Your browser does not support the audio element.
audio
3530 மாயா! வாமனனே! மதுசூதா! நீயருளாய் *
தீயாய்நீராய்நிலனாய் விசும்பாய்க்காலாய் *
தாயாய்த்தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் *
நீயாய்நீநின்றவாறு இவையென்னநியாயங்களே! (2)
3531 அங்கண்மலர்த்தண்துழாய்முடி அச்சுதனே! அருளாய் *
திங்களும்ஞாயிறுமாய்ச் செழும்பல்சுடராயிருளாய் *
பொங்குபொழிமழையாய்ப் புகழாய்ப்பழியாய்ப் பின்னும்நீ *
வெங்கண்வெங்கூற்றமுமாம் இவையென்னவிசித்திரமே!
3532 சித்திரத்தேர்வலவா! திருச்சக்கரத்தாய்! அருளாய் *
எத்தனையோருகமும் அவையாய அவற்றுள்ளியலும் *
ஒத்தவொண்பல்பொருள்கள் உலப்பில்லனவாய்வியவாய் *
வித்தகத்தாய்நிற்றிநீ இவையென்னவிடமங்களே!
3533 கள்ளவிழ்தாமரைக்கண்கண்ணனே! எனக்கொன்றருளாய் *
உள்ளதுமில்லதுமாய்உலப்பில்லனவாய்வியவாய் *
வெள்ளத்தடங்கடலுள் விடநாகணைமேல்மருவி *
உள்ளப்பல்யோகுசெய்தி இவையென்னவுபாயங்களே!
3534 பாசங்கள்நீக்கி என்னைஉனக்கேயுறக்கொண்டிட்டு * நீ
வாசமலர்த்தண்துழாய்முடி மாயவனே! அருளாய் *
காயமும்சீவனுமாய்க் கழிவாய்ப்பிறப்பாய், பின்னும்நீ *
மாயங்கள்செய்துவைத்தி இவையென்னமயக்குகளே!
3535 மயக்கா! வாமனனே! மதியாம்வண்ணமொன்றருளாய் *
அயர்ப்பாய்த்தேற்றமுமாய் அழலாய்க்குளிராய்வியவாய் *
வியப்பாய்வென்றிகளாய் வினையாய்ப்பயனாய், பின்னும்நீ *
துயக்காய்நீநின்றவாறு இவையென்னதுயரங்களே!
3536 துயரங்கள்செய்யுங்கண்ணா! சுடர்நீண்முடியாய்! அருளாய் *
துயரஞ்செய்மானங்களாய் மதனாகியுகவைகளாய் *
துயரஞ்செய்காமங்களாய்த் துலையாய்நிலையாய்நடையாய் *
துயரங்கள்செய்துவைத்தி இவையென்ன சுண்டாயங்களே!
3537 என்னசுண்டாயங்களால் நின்றிட்டாய்? என்னையாளுங்கண்ணா! *
இன்னதோர்தன்மையையென்று உன்னையாவர்க்குந்தேற்றரியை *
முன்னியமூவுலகுமவையாய் அவற்றைப்படைத்து *
பின்னும்உள்ளாய்! புறத்தாய்! இவையென்ன இயற்கைகளே!
3538 என்னவியற்கைகளால் எங்ஙனேநின்றிட்டாய்? என்கண்ணா! *
துன்னுகரசரணம்முதலாக எல்லாவுறுப்பும் *
உன்னுசுவையொளி ஊறொலிநாற்றம்முற்றும்நீயே *
உன்னையுணரவுறில் உலப்பில்லைநுணுக்கங்களே!
3539 இல்லைநுணுக்கங்களே இதனிற்பிறிதென்னும்வண்ணம் *
தொல்லைநன்னூலில்சொன்ன உருவும்அருவும்நீயே *
அல்லித்துழாயலங்கல் அணிமார்ப! என்னச்சுதனே! *
வல்லதோர்வண்ணம்சொன்னால் அதுவேஉனக்காம் வண்ணமே.
3540 ஆம்வண்ணமின்னதொன்றென்று அறிவதரியவரியை *
ஆம்வண்ணத்தால் குருகூர்ச்சடகோபனறிந்துரைத்த *
ஆம்வண்ணவொண்தமிழ்கள் இவையாயிரத்துள் இப்பத்தும் *
ஆம்வண்ணத்தாலுரைப்பார் அமைந்தார் தமக்கென்றைக்குமே. (2)