியகற்றித் தெளிவிசும்புகடியுமே?
3743 தெளிவிசும்புகடிதோடித் தீவளைத்துமின்னிலகும் *
ஒளிமுகில்காள்! திருமூழிக்களத்துறையுமொண்சுடர்க்கு *
தெளிவிசும்புதிருநாடாத் தீவினையேன்மனத்துறையும் *
துளிவார்கட்குழலார்க்கு என்தூதுரைத்தல்செப்புமினே.
3744 தூதுரைத்தல்செப்புமின்கள் தூமொழிவாய் வண்டினங்காள்! *
போதிரைத்துமதுநுகரும் பொழில்மூழிக்களத்துறையும் *
மாதரைத்தம்மார்வகத்தே வைத்தார்க்கென்வாய்மாற்றம் *
தூதுரைத்தல்செப்புதிரேல் சுடர்வளையும்கலையுமே.
3745 சுடர்வளையும்கலையுங்கொண்டு அருவினையேன்தோள் துறந்த *
படர்புகழான் திருமூழிக்களத்துறையும்பங்கயக்கண் *
சுடர்பவளவாயனைக்கண்டு ஒருநாளோர்தூய்மாற்றம் *
படர்பொழில்வாய்க்குருகினங்காள்! எனக்கொன்று பணியீரே.
3746 எனக்கொன்றுபணியீர்கள் இரும்பொழில்வாயிரை தேர்ந்து *
மனக்கின்பம்படமேவும் வண்டினங்காள்! தும்பிகாள்! *
கனக்கொள்திண்மதிள்புடைசூழ் திருமூழிக்களத்துறையும் *
புனக்கொள்காயாமேனிப் பூந்துழாய்முடியார்க்கே.
3747 பூந்துழாய்முடியார்க்குப் பொன்னாழிக்கையாருக்கு *
ஏந்துநீரிளங்குருகே! திருமூழிக்களத்தாருக்கு *
ஏந்துபூண்முலைபயந்து என்னிணைமலர்க்கண்நீர்ததும்ப *
தாம்தம்மைக்கொண்டகல்தல் தகவன்றென்றுரையீரே.
3748 தகவன்றென்றுரையீர்கள் தடம்புனல்வாயிரைதேர்ந்து *
மிகவின்பம்படமேவும் மென்னடையஅன்னங்காள் *
மிகமேனிமெலிவெய்தி மேகலையும்ஈடழிந்து * என்
அகமேனியொழியாமே திருமூழிக்களத்தார்க்கே.
3749 ஒழிவின்றித்திருமூழிக்களத்துறையும் ஒண்சுடரை *
ஒழிவில்லாவணிமழலைக் கிளிமொழியாளலற்றியசொல் *
வழுவில்லாவண்குருகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த *
அழிவில்லாவாயிரத்து இப்பத்தும்நோயறுக்குமே. (2)